Monday, February 24, 2014

Amadeus (1984)-ம் மொசார்ட்டும்...

அமேடியஸும் மொசார்ட்டும்: ரெண்டு பேரும் வேற வேற இல்ல. மொசார்ட்டோட மிடில் நேம் தான் அமேடியஸ். முழுப்பெயர் Wolfgang Amadeus Mozart. 1984-ல் வெளிவந்த அமேடியஸ் (Amadeus) படத்தை பற்றி ஏற்கனவே இங்கே இருந்தாலும், இது எனக்காக மற்றும் உங்களுக்காக.


எப்டி? எப்டி?? எப்டி இதை பார்த்தேன்???

10 வருடங்களுக்கு முன் சென்னை வந்த புதுசில், திருவல்லிக்கேணியில் இருந்தேன். போர் அடிக்கும் போதெல்லாம் பர்மா பஜார் பக்கம் போய் சிடி/டிவிடிக்களை பார்வையிடுவது வழக்கம். ஹாலிவுட் படங்களை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால், ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் காரணமாக இருக்கும் டிவிடிக்களை பார்வையிட்டு, தேர்ந்தெடுத்து வாங்குவது உண்டு. எப்படி தேர்ந்தெடுப்பேன்? சிம்பிள். அட்டைப்படம், படத்தின் பெயர், பின்னால் இருக்கும் 4 வரி கதை, ஆஸ்கர் அவார்டுகள், நடிக/நடிகைகள் இத்யாதி. குறைந்தபட்சம் இவற்றில் ஏதேனும் ஒன்று என்னை கவர வேண்டும். அவ்வளவு தான் நம்ம சினிமா அறிவு (நாமெல்லாம் கழைகூத்தாடிங்க முன்னாடி உக்காந்து கை தட்டிக்கிட்டு இருந்த கும்பல் தானே!).

இந்த படம் கூட 11 ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 8 அவார்டுகள் வாங்கியது, 'சிறந்த படம்' உட்பட. ஆஸ்கருன்னாலே அந்த படம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கனும்னு நெனப்பு வேற? அதை உடைக்கிறதுக்கு கூட நிறைய பட(ம்) வேண்டியிருந்தது.

டிவிடி வாங்கினாலும், இதுவரை ஏனோ பார்த்ததில்லை. டிவிடி கவர் கூட பிரிக்கப்படவில்லை. காரணம், அட்டைப்படம் என்னவோ மொக்கையா ஏதோ சொல்லுற மாதிரி ஒரு ஃப்பீலிங்கு. போர் அடிக்கும் பயோகிராபி வகையரா (வயாக்ரா இல்ல). காந்திய பத்தின பயோகிராபி கூட கொஞ்சம் போர் தான். ஆனால், இயக்குநரின் கையில் தான் சுவை இருக்கிறது என்பேன். எனக்கு தெரிந்த சில இன்ட்ரெஸ்டிங் பயோகிராபிக்கள்: Catch Me If You Can (ஸ்பீல்பெர்க்), சமீபத்தில் வந்த The Wolf of Wall Street (மார்ட்டின் ஸ்கார்சசி).

அப்புறம், Wiki இந்த படத்தை (ஐரோப்பிய) இசை சம்பந்தப்பட்டதுங்குது. நமக்கு ஐரோப்பிய இசையும், அந்த 'ஆ...ஊ...'-னு கத்துற(!), தலையில விதவிதமா விக் வெச்சிருக்குற மனுஷங்க பாடுற(?) ஓபரா-க்கள்னாலே அலெர்ஜியும் கூட.

பொட்டிக்கடை...

ஏன்டா எல்லாரும் விக்கு மண்டைகளா அலையிறாங்களேனு தேடிப்பாத்தா, அது செம காமெடி. அந்த கால அரசர் ஒருத்தர் மண்டை வழுக்கைங்கிறதுக்காக, தன் இமேஜ் பில்டப்புக்குக்காக விக் வெச்சுக்க ஆரம்பிச்சிருக்கார் (நானெல்லாம் ஜென்டில்மேன். நோ விக்). அதை பாத்த அவரோட அரிஸ்ட்ரோக்ரேட் குடிமக்கள் அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா ஃபாலோ பன்னியிருக்காங்க. விக்கு வெச்சிருக்கிறவன்லாம் பணக்காரன், அப்பாடக்கருங்கிற மாதிரி (நம்மூருல பீட்ஸாவும் பர்கரும் சாப்டா ஒரு கெத்துங்கிற மாதிரி). இது அப்படியே பரவிடுச்சு.

அது போக, அந்த காலத்துல ஐரோப்பிய தட்ப வெட்ப சூழ்நிலைகளாலும், நிறைய பால்வினை சம்பந்தப்பட்ட நோய்களாலும் நிறைய முடி உதிர்தல் பிரச்சினை இருந்திருக்கு. அதை மறைக்கிறதுக்காகவும், ஒரே மாதிரி தெரியிறதுக்காகவும் இந்த விக்குகள் உபயோகப்பட்டிருக்கு. அதான் ஃபுல்லா விக்கு மண்டைகள். வித விதமா, கலர் கலரா...

ஆல், விக்கு மண்டைஸ்... :)
ஒரு நாள். அந்த ஒரு நாள். இந்த பக்கத்துக்கு போன போது, மறுபடியும் இந்த அமேடியஸ்-ங்குற பேர் கண்ணுலபட்டது. Bruce Almighty-ல வர்ற சைன் போர்டுகள் மாதிரி எங்க போனாலும் சுத்தி சுத்தி என்னவோ சொல்லுது போலனு நெனச்சு Wiki-க்கு போனபோது தான் அது மொசார்ட் கதைன்னே தெரியவந்தது. அங்கே விமரிசனம் இருந்தாலும், சும்மா படத்தோட பாஸிடிவ் சைட் பற்றி மட்டும் படிச்சுட்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

மொசார்ட் யாரு? அவர் அப்பாட்டக்கருங்கிறதனால அவரோட பேரை கேள்விப்பட்டிருப்பீங்க. கேள்விப்படலைன்னா கூட அவரோட இசையை கேட்டிருப்பீங்க, உங்களுக்கு தெரியாமலே. ரொம்ப பரிச்சயமானதுன்னா டைட்டான் வாட்ச் விளம்பரத்தில் ஒரு இசைக்கோர்வை வருமே. அது மொசார்ட்டோடது.

கீழ 6:51-லருந்து டைட்டான் ம்யூஸிக்...



டைட்டான் சும்மா ட்ரைலர். ட்ரைலர் கூட இல்ல. டீஸர். ஆனா மனுஷன் செம செம செம ஜீனியஸ். அவர் ஜீனியஸ்னு நான் சொல்லி என்ன ஆகப்போகுது? நமக்கு நம்மூரு இசையே வெளங்காது. இதுல ஐரோப்பிய இசை என்னாத்த தெரியப்போகுது?

அவர ஜீனியஸ்னு சொல்றது அவரோட எதிரி(யா சொல்லப்படும்) அன்டோனியோ ஸல்லேரி (Antonio Salieri). இவரு யாரு? மொசார்ட் நம்பர் 1-ன்னா, இவரு நம்பர் 2. பிரச்சினையே அங்க தானே!!! இல்லையா?

கதை?

1823-ல் வாழ்வின் அந்திய காலத்தில் இருக்கும் ஸல்லேரியின் தற்கொலை முயற்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அவர் அந்த கால பாண்டி மடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தான் மொசார்ட்டை 1971-ல் கொலை செய்துவிட்டதாக புலம்புவதால் ஒரு பாதிரியார் அவரிடம் confession-க்காக வருகிறார். அவரிடம் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஸல்லேரி.
Antonio Salieri
ஸல்லேரி அர்ப்பனிப்பு உணர்வுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை வாழும் இசையமைப்பாளர். வியன்னாவின் இசை உலகில் தனக்கென மதிப்பும், செல்வச் செழிப்பும் உடையவர். அப்போதைய ரோமானிய பேரரசரின் அரசவை இசையமைப்பாளர். இசைக்காக பிரம்மச்சாரியாக வாழ்பவர். மிகவும் திறமைசாலி. அடிக்கடி ப்ரே பன்னுவார். ஸல்லேரியோட தந்தையின் மரணம் ஒரு வகையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு என்பார். காரணம், அவரோட தந்தைக்கு இவர் இசைத்துறையில் செல்வது விருப்பமில்லை.
மொசார்ட் (படத்தில்)
இந்த நேரத்தில் மொசார்ட் வியன்னாவுக்கு வருகிறார். அப்போதைக்கு ஜெர்மனியில் இருக்கும் வழக்கமான இசை மரபுகளை உடைத்தெரிபவர். அவர் வரவு ஸல்லேரிக்கு பொறாமையை வரவழைக்கிறது. மொசர்ட்டின் திறமையை அவருடனான முதல் சந்திப்பிலேயே அறிந்துகொள்கிறார் ஸல்லேரி. மொசார்ட்டை வரவேறக இவர் அவருக்காக ஒரு இசையை கோர்க்க, அதில் ஈர்க்கப்பட்டு ரோமானிய அரசரே வாசிக்கிறார். அதை ஒரே முறை கேட்ட மொசார்ட் பின் இசை குறிப்புகள் இல்லாமலேயே மீண்டும் அட்சரசுத்தமாக வாசித்து, பின் அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து (அசால்டாக) அதை மேலும் மெருகேற்ற, அங்கிருக்கும் அனைவரும் பாராட்டுகிறார்கள்.

மொசார்ட் ஒரு ஒழுக்கமில்லாதவர். நிறைய குடிப்பார். ஒரு மாதிரி ஹை-பிட்ச்சில் சிரிப்பார். அப்படிப்பட்டவருக்கு எப்படி இத்தனை திறமைகள் என்று கடவுளிடம் முறையிடுகிறார் ஸல்லேரி. மொசார்ட் மூலம் கடவுள் தன்னை ஏளனம் செய்வதாக நினைக்கிறார். அவரால் தாங்க முடிவதில்லை. நடுவில் ஆஸ்திரிய (மொசார்ட்) இத்தாலி (ஸல்லேரி) மோதல் வேறு.

அரசரின் உறவினர் ஒருவருக்கு இசை சொல்லித்தர அரசை விருப்பம் தெரிவிக்க அதை தடுக்கிறார் ஸல்லேரி. அதற்கு ஸல்லேரி இன்டர்வியூ வைப்பது மொசார்ட்டுக்கு கவுரவப் பிரச்சினையாகிறது. மொசார்ட்டின் மனைவி Constanze மொசார்ட்டுக்கு தெரியாமல் ஸல்லேரியை பார்க்க வந்து தன் கணவருக்கு உதவுமாறு கேட்கிறாள். ஸல்லேரியோ அப்படி செய்வதற்கு அன்று இரவு அவள் தனியாக தன்னுடன் இருக்க வேண்டும் என்கிறார். அவளும் ஒத்துக் கொண்டு இரவில் அங்கு வர, ஸல்லேரி அவளை வேலைக்காரரின் முன் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

மொசார்ட் ஸல்லேரியிடம் பண உதவி வேண்டி வருகிறார். தான் ஒரு வேலையில் இருப்பதாகவும், அது முடிந்தால் மொத்த ஐரோப்பாவும் ஆச்சரியப்படும் என்கிறார். ஆனால், என்ன என்று சொல்ல மறுத்து விடுகிறார் மொசார்ட். இதை தெரிந்து கொள்ள ஒரு சம்பளமில்லாத வேலைக்காரியை மொசார்ட் வீட்டுக்கு அனுப்புகிறார் ஸல்லேரி. மொசார்டின் தந்தையின் எதிர்ப்பையும் மீறி மனைவி ஏற்றுக்கொள்கிறாள், மொசார்ட்டின் விசிறி யாரோ அனுப்பியிருக்கிறார் என்று. வேலைக்காரி மூலம் மொசார்ட் இசை கோர்வையில் ஈடுபட்டிருப்பது, அரசரால் தடை செய்யப்பட்ட The Marriage of Figaro நாடகம் என்று ஸல்லேரி கண்டுபிடித்து அரசரின் காதுகளுக்கு சென்று சேர வைக்கிறார். அரசர் மொசார்ட்டை விசாரிக்க, மொசார்ட் அரசரை சமாதானப்படுத்துகிறார். அந்த ஓபராவின் ப்ராக்டீஸுக்கு வந்து ஆச்சரியமூட்டுகிறார் அரசர்.

பிறகு, ஆஸ்திரிய-துருக்கி யுத்தத்தாலும், ஊதாரித்தனமாக செலவு செய்வதாலும் மொசார்ட்டுக்கு பணக்கஷ்டம். கடன் கேட்கிறார், கிடைப்பதில்லை. இருந்தும் தந்தையிடம் சொல்வதில்லை. நிறைய குடிக்கிறார். தந்தை இறந்துவிட, உடைந்து போகிறார் மொசார்ட்.

இதை தெரிந்து கொண்ட ஸல்லேரி, மொசார்ட்டை வெற்றி கொள்ள ஒரு திட்டம் போடுகிறார். மொசார்ட்டின் தந்தை ஒரு பார்ட்டியில் அனிந்த முகமூடி கொண்ட உடையை அணிந்து தான் யாரென்று சொல்லாமல் மொசார்ட் வீட்டுக்கு வருகிறார். வந்து, தனக்கு மொசார்ட் ஒரு இரங்கல் இசையை (Requiem Mass) எழுதித் தரவேண்டும் என்கிறார். அந்த உடையை பார்த்ததும் ஒருவாரு பயம் கொள்கிறார் மொசார்ட். மனைவியின் இம்சை வேறு. பின் பணத்திற்காக ஒத்துக்கொள்கிறார் மொசார்ட்.

இரங்கல் இசையை எழுத வைத்து அதை வாங்கி பின் மொசார்ட்டை கொலை செய்து, இரங்கல் இசை தான் மொசார்டுக்காக கோர்த்தது என்று சொல்லி, அந்த இரங்கல் இசையை அவருக்கே பாட வேண்டும் என்பது ஸல்லேரியின் திட்டம் (Requiem Mass for Wolfgang Mozart, composed by his devoted friend Antonio Salieri).

இதற்கிடையில் பணத்தேவைக்காக இன்னொரு இசைக்கோர்வையை எழுதிகிறார் மொசார்ட். மனைவியும் அவரை விட்டு பிரிகிறார். அந்த இசை நாடகம் வெற்றி பெருகிறது. ஆனால், மயக்கமடைந்து மேடையிலேயெ சரிந்து விழுகிறார். அவரை ஸல்லேரி மொசார்ட்டின் வீட்டுக்கே கூட்டி வருகிறார்.

அங்கே மொசார்டின் உடல் நிலை படு மோசமான நிலைக்கு செல்கிறது. அந்த இரவே அந்த இரங்கல் இசையை முடிக்க வைக்கிறார் ஸல்லேரி. மொசார்ட் சொல்ல சொல்ல இரவு முழுவதும் அவருக்காக பரவசத்துடன் எழுதுகிறார் ஸல்லேரி. முழுவதும் முடிக்க இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. மொழுது விடிகிறது. ஸல்லேரியை இது வரை தான் தவறாக புரிந்து கொண்டதாகவும், அதற்கு மன்னிக்க வேண்டும் என்கிறார் மொசார்ட். ஸல்லேரிக்கோ குற்ற உணர்வில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஸல்லேரியை ஓய்வு எடுக்க சொல்கிறார் மொசார்ட். ஸல்லேரியோ தான் களைப்படையவில்லை என்றும், தொடரலாம் என்கிறார். ஆனால், ஓய்வு மொசார்ட்டுக்கு தேவை. தான் சற்று நேரம் தூங்குவதாக சொல்கிறார் மொசார்ட். இருவரும் கொஞ்ச நேரம் கண் அயர்கிறார்கள். இதற்கிடையில், ஏதோ ஒன்றின் உந்துதலால் பிரிந்து சென்ற கர்ப்பினி மனைவியும் இரவோடு இரவாக தன் முதல் மகனுடன் ஊர் திரும்புகிறாள். அங்கே தன் கணவனையும் ஸல்லேரியையும் பார்க்கிறாள். ஸல்லேரியை பார்த்து கோபம் கொள்ளும் அவள், அவரை உடனே போக சொல்கிறாள். ஸல்லேரியோ அவர் கணவனுக்கு தான் தேவை என்கிறார். மொசார்ட் கண் விழிக்கிறார். மிகுந்த களைப்புடன் மனைவியை பார்க்கிறார். பின் அவள் ஸல்லேரியை விரட்ட முற்படுகிறாள். பணத்துக்காக மொசார்ட் கஷ்டப்பட்டது போதும் என்கிறாள்.

பேசிக் கொண்டு அவரின் இசைக்குறிப்பிகளை அலமாரியில் பூட்டிவிட்டு, பின் கணவனை திரும்பி பார்க்க அங்கே 35 வயதான மொசார்ட் படுக்கையில் இறந்து கிடக்கிறார்.

மொசார்ட்டின் கடைசி இசைக்கோர்வை உண்மையிலேயே அவர் உயிரைக் கொடுத்து இயற்றியது என்றால் மிகையாகாது.

அவர் உடல் அந்த கால மிடில் க்ளாஸ் வழக்கப்படி இறந்த பல உடல்களோடு புதைக்கப்படுகிறது. புதைக்கப்படுவதை காட்டுவதும் இல்லை. ஏற்கனவே 3-4 உடல்கள் குழிக்குள் இருக்க, இவரோட உடலையும் அந்த குழிக்குள் (literal-ஆ) 'போட', அதன் மீது துர்நாற்றம் அடிக்காமல் இருக்க பவுடர் தெளிக்கப்படுகிறது. குழி மூடப்பட்டுவது இல்லை. ஏனென்றால், இன்னும் சில இறந்த உடல்களுக்கு வெயிட்டிங்.

கடைசியில் ஸல்லேரி அந்த பாதிரியிடம் விடைபெற்று செல்லும் போது, பின்னனியில் மொசார்ட்டின் அந்த ஹை-பிட்ச் சிரிப்பொலி ஒலிப்பதோடு படம் முடிவடைகிறது.

ஏன் இந்த படம் ஸ்பெஷல்...?

காரணம். சொல்ல வந்ததை அசால்ட்டான திரைக்கதை மூலம் சொன்னது. மொசார்ட் ஜீனியஸ்னு யார் சொன்னா வெயிட்டா இருக்கும்? மொசார்ட்டேவா? அவர் இசையா? அவரோட குடும்பத்தினர்/தலைமுறைகளா? அவரோட நண்பர்களா? ம்ஹூம். முக்கியமா அவரோட எதிரி வாயால கேட்கும் போது தான்.

முதல் சீன். வயதான ஸல்லேரியோட சத்தம் கேட்டு அவரோட வேலையாட்கள் அவரோட அறைக்கதவை தட்டுகின்றனர். 'கதவை திறங்க. உங்களுக்கு பிடிச்ச இனிப்பு கொண்டுவந்திருக்கேன். யம்மி'-னு குழந்தைய கூப்பிடுற மாதிரி கூப்பிடுறாங்க. கதவு திறக்கப்படாமல் இருக்க, உள்ளிருந்து தொண்டை அறுபட்டு மூச்சு முட்டும் சத்தம் கேட்க, கதவை உடைத்து உள்ளே பார்த்தால், ஸல்லேர் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சூழ விழுந்து கிடக்கிறார்.

பின் அவர் மொசார்ட்டை பற்றி அந்த பாதிரிடம் ஆரம்பிக்கும் போது, ஒரு இசையை இசைத்து காட்டுவார். பாதிரிக்கு அது என்ன இசை என்று தெரியவில்லை. இன்னொன்று? அதுவும் தெரியவில்லை. பின், மூன்றாவது. அது தெரிகிறது. கூடவே பாதிரி பாடுகிறார். முதல் இரண்டும் ஸல்லேரியோடது. மூன்றாவது மொசார்டோடது. சட்டென்று நம் சட்டையை பிடித்து இழுக்கிறது திரைக்கதை.

முக்கியமாக, மிக மிக முக்கியமாக, ஒவ்வொரு இசையை பற்றியும் அதன் பெருமைகளை விவரிக்கும் போதும் ஸல்லேரியின் முகத்தில் இருக்கும் பரவசமும், எக்ஸ்பிரஷனும், அதை விவரிக்கும் பாங்கும் அந்த (நமக்கு அன்னியப்பட்ட) இசையை நமக்கே ஊட்டி விடுவது போல் இருக்கிறது. ஸல்லேரின் பரவசத்தில் நாமும் கலக்கிறோம் (கலக்கிறோம் என்ற வார்த்தை தான் இங்கே சரியாக இருக்கும்). கூடவே அவர் சொல்லும் இசை பின்னனியில் ஒலிப்பது நமக்கு புரிய வைக்கிறது. இது பரவசம் இல்லாமல் வேறென்ன? இந்த படத்துக்காக ஸல்லேரியாக நடித்திருக்கும் முர்றே ஆபிரகாம் (F. Murray Abraham)-க்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. கிடைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். மொசார்ட்டாக நடித்த டாம் ஹல்ஸ் (Tom Hulce)-க்கு கூட கிடைக்கவில்லை. அது தான் அந்த கேரக்டரின் பலம்.

படத்தில் அற்புதமான இடம், மொசார்ட்டோட மனைவி தன் கணவனின் இசை குறிப்புகளை ஸல்லேரியிடம் காண்பித்து, அவையாவும் ஒரிஜினல், மொசார்ட் கைப்பட எழுதியது என்கிறாள். அப்ப நகல்? மொசார்ட் நகல் ஏதும் எடுப்பதில்லை என்றும், இது ஒரே ஒரு காபி தான் என்கிறாள். ஒவ்வொரு பக்கத்தையும் பார்க்க, பின்னனியில் அந்த பக்கத்தில் உள்ள அதன் இசை ஒலிக்கிறது. ஒவ்வொன்றும் எந்த அடித்தல் திருத்தல் இல்லாமல், தோன்ற தோன்ற எழுதப்பட்டது. அந்த இசையை உணர்ந்து அனுபவித்து கண்கள் கலங்கி அழுகிறார். அந்த குறிப்புகள் அவர் கைகளில் இருந்து நழுவி விழுகிறது. அசந்து போகிறார். எப்பேற்பட்ட இசை!!! கோப்புகள் கீழே விழுந்ததை பார்த்த அவர் மனைவி கேட்பார், "நல்ல இல்லையா?". ஸல்லேரி திரும்பி பார்த்து, "It is miraculous" என்கிறார்.

Salieri: [Mozart’s sheet music] showed no corrections of any kind. Not one. He had simply written down music already finished in his head. Page after page of it as if he were just taking dictation. And music, finished as no music is ever finished. Displace one note and there would be diminishment. Displace one phrase and the structure would fall

படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இரண்டு. முதலாவது ஸல்லேர்ரியாக நடித்திருக்கும் முர்றே. இரண்டாவது, இந்த படத்தை புரிந்து கொள்ள உங்களுக்கு இசை ஞானமோ இல்லை ஐரோப்பிய இசையை பற்றின இன்ட்ரோவோ கூட தேவையில்லை என்பதே.

அதற்கு உதாரணம், ஸல்லேரி மொசார்ட்டின் இசைக்குறிப்பை பாதிரிக்கு விளக்கும் போது ஒரு நோட்ஸை (டெக்னிகல் வார்த்தைகள் தெரியவில்லை) சொல்லி, அதை முதலில் சும்மா ஆரம்பிக்கும். பின் அதே நோட்ஸை இன்னொரு வாத்தியத்தின் மூலம் கொஞ்சம் உயரும் என்றெல்லாம் சொல்லும் போது, (இசை பற்றி தெரியாத) ஆடியன்ஸான நமக்கு புரிய வைக்க பின்னனியில் அவர் என்ன சொல்கிறாரோ அந்த இசையை தவழ விடுவது...அற்புதம். ஸல்லேரி என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்ப்பவர்களுக்கு அப்படியே சேர்க்கிறார் இயக்குநர். இது தான் படத்தின் வெற்றியே.


Salieri: On the page it looked nothing. The beginning simple, almost comic. Just a pulse – bassoons and basset horns – like a rusty squeezebox. Then suddenly – high above it – an oboe, a single note, hanging there unwavering, till a clarinet took over and sweetened it into a phrase of such delight! This was no composition by a performing monkey! This was a music I’d never heard. Filled with such longing, such unfulfillable longing, it had me trembling. It seemed to me that I was hearing the very voice of God.

படத்தின் நீளம் 2 1/2 மணி நேரம். Director's cut 3 மணி நேரம். எங்கும் தொய்வே இல்லை. போரடிக்கவில்லை. ஒன்று வசனங்கள்/திருப்பங்கள், இல்லை இசை. கொஞ்சம் அரசியல். படம் முழுக்க இவையே வியாபித்திருக்கின்றன.

மொசார்ட் பற்றி...

மொசார்ட் aka Wolfgang Amadeus Mozart. இசையுலகின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். செய்த சாதனைகள் அப்படி. இன்றும் அவருடைய இசை எல்லைகள் தாண்டி ரசிக்கப்படுகிறது. அவரின் இசை பிரமிக்கத்தக்கவை. (ஐரோப்பிய இசையை பற்றி ஒரு எழவும் தெரியவில்லை என்றாலும், படத்தில் ஒலியின் எடிட்டிங் நமக்கே புரிய வைக்க முற்படுகிறது). தன் 5 வயது முதலே இசையமைக்க ஆரம்பித்தவர். பியானோவில் கைகள் அற்புதமாக இசைக்கின்றன (சும்மா வெளாடுதுங்கிறோமே, அப்படி).இசைக்குறிப்புகள் அவரிடமிருந்து அருவி போல பிரவாகமெடுத்து இறங்கும். மிகச்சிறந்த நியாபக சக்தி உடையவர். பெரும்பாலும் இசையை நோட்ஸ் எடுக்காமல், மூளைக்குள்ளேயே ஸ்டோர் செய்துக் கொள்பவர். நோட்ஸ் எடுக்கும் போதும் அடித்தல் திருத்தல் கூட இல்லாமல், ஏதோ பார்த்து எழுதுவது போல பிழையே இல்லாமல் எழுதுபவர். அவரின் ஒவ்வொரு இசைக்கோர்வையும் அதி அற்புதமானது. அந்த இசை உலகில் இருப்பவர்களுக்கே அதன் அருமை புரியும். ஸல்லேரி என்ன தான் பொறாமை கொண்டாலும், அவர் மொசார்ட்டின் இசையை எங்கும் விட்டுக்கொடுப்பதில்லை. மொசார்ட்டின் இசையில் லயிக்கிறார். ஒவ்வொரு நாடகத்தின் போதும் ஓபராவின் போதும் தவறாமல் கலந்து கொள்கிறார் ஸல்லேரி. மனம் திறந்து பாராட்டிக் கொள்கிறார்.

பொட்டிக்கடை...

கருந்தேள் சொல்வது...

தனது பதினைந்தாவது வயதில், ரோம் நகரத்தின் ஸிஸ்டைன் சேப்பலில் (மைக்கலாஞ்சலோ, நான்கு ஆண்டுகள் தொங்கிக்கொண்டே அதன் விதானத்தில் வரைந்த ஓவியங்கள், இன்றும் அப்படியே உள்ளன), வாடிகனின் இசையமைப்பாளராக இருந்த க்ரெகோரியோ அல்லெக்ரியின் ஒரு ஸிம்ஃபனியை ஒருமுறை கேட்க நேர்ந்த மோஸார்ட், அதனை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக எழுதி, அதில் இருந்த சிறிய இசைப் பிழைகளையும் சரி செய்து கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். ஒரு பெரிய ஸிம்ஃபனி. ஒரு சிறுவன் ஒரே முறைதான் அதனைக் கேட்க நேர்கிறது. கேட்ட உடனேயே அதனை கடகடவென்று அவன் எழுதிக்கொடுத்தால், எப்படி இருக்கும்? வாடிகன் நிர்வாகிகள், அரண்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

மொசார்ட்டின் வொர்க் ஸ்டைலே அற்புதமானது. உக்காந்து செதுக்குவது அவர் வேலையில்லை. மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது. மனது டிக்டேட் செய்கிறது, கை எழுதுகிறது. அவ்வளவு தான். எழுதியதை அழிக்க தேவையில்லை, மாற்ற வேண்டியதில்லை. இசை என்பது ஒரு பிரவாகமாக ஊற்றெடுக்கிறது. காலேஜ் படிக்கிற பையன் 2-ம் வாய்ப்பாடு சொல்ற மாதிரி, அதுவா வருது. ஸல்லேரியே கூட அசந்து போகிறார்.

இதை, என் பாஷையில் எனக்கு புரிந்தவரை இப்படி சொல்லலாம். உங்களிடம் ஒரு கனினி ஆணைத்தொடர்கள் (Program) 'C'-ல் எழுத சொல்கிறார்கள். முதலில் என்ன வேண்டுமோ அதை புரிந்து கொண்டு ஒரு அல்காரிதம் வரைந்து, பின் அதை code-ஆ மாற்றுவீர்கள். Code அடித்து அதன் compile செய்யும் போது நீங்கள் செய்த தவறுகள், லாஜிக் ஓட்டைகளை அடைப்பீர்கள். பின் தான் ஒரு ஆணைத் தொடர் முடிவடையும். ஆனால், மொசார்ட் சொல்வது/எழுதுவது எல்லாம் அந்த கடைசி ஸ்டேஜ் code மட்டுமே. மற்றதெல்லாம் அவர் மூளையிலேயே முடிந்து விடுகிறது, அதுவும் அவ்வளவு வேகமாக. அவுட்புட்டே ப்ரோக்ராமா வெளியவறது போல...

மொசார்ட் அவர் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், "You know that I immerse myself in music, so to speak—that I think about it all day long—that I like experimenting—studying—reflecting."

மொசார்ட்டின் மரணம் பற்றி...

பொதுவாக மொசார்ட்டின் மரணம் சந்தேகத்திற்கிடமானது. இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனாலும், ஒரு வதந்தி. ஸல்லேரி விஷம் வைத்து மொசார்ட்டை கொன்று விட்டதாக. ஸல்லேரியும் கொல்ல திட்டம் போடுவதாக அவரே இந்த படத்தில் சொல்கிறார். ஆனால், சொல்லும் போதே 'திட்டம் தீட்டுவதும், அதை இந்த கைகளால் நிறைவேற்றுவதும் வேறு வேறு' என்கிறார். அதாவது, கொல்ல நினைப்பது சுலபம். ஆனால், அதை நிறைவேற்ற 'தில்' வேண்டும் (It's very different when you have to do it, with your own hands). அதே சமயம், மொசார்ட் அவர் தந்தைக்கு எழுதிய சில கடிதத்தில் எப்படியெல்லாம் இத்தாலிகாரர்கள் இந்த ஆஸ்திரியகாரனின் வளர்ச்சிக்கு குறுக்கே வருகிறார்கள் என்றே குறிப்பிடுகிறார். ஸல்லேரி தனக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டுகிறார் என்கிறார் வேறொரு கடிதத்தில்.

ஆனால், பல சம்பவங்கள் மொசார்ட்டுக்கும் ஸல்லேரிக்கும் இடையிலான உறவு நட்புறவு கொண்டது என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. இருவரும் சேர்ந்து செய்த வேலைகள் (revival of Figaro), ஒவ்வொரு முறையும் மொசார்ட்டின் இசையை கேட்கும் போதும் அதை பாராட்ட தவறாமை போன்றவை.

ஸல்லேரி இந்த படத்தில் தான் மொசார்ட்டை கொன்றதாக கூறினாலும், அவர் சொன்னது மொசார்ட்டின் தந்தை போன்று முகமூடி அனிந்து மொசார்ட்டுக்கு வேலை கொடுத்ததை பற்றியது. பணம் அதிகமாக கொடுத்தாலும், அந்த வேலைப்பளுவே மொசார்ட்டை கொன்றுவிட்டதாக உணர்கிறார் (என்றே நான் நினைக்கிறேன்). உடல் நிலை படுமோசமடைந்த நிலையிலும், 'அந்த முகமூடி தான் வந்தான்' என்றும், அவன் 'நாளைக்குள் இரங்கல் இசையை முடித்து கொடுத்தால் 100 காசுகள் கொடுப்பதாக' சொன்னதாகவும் ஸல்லேரி பொய் சொல்கிறார். அதனால் தான் அந்த நிலையிலும் மொசார்ட் இசைக்கோர்வைகளை எழுத முற்படுகிறார். ஸல்லேரி ஏன் அப்படி பொய் சொன்னார் என்று தெரியவில்லை. ஒருவேளை, அந்த நிலையில் மொசார்ட் எழுதினால் இன்னும் கச்சிதமாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ. (எனக்குத்) தெரியவில்லை.

அந்த காட்சியில் மொசார்ட் ஸல்லேரியை தன்க்கு உதவ முடியுமா என கேட்கிறார், மொசார்ட் நோட்ஸ் டிக்டேட் செய்ய செய்ய ஸல்லேரி எழுத எழுத, ஸல்லேரிக்கே அது புது அனுபவமாக இருக்கிறது. மொசார்ட் டிக்டேட் செய்யும் வேகத்துக்கு இவரால் ஈடு கொடுக்க முடியாமல், பின் லேட்டாக புரிந்து கொண்டு நோட்ஸை வேக வேகமாக எழுதும் அந்த காட்சி...செம. ஸல்லேரிக்கு மொசார்ட்டின் திறமையில் மற்றுமொரு தடவை லயிக்கிறார்.

இதில் மொசார்ட் என்ன சொல்கிறார், எப்படி ஸல்லேரி புரிந்து கொள்கிறார் என்றெல்லாம் நமக்கு தெரியாது. எல்லாம் இசை சம்பந்தப்பட்ட டெக்னிகல் வார்த்தைகள். ஆனால், இருவருக்குமான உறையாடலே நமக்கு அங்கு நிகழ்வதை புரியவைத்து விடுகிறது. இசை ஒரு பொழி போல, இயக்கமும் ஒரு மொழி தான்.

மொசார்ட் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்பதற்கான வேறு காரணங்கள் நிறைய உண்டு. சிறு வயது முதலே உடல் நிலை அடிக்கடி மோசமாவது உண்டு. அம்மை, நிமோனியா, தைபாய்டு, முடக்கு வாதம், டான்சில், சளி போன்றவை அடிக்கடி தாக்கும். அதே சமயம் அந்த இரங்கல் இசையை பற்றி மனைவியிடம் சொல்லும் போது அது அவர் தனக்கே இயற்றுவதாகவும், தான் விஷம் வைக்கப்பட்டதாக நம்புவதாகவும் கூறியிருக்கிறார். தான் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதே அவர் உடல் நிலையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. இல்லை, இந்த நினைப்பை விதைப்பது தான் ஸல்லேரியின் நோக்கமா?

பின்னாளில் உடலில் விஷம் இருப்பதற்கான் அறிகுறிகள் இல்லை என்று கூறினாலும், ஸல்லேரியும் இதை போன்ற குற்றச்சாட்டுகளால் மிகவும் சோர்வுற்றார். பிற்பாடு மொசார்ட் மரணம் பற்றி பலவித யூகங்களும் அறிவியல்பூர்வமான சோதனைகள் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இருந்தாலும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றும் கூடவே பயணம் செய்தது.

நிறைவாக...

மிக அற்புதமான படம் இது. மொசர்ட்டை பற்றின படமானாலும், படத்தில் அனைவரையும் கவர்வது மொசார்ட் இல்லை. அவரோட இசையும், ஸல்லேரியும். Must watch. பாக்காதவங்க பாருங்க. பாத்தவங்க மறக்காம நான் சொன்னதெல்லாம் சரியான்னு சொல்லுங்க.

அம்புட்டுதேன்...