Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, July 23, 2009

கொள்ளையடிப்பது ஒரு கலை...

இந்த வருட கோட்டாவாக என் தந்தையிடம் இந்த வித்தையை காட்டிய காவல் துறையினருக்கு என் வீர வணக்கங்கள். அதனால் இந்த மீள் பதிவு...

எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.

ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் 'கார்டன் சிட்டி' பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.

"நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)"-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. 'சிறிய' என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், 'ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?"-ன்னு. "அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க"-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!

நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, "சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?"-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். 'எப்படியும்' திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.

(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா "வணக்கம் பாய்"-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு "இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?". அது ஒரு தனி கூத்து...)

மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.

ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு 'உக்காந்து யோசிச்சு' இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்...16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி...

Wednesday, May 31, 2006

இது உங்கள் சொத்து - மறுக்கா மறுக்கா படி

சில நாட்களுக்கு முன் தற்செயலாய், வேகமாய் சேனல் மாற்றும் பொழுது, ஒரு கணம் பொதிகையை கடந்தேன். அட தெரிந்த முகம் என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தேன். நம்ம நித்யஸ்ரீ மகாதேவன். தன் பாட்டி பட்டம்மாவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பாட்டியின் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சில பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். வாழ மீனை கேட்கும் இடையில், இதையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது. சில நிமிடங்கள் அந்தப் பேட்டியையும், பேத்தியையும், அவர்கள் பாடிய பாடல்களையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

விளம்பரங்களுக்கு நடுவே ஓடும் கள்ள உறவு + அழுகை மெகா தொடர்கள், "வண்கம்" தங்கிலீஷ் காம்பியர்கள், "நகைச்சுவை" செய்திகள்(?), சினேகாவுடன் உங்கள் சாய்ஸ், "வக்கிரமான jokes"-வுடன் லொள்ளு சபா, "சும்மா இருக்காத, அம்மா தான் எல்லாம்" என்ற டயலாக்கைக் கூட mute செய்த சன் டி.வி. கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின் இறைச்சலில் நாம் ரொம்ப miss பண்ணின வகையராக்களில் இருந்தது அந்த நிகழ்ச்சி. பேட்டி கொடுத்த அந்த பாட்டியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, பெருமிதம். ஒரு குழந்தையாய் மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ நம் சொந்த பாட்டியைடம் பேசிக் கொண்டிருந்ததை போன்ற ஒரு உணர்வு. ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மற்ற சேனல்களில் பார்க்க முடிவதில்லை. காரணம், எந்த நிகழ்ச்சியும் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. பொதிகை சேனல் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது (ஏன் ஓடாது?). அவர்களுக்கென்ன, அரசாங்கம் பார்த்துக் கொள்கிறது. பொதிகை லாபம் ஈட்டினால் என்ன? நட்டம் ஈட்டினால் என்ன? மாதச் சம்பளம் வந்துவிடுகிறது.

+2 தேர்வு முடிவுகள் வந்தது. பொதிகையில் இன்றும் தற்செயலாய் கண்டது. +2 தவறியவர்கள் தற்கொலை கூடாது என்று கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வழங்கியவர் கிரீஷ் கர்னாட். இதனை மற்ற எந்த சேனலும் செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியது TRP ratings, அவ்வளவே. கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் பொதிகையை tune செய்கிறோம். மற்ற நேரத்தில்?

இது பொதிகை-யோடு நின்றுவிடுவதில்லை. அரசாங்கத்தின் எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான். எத்தனை தனியார் பேருந்துகள் கிராமத்திற்கு போகின்றன? பேருந்தே நுழைய முடியாத கிராமத்தில் கூட அரசாங்க பேருந்துகள் நட்டத்திற்கு போய் வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் நிலைமை என்ன? லாபம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து திருச்சி - தஞ்சாவூர் வழித்தடத்தின் permit விலை மட்டுமே கோடியை தாண்டும். எங்கள் ஊரிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகளில், தனியார் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், கொண்டு சேர்க்கும் வேகம். ஆனால், உண்மை அதுவல்ல. திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா பின் வேலூர் செல்லவேண்டும். திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வரை மிக வேகமாம சென்று, சில நிமிடங்களுக்கு வாணியம்பாடியில் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். அதேபோல, வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு வேகமாக சென்று, பின் ஆம்பூரில் 15-25 நிமிடம் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். ஆனால், மக்கள் அந்த பேருந்துகள் தான் வேகமாக சேர்க்கிறான் என்று கூட்டம் கூடும். இங்கே பொதுமக்கள் உயிர் தான் பணயம் வைக்கப்படுகிறது. (ஒரு முறை சென்று பார்த்தால் இதை உணரலாம்).

நான் ஒரு BSNL எண் வைத்துள்ளேன். பெங்களூரில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டு நகரமெங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. Caller tunes-க்காக சும்மா சும்மா குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்யும் தனியார் செல் நிறுவனங்கள் அன்று எங்கே போயிருந்தன? அலுவலகத்தில் எனக்கொரு கைபேசி கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த BSNL எண்ணை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செலவானாலும் அந்த எண்-ஐ அப்படியே வைத்து, இரண்டு கைபேசியையும் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நாமெல்லாம் என்ன செய்கிறோம். தனியார் பேருந்துகள் சினிமா போடுகிறான் என்று அந்த வண்டியில் தானே ஏறுகிறோம்? அரசாங்க சேவை என்றாலே அது கிராமத்து மக்களுக்கு என்றல்லவா நினைக்கிறோம். தனியார் நிறுவனங்களின் சேவை என்றால் ஓடிப்போய் வாங்குகிறோம். நமக்காக இருக்கும் அரசாங்க பொருட்களையும் உபயோகிப்போமே? எத்தனை பேர் காதி வஸ்திராலயத்தில் வாங்குகிறோம்? அல்லது, Cooptex-ல் துணி எடுக்கிறோம். மற்ற கடைகளில் 10 துணிகள் வாங்கினால், Cooptex-ல் ஒன்றாவது வாங்குவோமே. அந்த கைத்தரியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கும்.

நம் அரசாங்கம் அளிக்கும் சேவைகளில் பல குறைகள் இருக்கின்றன. சேவைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை தான். ஒத்துக் கொள்கிறேன். அதை படிப்படியாக மாற்றவேண்டுமே தவிற தவிர்க்க கூடாது. ஒரு பேச்சுக்கு, சென்னையின் தெருக்களில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் என்ன நடக்கும் நினைத்துப் பாருங்கள். திருச்சியில் தனியார் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. அங்கே இருக்கும் போட்டியில், மக்களில் உயிர் பணயம் வைக்கப்படுகின்றது. வாகனங்கள் தறிகெட்டுப் ஓடுகின்றன. இந்த நிலை தான் சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் நிகழும். வெறும் வியாபார நோக்கம் மட்டுமே அங்கு முன்னிறுத்தப்படும். மக்கள் சேவை பின்னிறுத்தப்படும்.

ஒரு நாள் மட்டும் எல்லா சேனல்களையும் நிறுத்தி அனைவரும் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கொண்டு வந்தால் தெரியும் நம் அரசாங்கத்தைப் பற்றி.

Wednesday, May 10, 2006

வீணான என் ஓட்டு

மே 8!

சரி! இந்த தடவை(யும்) ஏமாறலாம்னு, அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துகிட்டு(!), ஊருக்கு போனேன். இணையத்தின் உபயோகத்தால், நம்ம எதிர்ப்ப காட்டலாம்னு நமக்கு தரப்பட்டிருக்குற 49 ஓ option-ஐ உபயோகப்படுத்தலாம்னு தான் போனேன். என்னுடன் என் நண்பன் வெங்கியும் வந்திருந்தான். என் புண்ணியத்தில், அவனும் 49 ஓ போடலாம்னு என் கூட வந்திருந்தான். வரிசையில் நின்று கை விரலில் மை வைத்ததும் நடந்த உரையாடல்.

நான்: அங்கிருந்த பெண்மனியிடம், "நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பல".
பெண்மனி: ம்...ம்...(!!!)
நான்: "நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பல".
பெண்மனி: சரி! போங்க. (அவங்களுக்கு rules தெரியல போல, அவங்க சாதாரணமா என்னை அனுப்பினார்).
நான்: இல்ல. Form ஏதாச்சும் fill-up பன்னனுமா? Form இருக்கே.
பெண்மனி: தேவை இல்லை.
நான் சற்றே குழப்பத்துடன் வாசலை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
அந்த சமயம், அங்கிருந்த booth agents நான் வாக்களிக்காமல் வெளியேறுவதைக் கண்டு, கலவரமாகி, (அனைவரும் என் நண்பர்கள் தாம்), எல்லோரும் எழுந்து வந்து விசாரிக்க, அடுத்து வெங்கியும் 49 ஓ கேட்டு வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறியிருக்கிறான். அடுத்து அங்கே ஒரே கலவரமாகியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. Election Officer நேரா என்னருகே வந்து விசாரிக்க, நான் 49 ஓ போடுவதாக கூறினேன்.
Election Officer: சார், அந்த பட்டன் இந்த தடவை வைக்கல.
நான்: சரி! Form கொடுங்க, fill-up செய்து கையெழுத்து (அ) கைநாட்டு வைக்கிறேன்.
Election Officer: எங்களுக்கு form தரப்படவில்லை.
எனக்கும் Election Officer-க்கும் வக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அதற்குள் booth agents-ம் என்னை சூழ்ந்து கொண்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின், அவர்கள் பேசியதில் இருந்து ஒன்று மட்டும் புரிந்தது. அதாவது, அவர்களுக்கு நான் 49 ஓ போடுவதில் விருப்பமில்லை. மேலும், நான் ஒரு கட்சியின் அனுதாபி என்று நினைத்து, மற்ற கட்சி நண்பர்கள் அமைதியானார்கள். நான் சொன்னதிலேயே உருய்தியாக இருக்க, அடுத்து வெங்கியும் வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான். எல்லோரும் சேர்ந்து அவனை வசை பாடி மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
இதற்கிடையில் அந்த Election Officer என்னிடம் வந்து
Election Officer: "சார்! தயவு செஞ்சு யாருக்காவது உங்க ஓட்டுப்போட்டுடுங்க. இல்லேன்னா counting-ல பிரச்சினை வந்துடும்"
நான்: Form கொடுங்க, fill-up செய்து கைநாட்டு வைக்கிறேன்(-ன்னு சொன்னதையே சொல்ல).
Election Officer: இல்ல! இங்க பிரச்சினை ஆயிடும். தயவு செஞ்சு சுயேச்சைக்காவது ஓட்டுப் போடுங்க. உங்களுக்கு பின்னால நிறைய பேர் வெயில்ல நிக்கிறாங்க பாருங்க (பார்றா!).
எனக்கு பிரச்சினையை பெரிசாக்க விரும்பலை. அங்கே நடந்த கலவரங்கள பாத்து, வரிசையில் கடைசியில் இருந்த ஒரு சுயேச்சைக்கு என் ஓட்டைப் போட்டேன்.
அங்கே இன்னும் வெங்கி சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தான். நான் அவனிடம் யாருக்காவது போட்டுட்டு வரச் சொன்னேன். அவனும் என்னைப்போல வரிசையில் கடைசியில் இருந்த அந்த சுயேச்சைக்கு ஓட்டைப் போட்டான்.
வெளியே வந்த பொழுது booth agent-ல் ஒருவன் பின்னாலேயே வந்து என்னிடமும் வெங்கியிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தான்.

(இதற்கிடையில், மற்றொரு பூத்தில் வாக்களிக்கச் சென்ற மற்ற நண்பர்கள், 17B form fill-up செய்து, வெற்றிகரமாக 49 ஓ பதிவு செய்துட வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்). ஆக, முதல் படியை எடுத்து வைச்சாச்சு.

Wednesday, September 21, 2005

சில நேரங்களில் சில மரணங்கள்...

சமீபத்தில் நான் கேட்ட ஒரு மரணச் செய்தி சற்றே மிகுந்த மனவேதனையை அளித்தது. சில மாதங்களுக்கு முன் நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே ஸ்ரீராமபுரத்தில் ஒரு mansion-ல் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அங்கே நாங்கள் இருந்தது மூன்றாவது மாடியில். இரண்டாவது மாடியில் எங்கள் அறைக்கு எதிர் கீழே இருந்த அறையில் சீனிவாசன் என்று ஒரு பிராமனர் தனியாக வசித்து வந்தார் (என் பெயரே தான்...!!!). அவர் பிராயம் சுமார் 35-ல் இருந்து 40 இருக்கும். பிரம்மச்சாரி, வங்கி ஊழியர். அறையில் தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அவர் அறையில் எப்பொழுது இருந்தாலும் அந்த தொலைக்காட்சி தன் பணியை செய்துகொண்டே இருக்கும். சமையலும் அவரே தான் (எங்களுக்கு ஒரு நாள் சமைத்துப் போடுவதாக கூறினார்). நாங்கள் ஒரே கட்டிடம் என்றாலும் அவர் அறைக்கு அவ்வளவாக போனது கிடையாது. அதுவும், அவர் என் Room Mate-ன் நன்பர், நான் அவ்வளவாக பேசியது கூட கிடையாது.
பின், நான் சென்னையில் வேலை கிடைத்து மாற்றலாகி வந்துவிட்டேன். ஒரு நாள் பெங்களூர்வாசிகளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, "உனக்குத் தெரியுமா? சீனிவாசன் இறந்து விட்டார்..." என்று கூறினர். எனக்கு நம்ப முடியாத வேதனையைத் தந்தது. பின் நடந்தது என்ன என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னது:
தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கும் அவர், அறையில் தொலைக்காட்சியை அலற விட்டு தன் வேலையை ஆரம்பிப்பார். அவர் ஒரு நாள் (அது தான் அவர் கடைசி நாள்) காலையில் எழுந்து தொலைக்காட்சியை அலற விட்டு, தன் அறைக் கதவை பாதி திறந்த நிலையில் விட்டிருக்கிறார். குளியலறையில் வாளியில் தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது குளியலறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது கால் வழுக்கி அவர் நெற்றி அந்த அறையில் இருந்த இரும்புக் கட்டிலின் மூலையில் அடிப்பட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் வலிப்பும் வந்திருக்கிறது. (முன்பே அவருக்கு வலிப்பு நோய் இருக்கிறதா என்று தெரியவில்லை). தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தினால் இவையாவும் வெளியில் கேட்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் உயிர் பிரிந்திருக்கிறது.
இவையாவும் அந்த கட்டிடத்தில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் அலுவலகத்திற்கு எப்பொழுதும் விடுப்பு எடுப்பதில்லை. அப்படியே அதிசயமாக எடுத்தாலும், அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவார். ஆனால், அன்று அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லையாதலால் வங்கியில் இருந்து ஒருவர் வந்து பார்த்துச் செல்ல வந்திருந்தார். அவர் தாம் சீனிவாசன் இறந்திருப்பதை கண்டறிந்தார். காலையின் இருந்து 2 - 3 முறை தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் நீர் இரைத்திருக்கிறார்கள். அதன் காரணம் அப்பொழுதுதான் அவர்களுக்கு விளங்கிற்று.
அவருக்கு ஒரே ஒரு சகோதரர் என்றும் அவர் திருச்சியில் இருப்பதாகவும் தெரியவந்தது. (அவர் இந்த செய்தியை எந்த அதிர்ச்சியும் காட்டாமல் இருந்தது ஆச்சரியம்). அவர் வந்து கையெழுத்து போட்டால் தான் பிணத்தை (காலை வரை சீனிவாசனாக இருந்தவர்) கொடுப்பதாக கூறினார்கள். பின்னர் அவர் வந்து சீனிவாசனை பெற்றுக் கொண்டு சென்றார். இறக்கும் பொழுது தன் உயிர் காப்பதற்கு என்ன என்ன முயற்சி செய்தாரோ...???
ஒரே கட்டிடத்தில் இருந்தவர், இறந்தது கூடத் தெரியாமல் மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்தால் சற்றே கலக்கமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது சென்னையில் நான் இருக்கும் அடுக்ககத்தில் கூட இப்படித்தான் இருக்கிறது. எப்பொழுதும் எல்லா வீட்டுக் கதவுகளும் சாத்தியே இருக்கும். அடுத்த வீட்டில் (flat-ல்) என்ன நடக்கிறது என்று கூடத்தெரியாமல் இருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிறு வயதில், தொலைக்காட்சி பெட்டி அவ்வளவு பரவலாக இல்லாத பொழுது எங்களுக்கு தெருவில் மற்ற சிறுவர்களுடன் மாலையில் விளையாடுவதும், எங்கள் தெருவில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் வெளியில் அமர்ந்து பேசுவதும் தான் நியாபகத்துக்கு வருகிறது. மீண்டும் அந்த நாள் வந்தால் தேவலை...

Monday, August 30, 2004

LLR விண்ணப்பிக்க முயன்ற கதை(யல்ல நிஜம்...)



தேதி : 27/08/2004
நேரம் : காலை 11:15

இந்த கதையின் கதாநாயகன், அதாவது நானேதான்...வேலூரில் நண்பனின் திருமணத்தை நடத்தி (கொடுத்து!!!) விட்டு முன்னிரவு தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலை உணவின்றி பேருந்தில் தொடர் பயனம் செய்து வாணியம்பாடியில் உள்ள RDO அலுவலகத்தை ஒரு வழியாக அடைகிறேன்.

நான் : (அங்குள்ள ஒருவரிடம்) சார், LLR apply பண்ணனும்.
நபர் 1 : வெளியே form வாங்கி fill-up பண்ணி வந்து கொடுங்க...

நான் வெளியே சென்று ஒரு கடையில் கேட்க, அவர் மற்றொரு கடையை காட்ட, நான் அங்கு செல்ல அங்கிருந்து இன்னொரு கடைக்கு வழி காண்பிக்கப்பட்டேன். அங்கு சென்று தேவையான பாரத்தை ஐந்து ரூபாய்க்கு வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து மீண்டும் உள்ளே வந்து கொடுக்கிறேன்.

நபர் 1 : இங்க கொடுக்காதே. அவரிடம் கொடு...

நான் அங்கிருந்து சென்று அவர் கண்பித்த நபரிடம் கொடுத்தேன். அவர் கேட்ட படி ரூபாய் முப்பது கொடுத்தேன். அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டேன்.

நான் : சார்! நான் என்ன செய்ய வேண்டும்.
நபர் 2 : அந்த பக்கம் போய் நில்லு. அவங்க கூப்பிடுவாங்க.

நான் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர என் அருகில் ஒரு கல்லூரி மாணவன் அமர்ந்தான். (அவன் வாணியம்பாடியில் இருந்து RDO அலுவலகம் வருவதற்கு வழி காட்டுமாறு நான் கேட்க அவன் தானும் RDO அலுவலகம் செல்வதாகவும் கூறினான். பின் இருவரும் அதே பேருந்தில் RDO அலுவலகம் வந்தோம்). அவன் இந்த முறை விரக்தியோடு என் அருகில் வந்து அமர்ந்தான்.

நான் : என்னங்க! என்னாச்சு?
அவன் : என்னுடைய Driving License-ஐ institute காரங்க தொலைச்சிட்டாங்க. அத வாங்க வந்தேன். அலைய விடுரானுங்க...

அப்பொழுது ஒருவன் (35 வயதுள்ள Office Boy) அவன் பேரை சொல்லி அழைக்க, முதல் அழைப்பிலேயே அவன் எழுந்து செல்கிறான். அவன் அழைத்தவனின் அருகில் செல்ல அவன் இரண்டாவதாக அவனை அழைக்கிறான். அவன் அங்கு சென்றதும்...

Office Boy : என்ன கூப்பிடுவது காதுல விழலையா? எத்தனை தரம் கத்தறது. License வேணுமா இல்லையா...? வந்து நில்லுடா...

அவன் அமைதியாக நிற்கிறான். அப்பொழுது என்னிடம் பணம் வாங்கியவன் மேலும் அங்கு நிற்ப்பவர்களிடம் வசூலிக்கிறார். அவர் ஒவ்வொருவரிடமும் எதாவது ஒன்று சொல்லி திட்டிக்கொண்டே அலுப்புடன் வாங்குகிறார். உதாரணமாக,

"நீ என்ன பண்ணாலும் தப்பிக்கவே முடியாது! 300 ரூபா கொடி (கையூட்டு அல்லது லஞ்சம்) கட்டாம எப்படி license வாங்குறேன்னு பாக்குறேன்."
"எங்களுக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நெனைச்சியா. இரு Inspector-ரிடம் சொல்றேன்"
ஒரு பெட்ரொல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞரிடம் "எதுக்கு இப்படி சில்லறையா கொண்டு வந்து என் உயிர வாங்குற?"

இப்படியாக இது ஒருபுரம் நடந்து கொண்டிருக்க, அந்த இண்ஸ்பெக்டர் சிலரை 8 போடச் சொல்லவும், 11 போட சொல்லவும் வெளியே செல்கிறார் (அட! 4 Wheeler-ங்க), மற்றும் சிலர் 7 1/2 போட வேண்டும். ஒரு மணிநேரம் செல்கிறது. நான் வந்த வேலை ஞாபகம் வர, என்ன இன்னும் நான் அழைக்கப்படவில்லையே என்று சந்தேகம் வர, மீண்டும் (வேறு வழி இன்றி) அந்த நபர் 2 (அதான் Mr.திட்டு) விடம் சென்று...

நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். உங்களிடம் 30 ரூபாய் கட்டிட்டேன். நான் என்ன செய்ய...
Mr.திட்டு : (என் கையில் உள்ள பாரத்தை பார்த்து) இந்த form-ஐ அங்க கொடுக்காம நீயே வெச்சுக்கிட்டிருந்தா அவங்க எப்படி கூப்பிடுவாங்க. 11 மணியோட form வாங்குற time முடிஞ்சுடுச்சு. (அவர்தான் 11:15-க்கு நான் பணம் கொடுத்தப்ப வாங்கி ரசீது கொடுத்தார் என்பதை நினைவில் கொள்க...)
நான் : சார்! நீங்க எதுவுமே சொல்லல. நீங்க தான் என்ன wait பன்ன சொன்னீங்க...
Mr.திட்டு : (கோபம் வந்தவராய்) நீ பணம் கொடுத்த, நான் வாங்கிகிட்டு bill கொடுத்தேன். அவ்வளவு தான் என் வேலை. போய் நில்லு.
நான் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருக்க, அங்கிருந்த இன்னொருவரிடம் சென்று எதற்கும் இன்னொரு முறை கேட்கலாம் என்று அவரிடம் சென்று...
நான் : சார்! (என்று ஆரம்பித்து நான் LLR விண்ணப்பிக்க வந்த கதையை சொல்லி முடிக்கிறேன்...)
அவர் : (என்னிடம் உள்ள luggage-களை பார்த்து) என்கிருந்து வரீங்க...
நான் : (கொஞ்சம் அனுதாப அலை இருக்கட்டும் என்று) பெங்களூரில் இருந்து வற்றேன் சார்.
அவர் : இல்ல. உங்க native எது?
நான் : திருப்பத்தூர்.
அவர் : திருப்பத்தூரில் எங்கே?
நான் : (நான், யார் என்னுடைய தெரு பேர் கேட்டாலும் "செங்குந்தர் தெரு" என்று சாதிப் பேர் சொல்லாமல் "பெரியவர் சன்முகனார் தெரு" என்று மற்றொரு பேர் சொல்லுவேன். இங்கு எனக்கு வேலை ஆகவேண்டும் என்பதால் எல்லோருக்கும் பரிச்சயமான) செங்குந்தர் தெரு.
அவர் : செங்குந்தர் தெருவில் எங்கே?
நான் : (என் வீட்டின் landmark சொல்ல)
அவர் : அதானெ! பார்த்த மாதிரி இருகேன்னு நெனச்சேன். இந்த form-ஐ fill-up பண்ணினதும் (ஒரு நபரை காட்டி) அவரிடம் கொடுக்க வேண்டும்.
நான் : சார்! நான் (Mr.திட்டு-வை குறிப்பால் உணர்த்தி) அவரிடம் போனபோது அவர் தான் என்னை இங்கே wait பண்ண சொன்னார். வேறு எதுவும் சொல்லலை...
அவர் : (தன் தலையில் மெல்ல அடித்து கொண்டு என்னிடம் மெதுவாக) அந்தாளிக்கு அறிவே இல்லை. இப்போ ஒன்னும் பண்ண முடியாதுப்பா.
நான் : ஐயையோ! சார் நான் பெங்களூர்ல work பன்றேன். இன்னைக்கு இதுக்காகவே leave apply பண்ணிட்டு வந்திருக்கேன் சார்.
அவர் : நீ ஒன்னு பண்ணு, Inspector வந்தா, 'சார் நான் 11 மணிக்கு முன்பே வந்து பணம் கட்டிட்டேன். உங்களிடம் கொடுக்கனும்கிறது தெரியாம நான் இவ்வளவு நேரம் வெளியே நின்னுகிட்டிருந்தேன். இதுக்காகவே leave apply பண்ணிட்டு பெங்களூர்ல இருந்து வந்திருக்கேன் '-னு சொல்லு. என்ன சொல்லுறார்னு பாப்போம்.
நான் அடுத்து அரை மணிநேரம் காத்திருக்கையில், அந்த கல்லூரி மாணவன் வந்தான்.
நான் : உன்னுடையது என்னச்சுங்க?
அவன் : ம்ம்! license கிடைச்சிடும். இன்னொரு நாள் வர சொல்லியிருக்கானுங்க. அப்பா எத்தனை நாள் அலைஞ்சிருக்கேன்.
அடுத்த அரைமணிநேரம் கழித்து inspector வருகிறார். நேரம் 1:30 மணி
நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். பணம் கட்டிட்டேன். ஆனா உங்ககிட்ட கொடுக்கனும்னு தெரியலை. நான்பாட்டிக்கு வெளிய wait பண்ணிட்டுருந்கேன் சார்.
Inspector : (சற்று சத்தமாக) பரவாயில்லை. போய் திங்கட்கிழமை வா.
நான் : சார்! நான் பெங்களூர்ல இருந்து வற்றேன். Office-க்கு leave apply பண்ணிட்டு வந்திருக்கேன்.
Inspector : (இன்னும் சற்று சத்தமாக) அப்ப monday-யும் leave apply பண்ணிட்டு வா.
நான் அவரை பின் தொடர்ந்து சென்று அவர் அறை வாசலில் நிற்கிறேன், வந்த வேலை எப்படியாவது நடக்க வேண்டும் என்று...Inspector தன் அறையில் சென்று அவர் இருக்கையில் அமர்ந்து நான் இன்னும் நின்றுக்கொண்டிருப்பதை பார்தது பயங்கர கோபத்துடன்...
"Don't waste (இப்பொழுது நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்) my time and your time..."
அவர் குரல் எனக்கு மெல்ல கறைகிரது...

சரி! இப்படி LLR விண்ணப்பிபதற்கு முடியாமல் போனதற்கு காரணங்கள் என்ன:

1. முதல் முக்கியமான காரணம், இந்த கதையின் நாயகன், அதாவது நான், பொருப்பின்றி தாமதமாக சென்றது. இதனால் என்னால் உரிமையோடு அவர்களிடம் கேட்க முடியவில்லை. நாம் நம் பாக்கம் தவறில்லை என்றால் மட்டுமே நம் உரிமையை உரிமையோடு கேட்கலாம். நான் தாமதமாக சென்றதால் அவர்கள் சொல்லுவதர்க்கெல்லம் தலை ஆட்டிக்கொண்டு இருப்பதாக ஆயிற்று.

2. முதலில் அங்கு செல்பவற்க்கு என்ன என்ன process உள்ளது என்று தெரியாது. ஆனால் அதற்கான வழிமுறைகள் எதுவும் அங்கே இல்லை. அதனால் ஒவ்வொன்றிக்கும் யாரையாவது எதிர்பார்க்க வேண்டும். அதற்காக பெரும்பாலும் எனக்கு சொல்லப்படும் அறிவுரை, "கொஞ்சம் செலவு ஆனாலும், Driving Institute மூலம் செல்!" என்பது. அவர்களுக்கு எல்லா வழிகளும் தெரியும் என்பதாலும் எங்கெங்கு கையூட்டு தர வேண்டும் என்று தெரிவதாலும், அவர்கள் மூலம் செல்வது உத்தமமாக "ஆக்கப்பட்டது". இது நம்மை மறைமுகமாக கையூட்டு கொடுக்க வைக்கிறது. இது எப்படி உண்மை என்றால் பெரும்பாலும் Driving Institute மூலம் செல்லாதவற்கள் இப்படி போன்ற திட்டுக்கள் வாங்குகிறார்கள்.

3. இது போன்ற அரசு அலுவலகங்களில் மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்கிறவர்கள் (உதா., Mr.திட்டு) தான் அந்த அலுவலகங்களுடைய முகங்கள். அகத்தின் அழகு எனக்கு அவருடைய முகத்தில் தெரிந்துவிட்டது. இந்த மனிதர் ஒருவரை எல்லோர் எதிரிலும் "நீ கட்டாயம் லஞ்சம் கொடுக்க வேண்டும்" என்று மிரட்டுகிறார், எவர்க்கும் பயப்படாமல், திமிருடன், யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று. இந்த ஆனவம் வந்ததற்கு காரணங்கள் என்று பார்த்தால் அ) அங்குள்ளவர்கள் அனைவரும் இந்த லஞ்சம் வாங்கும் network-ல் இருப்பதால், ஆ) அங்குள்ள உயர்ந்த பொருப்பில் உள்ளவரிடம் எல்லா அதிகாரம் உள்ளதால். (அந்த Inspector நினைதால் ஒருவருடைய உரிமத்தை ரத்து செய்ய முடியும்) இ) இப்படி லஞ்சம் வாங்குபவரை வேறு வழி இல்லை என்று நினைத்துக் கொண்டு சகித்துக்கொண்டிருக்கும் பொதுமக்கள் (என்னையும் சேர்த்து). மற்றும் மிக முக்கியமாக ஈ) அந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி நிரந்தரம் என்னும் மந்திரகோல். இது ஒன்றுதான் எல்லவற்றையும் செய்கிறது.

அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும், குமாஸ்தா முதல், உயர் பொருப்பில் இருப்பவர் வரை அங்கு வருபவர் அனைவரையும் வாய்க்கு வந்தபடி கத்துகிறார்கள் (ஒரு கிராமத்தான் என்றால் இந்த "மரியாதை" கூட கிடைக்காது. எல்லாம் வாயா போயா தான்) . அங்கு வருபவர்கள் அனைவரும் இதை சகித்துகொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. மக்கள். மக்கள் தாங்கள் வாங்கும் ஒரு தீக்குச்சிக்கு கூட வரி கட்டுகிறார்கள். அவர்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் இந்த வேலைக்காரர்கள் அவர்கள் கடமையை செய்ய முதலாளிகள் என்ன என்ன பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது. சரி! இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு யார் வேண்டுமானாலும் நீதிமன்றங்களுக்கு செல்ல வழி உண்டுதான். ஆனால் கோமா நிலையில் உள்ள, செல்லரித்த நீதிமன்றங்களால் என்ன செய்ய முடியும். 1985-ல் நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்திற்க்கே இப்பொழுது தான் தீர்ப்பு வந்திருக்கிறது. அதனால் நீதிமன்றங்களை நம்பி பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நான் என்ன செய்ய?

1) நான் பூர்த்தி செய்த பாரத்தை என்னுடைய நண்பன் மூலம் இன்னொரு இடைத்தரகரிடம் கொடுத்துள்ளேன். அவர் எனக்கு கொஞ்சம் செலவு ஆனாலும் (லஞ்சம் தான்), LLR எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். (கவனிக்க, LLR விண்ணப்பிற்க சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக செல்ல வேண்டும் என்பது விதி).

2) ஒரு வேலை அவரால் எனக்கு LLR விண்ணப்பிற்க முடியாமல் போனால், நான் பெங்களூரில் விண்ணப்பித்துவிடுவேன் (பிரச்சினையே பெருநகரங்களில் ஓட்டுனர் உரிமம் பெருவது மிகவும் கடிணம்). அது 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பதால், இங்கு விண்ணப்பித்து விட்டு அடுத்த 6 மாதங்களில் என்னால் முடியும் பொழுது வாணியம்பாடிக்கு சென்று மீண்டும் விண்ணப்பித்து விடுகிறேன்.