Monday, May 07, 2007

லொள்ளு சபா - II

விஜய் டி.வி.யின் கலக்கலான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா இப்பொழுது சற்றே புதுப் பொலிவுடன் மீண்டும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இருக்கும் வேலைகளை முடித்து / ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியை மட்டும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று பார்க்க வைக்கும் நிகழ்ச்சி. இதற்கு முன் வந்த லொள்ளு சபாவை விட பல விஷயத்தில் முன்னேற்றம் தெரிகிறது. முக்கியமான முன்னேற்றம் அதன் பட்ஜெட்.

பட்ஜெட்டை சற்று அதிகமாகவே ஒதுக்கியிருக்கிறார்கள். முன்பு அதன் ஒளிப்பதிவு சுமாராகவே இருக்கும். ஆனால், இப்பொழுது அதில் நல்ல முன்னேற்றம். நிகழ்ச்சி நன்றாக இருக்க என்னென்ன வேண்டுமோ அவை யாவையும் செய்துகொடுக்கிறார்கள். வே.வி. படத்திற்காக டொயோட்டா க்வாலிஸ் வண்டி (கவணிக்க, அவர்களுக்கு ஒரு கொஞ்சம் பெரிய பட்ஜெட்). பெரிய திரையில் வரும் துணை நடிகர்களை நடிக்க வைக்கிறார்கள். நடிகர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் அதன் இயக்குனர். முன்பு சந்தானம் இருந்த வரை அது ஒன் மேன் ஷோவாக இருந்தது. மேலும் முன்பு இருந்த சில பிரச்சினைகளையும், மைனஸ் பாயின்ட்களையும் சரி செய்து மிளிர்கிறது. முக்கியமான கதாபாத்திரங்களாக சுவாமிநாதன், ஜீவா மற்றும் அதி முக்கியமாக மனோகர். மனோகருக்கென்று ஆர்குட்டில் ஒரு குழுவே இருக்கிறது. அதன் முகவரி இங்கே. இதில் இப்போதைக்கு 8215 உருப்பினர்கள். இவர்களில் சில கதாபாத்திரங்களுக்கென்று சிலர் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். சிவாஜி, இப்போதைய கமல் போன்றோருக்கு சுவாமிநாதனும், ஹீரோயிசம் கலந்த பாத்திரங்கள், ரஜினி, பாக்யராஜ், 'குணா' கமல், லியோனி ஆகியோருக்கு ஜீவா. மற்றும் முக்கியமாக மனோகர். அவருடைய கையை சுத்தும் மேனரிஸத்துக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.

லொள்ளு சபாவில் நான் மிகவும் ரசிப்பது இவை:

1) என்ன தான் சினிமாவை ரீ-மிக்ஸ் செய்தாலும், அவர்களுக்கென்று ஒரிஜினாலிட்டி இருப்பது. அதாவது, கதையின் வரியை மட்டும் சுட்டு, பின் அதை தங்கள் இஷ்டம் போல சிரிக்க கூடிய வடிவில் கொடுப்பது. ஆனால், எல்லோராலேயும் இது முடியாது. சன் டி.வி.யில் ஞாயிறு இரவு வரும் டாப் டென் ஒரு சொதப்பலான லொள்ளு சபா. அவர்கள் அ(க)டிக்கும் ஜோக்கை முன் கூட்டியே கணித்து விடலாம். ஆனால், இந்த லொள்ளு சபாவோ வேறு.

2) இவர்களின் ஜோக் ஒரிஜினலாக இருக்கும். உதா,

படம்: "கசந்த மாளிகை"
சிவாஜி வேடத்தில் சுவாமிநாதன். நாகேஷ் வேடத்தில் மனோகர். வாணி வேடத்தில் நடித்த பெண் பெயர் தெரியவில்லை.
ஆட்டோவில் இருந்து இறங்கி வாணியை காப்பாற்றுகிறார்.

சிவாஜி: "நாளைக்கு வந்து வீட்டுல என்னை பார். இது என் அட்ரஸ்" என்று அட்டையை கொடுக்க,
வாணி: ஐ.டி.சி, கல்கத்தா. சார் உங்க வீடு கல்கத்தாலயா இருக்கு?
சிவாஜி: ஹா...ஹா...நீ பாக்குறது சிகரெட் அட்டை. பின்னால திருப்பி பார்.
(திருப்பி படித்துவிட்டு டர்ராகிறார்)
வாணி: 'பக்கத்து தெரு'. இப்படி இருந்தா எப்படி சார் கண்டிபிடிக்கிறது?
சிவாஜி: நேரே என் தெருவுக்கு பக்கத்து தெருவுக்கு வந்து இந்த கார்டை காட்டினா என் தெரு எதுன்னு சொல்லிடுவாங்க.
(வாணி கடுப்பாக, சிவாஜி அதை வாங்கி திருத்தி தருகிறார். வாணி அதை படித்து மேலும் டர்ராகிறார்).
வாணி: 'இதே தெரு'வா?
சிவாஜி: ஆமாம்மா! நேரா என் தெருவுக்கு வந்து இந்த அட்டையை காட்டினா என் தெருவை காட்டிடுவாங்க.

இதே படத்தில்,

சிவாஜி: என்னம்மா! படிச்ச பொண்ணா இருந்துகிட்டு இப்படி கத்துற?
நாகேஷ் (நம்ம மனோகர் தான்): பின்ன படிச்ச பொண்ணா இருந்தா அண்ணா யூனிவர்ஸிட்டி, அழகப்பா யூனிவர்ஸிட்டின்னா கத்தும்?

3) விஜய் டி.வி. இந்தியாவின் சிறந்த ப்ரொமோட்டர் (Best promoter) விருது வாங்கியிருக்கிறது. அதாவது தங்கள் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதில் இந்தியாவில் சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் என்ற விருது. இதில் across programmes கூட விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பிடத்தகுந்தது, 'கலக்கப்போவது யாரு?' நிகழ்சிக்கு லொள்ளு சபா அணியை கலக்க விட்டிருப்பார்கள். அதாங்க, "மூனுக்கு போகலாம் வாங்க". புது புது யுக்தி மூலம் நிகழ்ச்சிக்கு விளம்பரப்படுத்துவதில் விஜய்க்கு நிகர் விஜய் தான். லொள்ளு சபா டீம் இதிலா தவறவிடுவார்கள்?
"திவ்யா! எங்கடா கண்ணு போய்ட்ட. மூணு அவரா வெயிட் பன்னுறேண்டா. இ இ இ..." - தனுஷ்,
"மூனு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவும் தப்பில்லே" - கமல்,
"ஆச வெச்ச பச்ச கிளியோ, அது மூனை தேடி போயிருக்கு" - டி.ஆர்.,
"அண்ணா! மூனு அவரா அடக்கி வெச்சுட்டு இருப்பீங்க. நீங்க போங்கனா" - விஜய்,
"ஏய்! கூரு மூனு ரூவா. அதுதுதுது" - அஜீத்,
"ஹேய்! நீல் ஆம்ஸ்ட்ராங். என்ன மூனுக்கு போகாம ஒன்னுக்கு போய்ட்டு இருக்க" - ரஜினி.

4) நல்ல அணிக்கு எடுத்துக்காட்டு இவர்கள். முன்பு சந்தானம் இருந்த வரை ஒன் மேன் ஷோவாக இருந்தது. சந்தானம் சென்றது இது த்ரீ மேன் ஷோவாகியிருக்கிறது. அது சுவாமிநாதன், மனோகர், ஜீவா கூட்டனி. இந்த அணியின் கலகலப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ் புத்தாண்டுக்கு வந்த "சந்தானத்துடன் ஒரு லொள்ளு பயணம்".
"இதுங்க இருக்கே எல்லாம் நவக்கிரகங்கள் மாதிரி. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மூலையில இருக்கும். ஆனா, ஒருத்தருக்கும் மூளையே இல்ல" - சந்தானம்.
"தளபதி" படத்தில் மனோகருக்கு கலிவரதன் வேடமாம். காலையில் இருந்து 'சூர்யா' என்று கத்தும் ஒரே டயலாக் மனோகருக்கு. மாலையில் டேக் போகும் பொழுது கரெக்டா 'தேவா' என்று ரஜினியை ஆழைத்து டைரக்டரை டென்ஷனாக்கியிருக்கிறார்.
நல்ல அணி என்றால், இப்படி கலாய்க்கிறது மட்டும் இல்ல, அது தான் டீமை bind பன்ன உதவுகிறது.

5) கதைக்கு ஏற்ற தலைப்பு. தலைப்புற்கு ஏற்ற கதை. முதலாவதாவது பரவாயில்லை. ஆனால், தலைப்பை வைத்து விட்டு கதையை தலைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிவிடுவார்கள். ஒரிஜினல் கதைக்கு அப்படியே synchronise செய்து அதற்கு ஏற்றவாறு தங்கள் சபாவில் கதை செய்துவிடுவார்கள்.

முதல் மரியாதையில் சிறைக்கு போன ராதாவுக்காக சிவாஜியில் உயிர் ஊசலாகிக் கொண்டிருக்க, ராதாவை பார்த்ததும் கையில் வைத்திருந்த 'வெள்ளிக் கம்பி'யால் கோர்க்கப்பட்ட முத்து சரத்தை கீழே விட்டு உயிர் விடும் காட்சி. இதில், சிவாஜியாக நடித்த சுவாமிநாதன் கையில் மிக்சர் பாக்கெட் இருக்கும். அதாவது காந்தி ஜெயந்தி அன்று சாராயக் கடைக்கு சென்று குவாட்டர் வாங்க போன ராதாவை போலீஸ் பிடித்து சென்றுவிடும். குவாட்டர் பாட்டிலோடு ராதா ரிலீசாகிவர, கையில் மிக்சர் பாகெட்டுடன் சிவாஜி உயிர் விடுவதாக காட்டியிருப்பார்கள்.

முதல் மரியாதை தான் அவர்களின் மாஸ்டர் பீஸ். காரணம் இந்த ரீமேக்கில் காமெரா அங்கிள் முதல் காட்சி அமைப்பு வரை நுனுக்கமாக கையாண்டிருப்பார்கள். எடிட்டிங் கூட அசல் படத்துடன் போட்டி போடுவது போல இருக்கும்.
"தயிர் சாதத்த தயிர் சாதம்ன்னு சொன்னானாம்; புளி சாதத்த புளி சாதம்ன்னு சொன்னானாம். அது மாதிரியில்ல இருக்கு நீ சொல்றது"
"எட்டு மணிக்கு வர்ற பஸ்ஸு ஏழு மணிக்கே வந்துடுச்சாம்; ஏழு மணிக்கு வர்ற பஸ்ஸு வரவேயில்லையாம். அது மாதிரியில்ல இருக்கு நீ சொல்றது"
"தம்பி சொல்றதும் சரிதானே!!!"

'வடையப்பா'வில். ஒரிஜினல் படையப்பாவில் சிவாஜி மாளிகை தூணை கட்டிபிடித்து சாவது போல காட்சியிருக்கும். இதில் சிவாஜியாக நடித்த சுவாமிநாதன், மின்சார கம்பத்தை கட்டி பிடித்து மின்சாரம் பாய்ந்து இறப்பது போல காட்டியிருப்பார்கள்.

6) தங்களை தாங்களே கலாய்த்துக் கொள்வது. இது கொஞ்சம் போல எப்பொழுதாவது வரும்.

ஒரு ரீ-மேக் படத்தில் மனோகர் எதையோ சொல்ல, சுவாமிநாதன் அவரை பயங்கரமாக அடித்து, "நாயே! ஏதோ நீ சொல்றதுக்கெல்லாம் ஜனங்க சிரிக்கிறாங்கன்னு ரொம்ப தான் பேசுற"ன்னு சொல்வார்.

'கசந்த மாளிகை'யில் தண்ணி அடிப்பது போல ஓவராக தள்ளாட, வாணிஸ்ரீ 'ஏண்டா! இத பார்த்தா வெறும் கலர் போல இருக்கு. இதை போட்டுட்டா இப்படி ஆடுறீங்க?" என்று கேட்க, சிவாஜியாக நடிக்கும் சுவாமிநாதன், "என்னம்மா பன்னுறது. டி.வி.யில தண்ணி அடிக்கிற மாதிரியும் தம் அடிக்கிற மாதிரியும் காட்டக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே!!"

'புதுச்சேட்டை'யில் ஒரு ஜோக்குக்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, குமார், "அண்ணே! சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே. சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே". மற்றவர், "அட போப்பா! லொள்ளு சபாவுல இப்போவெல்லாம் மொக்க ஜோக்கா வருதுன்னு சொல்றாங்க. இப்படி சிரிச்சாத்தான் உண்டு" என்று சிரிப்பார்.

7) படத்தை ரீ-மேக் செய்யாமல் சில தடவை ஓட்ட வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு கை கொடுப்பது ராஜா வேடமும் ஊர் பஞ்சாயத்து தலைவர் வேடமும். ஒரு முறை சுவாமிநாதன் ஊர் பஞ்சாயத்துக்காரர். ஊரில் பஞ்சாயத்துக்களில் தீர்ப்பு சொல்லுபவர், அப்படியே முன்னேரி உலகக் கோப்பையில் மோசமாக தோற்று திரும்பியிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் பஞ்சாயத்து நடக்கும். கடைசியில் இந்திய கிரிக்கெட் அணியை நாட்டைவிட்டே ஒதுக்கி வைத்து தீர்ப்பளிப்பார்.

பஞ்சாயத்து தலைவர் (சுவாமிநாதன்): ஏன் பங்களாதேஷ் கிட்ட தோத்தீங்க?
திராவிட் (ஜீவா): நான் அப்பொவே சொன்னேன், பங்களா தேஷ் கிட்ட தோக்க வேண்டாம், ஆஸ்திரேலியா கிட்ட தோக்கலாம்ன்னு. இவங்க கேக்கல.

8) விஜய் டி.வி. சமீபத்தில் நடிகர் விஜய்யை வம்புக்கு இழுத்திருக்கிறது. மன்னிப்பெல்லாம் கேட்டிருக்கிறார்கள். 'போக்கிரி' படத்தை 'பேக்கரி - 100% ஒன்னுமில்லை' என்று கலாய்த்திருக்கிறார்கள். இதை பார்த்தால் வேண்டுமென்றெ வம்புக்கு இழுத்திருப்பதை போல இருந்தது. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்ப்பது போல கலாய்த்திருந்தார்கள். கொஞ்சம் ஓவர் தான். ஒரு மணி நேரம், மூச்சு தெனற தெனற அடித்தார்கள். விஜய் டி.வி.யின் சிறப்பு நிகழ்ச்சிக்கு விக்ரம் தான் வருவார். சன் டி.வி.யில் விஜய். ஏனோ, இதற்காகவே கலாய்த்திருக்கலாம். சன் டி.வி.யில் டாப் டென்னில் எப்பொழுதும் விஜய் படம் தான் நெ.1 ஆக இருக்கும், படம் ஓடலைன்னாலும் கூட. (சச்சின் படத்தை ஜெயா டி.வி. வாங்கிவிட்ட கடுப்பில், சன் டி.வி.யின் டாப் டென் படம், டாப் டென் பாடல் எதிலும் சச்சின் 10வது இடம் கூட இடம்பெறாதது சன் டி.வி.க்கே உரித்தான, மட்டமான, ஆச்சரியம்).

லொள்ளு சபாவின் கண்றாவிகள்:

* சந்தானம் இருந்த வரை சபாவில் ஆபாசமான, அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்கள் மானாவாரியாக இருக்கும். இப்பொழுது அது குறைந்திருந்தாலும், அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கிறது.

* நாயே, பேயே போன்ற கவுண்டமணி ஸ்டைல் வசனங்கள் நிறைய தூவப்பட்டிருக்கும்.மேலும் நம்ம மனோகரின் சேட்டை வசனங்கள் (அவரின் ஸ்பெசல் கையை ஆட்டி ஆட்டி பேசும் மேனரிஸத்துடன் கற்பனை செய்து கொள்ளுங்கள்):

மனோகர்: "ஆவதும் பெண்ணால; அழிவதும் பெண்ணாலன்னு சொல்றீங்களே! இங்க் பெண்ணா, பால் பாயின்ட் பெண்ணான்னு சொல்லவே இல்லையே"

போலீஸ்: இங்க நடந்த கொலைய நீ பாத்த தானே?
மனோகர்: நான் பாக்கல. இவன் மறைச்சுட்டான்.

ஒரு நேர்முகத் தேர்வில், மனோகரிடம்,
தேர்வாளர்: ஆறுல நூறு போகுமா?
மனோகர்: ம்ம்...போகுமே!!!
தேர்வாளர்: எப்படி போகும்?
மனோகர்: பாய் பொண்டாட்டி நூறு ஆத்துல போனத நான் பார்த்தேனே! அப்போ ஆறுல நூறு போகுமே!!

படம்: 'அந்நியன்'

கண்களுக்கு முன் முடியுடன் அன்னியன் வந்து ஒரு கம்பத்தில் முட்டிக் கொள்ள, மனோகர், "அதான் உனக்கு கண்ணு தெரியலையே, அப்புறம் எதுக்கு இவ்ளோவ் முடிய விட்டுருக்க. என்ன மாதிரி ஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டா வெட்டிக்கலாம் இல்ல?"

படம்: 'புதுப்பேட்டை'

நண்பர்: எல்லோருக்கும் நாலு நாலு இட்லி கொடு.
மனோகர்: எம்பா! நாலு நாள் இட்லி ஏன் கேக்குற? இன்னிக்கு சுட்ட இட்லி தானே நல்லா இருக்கும்?

அன்பு: (குமாரை காட்டி) யார்றா இவண்?
மனோகர்: இவன தெரியல? இவன் தான் செல்வராகவன் தம்பி.
அன்பு: செல்வராகவன் யார்றா?
மனோகர்: நம்ம கஸ்தூரி ராஜா பையன்.
அன்பு: கஸ்தூரி ராஜா யார்றா?
மனோகர்: நம்ம ஐஸ்வர்யா மாமனார்.
அன்பு: ஐஸ்வர்யா யார்றா?
மனோகர்: நம்ம சூப்பர் ஸ்டார் பொன்ன்ன்ன்ன்னு.
அன்பு: சூப்பர் ஸ்டார் யார்றா?
மனோகர்: அட! இது தெரியல? நம்ம கஸ்தூரி ராஜா சம்பந்தி.
அன்பு: கஸ்தூரி ராஜா யார்றா?
மனோகர்: நம்ம செல்வராகவன் அப்ப்ப்ப்ப்பா.
அன்பு: செல்வராகவன் யார்றா?
மனோகர்: இது கூட தெரியலயா? இவண் அண்ண்ண்ண்ண்ண்ணன்.
அன்பு: (கடுப்புடன்) டேய். இவண் யார்றா?
மனோகர்: அதான் மொதல்லயே சொன்னேனே. செல்வராகவன் தம்பின்னு...

(தொகுதி பிரிக்கும் பொழுது)
அரசியல்வாதி (சுவாமிநாதன்): அடுத்தது எழும்பூர்.
மனோகர்: (தூங்கி கொண்டிருந்தவர் திடீரென்று எழுந்து) நுங்கம்பாக்கம் வந்தா சொல்லுங்க. நான் எறங்ங்ங்ங்கனும்.

அரசியல்வாதி: நாங்க எல்லாம் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்டவங்க.
மனோகர்: எல்லா பழத்துக்கும் கொட்டை இருக்குமா?
அரசியல்வாதி: ஆமாம்பா.
மனோகர்: அப்போ பொன்னம்பலத்துக்கு.

எக்ஸ்: எலே! நான் யாரு தெரியுமா? பாண்டிலே...
மனோகர்: பாண்டில நீ யாரு?
முதலாமவர்: பாண்டிலே...
மனோகர்: அதான் கேக்குறோம், பாண்டி-ல நீ யாரு?

படம்: 'வேட்டையாடு விளையாடு'

ராகவன்: என்னைய்யா! விசாரிச்சியா?
மனோகர்: விசாரிச்சேன் சார். எல்லாரும் நல்ல்ல்ல்ல்ல்லா இருக்காங்க. அந்த டீ கடைக்காரருக்கு மட்டும் 2 நாளா வயிரு சரியில்லையாம்...

ராகவன்: ஸோ! அந்த பொண்ண இங்க தான் எங்கேயோ பொதச்சிருக்காங்க.
மனோகர்: அப்படியா? (கத்துகிறார்) ராணீ...ராணீ...
ராகவன்: (பெண் குரலில்) போலீஸ் அங்கிள்...நான் இங்க இருக்கேன்...
மனோகர்: சார்...அந்த பொண்ணு குரல் கேக்க்க்க்குது சார்ர்ர்ர்ர்ர்...

படம்: 'வரலாறு'

அஜித்: அப்பா! நான் ஐநூறு ரூபா கேட்டா, என்ன நூறு ரூபா கொடுக்கறீங்க?
அப்பா அஜீத்: (மனோகரை பார்த்து) டேய் இங்க வாடா! இது எவ்வளாவு?
மனோகர்: ஐ! நூறு ரூபா...
அப்பா அஜீத்: பத்தியா? இது ஐ!நூறு ரூபா.

(அஜீத் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை கத்தியால் குத்த வருகிறார்.)
மனோகர்: தம்பி. அப்பாவுக்கு முதுகுல குத்துறது பிடிக்காது. ஒரு நிமிஷம் இருங்க. (அப்பா அஜீத்திடம்) ஐயா! கொஞ்சம் திரும்பி படுங்க.

ஏடாகூடம் ப்ரோக்ராம்
எம்.ஜி.ஆர். உடனான பேட்டியில்

எம்.ஜி.ஆராக நம்ம சுவாமிநாதன்.

பேட்டி எடுப்பவர்: எங்க ஸ்டூடியோவுக்கு வருக என வரவேற்கிறேன். வணக்கம் சார்.
எம்.ஜி.ஆர்: வணக்கமெல்லாம் இருக்கட்டும். ஸ்டூடியோன்னு சொன்னியே. எது ஸ்டூடியோ?
பேட்டி எடுப்பவர்: இது தான் தலைவரே ஸ்டூடியோ.
எம்.ஜி.ஆர்: எது? இது ஸ்டூடியோவா? ஏம்பா கேமரா மேன். கேமராவ அந்த பக்கம் கொஞ்சம் திருப்பு.
(கேமராமேன் திருப்புகிறார்).
எம்.ஜி.ஆர்: அப்படியே இப்படி திருப்புங்க.
(கேமராமேன் இந்த பக்கம் திருப்புகிறார் திருப்புகிறார்).
எம்.ஜி.ஆர்: பாத்தியா? ஒரு சின்ன மோட்டார் ரூம்ல சோப்பா போட்டு உக்காத்திவெச்சுட்டு இத ஸ்டுடியோன்னு சொன்னா, ஏ.வி.எம் ஸ்டுடியோவ என்னான்னு சொல்லுவ?
பேட்டி எடுப்பவர்: கோவிச்சுக்காதீங்க தலைவரே. நீங்க அடிக்கடி விவசாயத்த பத்தியே பேசரீங்களே. அப்படி விவசாயத்துக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?
எம்.ஜி.ஆர்: ஆங். பம்மல்.கே.சம்பந்தம்.

எம்.ஜி.ஆர்: சிக்கு மங்கு சிக்கு மங்கு கெக்க பப்பா...சிக்கு மங்கு சிக்கு மங்கு கெக்க பப்பா...
பேட்டி எடுப்பவர்: தலைவரே! ஓல்டு மங்க் தெரியும் அதென்ன சிக்கு மங்கு?
எம்.ஜி.ஆர்: சிக்கு மங்குன்ன தெரியாதா?
பேட்டி எடுப்பவர்: தெரியாதே!
எம்.ஜி.ஆர்: அப்போ என்ன வேணும்னாலும் சொல்லலாம். சிக்கு மங்குன்ன சிக்கு...மங்கு.
பேட்டி எடுப்பவர்: புரிஞ்சுடுச்சு. புரிஞ்சுடுச்சு.
எம்.ஜி.ஆர்: என்ன புரிஞ்சுடுச்சு.
பேட்டி எடுப்பவர்: சிக்கு மங்குன்ன அர்த்தம் என்னான்னு உங்களுக்கும் தெரியாதுன்னு புரிஞ்சுடுச்சு.

குடிச்சு வண்டி ஓட்டினதுக்கு எம்.ஜி.ஆர் பேட்டி எடுப்பவருக்கு அறை கொடுத்து,
எம்.ஜி.ஆர்: ஏண்டா எவ்வளவு குடிச்ச?
பேட்டி எடுப்பவர்: ஒன்றறை ஃபுல் தலைவரே.
எம்.ஜி.ஆர்: ஏண்டா! குடிச்சதும் இல்லாம என் கிட்டேயே ஒன்டர்புல், பியூட்டிபுல்ன்னு சொல்லுறியா?

அடுத்து மனோகருடன் பேட்டி.
பேட்டி எடுப்பவர்: மிஸ்டர் கிங்கினி மிங்கினி, ரொம்ப டென்ஷன் பன்னாதடா. ஏண்டா இப்படி இருக்க?
மனோகர்: நான் என் அம்மா ஜாட. அதான் இப்ப்ப்ப்ப்ப்படி இருக்கேன். எங்க அப்பா ஜாடையா இருந்தா, வேறறறறற மாதிரி இருப்பேன்...
பேட்டி எடுப்பவர்: இப்படி டென்ஷன் பன்னாதீங்க. கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. எங்க படிச்ச?
மனோகர்: நான் எங்க படிச்சேன்?
பேட்டி எடுப்பவர்: அதாண்டா கேக்குறேன், எங்க படிச்ச?
மனோகர்: அதான்டா சொல்றேன் நான் எங்க படிச்சேன்?
பேட்டி எடுப்பவர்: டேய் எங்கடா படிச்சே?
மனோகர்: சனியன் பிடிச்சவனே நான் எங்கடா படிச்சேன்? ஸ்கூலுக்கே போகல.
பேட்டி எடுப்பவர்: ஏண்டா ஸ்கூலுக்கு போகல?
மனோகர்: ஸ்கூல் தூஊஊஊஊரத்துல இருக்கு. அதான் போகல.

அடிக்கடி இரவில் டாக்டர்கள் ப்ரோக்ராம் வருமே, அதை கிண்டல் பன்னி ஒரு முறை
சார்! நம்மகிட்ட கேள்வி கேட்டு நிறைய லெட்டர்கள் வந்திருக்கு. படிக்கிறேன்.
(முதல் கடிதம்) "உங்க ப்ரோக்ராம பார்த்தேன் நல்லா இருக்கு"
டாக்டர் (சுவாமிநாதன்): அட்ரஸ் தப்பா அனுப்பிட்டான். கரெக்ட் அட்ரஸ் பாத்து அனுப்பிடு.
(அடுத்த கடிதம்) "உங்க ப்ரோக்ராம் நல்லா தானே போய்கிட்டிருக்கு, அப்புறம் எதுக்கு நடுவில ரெண்டு பேரு வந்து மொக்க போட்டிட்டுருக்காங்க. அதுவும் அம்மன் டி.ஆர்.முருக்கு கம்பிகள் பாட்டுக்கு வந்து ஆடுவாரே அவரு சூப்பரா ஆடுவாரு. இப்படி நல்ல நல்ல பாட்டா போடலாமே?"-ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார்.
டாக்டர்: அட மூதேவி! நாங்க ரெண்டு பேரு வந்து பேசுறது தாண்டா ப்ரோக்ராமே. நடுவுல வர்றது அட்வர்டைஸ்மென்ட்டா!!! சரி அடுத்த கேள்வி.
(டேபிளுக்கு அடியில் இருந்து ஒருவர் எழுந்து) கேள்வி அவ்வளவு தான். நானும் எவ்வளவு தான் எழுதரது. கை வலிக்குது. இந்த மூதேவி எவ்வளவு லெட்டர் எழுதினாலும் வேக வேகமா படிச்சுடுது.

ஒரு கேள்வி-பதில் லொள்ளு சபாவில்,

ஜீவா: யாருக்கு தெரியும்?
மனோகர்: எனக்கு தெரியும்.
ஜீவா: யாரு?
மனோகர்: யாருக்குத் தெரியும்னு எனக்கு தெரியும்.
ஜீவா: சரி! யாருக்கு தெரியும்?
மனோகர்: யாருக்கு தெரியும்!!!
ஜீவா: அதான் நாயே யாருக்கு தெரியும்?
மனோகர்: அதான் சொல்றேன் யாருக்கு தெரியும்!!!

(ஆனால், இதில் ஒரே அருவருக்கத்தகுந்த இரட்டை அர்த்த வசனங்கள். கேட்க சகிக்கவில்லை. அதுவும் அந்தாக்க்ஷரியில்...)

நாயகன்

மனோகர்: நாயக்கரே! நாயக்கரே!!
வேலு நாயக்கர்: என்னடா?
மனோகர்: போலீஸ்காரங்க என்கிட்ட நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டாங்களா, நான் எனக்கு தெரியாதுன்னு சொல்லி ஓஓஓஓஓடி இங்க வந்துட்டேன். போலீஸ்காரங்க என்ன தொறத்திட்டு வர்றாங்கோஓஓஓஓ...
வேலு நாயக்கர்: டாய்! தெரியாதுன்னு சொல்லி ஏண்டா இங்க வந்தே? இப்போ போலீஸ் வந்து நம்மள எல்லாரையும் புடிச்சுட்டு போகப்போறாங்கோ...
மனோகர்: நாயக்கரே! நான் வேணும்னா அவங்ககிட்ட நீங்க மளிகை கடைக்கு முடிவெட்ட போயிருக்கீங்கன்னு பொய் சொல்லி அவங்கள அனுப்பிடட்டா?
(அதற்குள் போலீஸ் வந்துவிட, வேலு நாயக்கர் மனோகர் பின் ஒளிந்துகொள்ள...)
போலீஸ்: அசையாதீங்க. அசைஞ்சா நான் சுட்டுடுவேன்.
மனோகர்: நாயக்கரே! அசையாதீங்கோ...அசைஞ்சா சுட்டுடுவாங்கோஓஓஓஓஓ!!

டாக்டர்: வாங்க. என்ன ப்ராப்ளம்?
மனோகர்: சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் ப்ராப்ளம். தீத்துவைக்க போறீங்களா?

அந்த 7 1/2 நாட்கள்

கோபி: ஆசானே. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கிறது?
பாலக்காட்டு மாதவன்: யெடோ கோபி. அங்க பார், சென்னை 28-ன்னு போட்டிருக்கு. இன்னும் 28 கிலோ மீட்டர் தான்.
கோபி: ஆசானே. அது சென்னை 600028 படத்தோட போஸ்டர். இதை காட்டி காட்டியே என்னை 500 கிலோ மீட்டர் நடக்க வெச்சுட்டீங்களே!!!
பாலக்காட்டு மாதவன்: யெடோ கோபி. ஒரு வல்லிய வீடு ஒன்னு பார்த்துட்டு...
கோபி: அம்மா தாயேன்னு பிச்சையெடுக்கலாம்றீங்களா?

பாலக்காட்டு மாதவன்: வெளியில வீடு வாடகைக்கு விடப்படும்னு போர்டு பார்த்தேன்.
வசந்தி: இல்லையே! வெளியில வாடகைக்கு இல்லை. வீட்டு உள்ள தான் வாடகைக்கு.
பாலக்காட்டு மாதவன்: ஹூம். சிரிப்பே வரல.

வசந்தி அப்பா: தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
பாலக்காட்டு மாதவன்: ஆயிடுச்சு.
வசந்தி அப்பா: பொண்டாட்டிய கூட்டிட்டு வரலை?
பாலக்காட்டு மாதவன்: தம்பி பொண்டாட்டிய எப்படிங்க கூட்டிட்டு வரமுடியும்?
வசந்தி அப்பா: யோவ்! உனக்கு கல்யாணமாயிடுச்சான்னு கேட்டேன்.
பாலக்காட்டு மாதவன்: இல்ல சார்.
வசந்தி அப்பா: கல்யாணமாகாதவங்களுகெல்லாம் வீடு தரமுடியாது.
கோபி: அப்போ மொதல்ல அவருக்கு உங்க பொண்ண கட்டி கொடுங்க. அப்புறம் வீடு வாடகைக்கு கொடுங்க.
பாலக்காட்டு மாதவன்: யடோ கோபி. கொஞ்சம் சும்மா இருடா. ஏங்க கல்யாணாமாகாதவங்களுக்கு வீடு தரமாட்டீங்க?
வசந்தி அப்பா: வர்ற பசங்க மொதல்ல தம் அடிப்பாங்க. அப்புறம் தண்ணி அடிப்பாங்க.
கோபி: அப்படியெல்லாம் சொல்லாதீங்க எங்க ஆசான பத்தி. ஏன் ஆசானே! மொதல்ல நீ தண்ணி அடிச்சுட்டு அப்புறம் தானே தம் அடிப்பே?
பாலக்காட்டு மாதவன்: யடோ கோபி. கொஞ்சம் சும்மா இருடா.
வசந்தி அப்பா: நீங்க மொதல்ல காலி பன்னுங்க.
கோபி: இன்னும் குடித்தனமே வரலை. அதுக்குள்ள காலி பன்னுன்னா எப்படி?
பாலக்காட்டு மாதவன்: யடோ கோபி.

பாலக்காட்டு மாதவன்: வீட்டு வாடகை எவ்வளவு?
வசந்தி அப்பா: ஹவருக்கு 10 ரூபா.
கோபி: அவருக்கு 10 ரூபான்னா, எனக்கு?
வசந்தி அப்பா: அவர் இல்லே. ஹவர். ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபா.
பாலக்காட்டு மாதவன்: ஏன் சார்! சாதாரணமா மாசகணக்குல தானே வீட்ட வாடகைக்கு விடுவாங்க.
வசந்தி அப்பா: ஆமா. ஆனா இந்த வீடு எப்போ இடிஞ்சு விழும்னே தெரியல. அதான் முடிஞ்ச வரைக்கும் காச கறந்துடலாம்னு.

பாலக்காட்டு மாதவன் நாலைந்து பேரிடம் அடிவாங்குவதை பார்த்து வண்டியில் இருந்து கோபி இறங்கி வந்து கூட்டத்தினரை பார்த்து,
கோபி: யோவ் எதுக்குய்யா ஆசான அடிக்கறீங்க?
ஒருவன்: அத அவனையே கேளு.
கோபி: ஏன் நீ சொல்லமாட்டியா. (ஆசானை நோக்கி) ஆசானே! எதுக்கு உங்கள அடிக்கறாங்க?
பாலக்காட்டு மாதவன்: யெடோ கோபி. நீயே கேளுடா. ஒரு விட்டுல நெருப்பு பிடிச்சுகிச்சு. கப்பத்தலாம்னு உள்ளே போயி ஒரு 5 பேர வெளியில கொண்டு வந்து போட்டேன். அதுக்கு போயி அடிக்கறாங்க.
கோபி: யோவ்! இதுக்கா அவர அடிக்கறீங்க?
ஒருவன்: அவன் வெளியில இழுத்து போட்ட 5 பேரும் நெருப்பில இருக்கறவங்கள காப்பாத்த போனவங்க.

ராஜேஷ் பாத்திரத்தில் நடிப்பவர்: சார்! நீங்க பேசினத நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன். நான் ஒரு படம் தயாரிக்கிறேன். அதுக்கு நீங்க தான் மியூசிக் போட்டுதரனும்.
பாலக்காட்டு மாதவன்: சார்! நின்ன படத்துக்கு ஞான் மியூசிக் டைரக்டரா?
ராஜேஷ்: நின்னு போன படத்துக்கு போய் யாராவது மியூசிக் போடுவாங்களா? புதுசா எடுக்கப்போற படத்துக்கு. இந்தாங்க என் விசிட்டிங் கார்டு.
பாலக்காட்டு மாதவன்: சார்! இப்போ நீங்க இருக்கிறது உங்க வீடு இல்லையா?
ராஜேஷ்: இந்த வீட்டோட விசிட்டிங் கார்டுதாம்பா இது?
பாலக்காட்டு மாதவன்: அதான் வீடு தெரியுமே அப்புறம் எதுக்கு? சரி! நான் வேணும்னா சுத்திட்டு வரட்டுமே?
(க்ளைமேக்ஸ்)
பாலக்காட்டு மாதவன்: சாரே! உங்க காதலி என் மனைவியாக முடியும். ஆனா, உங்க மனைவி என் காதலியாக முடியாது.
கோபி: ஆனா கள்ளக் காதலியாக முடியுமே!!!
பாலக்காட்டு மாதவன்: (கோபியை சரமாரியாக அடித்து) யெடோ கோபி. பாக்யராஜ் சாரோட வசனத்தை இப்படியா அசிங்கப்படுத்துறது. சாரே! இப்போ நான் சொன்னது பாக்யராஜ் சாரோட வசனத்த. இப்போ லொள்ளுசபா ஸ்டைல்ல சொல்றேன் கேளுங்க. (க்க்குர்ம்...தொண்டையை செருமியபடி) உங்க குழந்தைய என் மடியில உக்காரவெச்சா நான் மாமா மாதிரி. ஆனா, உங்க மனைவியை என் மடியில உக்காரவெச்சா நீங்க மாமா மாதிரி.

லொள்ளு சபா வீடியோக்களின் சுட்டிகளை அனைத்தும் இந்தப் பதிவு தொகுத்து வழங்கி வருகிறது ...
www.desipundit.com/2007/03/15/lollusabha