Thursday, December 14, 2006

காதல் அழகானது, காதலிக்கப்படுபவர் அல்லர்

தற்போது என் அலுவலக நண்பனுடன் (கேரளத்தில் இருந்து வந்தவர்) பேசிக்கொண்டிருந்த போது பேச்சு கேரள நடிகர் முகேஷ் பற்றி போனது. முகேஷும் நடிகை சரிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரு முறை அவன் நண்பன் கொச்சினில் உள்ள ஒரு விமான நிலையத்தில் முகேஷை பார்த்ததாகவும், அப்பொழுது அவர் பின்னால் சற்று தள்ளி அவர் மனைவி சரிதா வந்துகொண்டிருந்ததாகவும் கூறினார். ஆனால், அவர் சொன்னது, சரிதா உடல் சற்றே குண்டாக இருப்பதாலும், அவ்வளவாக அழகாக இல்லாததாலும் அவருடன் வர சங்கடப்பட்டுக் கொண்டு முகேஷ் சற்று முன்னால் வந்ததாக கூறினார். அப்புறம் ஏன் அவளை திருமணம் செய்துகொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். எனக்கு சற்றே வியப்பாக இருந்தது. காரணம், அவர் கூறியதன் பொருள், 'அழகாக இருப்பவர்கள்/களை தான் காதலிக்க வேண்டும்' என்று நினைக்கிறேன். அவரிடம் கேட்டதற்கு அவரும் அவ்வாறே கூறினார் (நானும் முன்னெல்லாம் அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன்).

அவர் கூற்றுப் படி அழகாக இருப்பவளைத்தான் காதலிப்பார்களா என்று கேட்டேன். அவரும் குழப்பமாக ஆமாம் என்பது போல ஆமோதித்தார். அப்படிப் பார்த்தால் உலகில் காதலிப்பவர்கள் எல்லோரும் அழகாகவா இருக்கிறார்கள்? இல்லையே. எல்லோரும் ஐஸ்வர்யா ராயாகவோ அல்லது சல்மானாகவோ விவேக் ஓபிராயாகவோ அபிஷேக்காகவோ இல்லையே!!! அழகு என்பது உடலில் இல்லை. ஐஸ்வர்யா ராயையே கல்யாணம் செய்துகொண்டால் கூட பிடிக்கவில்லை என்றால் எவ்வளாவு நாள் தான் வாழ முடியும்?

என்னைப் பொருத்த வரை அழகு என்பது 90% மனதில் தான் இருக்கிறது. ஒரு பெண் நம்மை கடந்து செல்கிறாள் என்றால் அவள் புற அழகு அவளை ஒருமுறை திரும்ப பார்க்கத் தூண்டும். திரும்பிப் பார்ப்பீர்கள். அதற்காக அவள் உங்களை கடக்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள்? ஒரு கட்டத்தில், புற அழகு உங்களுக்கு கட்டாயம் அலுப்பைத் தந்துவிடும். ஆக, புற அழகு என்பது ஒருமுறை பார்க்க வைக்கும் visiting card. அவ்வளவே. நம்ம மூக்காயி கருப்பாயி எல்லாம் காதலிக்காதவர்களா என்ன? பெங்களூருவில் இருக்கும் என் நண்பன் ஒருவன், நான் சென்னைக்கு மாற்றலாகி வந்த சில நாட்கள் கழித்து என்னைப் பார்த்து, 'அப்பாடா! என்னை விட நீ கருப்பாக ஆகிவிட்டாயே!' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான் (விளையாட்டாக தான்). நான் மனதில் சிரித்துக் கொண்டேன்.

நான் பெரும்பாலும் பார்ப்பவை எல்லாவற்றையுமே ஒரு சர்வேயாக பார்க்கும் பழக்கம் உடையவன். என் மனதில் எப்பொழுதும் ஏதாவது ஒரு சர்வே ஓடிக்கொண்டிருக்கும். என் சர்வேக்களின் முடிவு தான் இந்த பதிவும். அழகில்லாதவளையே கல்யாணம் செய்துகொண்டாலும் கூட, சில நாட்களுக்குத் தான் பிடிக்காமல் போகும். பின் அந்த பெண் / ஆணுடைய பழக்க வழக்கங்கள் உங்களுக்கு பிடித்து விட்டால் பின் அழகு என்பதையே மறந்து விடுவீர்கள். இது என் நண்பனிடத்தில் நான் கண்ட உண்மை. திருமணத்திற்கு முன் அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. இதை நேரடியாக அவனுக்கு புரியவைக்க முடியவில்லை. என் அம்மாவிடம் சொன்னேன். என் அம்மா 'கல்யாணம் ஆனால் அதெல்லாம் சரியாகிவிடும்' என்றாள். ஆனால் அவன் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை. ஜாதகம் முதலிய சில நிர்பந்தங்களால் திருமணம் நடந்தது. அடிக்கடி சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தான். பின், ஒரு நாள் அவன், காத்துகொண்டிருந்தது போல, வசமாக என்னிடம் மாட்டினான். அவனிடம் இப்பொழுது உன் மனைவியின் அழகு பிடிக்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவன், அப்படியெல்லாம் இல்லையென்றும், எல்லாவற்றையும் அனுசரித்து போவதானவும், நல்ல பெண்ணாக(!) இருப்பதாகவும் கூறினான். (பின் அவன் வீட்டில் நடந்த மாமியார் மருமகள் பிரச்சினையில் குடும்பமே மருமகளுக்கு சப்போர்ட்டாக இருந்தது).

என் மற்றொரு நண்பன் ஒருவன் சன் மியூசிக்-ல் வரும் ஒரு பெண்ணை பார்த்தால், 'என் ஆளு வந்துட்டா' என்பான். அந்தப் பெண்ணை அவன் முதலில் பார்த்த பொழுது 'சன் மியூசிக்கில் ஃபிகர் செலக்ஷனே சரியில்லை' என்று கமென்ட் அடித்திருக்கிறான். அவனுக்கு அது நியாபகமில்லை. அவனிடம் கேட்டேன், 'ஒரு வேளை இந்தப் பெண்ணை முதல் முதலாக பார்க்கும் பொழுதும் இதே தான் சொல்லியிருப்பாயா?' என்றேன். அதற்கு அவன், 'ம்ஹூம்...ஆனா, அது ஏன்டா?' என்று என்னிடமே திருப்பிக் கேட்டான். அவனுக்கு புரியவில்லை. அழகில்லாதவர்களை முதல் முதலில் பார்த்தால் பிடிக்காமல், ஏன் சிலருக்கு அருவருப்பாகக் கூட தோன்றும். ஆனால், அவர்களிடம் நாம் பழக பழக சில நாட்களில் அவர்களிடம் உள்ள குறைகள் எல்லாம் சூரியன் வந்ததும் உருகிவிடும் பனியை போல உருகிவிடும். காரணம், குறைகள் என்று நாம் நினைத்திருப்பவை நமக்கு பழக்கப்பட்டிருக்கும். அது நம் மனதில் இருந்து விலகிவிடும். அவனுக்கு இதை விளக்கினேன்.

என் நண்பன் ஒரு பெண்ணை விரும்பினான். அவள் பார்ப்பதற்கு ஒன்றும் அழகில்லை (அதாவது நம்ம கண்களின் படி). ஆனால், அவளை காதலித்தான். பேச்சு திருமணம் செய்து கொள்வது வரை சென்றது. பின் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. ஆனால், ஒருவன் கேட்கும் பொழுது பெண் எப்படி இருப்பாள் என்று கேட்க, இவன் கொஞ்சம் போல கருப்பாக, சற்றே பூசினாற் போல இருப்பாள் என்று கூறினான். அதற்கு அவன், 'அப்புறம் ஏன் அவளை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாய்?' என்று கேட்டிருக்கிறான். எங்கு போய் சொல்வது? சிரிப்பு தான் வந்தது.

ஒரு முறை எங்கள் ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் கண்டது. எங்கள் ஊர் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத சிறிய ஊர். ஊரை சுற்றிலும் சில கிராமங்கள் (10+) இருக்கிறது. அதானாலேயே என் ஊர் பெயர் 'திருப்பத்தூர்'. அங்கு ஒரு கிராமத்துக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு பெண் பேருந்து புறப்படும் பொழுது வண்டியில் இருந்து இறங்கி வந்து, கசங்கிய தாள்களாக 20 ரூபாய் கொடுத்து 5 ஃபேர் & லவ்லி வாங்கி போனாள். எங்கோ விழாவுக்கு போகிறாள் போல. அந்தப் பெண் ஒன்றும் வசதியான பெண் அல்ல. நம் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தான் உலகத்தை அவளுக்கு காட்டும் கண்ணாடிகள். இந்த ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவளை எந்த அளவுக்கு அவள் நிறத்தின் மேல் ஒரு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள். பரிதாபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தது தவிற ஒன்றும் செய்ய முடியவில்லை என்னால். முதலில் இப்படிப்பட்ட விளாம்பரங்களை தடை செய்ய வேண்டும். இன்னும் கூட நம் திரைப்படங்களில் கதாநாயகியாக வெள்ளை தோலுடைய பெண்ணை தானே பார்க்கிறோம். கருப்பாக இருந்தால் அவள் கதாநாயகனின் தங்கை ஆகி விடுகிறாள். இந்த விஷயத்தில் சரிதாவிற்கும், அர்ச்சனாவிற்கும் ஒரு Hats-off.

'காதலுக்கு கண்ணில்லை' என்பது அடுத்தவர் கண்களுக்கு. காதலிப்பவர்களுக்கு அல்ல. நம் மக்களின் கூற்றுப்படி அழகு என்பது வெறும் நிறத்தில் அல்லவா இருக்கிறது? 'நம்ம ஊர் கலரே கருப்புதான். அதை பிடிக்கவில்லையா' என்று விவேக் சொல்வது தான் நியாபகத்திற்கு வருகிறது. எல்லா அம்மாக்களும் பெண் பார்க்கும் பொழுது, பெண் இன்னும் கலராக இருந்தால் தேவலை என்று தானே சொல்கிறார்கள்.

இப்பொழுது இயந்திர கதியில் தான் காதல் வருகிறது. அதுவும் முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையில். இந்தத் துறை வந்த பிறகு காதல் கல்யாணங்களின் எண்ணிக்கை என்னவோ உயர்ந்துவிட்டது தான். ஒரே ஆறுதல், கலப்பு திருமணங்களும் இதில் அடக்கம் என்பது. ஆனால் இந்தத் திருமணங்கள் காதல் திருமணங்களா என்று என்னை கேட்டால் சிரிப்பை தான் உதிர்ப்பேன். இவை பெரும்பாலும் 'மேட் (made) ஃபார் ஈச் அதர்' இல்லை, 'மேட் (mad) ஃபார் ஈச் அதர்' தான். மாற்றி மாற்றி ஏமாற்றி கொள்கிறார்கள். கவிதா சொன்னது போல, இது வெறும் MATCHING. அவ்வளவே. 'ரெண்டு பேரும் ஐ.டி.யா? ஓ.கே. இரண்டு சம்பளமா? ஓ.கே. ஒரே கம்பேனியா? ஓ.கே. ஒத்து வருவாளா? ஓ.கே. அப்ப காதலிக்கலாமா? ஓ.கே'. இது தான் நடக்கிறது. அதுவும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கூத்து இருக்கிறதே? ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் ஒரு இலட்சம் முதல் பணம் வேறு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் (இன்ஃபோசிஸ்ல்). உண்மையா தெரியவில்லை. காரணம், ஒரே கம்பெனி என்றால் அதிக காலம் அதே கம்பெனியில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை. அதனால் தான் இன்ஃபோசிஸ்ல் ஒரு மேட்ரிமோனியல் வலை கூட இருக்கிறது. இவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு சர்வே படி குறைந்தது 18 மாதங்கள் காதலித்திருந்தால் தான் அவர்களின் திருமணம் வெற்றி பெறுகிறது என்று கணித்திருக்கிறார்கள், இங்கல்ல இங்கிலாந்தில். இல்லாவிட்டால் காலையில் திருமணம், மாலையில் விவாகரத்து நோட்டீஸ் என்று ஏன் நடக்க போகிறது? (இந்த விஷயத்தில், நம் ஊரிலாவது பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் தலையெழுத்தே என்று வாழ்ந்து தான் தீரவேண்டும் என்ற Security இருக்கிறதே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்).

சமீபத்தில் ரசித்தது, ஸ்பைடர்மேன் II திரைப்படம். அதில் வரும் கதாநாயகி ஒரு வேளை கருப்பு தோலுடன் இருந்திருந்தால் அவள் நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்துப் பெண் போல தான் இருந்திருப்பாள். காசினோ ராயல் கதாநாயகி கூட பிரமாதமான அழகு கிடையாது. GODS must be crazy-ல் ஒரு ஆப்ரிக்க பழங்குடியினர் தான் கதாநாயகன். பார்க்க நோஞ்சானாக இருப்பார். என் வீட்டில் அந்த படத்தின் டி.வி.டி-யை காண்பித்த பொழுது அந்த படத்தை யாரும் பார்க்க இசையவில்லை. பின் அந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தவுடன் அவர்களுக்கு அந்த படத்தை மிகவும் பிடித்து விட்டது. எங்கோ கேள்விப்பட்டது, எந்த ஹாலிவுட் கதாநாயகிகளும் படம் முடியும் பொழுது அழகாகவே தெரிவார்கள். காரணம் அவர்களின் கதாபாத்திரம் தான்.

The Brief History of Time என்னும் பெஸ்ட் செல்லர் புத்தகத்தை எழுதிய கோட்பாட்டு இயற்பியலாளர் Stephen Hawking மோட்டோர் நியூரோன் என்னும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர். கழுத்துக்கு கீழ் எந்த உறுப்பும் வேலை செய்யாமல் ஒரு இயந்திர சக்கர நாற்காலியை மட்டுமே துணையாக வைத்து சாதனை படைத்தவர். அவரையும்(!) காதலித்து திருமணம் செய்து கொண்டாள் ஒரு பெண்.

(சில நேரங்களில் 'சார்! என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை' என்று நாமே கடிதம் போடுவோமே. அப்படித்தான் சில விஷயங்களும். கண்டுக்காதீங்க...ஆங்...)

Friday, December 08, 2006

ரோமன் ஹாலிடே (1953)

திரைக்கதையை அழகுடன் சொல்ல சற்றே நீளம் தேவைப்படுகிறது.

1953-ல் வந்த கருப்பு வெள்ளை படம் 'ரோமன் ஹாலிடே' (Roman Holiday). சில ஆஸ்கர் விருதுகளையும், மற்றும் பல விருதுகளையும் குவித்த படம். இப்படத்தின் கதாநாயகி ஆட்ரே ஹெபன், பெல்ஜியத்தில் பிறந்த, உலகின் மிக அழகிய பெண் என அழைக்கப்படுபவர் (உண்மையாவே அடித்துப் போடும் அழகு). இந்தப் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றவர். பிற்பாடு, 1993-ல், புற்றுநோயால் இறந்தார்.24 மணிநேரம் நடைபெறும் கதை, படம் முழுவதும் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் படமாக்கியிருக்கிறார்கள். கதை பிரித்தானிய இளவரசி மார்க்கரெட் பற்றின படம் என்று கூட கிசுகிசுக்கிறார்கள். முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்து விடுகிறது. இங்கே கதாநாயகி ஒரு பெயர் சொல்லப்படாத நாட்டின் பட்டத்துக்கு வரப்போகிற 'அழகான' இளவரசி. கதாபாத்திரத்தின் பெயர் ஆன் (Ann). இளவரசி நல்லெண்ண பயணமாக ஐரோப்பிய தலைநகரங்களுக்கு பயணமாகிறார். இங்கிலாந்து, ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் சென்று பின் கதை நிகழும் ரோம் நகரத்திற்கு பயணம். அங்கே தூதரகத்தில் பல நாட்டு அரசியல் தலைவர்கள், விருந்தினர்களுடன் ஒரு சந்திப்பு. இளவரசியின் நீண்ட கவுனுக்கு அடியில், அவள் பாதங்கள் மண்ணில் நிலை கொள்ளாமல், வலியாலும் சோர்வாலும் ஆசுவாசப்படுத்துக் கொள்ளும் வேளையில் தன் ஒரு காலின் காலணியை நழுவ விடுகிறாள். பின் அங்கிருக்கும் விருந்தினர்களுடம் நடனம் ஆடும் தோரணையில் காலணியை மீட்டெடுக்கிறாள்.பின் இரவு உணவு முடிந்து தூங்கப் போகும் பொழுது, நைட் கவுன் பிடிக்கவில்லை, பைஜாமா வேண்டுமென்று கேட்கிறாள். அவள் கேட்பது கிடைக்கவில்லை. வெளியில் சன்னலில் ரோம் நகரத்து இரவு வாழ்க்கையின் ஒரு பகுதியை பார்க்கிறாள். பின் அவளுக்கு இளஞ்சூடான பாலும், பிஸ்கட்டும் (crakers) கொடுக்கிறார்கள். மறுநாளைய அலுவலை பட்டியலிடுகிறார்கள். இதை படிக்க கேட்க கேட்க, தன் வாழ்க்கையின் கட்டுபெட்டித்தனத்தையும், தன் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையை எண்ணியும் கத்துகிறாள். அவளை தூங்க வைக்க மருத்துவர் மயக்க ஊசியை போட்டு விட்டு தூங்கச் சொல்கிறார். மயக்கத்தில் பிதற்றுகிறாள் (உபயம், 23ம் வடிவேலு). அந்த அளவுக்கு மனச்சோர்வு.

தன்னை அலைக்கழிக்கும் வாழ்க்கையின் பிடியில் இருந்து சுதந்திரம் வேண்டுகிறது அவள் மணம். அந்த இரவு யாருக்கும் தெரியாமல் (தெரிந்தா விடுவாங்களா?) தூதரகத்தில் இருந்து தப்பிக்கிறாள். வெளியே செல்ல தயாராக நின்று கொண்டிருக்கும் ஒரு குப்பை லாரியில் பின் பக்கம் உள்ளே சென்று ஒளிந்து கொள்கிறாள். முதல் முறையாக தன்னை சுற்றிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாத, எதையும் formal-ஆ செய்யும் கட்டுப்பாடுகள் இல்லாத பயணம் அது ('மே மாதம்' நினைவுக்கு வந்தால் நான் பொருப்பல்ல). மூடும் தூதரகத்தின் கதவுகளை பார்த்து புன்னகையுடன் அவள் பயணம் இனிதே தொடங்குகிறது!

லாரி ஒரு இடத்தில் நிற்கும் பொழுது குதித்து விடுகிறாள். மயக்க ஊசியின் கைங்கரியத்தால் தூக்கம் கண்களை சுழற்ற அங்கிருக்கும் ஒரு பூங்காவின் (குட்டை) சுவற்றில் படுத்து உறங்குகிறாள். அந்தப் பக்கம், கிளப்பில் சீட்டாட்டம் முடிந்து வெளியே தன் வீடு நோக்கி வருகிற அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜோ ப்ராட்லீ (Joe Bradley), ஒரு அழகான பெண் அங்கே படுத்துக்கொண்டிருப்பதை பார்க்கிறான். அவள் அழகைப் பார்த்து ஒரு கணம் நிற்கிறான். அவள் திரும்பிப் படுக்கும் பொழுது கீழே விழுவதாகப் பட, அவளை எழுப்புகிறான். அழகான மேட்டுக்குடி பெண்ணைப் போல இருக்கிறாள், ஆனால் குடித்துவிட்டவளைப் போல இங்கே படுத்திருக்கிறாளே என்று பரிதாபப்பட்டு அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். அவளிடம் பணம் இல்லை என்று தெரிகிறது ("ஐ நெவர் கேரி மனி"). ஒரு டாக்ஸியை அழைத்து அவளையும் ஏற்றி விட்டு எங்கே செல்வதென்று கேட்கிறாள். அவள் 'Coliseum' எனக் கூற குழப்பம் அடைந்து அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அந்த இரவு அங்கே தங்க வைக்கிறான்.

வீட்டில் அவளுக்கு தன் மாற்று உடையை கொடுத்து உடை மாற்றிக் கொள்ள சொல்லுகிறான். நைட் கவுன் இல்லையா என்று கேட்கிறாள். அவன் இல்லை என்று சொல்கிறான். தன் இரவு உடையை கொடுக்கிறான். அவளுக்கு பிடித்த, அரண்மனையில் கிடைக்காத நிறம். பின் தன் உடை மாற்ற உதவும் படி கேட்கிறாள். மிகுந்த தயக்கத்திற்கு பிறகு அவள் கழுத்து டையை (necktie) மட்டும் கழற்றி மற்றதை அவளையே பார்த்துக் கொள்ளுமாறு கூறி வெளியே காபி குடிக்க நழுவி விடுகிறான். போகும் பொழுது தன் படுக்கையில் படுக்க வேண்டாமென்றும், அங்கே இருக்கும் ஸ்டெரெச்சர் போன்ற ஒரு சோபாவில் (couch) படுக்குமாறும் கூறிச் செல்கிறான். பின் அறைக்குத் திரும்பும் பொழுது, அவள் தன் படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்து, அதன் அருகில் அந்த சோபாவை வைத்து, கட்டிலில் இருக்கும் அவளை ஒரே உருட்டலில் சோபாவிற்கு உருட்டுகிறான் (இது ஒரே shot-ல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி).

மறுநாள் காலை 11:45-க்கு இளவரசியுடன் இருக்கும் இன்டர்வியூவை மறந்து மிகவும் தாமதமாக எழுகிறான். பின் அவசரமாக அலுவலகத்திற்கு செல்கிறான். அன்றைய செய்தியில் முக்கியமான செய்தி, இளவரசி திடீரென்ற காய்ச்சலினால்(?) அன்றைய அலுவல் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்ற செய்தி. இதை அறியாமல், ப்ராட்லீ தன் பாஸிடம் இப்பொழுது தான் இளவரசியுடன் நேர்காணல் முடித்து வருவதாக "a gold-plated, triple-decked, star-spangled lie"-கிறான். பின் நாளிதழ்களில் வந்த செய்தியைப் பார்த்து தன் வீட்டிலிருப்பது இளாவரசி என்று உணர்ந்து நேரே தன் அடுக்ககத்தின் காவலாளியை ஃபோனில் அழைத்து தன் அறையில் இருப்பவர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது, யாரும் தன் அறைக்குள் செல்லக்கூடாதென்று பாதுகாப்பு கொடுக்கும் படி கூறுகிறான். பின் தன் பாஸிடம் வந்து, இளவரசியுடம் நேரடியான, எக்ஸ்க்ளூசிவான படத்துடன் கூடிய பேட்டிக்கு பேரம் பேசுகிறான்.

பின் தன் வீட்டிற்கு 1:30-க்கு வந்தால் அப்பொழுது தான் இளவரசி எழுந்திருக்கிறாள். பின் அவர்களுக்கிடையில் அழகான உரையாடல். அவள் தன்னை அன்யா ஸ்மித் ('Anya Smith')-ஆக அறிமுகம் செய்துக் கொள்கிறாள். ப்ராட்லீ தனக்குத் தெரிந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவள் இஷ்டப்படி விட்டுவிடுகிறான். அவள் குளிக்கும் நேரம் பார்த்து வெளியே வந்து தன் பாப்பரசி புகைப்படம் எடுக்கும் தன் நண்பண் இர்விங் ராடோவிச் (Irving Radovich)-க்கு ஃபோன் செய்து "தலைப்பு செய்தி, புகைப்படம் தேவைப்படும்" என்றும் மிக அவசரமாக வரும் படி சொல்கிறான்.

ஆன் குளித்து முடித்து, அந்த வித்தியாசமான சூழலை கண்டு வெளியே சுற்றிப் பார்க்க கிளம்புகிறாள். அவளை முன்னே போகவிட்டு ப்ராட்லீ அவளுக்குத் தெரியாமல் பின்தொடருகிறான். அவனிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு (திருப்பிக் கொடுக்க விலாசமெல்லாம் வாங்கிக் கொண்டு வேறு) அங்கிருக்கும் மார்க்கெட் செல்லுகிறாள். தான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறாள். முதல் வேளையாக அங்கிருக்கும் மரியோ டெலானி-(Mario Delani)யின் சலூனுக்கு சென்று தன் முடியை வெட்டிவிடுமாறு கூறுகிறாள். மரியோவுக்கு அந்த அழகான முடியை அவள் வெட்டுவதில் மனக்கஷ்டம். இரண்டு முறை கேட்டு விட்டு கடுப்புடன், கஷ்டப்பட்டு வெட்டுகிறான். இங்கே ஆன்-ன் கண்களே கதை சொல்லிவிடுகிறது. மரியோ, ஆன்-ஐ அன்று இரவில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு அழைக்கிறான். இதெல்லாம் அவளுக்கு புதிதாக தெரிகிறது. பின் தொடரும் ப்ராட்லீ அவன் நண்பன் பாப்பரசி புகைப்படம் எடுப்பவன் வருவதற்கு தாமதம் ஆகவே, அங்கு விளையாடும் குழந்தைகளிடமிருந்து காமெரா பிடுங்க முயன்று அக்குழந்தைகளின் ஆசிரியர் முறைக்க தர்ம சங்கடம். பின் சாலையோரத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் கடையில் ஒரு கோன் ஐஸை வாங்கிச் சுவைத்துக் கொண்டு ஒரு பூக்கடைக்கு வருகிறாள். இங்கு ஒரு அழகான காட்சி. பூக்கடையில் இருப்பவன் அவள் கையில் ஒரு பூங்கொத்தை கொடுக்கிறான். அவள் பையில் பணம் தேடுகிறாள். பணம் குறைவாக இருப்பதைப் பார்த்து பூங்கொத்தை அவனிடமே திருப்பி கொடுக்கிறாள். அவன் பரிதாபப்பட்டு அந்த பூங்கொத்தில் இருந்து ஒரு ஒற்றை பூவை அவளிடம் கொடுக்கிறான். அவள் அதற்கு காசு கொடுக்க அவன் வாங்கிக் கொள்ள மறுக்கிறான். அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அந்தப் பூவுடன் ஓர் இடத்தில் வந்து அமர்கிறாள்.அங்கு ஒன்றும் தெரியாததை போல "ஹேய்! என்ன இங்கே?!!" என்றவாறு அங்கு வந்து அவளுடன் சேருகிறான் ப்ராட்லீ. ப்ராட்லீயிடம் தான் பள்ளியில் இருந்து ஓடிவந்துவிட்டதாகவும், திரும்பும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறாள். ப்ராட்லீ இன்னும் இருக்கும் நேரத்தை தன்னுடன் செலவழிக்கும் படி கூறுகிறான். பின் ஒரு சாலையோர உணவகத்தில் அமர்கிறார்கள். (அவள் சாதாரணமாக ஷாம்பெய்ன் கேட்க, ஆடித்தான் போகிறான் ப்ராட்லீ). இந்த நேரத்தில் பாப்பரசி புகைப்படம் எடுக்கும் இர்விங் (Irving Radovich) வந்து சேறுகிறான். அவளிடம் ஏதோ உளர பிராட்லீ அவன் மேல் காபியை ஊற்றி தனியே அழைத்து விவரிக்கிறான். பின் அவள் (முதல் முறையாக) புகை பிடிப்பதை அவன் கையில் கையில் சிகரெட் லைட்டருடன் பொருத்தப்பட்ட காமெராவில் படம் பிடிக்க ஆரம்பிக்கிறான்.

இதற்கிடையில் இளவரசியை தேடி ரகசியமாக ஒரு குழு வந்து சேருகிறது. இளவரசியோ பிராட்லீயுடன் ஸ்கூட்டரில் ரோம் நகரத்தை வலம் வருகிறாள். பின்னால் காரில் வரும் இர்விங் புகைப்படம் எடுத்து தள்ளிக்கொண்டு வருகிறான். ஒரு முறை ஓட்டத் தெரியாமல் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கண்டபடி ஓட்ட பின் காவலர்கள் துரத்தி காவல் நிலையத்தில் விசாரணை. பிராட்லீ அமெரிக்க பத்திரிக்கையாளர் என்பதாலும், அப்பொழுதுதான் திருமணம் ஆனவர்கள் என்றும் பொய் கூறுவதாலும் விடுவிக்கப்படுக்கிறான். (அந்த பூ கொடுத்தவன் ரோம் முறைப்படி ஆன்-க்கு ஒரு கிஸ் வேறு. வயிறு எறிகிறது). பின், யார் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்க, பொய் சொன்னால் கையை தின்றும் ஒரு குகைக்குள் கையை விடுமாறு கூறுகிறான் பிராட்லீ. அவள் பயந்து பிராட்லீயை முதலில் கையை விட சொல்கிறாள். (காதலன் படம் நியாபகம் வருதா?). கையை உள்ளே விட்டதும் மாட்டிக்கொள்வது போல அலற அவள் பயந்து அவனை கட்டிக்கொள்கிறாள். கையை வெளியே எடுத்தால் அவன் கோட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறான். இவையெல்லாம் புகைப்படமாகிக் கொண்டிருப்பதை அறியாமல். பின் ஒரு சுவரருகே வரிகிறார்கள். அது வேண்டிக்கொண்டது நடந்தால் அதனை ஒரு சீட்டில் (tablet) எழுதி அந்த சுவற்றில் ஒட்டிவைப்பது வழக்கம். அதனை படிக்கவைத்து அதையும் புகைப்படம் எடுக்கிறார்கள். அவளும் அங்கே வேண்டிக்கொள்கிறாள். அன்று இரவு நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு போகலாம் என்கிறாள். இர்விங் அங்கே கழன்று கொண்டு இரவில் வந்து சேர்வதாக பிரிகிறான்.அடுத்த காட்சி இரவு கேளிக்கை விருந்து. அங்கே இருக்கும் பாதுகப்பு படையினர் அவளை அடையாளம் கண்டு கொள்ள, தன் ரோமானிய விடுமுறை முடிவுக்கு வருவதாக உணர்கிறாள். அந்த பாதுகாப்பு வீரர் சென்று மற்றவர்களை கூட்டி செல்ல போகிறார். அங்கு மரியோ வந்து சேர்கிறான். மரியோவும் ஆன்-ம் சேர்ந்து ஆடுகிறார்கள். அந்த இடத்திலும் சிகை அலங்காரம் வேறு செய்கிறான். இதையும் அங்கு வந்து சேறும் இர்விங் படம் எடுக்கிறான். என்ன ஃபிளாஷ் என்று அவளுக்கு விளங்கவில்லை. பாதுகாப்பு படை வீரர் அவளிடம் நடனமாடும் தோரணையில் அவளிடம் வந்து "Your Highness"-ஐ வந்து காரில் ஏறும் படி மிரட்ட, அவள் திமிறுகிறாள். அங்கு ஒரே சண்டை, களேபரம். ஆன் அங்கிருக்கும் பாதுகாப்பு படையினரை கிடாரினால் அடிப்பதை படம் எடுக்கிறான் இர்விங். (முதல் தடவை அடிக்கும் பொழுது படம் எடுக்க தவற, மறுமுறை அடிக்குமாறு கூறி படம் எடுக்கிறான் இர்விங்). அங்கிருந்து ஒருவாறு பிராட்லீயும் ஆன்-ம் தப்பிக்கிறார்கள்.

வீட்டிற்கு வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு அவள் திரும்புவதாக கூறுகிறாள்.காரில் தூதரகத்தின் வாசல் வரை வந்து வழியனுப்புகிறான் பிராட்லீ. "நான் உன்னை விட்டு இப்பொழுது பிரிய வேண்டும். நான் அந்த மூலையில் சென்று திரும்பியதும் காரை எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும். திரும்பி பார்க்க கூடாது" என்கிறாள். "உனக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை", "முயற்சிக்கவேண்டாம்" - இருவரும் காதல் கொண்டுள்ளதாக உணருகிறார்கள். பின் தூதரகத்திற்கு சோகத்துடன் திரும்புகிறாள்.

(இங்கிருந்து ஆன்-ன் நடிப்பில் அப்படியே தலைகீழ் மாற்றம்) அங்கு பின் சிறிய விசாரணை. "என் குடும்பத்திற்கும், நாட்டிற்கு நான் ஆற்ற வேண்டிய கடமையை நினைத்து பார்க்காவிடில் நான் திரும்பியிருக்க மாட்டேன்" என்று கூற இளவரசியின் பதிலைப் பார்த்து விக்கித்துப் போகின்றனர். அவளிடம் இருக்கும் மாற்றத்தை பார்த்து விக்கித்து போகிறாஅர்கள். முதல் முதலாக அறையில் தனிமையில் உறங்குகிறாள்.

பிராட்லீயை அவன் பாஸ் பார்க்க வருகிறான். பேட்டி என்ன ஆயிற்று என்று கேட்க, அவன் பேட்டி எதுவும் இல்லை என்று பொய் சொல்கிறான். பின் இர்விங் வந்து சேர, இங்கும் ஃபோட்டோ வந்துவிட்டதாக உளர முட்படுகிறான். பிராட்லீ சமாளிக்கிறான். இளாவரசியுடன் எந்த பேட்டியும் இல்லை என்கிறான். பாஸ் சென்றவுடன், இர்விங் வேறு திட்டம் உள்ளதா என்று கேட்கிறான். அவன் எந்த பேட்டி, கதையும் இல்லை என்கிறான். அந்த ஃபோட்டோக்களை ஆர்வமாக பார்க்கிறார்கள். ஒவ்வொரு ஃபோட்டோவிற்கும் பொருத்தமான தலைப்பு வேறு. ஆன்-க்காக எதையும் வெளியே சொல்லவேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

கிளைமேக்ஸ். இங்கே குறிப்பிடப்படவேண்டியது, ஆன், பிராட்லீ மற்றும் இர்விங் ஆனிய மூவரும் கண்களால் பேசிக்கொள்வது. இளவரசியுடன் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு (அதாவது தூர தரிசணம்). முதல் வரிசையில் பிராட்லீயும், இர்விங்கும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி + ஆச்சர்யம் அடைகிறாள், மிக மிக மெல்லிதான முக பாவனையுடன். அங்கே பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இரு பொருள்பட, அவர்கள் மூவருக்கும் மட்டும் புரியும்படி, பதிலளிக்கிறாள் ஆன். மக்களுடனான உறவில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ரோம் நகரை தான் மிகவும் விரும்புவதாவகவும், அவளால் இந்த நகரத்தை மறக்க முடியாது எனவும் கூறுகிறாள். வழக்கமாக யாரையும் புன்படுத்தும் படி தனக்கு இந்த நகரம் தான் பிடிக்கும் என சொல்லக்கூடாது. ஆனால், அவள் தனக்கு ரோம் நகரம் பிடித்ததாக கூறுகிறாள். அங்கே அந்த இருவர் + இர்விங் கண்களுக்குள் நடக்கும் பரிபாலணை அழகு.

பின் புகைப்படம் எடுக்கும் நேரம். ஒவ்வொருவராக புகைப்படம் எடுக்க, இர்விங் முன்னே வந்து தன் சிகரெட் லைட்டரால் புகைப்படம் எடுக்கிறான். ஆன்-க்கு விளங்குகிறது. முகத்தில் சிறிய அதிர்ச்சியுடன்.

வழக்கத்திற்கு மாறாக, பத்திரிக்கையளர்களை தனியே பார்க்க விரும்புகிறாள். ஒவ்வொரு பத்திரிக்கையாளராக பார்த்து அறிமுகம் செய்து கை குலுக்குகிறாள். இர்விங்குடன் கை குலுக்க, அவன் ஒரு பரிசு தருவதாக கூறி, அவன் எடுத்த புகைப்படங்களை ஒரு கவரில் போட்டு கொடுக்கிறான். அதில் ஓரிரு படங்களை பார்க்கிறாள். முதல் படம் பாதுகாப்பு படையினர் தலையில் அடிப்பது. "தேங்க்யூ ஸோ வெரி மச்". அடுத்து "பிராட்லீ. அமெரிக்கன் நியூஸ் சர்வீசஸ்"- கை கொடுக்கிறான். "ஸோ ஹாப்பி மிஸ்டர்.பிராட்லீ". பின் இளவரசியின் gesture-க்காக அனைவரும் ஒரு நிமிடம் கை தட்டுகிறார்கள்.கடைசியாக அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்து, பிராட்லீயையும் தான், பெரிய புன்னைகையுடன், கண்களில் நீர் முட்ட, செல்கிறாள். அனைவரும் கலைகிறர்கள். கடைசி ஆளாக பிராட்லீ. அவள் சென்ற கதவை ஒரு முறை வெறித்து பார்க்கிறான். அவளை மறுபடியும் பார்க்க முடியாது அல்லவா? அவன் கால் தடங்களின் ஓசை மட்டுமே எதிரொலிக்க, மெல்லிய பின்னனி இசை வழிய, காமெரா தூதரகத்திலிருந்து பின்னோக்கி வர (அவன் காதலும் அவன் காலடியின் ஊடே வருகிறது), பிராட்லீ ஒருமுறை தூதரகத்தை திரும்பி பார்த்து வெளியே செல்கிறான். அழகிய எழுத்துருவில் "The End".

படம் பார்த்து தெரிந்துக் கொண்டது. நல்ல வேளை பெரிய மன்னர் பரம்பரையில் பிறக்கவில்லை என்று.

Gregory Peck - Joe Bradley
Audrey Hepburn - Princess Ann ('Anya Smith')
Eddie Albert - Irving Radovich
Paolo Carlini - Mario Delani, hairdresser

பிற்சேர்க்கை:

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் (5 திசம்பர் 2007) சிவாஜி, பத்மினி ஆரம்ப காலங்களில் நடித்த ராஜாராணி திரைப்படம் பார்த்தபோது தெரிந்தது, இந்தப்படத்தில் இருந்து சில காட்சிகளை அப்படியே சுட்டிருக்கிறார்கள். தூக்க மயக்கத்தில் இருக்கும் கதாநாயகியை கதாநாயகன் தன் வீட்டிற்கு அழைத்து செல்லும் பொழுது நடந்து கொள்ளும் விதம், தினசரி நாழிதள் மூலம் கதாநாயகி யார் என்பதை அறிந்துகொள்ளுதல் போன்றவை.
மேலே - Yousuf Karsh-ன் போர்ட்ரெய்ட்