Wednesday, January 13, 2016

Saving Mr. Banks (2013)

சென்னைக்கு வந்த புதிதில், (2004 சுனாமிக்கு 2 நாளுக்கு பிறகு) திருவல்லிக்கேனியில் தங்கியிருந்தேன். போர் அடிக்கும் போதெல்லாம் ஒரு எட்டு பர்மா பஜாருக்கு சென்று, டிவிடி கலெக்‌ஷன் வாங்கி வந்து படம் பார்ப்பேன். ஆரம்ப காலகட்டத்தில் எந்த படத்தை பார்ப்பது என்று தெரியாது. அட்டைப்படம் பிடித்திருக்கிறதா, எத்தனை ஆஸ்கர் வாங்கியிருக்கிறது - இவையே முக்கியமாக பட்டது. அப்பொழுது வாங்கிய டிவிடிக்களில் இரண்டு படங்கள் சவுண்ட் ஆஃப் ம்யூசிக் (Sound of Music aka சாந்தி நிலையம்) மற்றும் மேரி பாப்பின்ஸ் (Mary Poppins). இரண்டுமே ம்யூசிகல் சப்ஜெக்ட். நம்ம ஊர் படங்கள் மாதிரி இடையில் பாடல்கள் வரும். இரண்டில், சவுண்ட் ஆஃப் ம்யூசிக் பற்றி என் அம்மா சொல்லியிருந்ததால் அதை பார்த்தேன். முதல் முறை பார்க்கும் போது SoM அவ்வளவா பிடிக்கலை (Gone with the Wind-ம்). அதனால், மேரி பாப்பின்ஸை இன்று வரை ஏனோ பார்க்கவில்லை. ஆனால், அதன் அட்டைப்படம் இன்றளவிலும் நினைவில் இருக்கிறது.


மேரி பாப்பின்ஸ் 1964-ல் வந்த ஒரு பேன்டஸி படம். மேரி பாப்பின்ஸ் P.L.ட்ராவர்ஸ் எழுதிய குழதைகளுக்கான 8 புத்தகங்களில் ஒரு கதாபாத்திரம் (ஹாரி பாட்டர் போல). மேரி பாப்பின்ஸ் என்பவர் ஒரு .குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஒரு nanny. குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை சாதுர்யமாக தீர்க்கும் ஒரு மேஜிகல் நேனி. (எத்தனை பழைய தமிழ் படங்களில் பார்த்திருப்போம்). அவரை பற்றின கதை தான் புத்தகங்கள். அந்த கதை புத்தகங்களின் படமாக்கமே மேரி பாப்பின்ஸ்.

சரி! சேவிங் மி. பேங்க்ஸ்-க்கும் மேரி பாப்பின்ஸ்-க்கும் என்ன சம்பந்தம்? ஒன்றே ஒன்று தான். மேரி பாப்பின்ஸ் புத்தகத்தை திரைப்படமாக்கும் முன் இருந்த போராட்டம் தான் இந்த படம்.

வால்ட் டிஸ்னியை தெரியும் தானே? மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். அவர் தன் மகளுக்கு அவள் சிறு வயதில் ஒரு வாக்களிக்கிறார். அதன்படி அவளுக்கு மிகவும் பிடித்த மேரி பாப்பின்ஸ் நாவலை அதன் உரிமையாளரிடம் வாங்கி, படமாக்க முயற்சிக்கிறார். அதனால் அந்த நாவலை எழுதிய பமீலா ட்ராவர்ஸ் (Pamela "P. L." Travers)-ஐ, ம்ஹூம்...மிஸஸ்.ட்ராவர்ஸ் (இப்படி கூப்பிட்டா தான் அவருக்கு பிடிக்குமாம்) அனுக அவர் ஏதோ காரணத்தால் தவிர்க்கிறார். டிஸ்னி...ம்ஹூம்...வால்ட் (இப்படி கூப்பிட்டா தான் இவருக்கு பிடிக்குமாம்) முயற்சித்துகொண்டே இருக்கிறார்...20 வருடங்களாக. ஒவ்வொரு வருடமும் முயற்சி செய்வார் வால்ட். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டார் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். காரணம்? ஒரே ஒரு பயம். எங்கே அவரின் அந்த பேவரைட் நாவலை சினிமா கெடுத்துவிடும் என்ற பயம் ட்ராவர்ஸுக்கு. அந்த நாவல் அத்தனை பொக்கிஷம்.

கதை நடப்பது 1961-ல். கூடவே 1902-ல் நடக்கும் கதையும் பேரலலாக காட்டப்படுகிறது. அது ட்ராவர்ஸின் குழந்தை பருவம். அது பிறகு பார்ப்போம். ஆக, படத்தில் மூன்று கதைகள்.

1961-க்கு. ட்ராவர்ஸ் ஒரு வகையில் தனிமை விரும்பி. சிங்கிள். கொஞ்சம் சிடு சிடு. கடைசி வரை பிடி கொடுக்காமல் நழுவுகிறார். 1961-ல் அம்மனிக்கு கொஞ்சம் பணக்கஷ்டம். அதனால், நாவல் உரிமையை தர அரைமனதாக ஒத்துக்கொள்கிறார், முக்கியமாக, நிறைய கண்டிஷன்களுடன். கண்டிஷன்கள் பனால் ஆனாலும் அவருக்கு திருப்தி தானே.

கதை டிஸ்கஷனுக்காக (உரிமை இன்னும் கொடுக்கவில்லை) இங்கிலாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் ட்ராவர்ஸ் திரைக்கதையில் எல்லாவற்றையும் நிராகரிக்கிறார், மாற்றுகிறார். டிஸ்கஷன் ஆரம்பத்தில், திரைக்கதையின் முதல் பக்கத்தில் வரும் தலைப்பில் இருக்கும் அட்ரஸ் "17 Cherry Tree Lane, London" என்பதை "Number 17" என்று மாற்றுவதிலாகட்டும், படத்தில் எங்குமே சிகப்பு வண்ணம் இருக்கக்கூடாது என்ற கண்டிஷன்கள் ஆகட்டும். இதையெல்லாம் மாற்றுகிறார். கூடவே கதையில் பென்குயின்கள் ஆடும் இடங்களும் டிஸ்னி...Oops, வால்ட் கார்ட்டூன்களாக போடலாம் என்ற முடிவை 'கூடாது' என்கிறார். படத்தில் பாடல்கள் கூடாது என்கிறார். அதை வெறும் recitation-கள் என்று சம்மதிக்க வைக்கிறார்கள். தாங்களுக்கு இடையில் நடைபெறுவதை ரிக்கார்ட் செய்ய சொல்கிறாள் ட்ராவர்ஸ். (படத்தின் முடிவில் அந்த உரையாடல் இடம்பெறுகிறது). இப்படி ஒவ்வொரு நாளும் அத்தனை பேருக்கும் பெரும் போராட்டமாக கழிகிறது.

கண்டிஷன்களில் ஒன்னொன்று, வால்ட் அந்த மேரி பாப்பின்ஸ் கதாபாத்திரத்துக்கு மீசை வேண்டும் என்கிறார், ட்ராவர்ஸ் கூடாது என்கிறார். காரணம்.......? வர்ர்ர்ரும்...

அவரை மாற்ற, அவர் விருப்பத்துக்கு மாறாக, டிஸ்னி லேன்டுக்கு கூட்டிப்போகிறார் வால்ட். அங்கிருக்கும் Merry go Round-ல் பயணம் செய்ய வைக்கிறார். அப்புறம் அன்று அங்கேயே கழிகிறது. பின் மறுநாள் முதல் அவரிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது, பாடலுக்கு தாளம் போடுகிறார், ஆட்டம் ஆடுகிறார். எல்லோரும் ஒரு வழியாக செட்டாகும் நேரத்தில்...

ஒரு நாள் பென்குவின்கள் கார்ட்டூன்களாக காட்ட ஏற்கனவே வேலைகள் நடப்பதை அறிந்து கொண்டு, கோபித்துக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார். 'ட்ராவர்ஸ்' என்பது அவர் பெயர் இல்லை என்றும் தெரிந்துகொள்ளும் வால்ட், அடுத்த ப்ளைட்டை பிடித்து ட்ராவர்ஸ் வீட்டுக்கு செல்கிறார். ஆச்சர்யம்+அதிர்ச்சியுடன் வரவேற்கும் ட்ராவர்ஸிடம் மெல்ல பேசுகிறார்.

வால்ட்டுக்கும் மிஸர்ஸ்.ட்ராவர்ஸுக்கும் இடையில் நடைபெறும் அந்த 5 நிமிட உரையாடல் அவர்களுக்கு இடையில் இருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை தெரிவிக்கிறது. அது தன் பால்ய கால நிகழ்வுகள். அந்த நினைவுகளை கசப்புடன் கடந்து போகாமல் பிடித்துக் தொங்கிக் கொண்டிருக்கும் ட்ராவர்ஸ், தன் கசப்பான நினைவுகளை கடந்து சென்று கலை வழியாக மக்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை கொடுக்க நினைக்கும் வால்ட். இதுவே இருவருக்கும் உள்ள ஒற்றுமை/வேற்றுமை. நாவலை என்னிடம் நம்பி கொடு, நான் நாவலை கெடுக்க மாட்டேன் என்கிறார் வால்ட். ஒரு வழியாக ஒத்துக் கொள்கிறாள் ட்ராவர்ஸ்.

1902-ல், என்ன நடக்கிறது அவளோட பால்யத்தில்? தந்தை ட்ராவர்ஸ் ராபர்ட் கோஃப் (Travers Robert Goff) பேங்க் மானேஜர் (Mr. Banks). ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் செல்லும் ட்ராவர்ஸ் (தந்தை) பெருங்குடிக்கு ஆளாகிறார். வேலை பறிபோகிறது. குடும்பத்தில் பிரச்சினை. ஆனால் தன் மகள் ஹெலன்-க்கு பாசமுள்ள தந்தை. ஹெலன் - மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். அவளை பொருத்த அளவில் அவள் தந்தை தான் ரோல் மாடல். அவளை உருவாக்குகிறார். அவள் செய்யும் கற்பனைகளை ஊக்குவிக்கிறார். தந்தை-மகள் கதை ஒரு தனி ட்ராக் போல. ஹெலனை தன் கற்பனையின் ஊடே வாழப்பழக்குகிறார்.

அவருக்கு வேலை பறிபோகும் நிலை வருகிறது, ஆனால் அன்று ஹெலன் பேங்குக்கு வருவதால், அவள் மனதை நோகடிக்காமல் இருக்க வங்கி ஓனரின் தயவால் அதுவும் காப்பாற்றப்படுகிறது. ஒன்னொரு முறை, நிறைய குடித்து விட்டு ஒரு மேடையில் இருந்து இறங்கும் போது விழுந்து இடுப்பு ஒடிந்து படுத்த படுக்கையாகிறார் ட்ராவர்ஸ். கூடவே டிபி. ஆனால், குடி வேண்டும். மகள் தந்தைக்காக அம்மா மார்கெரெட்டுக்கு தெரியாமல் குடிக்க உதவுகிறாள். வெறுப்புற்ற மார்கெரெட் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள்.

இப்படி நிறைய குழப்பங்கள்.

அப்பொழுது வீட்டுக்கு வரும் aunt எல்லி (Ellie) அவள் தந்தையை காப்பாற்றிவிடுவதாக் கூறுகிறாள். அவள் கையில் ஒரு குடை, குடையில் கைப்பிடியில் கிளியில் தலை பொறித்த உருவம், மறு கையில் ஒரு சிறிய தடி, பை நிறைய மருந்துகள் (இது தான் அந்த மேரி பாப்பின்ஸ் கதாபாத்திரம்). எல்லி தன் தந்தையை காப்பாற்றி, குடும்பத்தை காப்பாற்றும் ஒரு மேஜிக்கல் ஆன்டி என்று நம்புகிறாள் ஹெலென். ஆனால், யதார்த்தம் வேறானது இல்லையா? எல்லியாலும் அவள் தந்தையை காப்பாற்ற முடிவதில்லை. குழந்தை ஹெலனின் 7 வயதில் இறந்து போகிறார் ட்ராவர்ஸ். இந்த ஏமாற்றத்தை தாங்க முடிவதில்லை அவளால்.

இப்பொழுது தெரிந்திருக்குமே, ஏன் ட்ராவர்ஸுக்கு மேரி பாப்பின்ஸ் அவ்வளவு இஷ்டம்னு. எல்லியை மாடலாக வைத்து அவள் உருவாக்கிய கதாபாத்திரமே மேரி பாப்பின்ஸ். மேரி பாப்பின்ஸ் கதையில் அவள் வானத்தில் இருந்து வரும் தேவதை. அவள் கதாபாத்திரத்தை எல்லியை போல வடித்திருக்கிறாள் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். மேரி பாப்பின்ஸில் வரும் ஜார்ஜ் மேங்க் (George Banks) அவள் தந்தை. தன்னுடன் இவ்வளவு நெருக்கமான கதாபாத்திரங்களை வால்ட் சிதைத்துவிடுமோ என்ற பயமே அவளை தடுக்கிறது.

வால்ட் ட்ராவர்ஸிடம் பேசும் போது ஒன்றை கூறுகிறான். தன் தந்தை ஒரு தினசரி பத்திரிக்கை போடுபவர் என்றும், தினமும் 1000 காப்பிகள் காலையும் மாலையும், யாரையும் சம்பளத்துக்கு வைக்காமல், தன்னையும் தன் சகோதரனையும் வேலை வாங்கியதையும் சொல்கிறார். இடையில் பள்ளிக்கு செல்லவேண்டும். இதையெல்லாம் தினசரி செய்து முடித்து இரவு தூங்க நேரமாகும். அந்த காலகட்டம் வால்ட்டுக்கு ஒரு கொடுமையான காலமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலைமை வேறு. பழைய கதையையே நினைத்து இருக்க முடியாது; கதையை முடிக்க வேண்டும். ஹெலனை உங்களிடமிருந்து விடுவித்து என்னிடம் தாருங்கள், அவளுக்கும் மிஸ்டர்.பேங்க்ஸுக்கும் happy ending கொடுப்பதாக கூறிகிறார். மிஸஸ்.ட்ராவர்ஸ் கடைசியில் ஒத்துக் கொண்டு கையெழுத்து போடுகிறார்.

ஆக, இந்த இடைவெளியே இது நாள் வரை இருவரையும் தங்கள் நிலைப்பாட்டில் நிறுத்துகிறது.

இங்கே தான் அந்த மீசை விஷயம் தெரிகிறது. வால்ட் மீசை வைத்திருப்பவர். அவர் தந்தையும் அப்படியே (இல்லையா?). அதான், அந்த கதாபாத்திரத்துக்கு மீசை வைக்கிறார். ட்ராவர்ஸுக்கோ அவள் தந்தை மீசை இல்லாதவர். கொடுமைக்காரர் இல்லை. அவர் மிகவும் நல்லவர், பாசமானவர். அதனால், அந்த கதாபாத்திரம் (மறுபடியும்) சாகடிக்கப்படுவது பிடிக்கவில்லை.

கடைசியில் மிஸ்டர்.பேங்க்ஸுக்கு படத்தில் மீசை இருக்கா இல்லையா? படம் பாருங்கள்...

படத்தின் இயக்கம் அற்புதம் என்பேன். ஒவ்வொரு கேரக்டர் செலக்ஷனும் அருமை. தந்தையாக நடித்திருக்கும் கோலின் பேரல் (Colin Farrell), தாய் மார்கெரெட்டாக ரூத் வில்சன் (Ruth Wilson), அந்த சிறுமி ஹெலன். கொஞ்ச நேரமே வரும் ஆன்ட் எல்லி.

இது 1902.

1961-க்கு வந்தால், மிஸர்ஸ்.ட்ராவர்ஸாக எம்மா தாம்ஸன் (Emma Thompson) - ஏதோ சில படங்களில் பார்த்ததாக நினைவு. பெரிய்யா அப்பாட்டக்கர்...சாரி. அம்மாடக்கர் போல. வால்ட் டிஸ்னியாக டாம் ஹேங்க்ஸ். இவருக்காக தான் இந்த படத்தை பார்க்கவே நினைத்தேன். ஆனா, எம்மா தாம்சன் அசால்ட்டா ஓவர் டேக் செஞ்சுட்டார். டாம் கேங்க்ஸ், டிஸ்னி கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் துருத்தல் என்றே சொல்வேன். ஆனால், அந்த குறையை பெருமளவு மறைக்கிறார். இதில் ட்ராவர்ஸ் தான் ஹீரோ. அதற்கு பிறகு தான் வால்ட் கதாபாத்திரம்.

படத்தில் முதல் 20 நிமிடங்கள் எம்மாவின் குணதிசயத்தை காட்டுகிறது. அமெரிக்கா வந்த பிறகு எதையும் பட்டும் படாமலும் இருக்கும் ட்ராவர்ஸ், அவரின் தனிமை, பொம்மைகளை வெறுப்பது (பின் அதையே கட்டிப்பிடித்து தூங்குவது) என்று அவள் கேடக்டரை நம்முள் விதைக்க செய்கிறது.

இறக்கும் தருவாயில் தந்தை பழம் வாங்க சொல்கிறார். அதை வாங்கி வருவதற்கு முன் இறக்கிறார். அதனால், பழங்களையே அவள் வெறுக்கிறாள். இதெல்லாம் முதல் 20 நிமிடங்களில். ஒரு கட்டத்தில் தனிமை வாட்டுகிறாது. தான் எடுத்தெரிந்து பேசும் குணமே தன்னிடம் யாரையும் நெருங்கவிடுவதில்லை என்று தெரிந்தும் அப்படியே இருக்கிறாள். ஒரு வகையில், இந்த கேரக்டர், Gone with the Wind ஸ்கார்லட் ஓ'ஹாரா போலவே. அதில் சிறு வயதில் சுட்டித்தனமாக flirting டைப்பாக இருந்தாலும் வாழ்க்கை தரும் வலி அவளை ஒரு சீரியஸ் ஆள் ஆக்குகிறது, இங்கும் அவ்வாறே. ட்ராவர்ஸ் போன்றவர்களின் கதாபாத்திரம் நம்மூரிலும் நிறைய உண்டு. வாழ்க்கை தரும் வலி நிறைய பேரை 'உம்மனாமூஞ்சிகள்' ஆக்குகிறது. குழந்தைகளின் உலகத்தை குழந்தை தன்மையை சிதைக்கிறது.

படத்தில் (நிஜத்தில் அல்லாத) ஒரு கார் ட்ரைவர் கதாபாத்திரம் வருகிறது. முதலில் முகம் கொடுத்து பேசாமல், கடைசியில் அவரிடம் நட்பாக பேசி நண்பராவது வரை மிஸஸ்.ட்ராவர்ஸின் மனமாற்றத்தை காட்டவே அவர் கதாபாத்திரம் போல.

இதில் (உண்மையில்), திரையுலகின் கருப்பு பக்கங்களை அறியாத மிஸர்ஸ்.ட்ராவர்ஸை வால்ட் ஏமாற்றியிருக்கிறார், முக்கியமாக அந்த ('ராஜா சின்ன ரோஜா' டைப்) அனிமேஷன் விஷயத்தில். மிஸர்ஸ்.ட்ராவர்ஸுக்கு அனிமேஷனும், முக்கியமாக வால்ட் மீதி வெறுப்பு. அவரின் அனிமேஷன் படங்களை கண்டாலே அலெர்ஜி. அதனால், கண்டிப்பாக அனிமேஷன் கூடவே கூடாது என்கிறார். வால்ட்டுக்கு அது தான் வாழ்க்கையே. அவர் படங்களை பார்க்க வருகிறவர்கள் அனிமேஷனை விரும்புவார்கள். அதில்லாமல் எப்படி? படத்தின் திரைக்கதை மிஸர்ஸ்.ட்ராவர்ஸ் ஒப்புதல் தந்து கையெழுத்து இட்டால் மட்டுமே நடக்கும். ஆனால், அனிமேஷன் என்பது எடிட்டிங் வேலையாச்சே. கையெழுத்து திரைக்கதைக்கு மட்டும் தான். எடிட்டிங்கிற்கு கிடையாது. (அது ராமனுக்குத்தானே; நான் முருகனாயிற்றே).

இந்த ட்ரிக் மிஸர்ஸ்.ட்ராவர்ஸுக்கு தெரியாததால், அனிமேஷன் இருக்காது என்று நம்பி கையெழுத்திடுகிறார். கடைசியில் ப்ரீமியர் ஷோவில் படத்தை பார்த்து கோபத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். பின் சீட்டில் இருந்து வால்ட் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ் தோளை தட்டி ஆறுதல் கூற, "உங்கள் அனிமேஷன் சகிக்கலை, அதான் அழறேன்" என்று சொல்ல, வால்ட் ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்க...ஆசம் ஆசம்.

பிரீமியர் ஷோ முடிந்து வால்ட்டிடம் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ், "அனிமேஷனை எப்பொழுது கட் செய்வீங்க?" ("When do we start cutting it?) என்று அப்பாவியாய் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ் கேட்க, வால்ட் அதற்கு "Pamela, that ship has sailed" என்கிறார். அத்தோடு உன் சங்காத்தமே வேண்டாம்னு, வேற எந்த கதையையும் டிஸ்னிக்கு கொடுக்கவேயில்லை மிஸர்ஸ்.ட்ராவர்ஸ்.

இந்த படம் பார்த்த பிறகு மேரி பாப்பின்ஸை பார்த்தேன். குழந்தைகளுக்கான கதை. பாடல்களுடன். மறுபடியும் இதை பார்த்தால் பல விஷயங்கள் விளங்கும்.

படம் மொத்தத்தில் - ஆசம் ஆசம்.

Wednesday, December 23, 2015

உத்தம வில்லன் (2015)

நேத்து தான் பார்த்தேன். படம் நல்லாருக்கு.


மனோரஞ்சன் சாகப்போறவன். அதனால் கடைசியா ஒரு காமெடி படம் எடுக்க முடிவு செய்கிறான். பர்சனலா சோகம் என்றாலும், கடைசி படம் காமெடியே இருக்கனும்ங்கிற அந்த contra தான் படம் முழுவதும். நிஜத்தில் சாகப்போனாலும், கதையில் ம்ருத்யுஞ்சன்.

டைட்டில்ல ஆரம்பிச்சு பல இடங்கள்ல அந்த contra பார்க்க முடிஞ்சது. சோகம்-காமெடி-சோகம்-காமெடி என்ற வரிசை படம் முழுவதும். நிஜத்தில் இறப்பதும், ஸ்க்ரீனில் ம்ருத்யுஞ்சனாக நிலைப்பதும். நம்மால ஜெயிக்க முடியாததை கனவில் கொண்டுவருவதில்லையா?

கமல் படங்களில் சொன்னது நடக்கிறது என்ற ஒரு 'வஸ்து' உலவுகிறது. சுனாமி மாதிரி. இந்த படத்துக்கப்புறம் கேபி போயிட்டார். ஆனால், "டேய் என்னடா சொல்ற?"-னு குரல் கம்மி பேசுவதில் இருந்து, மனுஷன் நல்லாத்தான் செய்திருக்கார். சில இடங்களில் அவர் வசனமே நாஸ்டால்ஜிக்கா இருந்தது. உதா, நாகேஷின் சில வசனங்கள் "Long long ago, so long ago, no body could say how long ago.

'இளவேனில் இது வைகாசி மாதம்' பூஜா குமாருக்கு நல்ல ரோல் (கடைசியில 'யா அல்லா'-ங்கிறார்). ஆன்ட்ரியாவுக்கு (நிஜ) கிஸ் வேற (கவனிச்சீங்களா)? ஆனாலும், ஒரு நடிகன் 2-3 சைட் வெச்சிருக்கிறது பேஷன் போல. ஒவ்வொரு 7 வருஷத்துக்கும் நம் உடல் மறுபிறவி எடுக்கிற மாதிரி, பிறவிக்கு ஒன்னா? அதைப்பத்தின எந்த கழிவிறக்கமும் இல்லாத...............கூப்பிடுங்கடா அந்த மாதர் சங்கத்தை.

படத்தின் பெரிய குறை: சோகம்+காமெடி மிக்ஸில் காமெடி மிஸ் ஆவது. சிரிப்பே வரவில்லை. குழந்தைகளுக்கான பேன்டஸி கதையை பெரியவர்களுக்கு கொடுத்தது போலிருந்தது. வசனம் கமல் போல. வழக்கமான போர் அடிக்கும் வசனங்கள் (சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்க சொல்). இன்னொரு குறை, பின்னனி இசை. சதா இம்சிக்கிறது. சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் ஆரம்ப கால ரஹ்மான் படங்கள் போல காதை அடைக்கிறது.

வழக்கம் போல இரணிய வதத்துக்கு பதில் நரசிம்ம வதம், 'ஹரி ஹரி சொரி சொரி'-னு நரசிம்மரே சொறிஞ்சு சாகிறதுனு குசும்புக்கு குறைச்சல் இல்ல.

மறந்திட்டேனே, அன்பே சிவம் படத்துக்கு இயக்கம் சுந்தர்.சி மாதிரி, இந்த படத்துக்கு ரமேஷ் அர்விந்தாம்

இன்னும் 5 வருஷம் கழிச்சு வந்திருந்தா ஓடியிருக்கும், குணா போல.