Saturday, May 14, 2011

தேர்தல் 2011 - சொல்வது என்ன?


யாருமே, ஏன் ஜெ.வே எதிர்பார்க்காத மாதிரி ஃபுல் மெஜாரிட்டியுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறார் ஜெ. அவருக்கு வாழ்த்துக்களும், மக்களுக்கு வழக்கம் போல் அனுதாபங்களும். 5 வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் மறுபடியும் நடக்கிறது / நடக்க போகிறது, ஆனால் தலைகீழாக.

முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் திமுக 20+ லீடிங், அதிமுக 2+ லீடிங், ஜெயா டிவியில் அதிமுக 20+ லீடிங், திமுக 2+ லீடிங் என்று காட்ட, கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை திமுக-வா அதிமுக-வா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து சரிசமமாக வந்து கொண்டிருந்த லீடிங் லிஸ்ட் சன் டிவியில் சடாரென்று திமுக 41+ அதிமுக 101+ என்று எகிற, கலைஞர் டிவி பார்த்தால்...அட, அங்கேயும் அதே. அப்புறம் கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் 'மானாட மயிலாட' ரிப்பீட் டெலிகாஸ்ட் ஆனதில் இருந்து ஆரம்பிக்கிறது ஜெ-வின் வெற்றி. பத்தாததற்கு கலைஞரும், 'மக்கள் எனக்கு ஓய்வு தந்துள்ளனர்' அப்படீங்கிறார். ஞாநி சொன்னால் மட்டும் பூனூல் தெரியும். இனி அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக கலைஞர்ஜியை எதிர்பார்க்கலாம். 'கலைஞர்ஜிக்கு 10 மார்க் போடுது'-னு நம்ம நமீதா சொல்வதை ஆனந்தமாக கேட்கலாம். இந்த காட்சிகள் யாவும் ஐந்து வருடங்களுக்கு முன் ஜெயா டிவியில் நடந்தது இன்று கலைஞர்ஜிக்கு நடக்குது, அவ்வளவு தான்.

அதன் பின் நடந்ததெல்லாம் அறிவீர்கள்.

இனி நடக்கப்போவது? கலைஞர்ஜி அறிக்கை கொடுப்பார். அதில் வழக்கம் போல நாங்கள் 37.689546% ஓட்டுக்கள் வாங்கியிருக்கோம். போன தேர்தலை விட இது 0.000114464% மட்டுமே குறைவு. அதுக்கும் காரணம் இல்லாத 2ஜி பற்றி ஊடகங்கள் பரப்பிய பொய் பிரச்சாரமே காரணம். அப்புறம் தலித், தேர்தல் ஆணையம், ஆரிய சூழ்ச்சி, சூத்திரன் போன்ற லேபிள்கள் போட்ட அறிக்கை டெம்ப்ளேட் வரும். போன ஆட்சியில் நடந்த ஊழல்கள் தோண்டப்படும். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காத பெயர்கள் சேர்க்கப்படும். 20-உடன் 60-ம் போகும்.


சரி! இந்த 'தேரு'தல் சொல்வது என்ன?

1) திமுக-வின் திடீர் கொபசெ 'வைகை புயல்' வடிவேலு (தலையெழுத்து) 'லூஸு', 'குடிகாரன்' போன்ற ஏக வசனங்களில் பேசினால் கூட்டம் மட்டுமே கூடும். ஓட்டுக்களாக விழாது. காமெடியன் காமெடியன் தான். சில கோடிகள்(!) கிடைக்குது என்பதற்காக, ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் வடிவேலு. அதுவும் இல்லாமல் தன் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்ள தேர்தல்களத்தை பயன்படுத்தியதை என்னவென்று சொல்ல?

விஜயகாந்த் குடிக்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதை கூட உணரவில்லை வடிவேலு. கவர்மென்ட்டு கடை வெச்சு ஊத்தி கொடுத்தால் தப்பில்லை. அதை குடித்தால் மட்டும் தப்பு. இவர் பன்னியதை வெளியே சொன்னால் என்னவாகும்? இவர் குடிக்காதவர் இல்லை. மணமான இன்னொருவருடன் குடித்தனம் நடத்தாதவர் இல்லை,

பொது இடத்தில் வேட்பாளாரை அடித்ததாக சொன்னாலும், அதை எடிட் செய்து திரும்ப திரும்ப ஒளிபரப்பியது சன் டிவி & கோ-வுக்கே உரித்தான நாகரீகம் / பன்பு. நல்லது. அவர் கையால் அடி வாங்கியவர் மகாராஜா ஆகிட்டாராம். மாப்புக்கு ரிவர்ஸுல ஆப்பு.

பிரச்சாரம் என்பது தம்முடைய நிலையை விளக்க என்பது போய் அடுத்தவர் நிலையை இழுக்க என்று ஆகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிறது. ஆரம்பித்து வைத்தவர்? வேறு யார்? கலைஞர்ஜி.

ஆனால், விஜயகாந்த் வடிவேலுவை கண்டுகொள்ளவில்லை. அவர் சொல்லும் காரணம், அவர் அரசியல் நடத்த வந்தது கலைஞர்ஜி + ஜெ-வை எதிர்த்து. டெம்பரரி கொபசெவை நம்பி இல்லை. 'ரிசல்ட் வந்ததும் பேசுகிறேன்'-னு சொன்ன வடிவேலு இப்போ விஜயகாந்தை பார்த்தால் என்ன பேசுவார்?

"நான் உங்கள பத்தி வெளையாட்டா பேசுனத எல்லாம் நீங்க உண்மைனு நம்பிட்டீங்க. பிலீவ் மீ. ஹைய்யோ...ஹைய்யோ..."


2) தி சாங் இஸ் டெடிகேட்டட் டு...வேற யாருக்கு? காங்கிரஸுக்கு தான்.

"நந்தவனத்தில் ஒரு ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொரு தோண்டி,
அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி..."

2ஜி வைத்து திமுகவிடம் 63 ஸீட் பிடுங்கியாயிற்று. சரி! அதையாவது ஒழுங்காக 'இன்வெஸ்ட்' செஞ்சாங்களா? இல்லை. வாங்கியதும் செய்த முதல் வேலை, தொகுதிகளை உள் ஒதுக்கீடு செய்து கொண்டது. சரி! அதையாவது ஒழுங்காக செய்தார்களா? இல்லை. சண்டை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

எனக்கென்னவோ ராகுல் & கோ ஒரு பெரிய்ய ப்ளான் போல தெரியுது. 63 வாங்கியதால், ஜெயித்தாலும் திமுக கண்டிப்பாக மெஜாரிட்டி வாங்க முடியாது. அதனால் காங்கிரஸ் தயவு வேண்டும். 2ஜியை வைத்து ஆட்சியில் பங்கு பெறாலாம். தோற்றால், இருக்கும் கொஞ்ச ஸீட்டை வைத்து ஜெவிடம் ஒட்டிக்கொள்ளலாம். இதனால் திமுகவை பலவீனப்படுத்தி 2016க்குள் காங்கிரஸை 2வது பெரிய கட்சியாக்கிவிடலாம். சரிங்க பாஸு. அதுக்கு சம்மதமானு நீங்க உங்க கட்சிகாரங்ககிட்ட மொதல்ல கேட்க வேண்டாமா? போங்க பாஸு. உங்களுக்கு இன்னும் உங்க கட்சிகாரங்களை பத்தியே தெரியல.

இதுக்கெல்லாம் காரணம்? ரிஸல்ட் எப்படி போனாலும், அடுத்து வர்ற உள்ளாட்சி தேருதல்ல காங்கிரஸ் தனித்து தான் நிக்க போறாங்களாம். 'தேரு'தலுக்கு பொறவும் தனித்தே தான் நிக்க போறாங்கனு தெரியல அவங்களுக்கு.

3) போன எம்பி தேருதல்ல திமுக+காங் கூட்டனி சீட்டுக்களை அள்ளியது. ஈழ ஆர்வலர்களின் பிரசாரத்தை காட்டிலும் பணம் விளையாடியதும் முக்கிய காரணம் என்பதை மறக்க முடியாது. பிரச்சாரம் அவ்வளாவாக எடுபடாதது ஒரு விதத்தில் ஆச்சரியம் கலந்த சோகம். இனம் அழிந்து கொண்டிருந்த போதும் பணம் கிடைத்தால் போதும் என்று வாக்காளன் நினைத்ததை எப்படி ஜீரனிக்க முடியும்?

ஆனால், இந்த தேருதல்ல ஈழ ஆர்வலர்களின் பிரச்சாரம் காங்கிரஸை தோற்கடிக்க முக்கிய காரணமென்றாலும் முழுமையான காரணம் அது மட்டும் அல்ல. பின்ன, கிரெடிட் கொஞ்சம் கூட திமுக + காங்கிரஸுக்கு கிடையாத என்ன? எம்.பி, மத்திய அமைச்சர், எம்.எல்.ஏ-வா இருந்த ஒருத்தர் தன் மனைவியை நிற்க வைக்க தாக்கல் செய்த விண்ணப்பத்துல கையெழுத்து கூட போடாம, தேவையான டாக்குமென்ட் வைக்காமலா தாக்கல் செய்வார். அவ்வளவு வெகுளியா நம்ம தொங்கபாலு? அப்புறம் கடைசி நாள்ல back up-ஆ அவர அவரே முன்மொழிஞ்சு வழிமொழிஞ்சு வழி வழின்னு வழிஞ்சாரு. இப்படிப்பட்ட வில்லத்தனத்த கலைஞரே செஞ்சிருக்கமாட்டார். சோனியாவும் ஆடிப் போயிருப்பார். ஆகா, இவ்வளவு திறமையானவர் கட்சிக்கு ஆபத்துனு மாத்தினாலும் மாத்திடுவாங்க. ஏன்னா, கட்சி அப்படி. பின்ன சரத் பவார், மம்தா, மூப்பனார் என்று தலைவர்களை உருவாக்கிய கட்சி ஆயிற்றே...

4) ஈழ ஆர்வலர்கள் காங்கிரஸ் 'மட்டும்' தான் இன அழிப்பிற்கு காரணம் என்று கண்டுபிடித்தது ஆச்சரியம் தான். ஆனால், எதிரியை விட துரோகி ஆபத்தானவன்னு தெரியல. துரோகம் செஞ்ச திமுக-வை (வெளிப்படையாகவேனும்) எதிர்க்காத காரணம் என்ன? ஆளுங்கட்சி என்ற பயமா? இல்லை இனப்பாசமா? காரணம் முன்னதை காட்டிலும் பின்னது என்றால்...மன்னிக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு சாமரம் வீசியதால் தான் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட ஒரு காரணமாக நாமும் பாவம் சுமந்து நிற்கிறோம். இன்னுமா? திருந்துங்க.

சரி! ஆளுங்கட்சி என்பது தான் காரணம் என்றால், ஒன்று, காங்கிரஸ் இந்த ஜனநாயக ரீதியான எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு திருப்பி அடிக்காமல் (மயான) அமைதி காத்தனர். இல்லையென்றால், காங்கிரஸில் சூடு சொரனையுள்ளவர்கள் இல்லை என்று அர்த்தமாகிறது. இந்த இரண்டு காரணங்களில் எதுவானாலும் எனக்கு சந்தோஷம். பின்னது என்றால் (ஒரு முன்னாள் காங்கிரஸ் அனுதாபியாக), இன்னும் சந்தோஷம் :)

5) என்னதான் அன்பான முதல்வருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாலும், புரொபஷனல்களை வைத்து விளாம்பரங்கள் எடுத்தாலும், வெடிக்காத கலர் டிவியா தேர்ந்தெடுத்து மேடையில கொடுத்தாலும், 108க்கு விளம்பரங்கள சன் டிவி + தன் டிவிக்கு மட்டும் கொடுத்தாலும், ஆஸ்பத்திரி கட்டாம அந்த பணத்த வெச்சு வெறும் இன்சூரன்ஸ் மட்டும் கொடுத்தாலும், ஒரு மழை வரைக்கும் தாக்கு பிடிக்கிற மாதிரி 'மாதிரி ரோடு' போட்டாலும், 90% கமிஷன் அடித்து 10% வேலை செய்யும் திட்டங்கள் தீட்டினாலும் சுனாமி போல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய 2ஜி என்னும் எறுமை மேல ஏறி மகள் மூலமா எமன் வருவான்னு கலைஞர்ஜிக்கு தெரியாம போயிடுச்சே.தகத்தகாய கதிரவனுக்கு கூட்டாத கட்சியை மகளுக்கு மட்டும் கூட்டி, கட்சி அவரை காப்பாற்றும், நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் (அதனால மத்தவங்களும் காட்டி கொடுக்க கூடாது) போன்ற அதிரடி லோ பட்ஜெட் படங்கள ஓட்டினாலும், நல்ல வாயை நாற வாயன் கெடுத்த மாதிரி ஆட்சியும் போய் இப்போ மகளையும் திகார்ல களி திங்க வெச்சுட்டீங்களே கலைஞர்ஜி. மகாபாரதத்தை மறுபடியும் ரீமேக் பன்னினால் கட்டாயம் உங்களுக்கு திருதராஷ்டிரன் கதாபாத்திரம் ஒதுக்க இப்பவே துண்டு போடுங்க. (ஹூம்...துண்டு போடுவது பத்தி சூரியனுகே டார்ச்சா?)

கடைசியில சூத்திரன், ஆரிய கூட்டம் அப்படீன்னு பிட்ட போட்டாலும், (வீர)மணியோசை கொடுத்து அறிக்கை விட்டாலும், வாலி + வைரமுத்து + சுபவீயை விட்டு "நற்றமிழில் என்னை பாடுக" என்று வாழ்த்த வைத்தாலும்,  இவற்றை காது கொடுத்து கூட கேக்கலியே இந்த 'சோற்றால் அடித்த பிண்டங்கள்'.

6) வெறும் ஐந்தே வருடங்களில் என்னன்ன திட்டங்கள், சேவைகள், உழைப்பு...அடடா!

ஈழப்பிரச்சினைக்கு கடிதங்கள் (மட்டும்) எழுதுவது, அதற்காக தபால் மற்றும் தந்தி துறையை வாங்கினால் ஸ்லோவா போகுமின்னு, ஈமெயில் அடிக்க ஐ,டி, துறையை வாங்கிய சாமர்த்தியம்...வல்லவராயனை புறமுதுகிட்டு ஓடவைத்த புலிகேசியையும் மிஞ்சிவிட்ட சானக்கியத்தனம்.

நாங்களும் வெச்சிருக்கோம்ல...சுபவீ-னு ஒரு ஆளை எங்க பக்கம்...

தமிழன் என்றால் திருடன் (அல்லது இந்து) என்ற வாதத்தை 2ஜி மூலமாக ஹிந்திவாலாக்களுக்கு அழுத்தந்திருத்தமாக பதிய வைத்து மூக்கின் மேல் விரலை வைக்க வைத்த சாதுர்யம் தான் என்ன?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு 100 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்க வைத்து கவர்மென்டுக்கு லாபம் கொழிக்க வைக்கும் பிஸினஸ் டேக்டிஸ் என்ன?

அதுவும் ஒரு ரூபாய் அரிசி என்ன நஷ்டத்திலா கொடுக்க முடியும்? தமிழ் நாட்டுக்கே ஊத்தி கொடுத்து அந்த லாபத்துல தானே அரிசியே போடமுடிகிறது. என்னா சாமர்த்தியம்.

இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். இவை மூன்றும் மட்டுமா? நான்காவதாக கொடுத்தீங்களே...'மச்சான்' தமிழ். ஆக்க...கக்க...கா.

'ராஜராஜன் - 1000' என்று நெல்விதைக்கு பேர் வைத்து விவசாயிகளின் வயிற்றில் பாலை(வனம்) வார்த்த வள்ளல்தனம் (வில்லத்தனம் அல்ல) தான் என்ன? விவசாயத்துக்கு இலவச மின்சாரமா? தமிழ்ல கலைஞர்ஜிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...(சும்மா தரும்) இலவசம்.

தசாவதார கமலுக்கும் 'சிவாஜி' ரஜினிக்கும் சிறந்த நடிகர்(!) விருதை ஒரே மேடையில் அதுவும் தமிழக அரசு செலவில் கொடுத்து, அதையும் கலைஞர் டிவியில் மட்டுமே ஒளிபரப்பிக் கொண்ட ராஜதந்திரத்தை ஈழ பிரச்சினையில் தான் காட்டிவிட முடியுமா என்ன?

எந்த எழுத்தாளரும் வாங்காத லட்சங்களை கதை-வசனம் எழுதியதற்காக வாங்கி எழுத்தாளர்கள் வயிற்றில் பொறாமை தீயை ஊற்றி, அவர்களை 'ஊக்கு'வித்து இலக்கியத்திற்கு ஆற்றிய பனிதான் என்ன?

இதையெல்லாம் விட, நாட்டுக்கு 1000 ரூபாய் போனாலும் பரவாயில்லை எனக்கு 1 ரூபாய் வந்தால் போதும் என்ற அரசியல் நிலைபாடு யாராலும் எடுக்க முடியாதது. அதும் அந்த 1,76,000 கோடி ரூபாய் நோட்டு...சான்ஸே இல்ல.

7) சோறு தன்னி கூட வேணாம். பாராட்டு விழா போதும். 'உன் கவிதையை படிக்கும் போது அது செக்‌ஷுவல் ஃபீலிங் உணர்ந்த மாதிரி"-னு வாலி பால் ஆடினாலும், "பெண் சிங்கம் எழுதும் Pen சிங்கம் நீ; பா.விஜய்க்கே பஞ்ச் எழுதும் இளைஞன் நீ" அப்படீன்னு வைரமுத்து சொன்னாலும், "கலைஞர்ஜி பைபாஸ்(ரூட்)ல போகலை"-னு ரஜினி போட்டுகொடுத்த போதும், வீரமணிக்கு கலைஞர் விருதும், கலைஞருக்கு பெரியார் விருதும் மாத்தி மாத்தி கொடுத்துகிட்டு 'நமக்கு நாமே' திட்டம் போல பாராட்டிக் கொண்டபோதும்...கடைசியில் 'விருதுக்கே விருது' என்ற நிலைக்கு நாக்கு தள்ளிய போது...அடடா!!!

8) ஆளுங்கட்சியா இருந்து தேருதல் சந்திக்கும் போதும் கலைஞர்ஜி மட்டும் ஜெயித்திடுவார். மீது 233-ம் ஜெ-வுக்கு. அதுல ஒரு பெருமை, "நான் மட்டும் தோற்கலை பாத்தியா? உன்னால முடியுமா?" குழந்தை மனசு கலைஞர்ஜிக்கு.

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வந்ததும் 5 வருடம் அயராது பாடுபட்டு அடுத்த முறை ஜெ-வை ஆட்சியில் அமர வைப்பேன் என்ற சபதம் எடுத்திருக்கிறார் கலைஞர்ஜி. ஆனா, அந்த நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா அம்மையாருக்கு? முடிஞ்ச வரை டஃப் கொடுக்கிறார் ஜெ.

9) இந்த மக்களை 40 வருஷமா மேய்ச்சுகிட்டு தான இருக்கோம். 100, 200 தூக்கியெறிஞ்சா ஓட்டு போட்டுடுவாங்கனு நெனச்சது கரெக்டு தான். ஆனா, 1,76,000 அடிச்சுட்டு அதுல 1 ரூபா மட்டும் கொடுத்தா நாங்க ஓட்டு போட்டுடுவோமா என்ன? வெலவாசி ஏறிப்போச்சு பாஸு.

10) ஒரு விஷயத்துல பாராட்டலாம். இளைஞர்கள் என்ன தகிடுதத்தம் செய்தாகிலும் ஆட்சிக்கு வரலாம், தப்பில்லை என்ற கருத்தை மையமாக கொண்ட 'கோ' படத்தை தைரியமாக வெளியிட்ட ஆளுங்கட்சிக்கு சபாஷ். ஒரு வேளை புட்டுக்கும்னு படத்தை ரஷ் கூட பார்க்காமல் அவசர அவசரமாக வாங்கி வெளியிட்டுடாங்களா?

விதவிதமாக, பெண் சிங்கம், இளைஞன் போன்ற வெற்றிச் சித்திரங்கள் உட்பட, திரைக்காவியங்களை வழங்கிய ஆட்சி இல்லாமல் போனது தமிழர்களுக்கு சொல்லொனா துயரத்தையே தரும் வேதனையான விஷயம் தான். (என்னைய மாதிரியே அழுவுரியே. அதான் ஒரே ரத்தம்).


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த தேர்தலை பத்தி.

சரி! ஜெ மட்டும் ஒழுங்கா என்று புத்திசாலித்தனமாக மடக்குபவர்களுக்கு: இன்னும் 5 வருஷம் கழித்து இதே பதிவு மீள் பதிவு செய்யப்படும். ஒரு வித்தியாசம், கலைஞர்ஜி என்ற வார்த்தைக்கு பதில் ஜெ. சிம்பிள்.