Friday, April 30, 2004

தண்ணீர்! தண்ணீர்!!

தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை பெரும் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சென்ற முறை நான் என் ஊருக்கு சென்ற பொழுது அந்தக் கொடுமையை கண் கூடாக பார்க்க, அனுபவிக்க முடிந்தது. மாதம் இரு முறை மட்டுமே தண்ணீர் விடப்படும். அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுப்பதைப் போல, நான் சென்ற அன்று நகராட்சி லாரியில் தண்ணீர் விட்டனர். ஆதற்கு எங்கள் தெருவில் செய்திருந்த ஏற்பாடு வியப்பில் (தண்ணீர் கொடுமையின் அவலம்?) அழ்த்தியது. ஆதாவது, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு எண்ணுள்ள சீட்டு வினியோகிக்கப்படுகிறது। இந்த சீட்டை தண்ணீர் பிடிக்கும் பொழுது கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் 3 அல்லது 4 குடங்கள் தண்ணீர் (நிலைமையை பொருத்தது) விடப்படும். இந்த சீட்டுக்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது தந்து விட வேண்டும். திரும்பவும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு முடிந்ததும் அவரவர் சென்று சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். (ரேஷன் ?)
நான் சென்ற அன்று என் வீட்டில் 3 காலி குடங்கள் கொடுத்து என்னை அனுப்பினார்கள். நான் போர்க்களத்திற்க்கு செல்லும் வீரனைப் போல ஆயுதங்களுடன் (வேறன்ன, 3 குடங்கள் தான்) சென்ற போது தான் தெரிந்தது, நான் சென்றது நிஜமாகவே ஒரு போர்க்களம் என்று. அங்கே ஒரு பெருங்கூட்டம் வரிசையில் குடங்களை வைத்திருந்தார்கள். அந்த இடம் காலி குடங்களின் கண்காட்சியைப் போல இருந்தது. நான் கடைசியாக சென்று குடங்களை வைத்த பொழுது, ஒரு அசரீரி, "சீனு! குடங்களை இங்கு கொண்டு வா!!" என்று. அட! யாறென்று பார்த்தால் என் தங்கை (என் சித்தி பெண்). மனதிற்குள் சின்ன அல்ப சந்தோஷம் தோன்றியது. ஆனால், என்னுடைய மனசாட்சி, "இத்தனை மக்கள் ஒழுங்காக வரிசையில் போகும் பொழுது நீ மட்டும் இடையில் சென்றால் உதைப்பேன்" என்றது. நானும் அவளிடம், "நான் இங்கேயே குடங்களை வைக்கிறேன்" என்றேன். உடனே அவள், "அடடா! ரொம்ப தான் நியாயம் பார்க்கிறாய். கவலை படாதே! நான் உனக்கும் சேர்த்து தான் குடங்களை போட்டிருக்கிறேன்" என்றாள். சரி என்று நானும் என் குடங்களை அவள் இடம் பிடித்த இடத்தில் என் குடங்களை வைத்தேன். 2 பெரிய குடங்கள் கடன் வாங்கி (என் வீட்டுக் குடங்கள் சிரியதாக இருந்ததால் என் தங்கையின் அறிவுரைப் படி) தண்ணீர் பிடித்தேன். அன்று என் வீட்டில் நான் தான் ராஜா.

சரி. இந்த நிலைமைக்கு யார் காரணம். அரசியல்வாதிகளா? மக்களா? அதிகாரிகளா? இயற்கையா? யார்??????

இயற்கையை குற்றம் சொல்ல முடியாது. காரணம், மனிதனால் இயற்கையை வெல்லவும், பழிக்கவும் முடியாது. அப்படியே வென்றாலும் அன்று தான் இந்த உலகின் கடைசி நாளாக இருக்கும்.

நம் ஆட்சியாளைர்களிடம் (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல நீண்ட கால திட்டம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும் பொழுதெல்லாம், அதை நிரந்தரமாக யாரும் தீர்ப்பதில்லை. உதாரணமாக, ஆற்று நீர் கிடைக்காத போது நாம் கிணறு தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. கிணறுகள் வற்றியதும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. இன்று ஆழ்துளை கிணறுகளும் வற்றியதும் கடல் நீரை குடி நீராக மாற்றவும், நதிகளை இணைக்கவும் மட்டுமே சிந்திக்கிறோம். மரம் நட்டால் தான் மழை பொழியும் என்று நம் அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும் நாம் அதை கவனிக்காமல் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்து வாணத்தையே அன்னாந்து அல்லவா பார்க்கிறோம். சரி! நம் முன்னோற்கள் இது போல தண்ணீர் பிரச்சினை வந்த பொழுது என்ன செய்திருப்பார்கள்? இதோ! சற்று பின் நோக்கிப் பார்ப்போம்!!

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட பொழுது நடந்த ஒரு சம்பவம். ஒரு சமயம் தென் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வந்த பொழுது, நீர் நிலைகளை ஆராய்ச்சி செய்ய வெள்ளையர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தனர். அப்பொழுது இருந்த அந்த நீர் நிலைகளின் பின்னலை (Network) பார்த்து அதிசயித்தனர். அதாவது, ராமநாதபுரத்தில் ஒரு குளம் இருக்கும். மழைக் காலத்தில் அந்த குளம் நிரம்பியதும், அந்த குளத்தில் இருந்து வடியும் உபரி நீர், வழிந்து சென்று அடுத்த ஊரில் இருக்கும் குளத்தை நிறப்பும். இது அப்படியே அடுத்த ஊருக்கும் தொடரும். இந்த முறையால், நம் முன்னோர்கள் வறட்சியை விரட்டி அடித்தனர். இந்த முறையால், தண்ணீர் பிரச்சினை தீர்வதுடன் அதிக மழை பொழியும் பொழுது வெள்ளத்தையும் தவிர்க்கும். ராமநாதபுர மாவட்டம், முன்பு செழிப்போடு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது? நாம் நம்முடைய குளாங்களை வனிக வளாகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆற்றையும், குளத்தையும் தூர் வாரும் ஒப்பந்த்தில் ஊழல் புரிந்திருக்கிறோம்.

இயற்கை ஒரு புதையல் தான். ஆனால், எடுக்க எடுக்க குறையும் அமுத சுரபி அல்ல. இயற்கைகும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நம்மால் தொட முடியாது. தொட முயன்றால் தோல்வி தான் கிடைக்கும். இயற்கை நமக்குக் கொடுக்கும் வளங்களை முடிந்த வரை சிக்கனமாக உபயோகிக்க பழக வேண்டும். இருப்பதை வைத்து மேலும் நம் வளங்களை பெருக்க வேண்டுமே தவிற, இருப்பதை உபயோகிக்க மட்டும் (அழிக்க) முயலக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் வாழ முடியும், வாழ வேண்டும். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்தால் மற்றொரு இனமும் தானாக அழியும். இதற்கு இயற்கையை வைத்தே உதாரணம் சொல்ல முடியும். இந்த உலகில் ஆபத்தான விலங்குகளான சிங்கம், புலி போன்ற மாமிசப் பட்சினிகள் (Carnivorous) இல்லை என்று வைத்துக்கொள்வோம். அதனால் சைவ பட்சினிகளான (Herbivorous) மான், முயல் போன்றவை இந்த உலகில் உள்ள செடி, கொடிகளை மேய்ந்து விடும். இதை தடுத்தல் மிகவும் கடினம். இதனால் உலகில் செடி, கொடிகள் குன்றிப் போய் மழை பொய்த்துப் போகும். இது ஒரு கற்பனை தான் என்றாலும், இது நிச்சயம் நடக்கக்கூடியது. இதைத்தான் "ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?" என்ற வரிகளைப் பிரதிபலிக்கின்றன. ஆக, இந்த உலகமே ஒரு பரந்த, மிகப்பெரிய பரந்து விரிந்த வலைப் பின்னல் (Network). ஒரு உயிர் வாழ, மற்றொரு உயிர் அவசியம் ஆகிறது. மனிதன் தன் பேராசைக்காக ஒரு உயிரினத்தை அழித்தால், அது அவனையே திருப்பி பாதிக்கும். இது ஒர் நிதர்சன உண்மை. அந்த இனம் எரும்பாக இருந்தாலும் சரி, இல்லை எருமையாக இருந்தாலும் சரி. ஒரு மரத்தை வெட்டினால் அதன் பாதிப்பு அடுத்த மழையின் போது (நம்மால் உணறமுடியாத) அளவு பாதிப்பு இருக்கும் என கண்டுபிடித்து உள்ளனர். இதை திரு. ஐசக் நியூட்டன் சொல்வது போல, "ஒவ்வொரு வினைக்கும் ஒர் சரிசமமான எதிர்வினை உண்டு". (For Every Action there is an Equal and Opposite Reaction).

ஒரு நாட்டில் மக்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு முக்கிய உறவுப் பாலமாக இருப்பது (இருக்கவேண்டியது) அரசு அதிகாரிகளே. ஆனால் நம் நாட்டில் என்ன நிலைமை என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இயற்கை எப்படி ஒரு மிகப் பெரிய வலைப் பின்னலோ, அதைப் போல நம் நாட்டில் அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் ஊழல் மற்றும் கடமை தவறுதள் ஒரு மிகப்பெரிய வலைப் பின்னல். இதன் விளைவுகள் படு பயங்கரமானவை. உதாரனமாக, அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் (பெயர் நினைவில்லை), தன்னுடய முனைவர் பட்டத்திற்க்கு (P.Hd.) ஒர் ஆய்வு மேர்கொள்ள இந்தியா வந்தார். அவருடைய ஆய்வு இந்தியாவில் நடக்கும் லஞ்ச ஊழலைப் பற்றியது. அதற்காக அவர் கொல்கத்தா சென்று ஒரு தொழில் தொடங்க அனுமதி பெற ஒரு தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே ஒரு மிகப் பெரிய வரிசை இருப்பதைக் கண்டார். எதற்கு எனக் கேட்டபொழுது, அவர்கள் சில வேலைகளுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பதாகவும், அப்படி நிற்பது தினமும் வாடிக்கையான ஒன்று தான் எனவும் சலிக்காமல் கூறினர். அதில் சிலர் இவரைப் போலவே ஒரு சிறு தொழில் தொடங்க அனுமதிப் பெறுவதற்க்கும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த அதிகாரிகளும் இவர்களை கண்டுகொள்ளாதிருப்பதை பார்த்து இவர் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று அறிந்து அவரைப் பார்க்க விரும்பினார். அந்த சம்பந்தப்பட்ட அதிகாரியை இவர் பார்த்து நிலைமையை கூற, அந்த அதிகாரியோ வங்க மொழியில் ஏதேதோ கூறினார் (இவருக்கு வங்க மொழி தெரியாது என்று அறிந்தும்). பிறகு அந்த அமெரிக்கர் ஹாங்காங் சென்றார். அங்கு காலை 10 மணிக்கு சென்ற அவர், சுமார் 3 மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்து அன்றைய மாலைக்குள் வியாபாரத்தையும் தொடங்க முடிந்தது. அதே போல பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு டென்டர் விட சுமார் 19 மாதங்கள் பிடிக்கிறதாம். அதற்குள் 5 முறை தொழில் நுட்பம் மாறிவிடுகின்றது. இந்தியன் திரைப்படத்தில் கூறப்படுவதைப் போல் வெளிநாடுகளில் கடமையை மீறுவதற்க்காக லஞ்சம் வாங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்க்கே லஞ்சம் கேட்கின்றனர். திருடனாய் பார்த்துத் திறுந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

மீண்டும் தண்ணீர் பிரச்சினைக்கு வருவோம். மேற்கூறிய காரணங்கள் தண்ணீர் பிரச்சினையில் இப்பொழுது நான் அவதிப்படுவதற்கு மறைமுகமாக காரணங்களாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? இயற்கையிடம் இருந்து திருடுவதை விட்டு, நீர் நிலைகளைப் பெருக்கலாம். நீர் நிலைகளைப் பெருக்க நீரை சேமிப்பது மிக மிக அவசியம். இது மக்களுக்கான திட்டம். மக்களும் இந்த கொடுமையை நான்றாக உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நிச்சயமாக மக்கள் உதவுவார்கள். குளங்களை வனிக வளாகங்களாக மாற்றுவதை விட்டு, அவற்றை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் (ஊழல் இன்றி). இதை மக்களைக் கொண்டு, பிரித்தாளும் முறையில், செய்யலாம் (இது தான் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலையாயிற்றே...). இதற்கு தனியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற, சத்தியமாக அரசியலை கலக்க கூடாது. அதனால், இந்த அமைப்பை எந்த மாநில அரசின் கட்டுப்பாடில் இருக்கக் கூடாது. மக்களும் தன் பங்கிற்கு, வீடுகள் தோறும் மழை நீரை சேமித்து வைக்கலாம். மேலும் நீரை சேமிக்க பல வழிகள் உள்ளது. உதாரணமாக...வீட்டில் கழிப்பறையை சுத்தப்படுத்த, துணி துவைக்கப் பயன்படுத்திய தண்ணீரைப் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். அந்த நீரை தனியாக ஒரு சாதனத்தை (Motor-ஐப் போல) உபயோகப்படுத்தி ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கலாம். அந்த தொட்டியை கழிப்பறையுடன் இணைத்து சுத்தப்படுத்த (Flush) உபயோகப் படுத்தலாம். இந்த முறையில் ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான தண்ணீரை சேமிக்கலாம். (நன்றி. உபயம் ஜெயா தொலைக்காட்சி!!!).

ஒரு நல்ல நீண்ட கால திட்டத்தை உருவாக்கி அதை கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டம் வந்தால், அதற்கு மிகப் பெறிய எதிரியாக ஊழல் மட்டுமே இருக்க முடியும். இதை முறியடிக்க, இந்த திட்டத்தை சமூக அக்கறையுள்ள சில அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். உதாரனமாக ஆன்மீக நாடான இந்தியாவில் இருக்கும் சில பெரிய அமைப்புகளான சாயிபாபா, மாதா அமிர்தானந்தமாயி போன்றோர்களை இந்த சேவையை செய்ய சொல்லலாம். Trust மூலமாக சொத்துக்களை சேர்த்து இந்த பெரியவர்களாகிய சாமியார்கள் என்ன செய்ய போகிறார்கள்? அவர்கள் சொத்துக்கள் மக்களைத் தான் சென்றடையட்டுமே! அவர்கள் கொடுத்தது தானே!! இது அவர்களாக முன் வர வேண்டியது. நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த நாட்டில் இல்லாத வளங்களா? இருந்தும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்ற சொல்லை இன்று தான் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இந்த பிரச்சினைகளை எப்படி தீர்க்கப்போகின்றோம்? இதைப் படித்தவர்கள் தயவு செய்து ஒரு முறை கண்ணை மூடி சிந்தித்துப்பார்க்கவும். யாராவது ஒருவருக்கு தீர்வுக்கான வழி கிடைக்கலாம்.

வாழ்க ஜனநாயகம் ! ஜெய்ஹிந்த் !!

7 comments:

 1. இவ்ளோ அருமையான பதிவுக்கு பின்னூட்டமே இல்லியா. என்னடா கொடுமை. 2004லு எழுதுனா என்ன, இன்னிக்கும் அதுதான் உண்மை.

  முட்டாள் அரசியல்வாதிகள் எரிகளிலும் குளத்திலும் கேடுகெட்ட அரசியல் நடத்தினர். இன்னும் கேரளா, ஆந்திரா, கர்நாடகமுனு பிச்ச தான் எடுக்க வேண்டியிருக்கு.

  இந்த வருஷம் என்னமோ மேட்டூர்ல 100 அடி தண்ணி இருக்குனு பெருமையா பீத்தி பத்திரிக்கைல செய்திபோடுராங்க. ஏன் நெறஞ்சது ? கர்நாடகாவுல வெள்ளம் வந்து மிச்சமாகுர தண்ணிய இங்க அனுப்புராங்க. இனி அதுக்கும் ஆப்பு தான். பல சின்ன நீர் தேக்கங்கள கர்நாடகா கட்டிக்கிட்டு வருது. இனிமே வெள்ள நீரும் வராது, மயிரும் வராது.

  Self relianceனா என்னானு கேக்குற லூசு அரசியல்வாதிங்க இருக்குர வரைக்கும் நாம கொடத்த தூக்கிக்கிட்டு நாய் மாதிரி அலய வேண்டியதுதான்.

  ReplyDelete
 2. நன்றி அணானி,

  //இவ்ளோ அருமையான பதிவுக்கு பின்னூட்டமே இல்லியா. என்னடா கொடுமை. //
  இது என்னுடைய முதல் பதிவு. அப்பொழுது அவ்வளவாக ப்ளாக் நண்பர்கள் கிடையாது. மேலும், தமிழ்மணத்தைப் பற்றியும் தெரியாது.

  //கர்நாடகாவுல வெள்ளம் வந்து மிச்சமாகுர தண்ணிய இங்க அனுப்புராங்க.//
  At least, இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டவது நாம் நம்மை எதிர்காலத்துக்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 3. ஆதங்கம் தான் நிறைய இருக்கு ஆனால் அதை செயல்படுத்த முறையான வழிமுறை நமக்கு தெரியலை,நம்மை ஆள்பவர்களுக்கா தெரியுமா? என்று தெரியவில்லை.
  அந்த கடமை-மீற லஞ்சம் வரிகள் இந்தியன் அல்ல "அந்நியன்" என்று நினைக்கிறேன்.
  நீர்நிலை ஆதாரங்களை சென்னையில் பல இடங்களில் ஆக்கிரமில் இழந்திருந்தாலும் "சானிடோரியத்தில்" இருக்கும் ஒரு நல்லார்வ குழு அவர்கள் ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து அவர்களாகவே பாதுகாத்துவருவதாக கேள்விப்பட்டேன்,அவ்வப்போது இப்படி காதில் விழுகிற நல்ல செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்குது.

  சொல்ல நிறைய இருந்தாலும்....ஒன்றும் நடக்காது என்ற உண்மை நிலையே கடைசியில் வந்து விழுகிறது.:-(

  ReplyDelete
 4. என்னுடன் இருக்கும் பலரை பார்த்திருக்கேன்...கை அலம்புவதற்கு கூட டேப்பை சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று மிக வேகமாக தண்ணீரை செலவழிப்பார்கள்.இரண்டு முன்று துணிகளுக்காக வாஷிங் மிஷின் போடுவார்கள்.இவர்கள் அனைவரும் நல்ல கல்லூரியில் பெரிய மேற்படிப்பு படித்து வந்தவர்கள்.என்னத்த சொல்வது?
  என் தாத்தா சொல்வார்"நீ எப்படி தண்ணீரை செலவு செய்கிறாயோ அப்படி உன் பணமும் செலவாகும்" என்று (1965 களில்).

  ReplyDelete
 5. நன்றி குமார்.

  //சென்னையில் பல இடங்களில் ஆக்கிரமில் இழந்திருந்தாலும் "சானிடோரியத்தில்" இருக்கும் ஒரு நல்லார்வ குழு அவர்கள் ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து அவர்களாகவே பாதுகாத்துவருவதாக கேள்விப்பட்டேன்//

  பல்லாவரம் பக்கத்துல, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஒரு ஏரி 85% குப்பைகளால் நிறைக்கப்பட்டுவிட்டது. அதை எப்படி காப்பாற்றுவது என்று தெரியவில்லை.

  ReplyDelete
 6. "sustainable development "
  exploiting natural resources without destroying the ecological balance of an area

  "sustainable development " இதோட சரியான அர்த்தம் நம்கிட்ட இருக்குற இயற்கை வளங்களை நாம பயன்படுத்திக்கலாம் அதனோட நம்ம அடுத்த தலைமுறையினருக்கு பற்றாக்குறை வைக்ககூடாது .

  "use the present resources and will not make the demand for future "

  ஆனா நம்முடைய பழக்கவழக்கங்கள் நமக்கே பற்றாக்குறை வரும்போல இருக்கு .

  ReplyDelete
 7. மதார் பட்டாணி,

  சீனா மற்றும் ஐரோப்பிய தேசங்கள் தங்கள் இயற்கை வளங்களை முடிந்த வரை சேமித்து வைக்க முயற்சிக்கின்றன. எப்படி? முடிந்த வரை மற்ற இயற்கை வளங்கள் உள்ள நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிடமிருந்தும் சொற்ப விலையில் தாது பொருட்களை இறக்குமதி செய்கின்றன. உதா, இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் கார்களில், காருடன் கூடவே ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், நம்முடைய இயற்கை வளாங்களையும் சேர்த்து தான் ஏற்றுமதி செய்கின்றோம்.

  இயற்கை வளங்களை பாதுகாக்கும் பழங்குடியினரை 'க்ரீன் ஹன்ட்' என்ற பெயரில் கொன்றுகுவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

  நம் அரசியல்வாதிகளையும் அவர்களின் அல்லக்கைகளையும் நம்பினால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. அவர்களை ஒதுக்கி தான் வைக்க வேண்டும்.

  ReplyDelete