Wednesday, February 17, 2010

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

முஸ்கி: ஒவ்வொரு படமாக பார்க்க பார்க்க இந்த பதிவை அப்டேட் செய்கிறேன். ஆனால், ப்ளாக்கரில் முன்பிருந்தது போல ஒரு பழைய பதிவை எடிட் செய்ய முடியவில்லை. முன்பு Save பொத்தான் இருக்கும். ஆனால் இப்போதோ Publish Post பொத்தான் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும் போதும் புது இடுகை போல வந்துவிடுகிறது. ஏமாந்து வந்துவிடுபவர்கள்(!) பொருத்துக் கொள்வீர்களாக. (உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் ரிசர்வ் செய்யப்பட, கடவுளிடம் ரெக்கமன்டேஷன் செய்கிறேன் ;) ).

சர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்த பெயரை பல முறை கேட்டாலும், ஏனோ அவர் படங்களை சமீப காலங்களாக பார்த்தது இல்லை. அவர் சஸ்பென்ஸ் படம் எடுப்பதில் தில்லாலங்கடி என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், பொதுவாக எனக்கு சஸ்பென்ஸ் படங்கள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. ஆள் "Humpty Dumpty sat on the wall" நர்சரி ரைமில் வரும் அந்த முட்டையை போல் இருப்பார்.

ஆட்ரே ஹெப்பர்ன் என்ற நடிகையை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். கடந்த நூற்றாண்டின் பேரழகான நடிகை. அவர் நடித்தது என்பதற்காக Charade என்னும் படத்தை பார்க்க நேர்ந்தது. Charade படம் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டதால், திரில்லர் படங்களின் மேல் எனக்கு அலாதி பிரியமே ஏற்பட்டுவிட்டது. பின் அந்த படத்தினை பற்றி கூகிளில் தேடியபோது, அந்த படத்தினை பற்றி குறிப்பிடும் பொழுது "The best Hitchcock movie that Hitchcock never made" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு பிறகு, ஹிட்ச்காக் படங்கள் சிலவற்றை தரவிறக்கம் செய்து பார்த்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மனிதர் நிச்சயமாகவே தில்லாலங்கடி தான்...

Strangers on a Train - 1951

சிம்பிளான கதை. அட்டகாசமான முடிச்சு. பிரபலமான டென்னிஸ் ப்ளேயருக்கு (Guy Haines), முதல் மனைவியால் பிரச்சினை. அவளை விவாகரத்து செய்துவிட்டு காதலியை திருமணம் செய்துகொள்ளலாமென்று பார்த்தால், மனைவி ஒத்துவருவதாக தெரியவில்லை. ஒரு நாள் இரயிலில் ஒரு முன்பின் பழக்கமில்லாத (Bruno Anthony) நபர் அறிமுகமாகிறார். அவருக்கு அவர் தந்தையால் பிரச்சினை. தீர்வு? ப்ரூனோ அவர் மனைவியை கொலை செய்வார், பதிலுக்கு இவர் அவருடைய தந்தையை கொலை செய்வார். சம்பந்தமே இல்லாத ஒருவரால் கொலை செய்யப்படுவதால், போலீஸிடமிருந்து எளிதில் தப்பிவிடலாம் என்பது திட்டம். ஆனால், அந்த ப்ளெயருக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் ப்ரூனோ அவனுக்காக அவன் மனைவியை கொலை செய்துவிடுகிறான். அடுத்து கை ஹைன்ஸ், ப்ரூனோவிற்காக தன் தந்தையையும் கொலை செய்யுமாறும், தவறினால் ஹைன்ஸ் சொல்லித்தான் அவன் மனைவியை கொலை செய்ததாக போலீஸிடம் மாடிவிட்டுவிவதாகவும் மிரட்டுகிறான். பின் அதிலிருந்து எப்படி ஹைன்ஸ் தப்பிக்கிறான் என்பது தான் கதை.



அப்புறம், நம்ம சேரன் ஒரு படம் நடிச்சாப்ல, 'முரண்'-ட்டு. இதோட காப்பிதேன் (highly inspired-ஆம்)...

(மேலே பட போஸ்டரை கவனித்தால், "L" என்ற எழுத்தை "G" அப்புறம் போட்டால் வருவது "Stranglers". இதுவும் சரியே. "Stranglers" என்றால் கழுத்தை நெறிப்பவர்கள்).


Rear Window - 1954

ஒரு அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் ஒரு வீடு. படம் முழுவதும் வீட்டின் அந்த அறையில் மட்டுமே நடக்கும். ஒரே அறையை மையமாக வைத்து ஒரு அருமையான திரில்லர் கதையை கொடுக்க முடியுமா? ஹிட்ச்காக்கை கேளுங்கள், Rear Window என்பார்.

வலது கால் உடைந்து கட்டு போட்டு வீல் சேரில் அமர்ந்திருக்கும் கதாநாயகன். அவனை ஒரு தலையாக காதலிக்கும் பணக்கார கதாநாயகி. தினமும் அவனுக்கு பணிவிடை செய்ய வரும் ஒரு நர்ஸ். இவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள்.

கோடை காலமாதலால் அந்த அப்பார்ட்மென்ட்டிலும் அதற்கு எதிரில் இருக்கும் இன்னொரு அப்பார்ட்மென்ட்டிலும் ஜன்னல்களை திறந்து வைக்கின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகள். கால் உடைந்து கட்டு போட்டு சதா அமர்ந்திருக்கும் நிலையில், போர் அடிப்பதால் அக்கம் பக்கம் நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் ஜெஃப். பால்கனியில் உறங்கும் ஒரு கணவன் மனைவி மற்றும் தினமும் கூடையில் இறக்கி விடப்படும் நாய்குட்டி, தனிமையில வாடும் நடுத்தர வயதுடைய பெண்மணி, காதல் தோல்வியில் பாடல் பாடும் ஒரு பியானிஸ்ட், தினமும் பார்ட்டி கொடுக்கும் ஒரு பெண், முக்கியமாக, படுக்கையில் நோயாளியாக இருக்கும் மனைவிக்கு பணிவிடை செய்யும் ஒரு சேல்ஸ் ரெப்.



இரண்டு நாட்கள் கடும் மழை ஆதலால், அனைத்து வீட்டு ஜன்னல்களும் பூட்டப்பட, அன்று இரவு அந்த சேல்ஸ் ரெப் மட்டும் நடு இரவில், கையில் சூட்கேசுடன் சில முறை போவதும் வருவதுமாக இருக்கிறான். மழை விட்ட மறுநாள் அனைத்து வீட்டின் ஜன்னல்களும திறக்க, அந்த நோயாளி மனைவி மிஸ்ஸிங்.

இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் முலம், அந்த மனைவிக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிப்பது கதை. இதில் முக்கியமானது அவர்களுடன் நடைபெறும் விவாதங்கள். கடைசியில் நடைபெறும் கலாட்டாவில் மற்றொரு காலையும் உடைத்துக் கொண்டு இரண்டு கால்களிலும் கட்டோடு கிடப்பார் ஜெஃப்.

North by Northwest - 1959

இந்த படத்தின் நாயகன் ரோஜர் என்பவர் George Kaplan என்று நினைத்து கடத்தப்படுகிறார். அன்று அளவுக்கு அதிகமாக மது ஊற்றி அவரை காரில் வைத்து அனுப்பி கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அதில் தப்பிவிடுகிறார். போலீஸ் D&D கேஸில் கைது செய்கின்றனர். அவர் கடத்தி வைக்கப்பட்ட வீட்டில் சென்று பார்த்தால், அங்கே முன் இருந்தவர்கள் இல்லை. என்ன சொல்லியும் போலீஸ் நம்புவதாக இல்லை. பின் அந்த Kaplan யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு கொலை பழியும் விழுகிறது. இரயிலில் சென்று தப்பிக்கும் போது, அதில் பயணம் செய்யும் ஈவா என்னும் பெண் ரோஜாரை காப்பாற்றுகிறாள். Kaplan அவனை மறுநாள் ஒரு இடத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறாள். அவளை நம்பி அங்கு சென்றால், ரோஜாரை ஒரு சிறு விமானம் கொல்ல துரத்துகிறது. தப்பிக்கிறார்.



ஒரு அட்டகாசமான plot. ஒரு அட்டகாசமான டிவிஸ்ட். George Kaplan என்பது உளவுத்துறை உருவாக்கிய, யாரும் பார்த்திராத, ஒரு கற்பனை பாத்திரம். ஈவா என்னும் உளவாளியின் மேல் இருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப உருவாக்கப்பட்ட கற்பனை பாத்திரம் தான் George Kaplan. ஆனால், ரோஜர் செய்யும் குளறுபடியால் ஈவா உயிருக்கு ஆபத்து. அவளை காப்பாற்றினாரா ரோஜர்...?

The Birds - 1963

காக்கை, சீ கல், குருவிகள் போன்ற பறவைகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து உங்களை கொல்ல முயர்சித்தால் எப்படி இருக்கும்? அதுவும் காரணமே தெரியாமல்...வார இறுதியில் Bodega Bay-க்கு மிட்ச் என்பவரின் தங்கைக்கு லவ் பேர்ட்ஸ் கொடுக்க செல்லும் மெலனி, அங்கு தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒரு சீ கல் பறவையால் தாக்குண்டு தலையில் இரத்த காயம் ஏற்படுகிறது. பின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவள் இருக்கும் இடங்களிலெல்லாம் முதலில் சீ கல் பறவைகள், பின் காக்கைகள், பின் குருவிகள் என்று தொடர்ச்சியாக தாக்குதல்கள். மிட்சின் முன்னாள் காதலியும் கொல்லப்படுகிறாள். பின் ஊரிலும் சிலர் கொல்லப்படுகிறார்கள். காரணம் தெரியவில்லை. மெலனி, மிட்ச் மற்றும் அவரின் தாயார், தங்கையுடன் ஊரை விட்டு போகிறார் என்பதுடன் படம் முடிகிறது. (இதில் அந்த பறவைகளின் தாக்குதல்களுக்கான காரணம் ஆராயப்படவில்லை).



Vertigo - 1958

இது ஒரு சைக்கலாஜிகல் திரில்லர். டிடெக்டிவ் ஸ்காட்டி ஒரு முறை ஒரு போலிஸ் அதிகாரி ஒரு மாடியின் உச்சியிலிருந்து விழுந்து இறந்ததால் அவருக்கு acrophobia என்ற உயரத்தை பார்த்தால் பயப்படும் நோய்க்கு ஆளாகிறார். அதனால் அந்த வேலையை விட்டு விலகிவிடுகிறார். பின் அவரின் நண்பருக்காக,அவர் மனைவி மெடலின் விநோத நடவடிக்கைகளால் குழப்பமுற்று, மனைவியை பின்தொடருகிறார். மெடலின் தற்கொலை முயச்சியில் இருந்து காப்பாற்றுகிறார். ஆனால் மெடலினுக்கு எதுவும் நினைவில் இல்லை (சந்திரமுகி படம் போல). பின் இருவருக்கும் இடையில் நெருக்கம் உண்டாகிறது. ஆனால், மெடலின் ஒரு சர்ச்சில் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள ஸ்காட்டி மீண்டும் மனநோய்க்கு ஆளாகிறார்.



ஆனால், மெடலினை போன்ற முக அமைப்பு கொண்ட ஒரு பெண்ணை (ஜுடி) கண்டு அவளுடன் பழகி அவளை மெடலின் போல மாற்றி மீண்டும் அந்த தற்கொலை நாடகத்தை நடத்தி, அவளை காப்பாற்றுவது போல காப்பாற்றி அவர் தன மனநோயை குணப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், அங்கே தான் இருக்கு டிவிஸ்டு.

The Lady Vanishes - 1938

ஹிட்ச்காக்கின் 'மற்றுமொரு' அட்டகாசமான படைப்பு இது.

பணிச்சரிவினால் இரயில பயணம் தாமதாம் ஆக, ஒரு இரவு அந்த பயணிகள் ஐரோப்பாவில் பன்ரிக்கா என்ற ஒரு (கற்பனை) தேசத்தில் தங்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்காக ஊருக்கு திரும்பி செல்லும் ஐரிஸ், அந்த இரவில் ஒரு வயதான ஃபராய் என்ற பெண்மணியுடன் அறிமுகமாகிறார். மறுநாள் இரயில் புறப்படும் போது ஒரு கை ஐரிஸ் தலையில் ஒரு பூச்சட்டியை தள்ளி கொலை முயற்சி நடக்கிறது. அதனால் மயக்கமாகிறாள். பின் இரயிலில ஏற அங்கு அவளுக்கு உதவி செய்கிறாள் ஃபராய். இருவரும் காபி அருந்துகிறார்கள். பின் இருவரும் அன்யோன்யமாகிறார்கள். மீண்டும் மயக்கமடைந்து அதனால் சற்று நேரம் தூங்குகிறாள் ஐரிஸ். கண் முழித்து பார்க்க, எதிரில் ஃபராய் காணவில்லை. நடுவில் எந்த நிறுத்தத்திலும் வண்டி நிற்கவில்லை.


இரயிலில ஃபராய்யை பார்த்தவர்களை கேட்க, அவர்களோ யாரும் அப்படி ஒரு பெண்மணி இல்லை என்று மறுக்கிறார்கள். தலையில் அடிபட்டதால் இப்படி நினைக்க தோன்றுவதாக இரயிலில் இருக்கும் மருத்துவர் சொல்கிறார். ஆனால், அவளுக்கோ ஃபராய் ஆபத்தில் இருப்பதாக உணர்கிறாள். அவளுடன் வந்த கில்பர்ட் என்ற பயணி அவளுக்கு உதவ முன்வருகிறார். இவர் சென்ற இரவில் அவளுடன் சண்டை இட்டவர். பின் என்ன ஆனது என்பதை திரையில் காண்க.

Notorious - 1946

Charade, North by Northwest போன்ற படங்களில் நடித்த கேரி க்ரான்ட் (Cary Grant) தான் படத்தின் ஹீரோ. Casablanca புகழ் Ingrid Bergman ஹீரோயின். நாஜியின் உளவாளியின் மகளான அலீசியாவை ஜெர்மானியர்களின் கூடாரத்துக்குள் அமெரிக்க உளவாளியாக ஊடுருவ வைத்து தகவல் சேகரிக்க வைக்கின்றார் டெவ்லின் (கேரி க்ரான்ட்). இடையில் இருவருக்கும் காதல். ஆனால், கடமையின் உந்துதலால் அலீசியாவை அவள் தந்தையின் நண்பரான அலெச்ஸை திருமணம் செய்ய சொல்கிறார். பின்னர் அலெக்ஸ் கண்டிபிடித்து விட, அவர் தாயின் அறிவுரையின் பேரின் அலீசியாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படுகிறது. அவளுக்கு இது தெரிந்தாலும், தப்பிக்க முடியவில்லை. அலெக்ஸுக்கோ இது அவனுடைய சகாக்களுக்கு தெரிந்தால் இவனை கொன்றுவிடுவார்கள்.

அலீசியா தப்பித்தாளா?



கேரி க்ரான்ட் (Cary Grant)



Shadow of the doubt - 1943

இந்த படம் ஹிட்காக்கின் ஃபேவரைட். அவர், தான் எடுத்த படங்களிலேயே சிறந்ததாக இந்த படத்தை கூறுவது உண்டு.


சான்டா ரோசா-வில் வசிக்கும் சார்லி என்னும் இளம் பெண், தன் தாய் மாமாவான சார்லியின் வருகையால் சந்தோஷம் அடைகிறாள். அவள் பெயரே, அவருடைய மாமாவின் பெயர் தான். இருவருக்கும் இடையில் டெலிபதி இயங்குவதாக அடிக்கடி சந்தோஷப்படுபவள்.

ஆனால், அவர் வரும் போது, தன்னுடனே சில பிரச்சினைகளை கொண்டு வருகிறார். அங்கிள் சார்லி, ஒரு சீரியல் கில்லர் (Merry Widow Murderer). பனக்கார விதவைகளை கொன்று கொள்ளையடிப்பது. இதை பின்னர் அறிந்து கொள்ளும் சார்லி, அங்கிள் சார்லியை கண்டுபிடிக்க வரும், டிடெக்டிவ் ஒருவருடன் சேர்ந்து, அவர் கொலையாளியாக இல்லாமல் இருக்க கூடாதா என்ற நப்பாசையுடன் சுற்றுகிறாள். இடையில் சார்லி 2 முறை கொலை செய்ய முயற்சிக்கப்படுகிறாள், அங்கிள் சார்லியால். ஆனால், போர்ட்லேன்டில் மற்றொரு கொலைகாரன் போலீஸாருடன் நடைபெறும் சன்டையில் இறந்து விடுகிறான். அவன் தான் இந்த சீரியல் கொலைகாரன் என்று கேஸை மூடிவிடுகிறார்கள்.

போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி அங்கிள் சார்லி ஊரை விட்டு போகிறார். அதனால், உண்மையை தெரிந்து கொண்ட சார்லியை கொலை செய்ய முயற்சிக்கிறார் அங்கிள் சார்லி. என்ன ஆனது?

இந்த படத்தில் அங்கிள் சார்லியின் கதாபாத்திரம் புகழ் பெற்றது. அவர் ஒரு சீரியல் கில்லர் என்றாலும், படத்தில் ஒரு கொலை காட்சி கூட இல்லாமல், இப்படி ஒரு அற்புதமான திரில்லர் படம் கொடுக்க முடியுமா? முடியும். ஹிட்ச்காக்கால்...



இதெல்லாம் ஹிட்ச்சின் படங்களில் சிறந்தவவை. அவரின் படைப்புகளில் சிறந்தவை சைக்கோ மற்றும் 39 ஸ்டெப்ஸ் ஆகியவை. படம் பார்த்தால் இங்கே எழுதியிருப்பவற்றை விட செம சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். சாதாரணமாக நாம் சந்திக்கும் நபர்கள். ஆனால், பிரச்சினைகள் மட்டும் வித்தியாசமானவை.

நான் பார்த்ததில் மிக சிறந்த, எனக்கு பிடித்தது Rear Window - 1954.

படம் முழுக்க ஒரே அறையில் தான் கேமரா இருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம் படமாவது ஒரு வளாகத்தில் இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு அறை மட்டுமே. அந்த அறையை மட்டுமே மையமாக வைத்து ஒரு சுவாரசிய திரைக்கதை அமைப்பது என்பது சவாலனது.

அதுவும் க்ளைமேக்ஸில் தன் உயிரை காப்பாற்ற பயன்படுவது (அல்லது உயிர் போகும் தருனத்தை தள்ளி போடுவது), கையில் உள்ள சில ப்ளாஷ் லைட்டுகள். கதையும், அந்த துப்பறிவதும் வெறும் வசனங்கள் மூலம் தான். வசனங்களின் வழியே ஒரு க்ரைமை கண்டிபிடிப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.

தவறாமல் பாருங்கள் இவரின் சஸ்பென்ஸ் காவியங்களை...

பிற்சேர்க்கை - 09-May-2010

Rebecca - 1940

ரொம்ப லேட்டாக பார்த்த படம்.

சிகப்பு ரோஜாக்கள் பாணி படம். பணக்காரர் ஒருவரை ஒரு வாரத்தில் காதலித்து (இரண்டான் தாரமாக) திருமணம் செய்து கொள்ளும் பெண் (படத்தில் பெயரில்லாத பெண்), தான் கணவில் கண்ட மேண்டெர்லீ (Manderley)-க்கு போகும் சந்தோஷத்தில் இருக்க, அங்கே இருக்கும் வேலையாட்களுக்கு அவளை பிடிக்கவில்லை, முக்கியமாக முதல் தாரமான ரெபெக்காவின் maid-ஆன மிஸஸ்.டான்வர்ஸ்ஸுக்கு (Mrs. Danvers). காரணம், பொன்னியின் செல்வன் நந்தினி பாணியில் அனைவரையும் கவர்ந்த ரெபேக்கா. ரெபேக்காவின் சந்தேகத்திற்கிடமான மரணம் அந்த பணக்காரரை புரட்டி போடுகிறது.


பின்னாலில் ரெபேக்காவின் மரணம் பற்றின உண்மை தெரியவருகிறது. அதனை வைத்து ரெபேக்காவில் முன்னால் காதலன் மிரட்ட, கடைசியில் இன்னுமொரு ட்விஸ்ட்.

கதையின் டைட்டில் பாத்திரம் ரெபேக்கா என்ற பெண்ணின் முகம் ஒரு சீனில் கூட இல்லாதிருப்பது, படத்தில் ஹீரோயினுக்கு கடைசி வரை பெயர் இல்லாதிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கது. One of the 'Must Watch' movies.

பிகு: இந்த படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வாங்கியது.

Dial M for Murder - 1954

மேடை நாடகமாக வந்து பின் காவியமாகிய படம், ஹிட்ச்காக்கின் கைவரிசையால்.

மனைவி மார்கட்-ன் வற்புறுத்தலால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்துகிறார் டோனி. ஆனால் அவளுக்கும், மார்க் என்ற சஸ்பென்ஸ் எழுத்தாளருடன் 'பழக்கம்' இருப்பது தெரிய வர, அவளை கொலை செய்ய திட்டமுடிகிறார். ஸ்வான் என்பவனை ப்ளாக்மெயில் செய்து மார்கட்டை கொலை செய்ய வற்புறுத்துகிறார். ஸ்வானும் வேறு வழிதெரியாமல் ஒப்புக்கொள்கிறார். ஏன் வேறு வழி தெரியவில்லை? ஒரு சிம்பிள் மிரட்டல். படத்துல பாருங்க. அதன் படி, வீட்டின் சாவியை படியில் ஒளித்து வைக்க, ஸ்வான் அதை உபயோகித்து மார்கட்டை கொல்ல வேண்டும்.



ஆனால், அந்த முயற்சியில் ஸ்வான் கொல்லப்பட, மார்கட்டுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. போலீஸின் சாமர்த்தியத்தாலும், சஸ்பென்ஸ் எழுத்தாளரான மார்க்கின் புத்திசாலித்தனத்தாலும் மார்கட் காப்பாற்றப்படுகிறாள். எப்படி என்பது தான் கதையே. தனக்கு தேவையே இல்லாமல், தானாக முன்வந்து இது கொலை அல்ல, தற்காப்புக்கான கொலை என்று கண்டறியும் அந்த போலீஸ்காரர், அவர்தம் கடமை என்றால் என்ன என்று நமக்கு சொல்லி நம் மனதில் நிற்கிறார்.

படத்தில் ஃபோன் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதனால் தான் அந்த டைட்டில்.

To Catch a Thief - 1955

மற்றுமொரு ஹிட்ச்காக் + கேரி க்ரேன்ட் + க்ரேஸ் கெல்லி படம்.

பூனையை பழக்கி திருடும் புகழ்பெற்ற, The Cat என்ற செல்லப்பெயருடைய முன்னாள் திருடன் தான் ஜான். அவர் ஸ்டைலை பின்பற்றி சில திருட்டுக்கள் நடக்க, சந்தேகப்பார்வை அவர் மீது விழுகிறது. காவல்துரையினரிடமிருந்து தப்பித்து பழைய திருந்தி வாழும் சகாக்களிடம் செல்ல, அவர்கள் உதவ தயங்குகின்றனர்.



பின் ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜென்ட் ஹக்ஸன் (Dial M for Murder படத்தின் போலீஸ்காரர்) துணையோடு, சிட்டியில் உள்ள, காஸ்ட்லி நகை உடையவர்களின் லிஸ்ட் எடுத்து, அவர்களிடம் திருட வரும்போது அந்த Cat-ஐ பிடித்து, தான் நிரபராதி என்று நிரூப்பிக்கலாம் என்பது திட்டம். முடிந்ததா? முடியும். சில 'அட' திருப்பங்களோடு.

ஹக்ஸனின் நடிப்பு பிரமாதம், இந்த படத்திலும், Dial M for Murder-லும்.

Marnie - 1964

இது ஹிட்ச்காக்கின் படம் என்று தெரியாமலேயே பார்த்தது. 007 சீன் கனரி நடித்தது.

மார்னி ஆண்களை நம்பாத, இடி மின்னல், சிகப்பு நிறம் போன்றவற்றை பார்த்து பயந்தோடும் ஒரு பெண். எங்காவது வேலைக்கு சென்று, நம்பிக்கையை பெற்று பின் அங்கு திருடிவிட்டு மறுபடியும் அடுத்த இடத்திற்கு செல்லும் ஒரு பெண்.

அதை போலவே பிரின்டிங் கம்பேனி வைத்திருக்கும், மனைவியை இழந்த, மார்க் என்பவர் கம்பேனியில் மார்னி திருட அதை வைத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ளாக்மெயில் செய்கிறார். திருமணமும் நடக்கிறது.



ஹனிமூனுக்கு செல்லும் போது அவளை பற்றி தெரிந்து கொள்ளும் மார்க், காரணம் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். மார்னியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி. சிறுமியாக இருக்கும் போது ஒரு நாள் இடியை பார்த்து பயந்த சிறுமியை, அவள் தாயின் வாடிக்கையாளன் ஒருவன் தேற்றுவது போல் அவளை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். அவள் தாய் பார்த்துவிட்டு அவளை காப்பாற்றும் போராட்டத்தில் அவன் அந்த சிறுமியால் கொல்லப்படுகிறான். பின் மார்னிக்கு என்ன ஆனது?

பிற்சேர்க்கை - 21-May-2010

Rope - 1948

1929-ல் வெளிவந்து பின் ஈஸ்ட்மேன் கலர் வந்ததால் மறுபடியும் ரீமேக் செய்யப்பட்ட படம் இது. இரு Gay-க்கள் தாங்கள் கொலை செய்வதில் எக்ஸ்பர்ட்களா என்று சோதனை செய்து பார்க்க (Perfect Murder), தங்கள் பள்ளி தோழனை கொலை செய்து ஒரு பெட்டியில் போட்டு, அந்த தோழனின் பெற்றோரை அழைத்து அந்த பெட்டியின் மேலேயே உணவு வைத்து பார்ட்டி கொடுக்கின்றனர். அந்த பார்ட்டிக்கு வரும் முன்னாள் ஸ்கூல் வார்டன் ஜிம்மி (எ) ஜேம்ஸ் ஸ்டீவார்ட், அங்கு நடைபெறும் சம்பாஷனைகள் மூலம், கொலைகாரனின் அதீத நம்பிக்கையும், அதனால் அவன் செய்யும் சில தேவையில்லாத செய்கைகளும் இவர்கள் செய்யும் கொலையை கண்டறிகிறார். எப்படி என்பது தான் படமே. கொலை செய்ய பயன்படும் அந்த கயிறும் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

முதல் காட்சியில் கழுத்து நெறிக்கப்படும் தோழன். அங்கிருந்து படம் ஆரம்பமாகி அதே அரையில் கதை பயணிக்கிறது. நடைபெறும் வசனங்களும், அந்த இருவரில் பயந்த சுபாவம் உள்ள இன்னொருத்தனால், புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்கிறார் ஜிம்மி. இவரின் சில படங்களை பார்த்து, அதுவும் பல ஹிட்ச்காக் படங்களில் இவரின் நடிப்பு மற்றும் ஸ்டைலுக்காக இவரின் பரம விசிறி ஆகிவிட்டேன்.


படத்தை விடுங்கள். இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள்...

1. இந்த படத்தில் வரும் இரண்டு Gay-க்களில் ஒருவர் நிஜமாகவே Gay, மற்றொருவர் Bi-sexual. இந்த Bi-sexual தான் Strangers in a Train படத்தில் வரும் டென்னிஸ் வீரர் (மேலே பார்க்கவும்).

2. படத்தின் மொத்த நீளம் சுமார் 1 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்கள். மொத்தம் 10 பகுதிகள். மொத்த படமும் இந்த நேரத்திலே ஆரம்பித்து முடிகிறது. அதாவது படம் மொத்தம் பத்து ஷாட்கள் மட்டுமே. ஒரு ஷாட்டின் நீளம் 7 முதல் 10 நிமிடங்கள் (Long Take). இது ஒரு வித்தியாசமான முயற்சி. ஏன் ஒரு ஷாட் 10 நிமிடங்கள் மட்டுமே!? காரணம், அந்த காலத்தில் பிலிம் ரோலின் மொத்த நீளமே 10 நிமிடம் தான் ஓடும். மற்றும், ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் (2 ரீல்கள்) தியேட்டர் ஆப்பரேட்டர் ரீல் மாற்ற வேண்டியிருக்கும். அதனால் மட்டுமே.

3. ஒவ்வொரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட் ஆரம்பிப்பது உங்களுக்கு தெரியாது. காமெரா நகர்ந்து அல்லது கதாபாத்திரம் காமெரா முன் வந்து நிற்க, திரையில் கருப்பு நிறம் படர்ந்திருக்க அடுத்த ஷாட் அங்கிருந்து ஆரம்பம் ஆகும். ஆக, படம் மொத்தமும் ஒரே ஷாட் போல தெரியும்.

4. இந்த கதை உண்மையில் 1924-ல், 7 மாதங்கள் Home work செய்து, திரைக்கதை அமைத்து நடந்த ஒரு Perfect Murder-ஐ பிண்ணனியாக கொண்ட படம். (இருவரும் பின்னர் மாட்டிக்கொண்டதால், இது ஒரு Perfect Murder இல்லை)

பிற்சேர்க்கை - 10-Dec-2010

The Man Who Knew Too Much - 1956


இது 1934-ல் வந்த படத்தின் ரீமேக். 1934-ல் எடுத்ததும் இதே ஹிட்ச்காக் தான். அப்புறம் இது எதற்கு? ஹிட்ச்காக் சொன்னது 1934 - ஒரு அமெச்சூர் எடுத்தது. 1956 - ஒரு புரொபஷனல் எடுத்ததாம்...எப்படி?

படத்தில் நம்ம தல ஜிம்மி ஒரு டாக்டர். அவர் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் விடுமுறையை கழிக்க மொராக்கோ செல்கிறார். அங்கு ஒருவன் சாகும் தருவாயில் ஒரு ரகசியம் சொல்லி இறக்கிறான். பின் அவர்கள் மகனை யாரோ கடத்தி வைத்து, ஜிம்மி தனக்கு தெரிந்தது எதுவும் போலீஸுக்கு சொல்லக்கூடாது என்று மிரட்டுகின்றனர். அவன் அங்கிருந்து லன்டன் திரும்பி தன் மகனை தேடி கண்டுபிடித்து அந்த ரகசியத்தையும் காப்பாற்றுகிறானா என்பது சஸ்பென்ஸ்.

இந்த படத்தில் வரும் "Que Sera, Sera (Whatever Will Be, Will Be)" பாடல் மிகவும் புகழ் பெற்றது. ஜிம்மியின் மனைவியாக நடித்தவர் டோரிஸ் டே என்னும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி. அப்புறம் தமிழ் இயக்குநர்கள் ஹிட்ச்காக்கிற்கு கடமை பட்டிருக்கின்றனர். காரணம், 'குடும்ப பாட்டு' என்ற ஒன்று இந்த படத்தில் தான் ஆரம்பிக்கிறது.

இந்த பாடல் உலகப்புகழ் பெற்றதால் தான் என்னவோ, 1957-ல் வந்த தமிழ் படமான ஆரவல்லி படத்தில் ட்யூன், பாடல் வரிகள் முதற்கொண்டு Inspire ஆகியிருக்கிறார் ஜி.ராமநாதன் (இதற்கு இசை ஜி.ராமநாதனா இல்லை 'ஜெராக்ஸ் கடை ஓனர்' வேதா என்று தெரியவில்லை). இந்த update ஒரு தகவலுக்காக. ஆனால், நன்றாகவே செய்திருக்கிறார். இரண்டு பாடல்களும் இங்கே. (ஆரவல்லி என் ஃபேவரைட் க/வெ படங்களில் ஒன்று).

ஒரிஜினல்

ஜெராக்ஸ்
Torn Curtain - 1966

கமர்ஷியலா ஹிட் ஆகலைன்னு பார்க்காம விட்ட படம். படம் பார்த்ததும், நைட்டு 1 மணிக்கு இதை டைப்பிக் கொண்டிருக்கிறேன்னா படம் எப்படினு நெனச்சுக்கோங்க. இது ஹிட்ச்காக்கின் 50வது படம். சுமாராத்தான் போச்சாம்! இரண்டாம் உலகப்போருக்கு பின் இரும்புத்திரை நாடாக இருந்த ஜெர்மனியை பற்றி எள்ளலுடன் 'கிழிந்த திரை' என்று படத்தின் பெயர்.

ஹீரோ பால் நியூமேன் (Paul Newman). அவருடைய சில படங்களை பார்த்திருக்கிறேன். அவரை ரொம்ப பிடித்திருந்தது The Sting (மிஸ் பன்னக்கூடாத Gambling பற்றின படம்), The Hustler, Butch Cassidy and the Sundance Kid அவருடைய ஹிட் வரிசைகளில் சில. இந்த படத்தில் அந்த கால Tom Cruise மாதிரி இருக்கிறார்.

சரி! ஹீரோயின் அம்மனி? ஜூலி ஆன்ட்ரூஸ் (Julie Andrews) . எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேனு பார்த்தா, அட! நம்ம Sound of Music ஹீரோயின். அதாங்க, தமிழ்ல சாந்தி நிலையம். அப்புறம் Mary Poppins-க்கு ஆஸ்கர் வாங்கியவர்.

படத்தின் கதை? அட! அத விட்டுத்தள்ளுங்க. பால் நியூமேன்காகவும், ஜூலியன் ஆன்ட்ரூஸ்காகவும் மட்டுமே பார்க்கலாம் படத்தை.

இருந்தாலும்...அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய ஆராய்ச்சிக்கு பணம் ஒதுக்காத ஆத்திரத்தில் ஜெர்மனிக்கு தொழில் நுட்பத்தை அளித்து உதவ செல்லும் ஒரு விஞ்ஞானி. வருங்கால மனைவி அவனை பின் தொடர்ந்து ஜெர்மனி செல்ல, அங்கே தான் தெரிகிறது அவன் அமெரிக்க உளவாளி என்பது. அவன் அங்கு எதற்கு வந்தான்? இருவரும் இரும்புத்திரை ஜெர்மனியிலிருந்து தப்பிக்கிறார்களா? அருமையான திருப்பங்கள் நிறைந்த படம். படத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த போலிஷ் பெண்மனி நம்மை நெகிழ வைக்கிறார்.

பிற்சேர்க்கை - 13-Dec-2010

The 39 Steps - 1935

ரொம்ப நாளாக பார்க்காமல் விட்ட படம். பார்க்காததற்கு காரணம், இந்த படத்தின் சப்-டைட்டில்கள் 'ஒழுங்காக' கிடைக்காததே. கடைசியில் கிடைத்ததும் அவ்வாறே. இருந்தாலும் ஒரு வழியாக 'அட்ஜஸ்ட்' செய்து பார்த்தாயிற்று. இந்த படத்தை சில முறைகள் ரீமேக் செய்தாலும், எதுவும் 1935-ல் ஹிட்ச்காக் செய்ததை போல அருமையாக வந்ததில்லை.

மிஸ்டர். மெமரி நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்ச்யில் பார்வையாளனாக கலந்துகொண்டு கேள்வி கேட்கிறார் ரிச்சர்ட் ஹன்னே. மிஸ்டர். மெமரி என்பவர் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான விடை சொல்பவர். அங்கு ஒரு உளவாளி அனபெல்ல ஸ்மிதை சந்திக்கிறார். அந்த உளவாளியை கொல்ல இருவர் பின்தொடர, இவர் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். அன்று இரவு அந்த இருவரால் அனபெல்லா கொல்லப்பட பழி ஹன்னே மேல் விழுகிறது. சாகும் போது ஒரு மேப் கொடுத்து "அங்குள்ள ஒரு விட்டை பார்; 39 ஸ்டெப்ஸ்" என்று சில வார்த்தைகள் மட்டும் சொல்லி இறக்கிறார் அனபெல்லா. அது பிரிட்டிஷ் நாட்டின் ரகசியம் வேறு நாட்டுக்கு போகப்போகிறது என்று புரிந்து கொண்டு, சுன்டு விரலில் பாதி இழந்த ஒருத்தரை பற்றி புகார் சொல்ல அந்த மேப் காட்டும் இடத்திற்கு போகிறார். சிற்சில மற்றும் பல திருப்பங்கள் நிறைந்த படம்.

கடைசியில், முதல் காட்சியில் வந்த மிஸ்டர். மெமரியிடமே படம் முடிகிறது. அந்த ரகசியம் என்ன? மிஸ்டர். மெமரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அங்க தான் இருக்கு சூட்சுமம்.

ஹிட்ச்காக்கின் படங்களில் பெஸ்ட் என்று அனைவரும் சொல்லும் படம் இது.


பிற்சேர்க்கை: 31-Dec-2010

Lifeboat - 1944

இது வழக்கமான ஹிட்ச்காக் திரில்லர் இல்லை. ஆனால், இரண்டாம் உலகப்போரை மையம் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்கள். படம் முழுதும் நடுகடலில் ஒரே படகில்.



ஜெர்மனியின் தாக்குதலில் கப்பலை இழந்து சுமார் 9 பேர் ஒரு சிறிய படகை அடைகின்றனர். வரும்போதே ஒரு பெண்ணும், இறந்து கொஞ்ச நேரமே ஆன ஒரு குழந்தையையும் சேர்த்து 10 பேர். அந்த பெண்ணும் குழந்தை இறந்த துக்கத்தில் அனைவரும் தூங்கும் போது தற்கொலை செய்து கொள்கிறாள். பின் ஒரு ஜெர்மனி நாஜியும் சேர்ந்துகொள்கிறான். அனைவரும் அருகில் இருக்கும் பெர்முடாவை நோக்கி பயணிக்கின்றனர். இதில் எது சரியான திசை என்பதில் குழப்பம். காரணம் காம்பஸ் இல்லை. ஒரு முடிவெடுத்து ஒரு திசையில் பயணிக்கின்றனர். செல்லும் வழியில் அந்த நாஜி அவர்கள் தவறான வழியில் செல்வதாக எச்சரிக்கை செய்து மறுதிசையில் செய்ய வைக்கிறான். யாருக்கும் எதுவும் தெரியாததால் அவன் சொல்படி கேட்கிறார்கள். நடுவில் ஒருத்தருக்கு கால் அறுவைசிகிச்சை செய்து காலை அகற்றுகிறான்.

அந்த நாஜி நல்லவனா, எல்லோரையும் எங்கு கொண்டு சேர்க்கிறார், எல்லோரும் என்ன ஆகிறார்கள் என்பது மீதி கதை. இது திரில்லர் இல்லை தான். ஆனாலும் அருமையான அனுபவம்.

வழக்கமாக எல்லா படங்களிலும் cameo appearance செய்யும் ஹிட்ச்காக் இந்த படத்தில் atmosphere artists யாரும் கிடையாததாலால் எப்படி வருவது என்று யோசித்து, கடலில் மிதக்கும் பிணமாக நடிக்கலாம் என்று நினைத்து பின் அதை மற்றொரு படத்தில் உபயோகித்துக்கொள்கிறார். இந்த படத்தில்? சற்று தான் தன் எடையை வேறு குறைத்ததால், ஒரு கதாபாத்திரம் வைத்திருக்கும் நாளிதழில், எடையை குறைக்கும் மருந்துக்கு விளம்பர மாடலாக தோன்றி அசர வைக்கிறார்.




பிற்சேர்க்கை - 04-Jan-2011


Foreign Correspondent - 1940

இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு கதை. ஜானி என்பவரை செய்தி சேகரிக்க நியூயார்க்கிலிருந்து இங்கிலாந்து அனுப்பி வைக்கப்படுகிறார். அமைதி நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு குழுவில் உள்ள டச்சு அரசின் வான் மீர் என்பவரிடம் பேச்சு கொடுத்து 2ம் உலகப் போரில் இங்கிலாந்து கலந்துகொள்ளுமா என்ற உண்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது தான் நோக்கம். அந்த குழுவின் தலைவர் ஃபிஸ்ஸரின் மகள் காரலை சந்திக்கிறார். ஜானியும் வான் மீரை சந்திக்கும் போது ஜானி கண் முன்னே அவர் கொல்லபடுகிறார். கொலையாளியை பின்தொடர்ந்து செல்லும் அவர் கண்டுபிடிப்பது, கொலையானது வான் மீரின் டூப்ளிகேட். ஒரு wind mill-ல் அவர் உயிருடன் கடத்திவைக்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்து தப்பிக்கும் அவர் போலீஸை அழைத்து வர அங்கு எதுவும் நடந்ததற்கான சுவடே இல்லை.

பின் தொடர்ச்சியாக அவர் மீது கொலை முயற்சி நடக்கிறது. இதற்கிடையில் இன்னொரு பத்திரிக்கையாளர் ffolliott உடன் இணைந்து காரலுக்கு தன் மீது இருக்கும் காதலை வைத்து அவளுக்கு தெரியாமலேயே அவளை 'கடத்தி'(!) பிஸ்ஸரை மிரட்டி வான் மீர் இருக்கும் இடத்தை பற்றின தகவலை தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். அதுவும் முடியாமல் போகிறது. இதற்கிடையில் இதை தெரிந்து கொண்ட காரல் ஜானியை வெறுக்கிறாள்.


காதல் கைகூடியதா? வான் மீர் என்ன ஆனார்? உலகப்போரில் இங்கிலாந்து குதித்ததா(!) என்பதை 'சின்ன' வெண் திரையில் காண்க.

ஒரு காட்சியில் "HOTEL ENGLAND" என்னும் நியான் பெயர்பலகையில் ஜானி கையை வைக்க "EL" என்ற வார்த்தைகள் கொண்ட நியான்கள் ஃப்யூஸ் ஆகிறது. அந்த காட்சி "HOT ENGLAND" ஆகிறது. வான் மீர் கதாபாத்திரத்தில் நடித்த ஆல்பர்ட் இந்த படத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டவர்.

கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படமாக்கப்பட்டிருப்பது அருமை. 1940-ல் இப்படி டெக்னிகலாக அசத்தியிருப்பது அட்டகாசம்.


Spellbound - 1945

படத்தின் ஹீரோயின் Casablanca, Notorious (மேலே), அப்புறம் இந்த படத்தின் புகழ் இங்ரிட் பெர்க்மேன் (Ingrid Bergman). 3 முறை ஆஸ்கர்களை வாங்கியவர். அமெரிக்காவின் ஆல் டைம் சிறந்த நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்தவர்.

ஹீரோ Roman Holiday, The Guns of Navarone, Mackenna's Gold, The Omen அப்புறம் இந்த படத்தின் புகழ் Gregory Peck. (என் வீட்டில் என் தாத்தாவின் இளமை கால b/w புகைப்படங்கள் பல இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைலில் எடுக்கப்பட்டிருக்கும். பிறகு தான் தெரிந்தது, இவரை பார்த்து அவர் ஸ்டைலில் என் தாத்தா தன் இளமை காலத்தில் படம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும், அவரின் மிகப்பரிய விசிறியும் என்பதை).

சில முறை ரீமேக் செய்யப்பட்ட இது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். மனோதத்துவ நிபுணர்களை பற்றின படம். கான்ஸ்டன்ஸ் (இங்ரிட் பெர்க்மேன்) ஒரு ஒரு சைக்கோ அனலிஸ்ட். அந்த மருத்துவமனைக்கு புதிதாக ஒரு மருத்துவர், எட்வர்ட்ஸ் (Gregory Peck) வருகிறார். காரணம், தற்போதைய டைரக்டர் முர்சிஸன் நெர்வஸ் பிரச்சினையால் ரிட்டையர் ஆகிறார்.

ஆனால், இரண்டொரு நாளில் தெரிந்துவிடுகிறது வந்திருப்பவர் உண்மையான எட்வர்ட்ஸ் இல்லை என்று. அப்போ எட்வர்ட்ஸ்? அவரை கொன்று தான் அந்த இடத்தில் 'ஜான் ப்ரவுன்' என்ற இந்த எட்வர்ட்ஸ் வந்திருக்கிறார். ஜானுக்கு ஏதோ மன வியாதி என்று தெரிந்துகொள்கிறார் கான்ஸ்டன்ஸ். போலீஸிடம் மாட்டி விடுவதா இல்லை டாக்டர் என்ற முறையில் அவருக்கு சிகிச்சை செய்வதா என்று போராட்டம் கான்ஸ்டஸுக்கு. கடைச்யில் காதல் வெல்ல அவருக்கு சிகிச்சை அளித்து உண்மையை அறிந்து கொள்ள முடிவெடுக்கிறார். இதற்கிடையில் ஜானை அவருடைய mentor ப்ரூலவிடம் அழைத்து செல்கிறார். அங்கு தான் உண்மை தெரியவருகிறது. அவர் அடிக்கடி காணும் கனவுக்கும் விடை கிடைக்கிறது. எட்வர்ட்ஸ் ஒரு விபத்தில் இறக்கிறார் என்று. ஆனால், போலீஸ் ஜானை கைது செய்கிறார்கள். காரணம் அவரின் முதுகில் ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததால்.

ஜான் தப்பித்தானா? கொலையாளி யார்? சிம்பிளான முடிச்சின் மூலமும், சைக்கோ அனலிஸிஸ் மூலமும் கண்டுபிடிக்க முடிகிறது. சிறிய விசாரணையின் மூலம் கான்ஸ்டன்ஸ் கொலைக்கான முடிச்சை அவிழ்ப்பது அருமை.

படம் முழுவதும் கருப்பு வெள்ளையில். கடைசியில் துப்பாக்கி வெடிக்கும் போது மட்டும் ஒரே ஒரு frame மட்டும் சிகப்பு நிறத்தில். முதலில் நானும் கவனிக்கவில்லை. விக்கியில் படிக்கும் போது தான் உணர்ந்தேன். இன்னொரு முறை ஓட்டிப் பார்த்தால் தான் தெரிந்தது. இது எதற்கு? சும்மா தான்...

படத்தில் கனவை விவரிக்கும் காட்சிகளை வடிவமைத்தவர் Salvador Dalí

படத்தில் எனக்கு பிடித்த வசனம், "The human being very often doesn't want to know the truth about himself...because he thinks it will make him sick. So he makes himself sicker, trying to forget".


பிற்சேர்க்கை - 06-Jan-2011

Frenzy - 1972

இந்த படத்தை ஏன் ஹிட்ச்காக்கின் டாப் 10ல் இடம் கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. வழக்கமாக ரகசியங்கள் மற்றும் ஒற்றர்களை பற்றி படமெடுக்கும் தலைவர், இந்த தளத்திற்கு திரும்ப வந்திருக்கிறார். இது ஒரு சீரியல் கில்லரை பற்றியது.

வழக்கமாக சில காட்சிகள் தவறாமல் ஹிட்ச்காக் படங்களில் இடம்பெறும். சம்பந்தப்படாத ஒரு அப்பாவி துரத்தபடுவது, இக்கட்டான சூழ்நிலையில் கூட்டத்தில் ஒரு சிறு கலவரம் ஏற்படுத்தி எதிரிகளிடமிருந்து தப்புவது, ஹிட்ச்காக்கின் கௌரவ தோற்றம் போன்றவை. இதிலும் அந்த அனைத்து விஷயங்களும் உண்டு.

Lifeboat படத்தில் தோன்றிய அந்த ஐடியாவை இந்த படத்தின் ட்ரைலரில் உபயோகப்பத்திக்கொண்டார் ஹிட்ச்காக். அதாவது, தேம்ஸ் நதியில் ஒதுங்கும் பிணம் போல அவருடைய cameo appearance.

திருமணமாகி பின் கஷ்டங்களை அனுபவித்து பின் விவாகரத்தான பெண்களை தேடி கற்பழித்து டையினால் கழுத்தை இறுக்கி கொலை செய்கிறான் ஒரு சீரியல் கில்லர். அவன் தான் ஹீரோ ரிச்சர்ட்டின் நண்பன் ராபர்ட். நண்பனின் முன்னாள் மனைவியை இதேபோல் கொலை செய்கிறான் ராபர்ட். அங்கு வரும் ஹீரோ ரிச்சர்ட் மாட்டுகிறான். வழக்கம் போல் போலீஸ் அவனை துரத்த, எப்படி தப்பிக்கிறான் என்பது கதை.

படத்தில் கொலையாளி யார் என்பதை விரைவிலேயே சொல்லிவிடுகிறார். இதுவும் ஒரு வகையில் நம் BP-யை ஏத்துகிறது. இந்த படத்தில் ஒரே ஒரு கொலையை மட்டும் காட்டிவிடுகிறார்கள். அது ரிச்சர்ட்டின் முன்னள் மனைவி ப்ரெண்டா. அதற்கு பின் இன்னொரு கொலையை காட்டாமலேயே மறுபடியும் நம் BP-யை ஏத்துகிறார். அவளை மாடிக்கு அழைத்து செல்வதும், பின் அவளை அவனுடன் விட்டுவிட்டு கேமரா மட்டும் பின்னோக்கி பயணிக்கிறது. நமக்கு புரிகிறது அவளும் அவ்வளவுதான் என்று.

பின் கதையின் போக்கு மிகவும் சுவாரஸ்யமானது. கண்டிப்பாக பாருங்கள்.

பிற்சேர்க்கை - 08-Feb-2011

Saboteur - 1942



விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஏற்படும் ஒரு தீ விபத்தில் தன் உயிர் நண்பனை இழக்கிறார் பேரி கேன். குற்றவாளி ப்ரை (Fry) என்னும் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறவர் என்கிறார் பேரி. ஆனால் அப்படி ஒரு ஊழியரே இல்லை. பழி வழக்கம் போல் இவர் மேல் விழுகிறது. உண்மையான குற்றவாளியை தேடி பயணப்படுகிறார், வழியில் சந்திக்கும் ஒரு பார்வையற்றவரின் உறவினரான ஹீரோயினுடன். (இவரை பற்றி ஒரு 'அட!' குறிப்பு கீழே)

எங்கெங்கோ சென்று பின் அந்த கொலையின் பின்னனியில் இருக்கும் மிகப்பெரிய திட்டங்களையும் அதன் பின்னனியில் இருக்கும் சமுதாயத்தின் மேன்மக்கள் போர்வையில் ஒளிந்திருக்கும் கூட்டத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது நல்ல திரிலருக்கான கதை.

இப்போ அந்த பார்வையற்றவர். இவருடைய காதாபாத்திர அமைப்பு ஒரு பிரபலமான திரைப்படத்தில் நம் இயக்குநர் சிகரம் "inspire" ஆகியிருக்கிறார். அது தான் நன் மேஜர் சுந்தரராஜனுக்கு 'மேஜர்' பட்டம் கொடுத்த கதாபாத்திரம். ஆம்! மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரம் தான்.ஆனால், நம்ம கே. பாலசந்தர் இந்த கேரக்டரை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். நிச்சயம் இதை காபி என்று சொல்ல முடியாது (அல்லது, KB மீதுள்ள அபிமானத்தால் அப்படி சொல்ல மனம் வரவில்லை). படத்தில் இது ஒரு சிறு கதாபாத்திரமே. 5 நிமிடங்கள் கூட படத்தில் வருவதில்லை. மேஜர் சந்திரகாந்த் படத்திலோ KB இந்த கதாபாத்திரத்தின் பில்டிங்கை ஸ்ட்ராங்காக்கியிருக்கிறார்.


Topaz - 1969

'தோழர்'கள் பார்க்க வேண்டிய படமிது. தோழர்களுக்கானது இல்லையென்றாலும், ஃபிடல் கேஸ்ட்ரோவும் சே-குவேராவும் படத்தில் (நிஜமாகவே) வருகிறார்கள்.


அந்த காலத்தில் ஓடாத படம் இது. காரணம், ஹிட்ச்காக்கின் ஃபேவரைட் ஹாலிவுட் நடிகர்களான Ingrid BergmanCary Grant போன்றோர் இல்லாத ஹாலிவுட் படம் என்பதால். இது அமெரிக்க - ரஷ்யா இடையிலான பனிப்போரை மையமாக வந்த படம்.




பனிப்போர் சமயத்தில் ரஷ்யாவில் இருந்து அதன் உளவுத்துறையின் முக்கியமான தலைவர் ஒருவர் அடைக்கலம் தேடி அமெரிக்கா வருகிறார். அவரை காப்பாற்றிய அமெரிக்க உளவுத்துறை அவரை வைத்து ரஷ்யாவின் முக்கியமான ராணுவ ரகசியங்களை, அமெரிக்காவின் எதிரி நாடான கியூபாவில் ரகசியமாக ராணுவ தளம் அமைக்கப்படுவதை தெரிந்து கொள்கிறார்கள். அதை பற்றி துப்பறிய ஒரு பிரஞ்சுக்காரரான Andre-வை அனுகுகிறார்கள். மேலும் அமெரிக்காவில் இருக்கும் கியூபாவின் தூதரகத்தில் நுழைந்து சில முக்கியமான ஆவனங்களை ஆள் வைத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார் அந்த ஆள். பின் க்யூபா செல்லும் அவர் தன் முன்னாள் காதலியான Juanita-வை சந்திக்கிறார். அவர் க்யூபாவில் ரஷ்யா நுழைந்ததை விரும்பாமல் அவர்களுக்கு எதிராக Andre-க்கு உதவுகிறார். பின் அந்த ரகசியங்கள் உண்மைதானா என்று கண்டறிகிறார் Andre. Juanita & கோ கொல்லப்படுகிறார்கள்.

அப்ப Topaz என்பது என்ன? அது பிரஞ்சு ராணுவத்தின் தலைமைப்பொருப்பில் இருக்கும் ரஷ்யாவின் ப்ரெஞ்சு உளவாளிகளின் கூட்டமைப்பு. அந்த கூட்டத்தில் ஒருவரை அமெரிக்க உளவு அமைப்பு கண்டுபிடிக்க அவரை வைத்து அனைவரையும் கண்டுபிடிப்பது கதை.

அட! கதையை விடுங்க பாஸ். அது கிடக்குது. பனிப்போர் காலத்தில் க்யூபா எப்படிருக்கும்? ஃபிடல் மற்றும் சே மாதிரியே எல்லோரும் உடையனிந்து தாடி வைத்து...சில காட்சிகளில் ஃபிடல் கேஸ்ட்ரோவும் சே-குவேராவும் சில காட்சிகளில் வருகிறர்கள். நடிக்கவில்லை. உண்மையாக நடந்த ராணுவ அணிவகுப்பில் Andre-வை வைத்து படமெடுத்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

அப்புறம் இந்த படம் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. Juanita என்னும் பாத்திரம், ஃபிடல் கேஸ்ட்ரோவின்  மகள் Alina Fernández-வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. Alina Fernándezஃ பின்னாளில் க்யூபாவில் இருந்து 'தப்பித்து' அமெரிக்காவுக்கு வந்து அடைக்கலம் ஆனவர். ஹீரோ André, அப்புறம் அந்த ரஷ்ய உளவுத்துறையின் முக்கியமான தலைவர், Hernandez ஆகியோர் உண்மையான கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

பிற்சேர்க்கை: 04-July-2013

Psycho - 1960

ஹி ஹி...வழக்கம் போல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டாக பார்த்த படம். காரணம், நேற்று தான் சப் டைட்டில் கிடைத்தது.



ஒரு பெண் தன் முதலாளியிடமிருந்து 40,000$ திருடிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறாள். ஒரு மோட்டலில் இரவு தங்கும் போது அங்கே மோட்டல் நடத்துபவரின் தாயால் கொல்லப்படுகிறாள். மகன் தடயத்தை அழிக்கிறான். அந்த 40,000 தேடி ஒரு டிடெக்டிவ் வர, அவரும் கொல்லப்பட்டுகிறார்.

பின் கொல்லப்பட்டவளின் காதலனும், அவளின் தங்கையும் அந்த மோட்டலுக்கு வருகிறார்கள், கண்டுபிடிக்க. அங்கே களேபரங்கள்.

படத்தை பாருங்கள், ஏன் இதை ஹிட்ச்காக்கோட மாஸ்டர் பீஸ்னு சொல்றாங்கனு தெரியும்...

ஷவரில் கொல்லப்பட்டும் சீன் உலகப்பிரசித்தி பெற்றது. அதனால், சொல்லத்தேவையில்லை. எனக்கு ரொம்ப பிடித்தது அந்த மகனின் அசால்டான நடிப்பு மற்றும் கடைசி சீனில் அவன் 'அம்மா' தான் கொலைகாரி இல்லை என்று சொல்ல ஆசைப்படும் இடம். அது தான் டைரக்டோரியல் டச்.

பாலுமகேந்திராவே சொன்னது: இந்த படத்தில் இம்பிரஸ் ஆகி எடுத்தது தான் 'மூடுபணி'.

'வாலி' படத்தில் ஃபைனல் டச்சும் இந்த பைனல் டச்சும் ஒத்துப்போகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

பிற்சேர்க்கை: 05-Dec-2015



Stage Fright (1950 film)

ரொம்ப கேள்விப்படாத படம். தன் காதலனுக்காக அவன் (தன் 'கள்ளக்'காதலுக்காக) செய்யாத கொலைக்காக பழி ஏற்று துரத்தப்படும், ஹிட்ச்காக்கின் டெம்ப்ளேட் படம். ஈவா தான் அந்த காதலி. அவள் காதலனின் காதலி Marlene Dietrich. இவர் Witness for the Prosecution-ல் நடித்தவர். செமத்தியான நடிகை போல.

கடைசி 10 நிமிடங்கள் ரத்தத்தை பம்ப் செய்யும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்கிறார் ஹிட்ச்காக், தன் வழக்கமான ட்விஸ்ட்டுடன். ஈவா-க்கு உதவுவது அவர் தோழரான தந்தை.



'சர்' ஹிட்ச்காக் ஏன் போற்றப்படுகிறார்?

ஹிட்ச்காக்கின் படங்களை வெறும் பொழுது போக்கிற்காகவோ அல்லது திரில்லருக்காகவோ மட்டும் அவரை எல்லோரும் பாராட்டுவது இல்லை. அவருடைய உழைப்பும், டெடிகேஷனும் அபாரமானவை. மேலும் டெக்னிகல் அம்சங்களை பார்த்தால் அந்த காலத்திலேயே இப்படியா என்று கேட்கத்தோன்றும்.

உதாரணங்கள் சில.

* இவருடைய படங்களின் முடிச்சுகள் காலத்தை மீறியவையாக இருக்கும். யாரும் தொடாத சப்ஜெக்ட் இருக்கும். Marnie படத்தில் அந்த காலகட்டத்தில் சொற்பமாக இருந்த குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையை தொட்டிருப்பார். Spellbound-ல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றின கதை, Vertigo-வில் உயரத்தை பார்த்தால் பயப்படும் மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள், உளவுத்துறையினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகள், இல்லாத ஆளை தேடி கண்டுபிடிப்பது போன்ற கதைகள் போன்றவை.

* படத்தின் காட்சியில் வைக்கப்படும் கேமரா கோனங்களில் கூட அசத்தியிருப்பார். The Lady Vanishes-ல் முதல் காட்சியில் ஒரு செட் போடப்பட்டு தூரத்தில் இருந்து காட்சி ஜூம் ஆகி, பின் அந்த ஹோட்டலின் அருகில் வரும்போது உள்ளே சில ஆட்கள் நடமாட்டம் தெரியும். செட்டில் இருந்து நிஜத்திற்கு எப்படி மாறியது? இதை போன்று பல படங்களில் கேமரா கோணம் புத்திசாலித்தனமாக வைக்கப்பட்டிருக்கும். சில கோணங்களை புதுமையாக இவரே உருவாக்கியிருப்பார்.

* சில வித்தியாசமான உத்திகளை உபயோகபடுத்தியிருப்பார் ஹிட்ச்காக். Rebecca-வில் படத்தின் டைட்டிலானா Rebecca என்னும் காதாபாத்திரத்தை கடைசி வரை படத்தில் காட்டியிருக்க மாட்டார். அதே படத்தில் ஹீரோயினுக்கு பெயரே இல்லை.

* Rope படம் மொத்தமும் பத்தே ஷாட்கள். ஒவ்வொரு ஷாட்டும் அதிகபட்சம் 10 நிமிடங்கள். காரணம், அந்த காலத்தில் பிலிம் ரோலின் மொத்த நீளமே 10 நிமிடம் தான் ஓடும்.

* Shadow of the doubt-ல் ஹீரோ ஒரு சீலியல் கில்லர். ஆனால் படம் முழுவது ஒரு கொலை காட்சி கூட இருக்காது. ஆனாலும் படம் பயங்கர திரில்லாக இருக்கும்.

* Rear Window-ல் படம் முழுவதும் ஒரு அறையில் மட்டுமே படம் பிடிக்கப்பட்டிருக்கும். ஒரு மேடை நாடகத்தில் கூட 2 அல்லது 3 லொக்கேஷன்கள் இருக்கும். ஆனால், இதில் ஒரே அறை மட்டுமே.

* Lifeboat படம் முழுக்க ஒரு படகில். அதிலும் கூட தன் கேமியோவை செய்திருப்பார்(!).

* Foreign Correspondent-ல் வரும் அந்த க்ளைமேக்ஸ்.

* Spellbound-ல் படம் முழுவதும் கருப்பு வெள்ளையில். கடைசியில் துப்பாக்கி வெடிக்கும் போது மட்டும் ஒரே ஒரு frame மட்டும் சிகப்பு நிறத்தில். அதுவும் frame மட்டுமே, சீன் இல்லை. இது கையால் வரையபட்டது.

* The Birds-ல் அந்த பறவைகளின் தாக்குதல்களுக்கான காரணம் கடைசி வரை ஆராயப்படவில்லை. அது தேவைப்படவும் இல்லை.

* நம்ம தமிழ் படங்களில் அதன் க்ளைமேக்ஸ் காட்சிக்காக பார்வயாளர்களை இயக்குநர்கள் தயார்படுத்துவார்கள். ஆனால் இவர் படங்களின் பார்த்துக் கொண்டிருக்கும் போதே க்ளைமேக்ஸ் வந்திடும். கடைசி 3-4 நிமிடங்களில் சஸ்பென்ஸின் எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு End Card போட்டு எகத்தாளம் பன்னுவார்.

* இவர் தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டத்தில் இவர் படமாக்கும் உத்திகள் ஆச்சரியம் அளிக்கவல்லவை. சில சமயம் தொழில் நுட்பம் இவரிடம் தோற்றுவிடும். உதா, பிலிம் ரோலின் மொத்த நீளமே 10 நிமிடம் தான் என்னும் காரணத்தால் Rope படத்தை பத்து ஷாட்களாக எடுக்க வேண்டியாதக ஆகிவிட்டது. இல்லைன்னா ஒரே ஷாட்டில் எடுத்திருந்தாலும் எடுத்திருப்பார். இந்த படத்தில் கேமரா அங்கும் இங்கும் நகர, அந்த படத்தில் இடம் பெரும் கட்டிடங்களின் சுவர்களை நகர்த்தி, பின் கேமரா கடந்ததும், மீண்டும் சுவரை பழைய இடத்தில் கொண்டு வந்து வைப்பார்களாம்.

* Shadow of the doubt-ல் அந்த கதாபாத்திரம் இரயிலில் இருந்து வெளியே விழ, எதிரில் மற்றொரு இரயில் அவரை ஏற்றுவது போல் எடுக்கப்பட்ட காட்சி பிரசித்தி பெற்றது.

* Saboteur-ல் சுதந்திர தேவியில் கையில் இருந்து கீழே விழுவது போல எடுக்கபட்டிருக்கும் காட்சி சில உத்திகளை கையாண்டு எடுக்கப்பட்டது (Dolly zoom கீழே).

* North by Northwest-ல் கதாநாயகனை கொல்ல ஒரு சிறிய விமானம் துரத்துவது. சுலபமாக தப்பிக்க முடியும் என்று நாம் நினைப்போம். ஆனால், ஆளே இல்லாத மிகப்பெரிய காலி மைதானத்தில் ஒரு விமானம் துரத்துகிறது. அந்த விமானியிடம் ஒரு துப்பாக்கி. எப்படி தப்பிப்பார்?

* இவருடைய Technical Skills மிகச்சிறந்த உதாரணம் The Birds திரைப்படம். படம் பார்த்தவர்கள் வாய் பிளப்பது இதை எப்படி சாத்தியப்படுத்தியிருப்பார் ஹிட்ச்காக் என்பது தான். எடுக்கப்பட்டது 1963-ல். ஆயிரக்கணக்கான காக்கைகள், சீகல்கள், குருவிகள் ஆகியவை படத்தில் இருக்கிறது. எப்படி சேர்த்திருப்பார்? இது ஒரு கணம் நம்மை ஏமாற்றும் magician-ன் உத்தி தான். படத்தில் ஆயிரக்கனக்கில் புறாக்கள் இருந்தாலும், அவறை காட்டும் போது சில புறாக்கள் மட்டுமே உண்மை, அசையும். மற்றவை பொம்மைகள். அந்த பொம்மைகளுக்கு நடுவே நிஜ புறாக்களை வைத்து படமாக்கியிருப்பார். காக்கைகள் தாக்கும் போது, சில அட்டை காக்கைகளை உபயோகப்படுத்தியிருப்பார். இது படம் பார்க்கும் நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

* Saboteur படத்தின் க்ளைமேக்ஸ் நடைபெறுவது அமெரிக்காவின் பிரபலமான சுதந்திர தேவியின் சிலையின் உள்ளே. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு டெடிகேஷனுடன் இதையெல்லாம் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் ஹிட்ச்காக் & டீம் என்பது ஆச்சரியம் தான்.

* Dolly zoom என்னும் உத்தியை பிரபலப்படுத்தியவரே இவர் தான். Dolly zoom என்பது ஒருவர் மேலே இருந்து கீழே விழுவது போன்ற காட்சிகளில் நமக்கு அது உண்மை போன்ற தோற்றத்தை கொடுப்பது. அதாவது ஒரு பொருள் நம்மை விட்டு விலகும் போது அதன் அளவு சிறிதாகும். நம்மை நோக்கி வரும் போது பெரிதாகும். அப்படி நம்மை விட்டு விலகும் போது, அதன் அளவு சிறிதாகும் போது கேமராவின் லென்ஸை தேவைகேற்றார் போல் ஜூம் செய்தாக், அந்த பொருள் நம்மை விட்டு விலகினாலும் அதன் அளவு அப்படியே இருக்கும். இந்த Dolly zoom-ஐ இப்படியும் கூறுவர், The "Hitchcock zoom" or the "Vertigo effect" or "Hitchcock shot" or "Vertigo shot".

ஹிட்ச்காக்கின் டெம்ப்ளேட்

இவர் வழக்கமாக சில டெம்ப்ளேட் வைத்திருப்பார். அவற்றில் சில.

* இவர் எல்லா படங்களிலும் சில ப்ரேம்கள் தோன்றிவிடுவார். நம்ம பேரரசு போல பஞ்ச் எல்லாம் பேசுவதை போல நிமிடங்களில் அல்ல. வினாடிகள். கும்பலோடு கும்பலாக, ஆனால், தனித்து தெரியும் படி சில frame-கள். Frenzy படத்தின் ட்ரைலரில் இவர் தேம்ஸ் நதிக்கரையில் மிதக்கும் பிணமாக, இதே 'படத்தில்' கும்பலோடு நின்றிருப்பவராக, Dial M for Murder-ல் பள்ளிகூட புகைப்படத்தில் ஓரமாக, North by Northwest-ல் பேருந்தை தவற விடுபவராக, Shadow of a Doubt-ல் அவர் சீட்டு ஆடிக்கொண்டிருப்பவராக அவர் கை மட்டும் தெரியும். Topaz-ல் வீல் சேரில் உட்கார்ந்திருப்பவராக, Torn Curtain-ல் (நுனுக்கமாக) குழந்தையை ஒரு மடியில் இருந்து மற்றொரு மடிக்கு மாற்றுவார். To Catch a Thief-ல் பேருந்தில் கேரி க்ரான்ட்டின் பக்கத்து சீட்டில் உட்கார அவர் "மறுபடியும் இவரா?" என்பது போல் பார்ப்பார்.
அவனா நீயி!?
* இந்த கேமியொக்களில் டாப் க்ளாஸ், Lifeboat படம் தான். படத்தில் 8-9 கதாபாத்திரங்கள். படம் முழுவதும் ஒரே படகில் மட்டுமே. இதின் எங்கிருந்து ஹிட்ச்காக் வருவார்? வருகிறாரே...ஒருத்தர் பழைய நாளிதழை புரட்ட, அங்கு ஒரு உடல் எடையை குறைக்கும் விளம்பரத்தில் எடை குறைப்பதற்கு முன், பின் என்று இரண்டு போட்டோக்களில் (மேலே பார்க்கவும்).

* இவர் படங்களில் பெரும்பாலும் குற்றம் செய்யாத அப்பாவிகள் தான் துரத்தப்படுவார்கள். கொலை பழி அவர்கள் மேல் விழும். அவர் 'எப்பொழுதும்' தப்பித்து தான் நிரபராதி என்று நிரூபிப்பார்.

* இவரின் ஹீரோக்கள் ஒரு இடத்தில் (முக்கியமாக பொதுமக்கள் கூடும் இடத்தில்) வசமாக மாட்டிக்கொள்ளும் போது அங்கிருந்து தப்பிப்பதற்கென்றே ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார். அதாவது அந்த இடத்தில் ஏதாவது ஒரு குழப்பம் உண்டாக்குவது. அந்த களேபரத்தில் அனைவரும் கலையும் போது கூட்டத்தோடு கூட்டமாக தப்பிப்பது என்பது நம்ம தமிழ் சினிமா ஆலமர பஞ்சாயத்து சீன் போன்றது. ஆனால், ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக தான் செய்வார் நம்ம ஹீரோ. ஏலம் நடக்கும் இடத்தில் பைத்தியமாக நடித்து ஏலத்தொகையை குறைத்து கேட்டு 'பத்திரமாக' போலீஸிடம் மாட்டுவது, துப்பாக்கியால் மேலே சுட்டு களேபரத்தை உண்டாக்குவது போன்றவை.

உண்மையிலேயே இவர் படங்களை ரசிக்க வேண்டுமென்றால் சப்-டைட்டிலோடு பாருங்கள். ஒவ்வொரு படத்தையும், அதன் ஒவ்வொரு வசனத்தையும் புரிந்து கொண்டு படம் பாருங்கள். ரசிப்பீர்கள்.

கீழ இவர பாருங்க. ஒரு அஞ்சு நிமிஷம் இவர குருகுருனு பாத்தா, விடாம கெக்கெ பிக்கனு சிரிக்க தோனுதுதான? ஆனா இவரு தான் Master of Suspense.

மேலே - Yousuf Karsh-ன் போர்ட்ரெய்ட்

17 comments:

  1. நல்ல தொகுப்பு தலைவரே.. மிச்ச திரைப்படங்கள் பற்றிய குறிப்புகளையும் எழுதுங்களேன்.

    ReplyDelete
  2. கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன் தலைவரே... ;)

    ReplyDelete
  3. சஸ்பென்ஸ் படங்கள் பிடிக்காமலிருந்து ஒரு சஸ்பென்ஸ்காரரின் தொகுப்பா!ஆச்சரியம்!!

    ReplyDelete
  4. நேரமிருந்தால் இதையும் படித்துப் பார்க்கவும்..
    http://saamaniyan.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  5. //சஸ்பென்ஸ் படங்கள் பிடிக்காமலிருந்து ஒரு சஸ்பென்ஸ்காரரின் தொகுப்பா!ஆச்சரியம்!!//

    எல்லா புகழும் ஆட்ரே ஹெப்பர்னுக்கே... ;)

    ReplyDelete
  6. அப்படியே 'Rope' and 'Dial M for Murder' பார்த்துடுங்க. :)

    ReplyDelete
  7. திரும்ப இங்கேயே வந்துவிட்டேனா:)மீள் பதிவா?

    ReplyDelete
  8. super jeeno,

    மிக சுவாரஸ்யமாக இருந்தது.

    thanks

    regards
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  9. seenu

    indha padangale usb le copy panni kudutha paapom le...usb drive naliku thaarom...

    ReplyDelete
  10. ராஜ நடராஜன்,

    இது மீள்பதிவு இல்லை. ஆனா, இன்னும் ஒரு 4 படங்கள் அப்டேட் செஞ்சேன்.

    இப்போ ப்ளாக்ர்ல, "Publish Post" பட்டன் தான் இருக்கு. க்ளிக் பன்னினா பப்ளிஷ் ஆகுது. முன்னெல்லாம் "Save" பட்டன் இருக்கும்.

    அருண்குமார்,

    நானும் பல நாள் சொல்லிட்டேன், USB Drive கொண்டுவான்னு. நீதான் கொண்டுவற்றது இல்ல...

    ReplyDelete
  11. (இதில் அந்த பறவைகளின் தாக்குதல்களுக்கான காரணம் ஆராயப்படவில்லை).
    there is a reason for birds attack i see in some tamil blog
    Nice blog keep it up

    ReplyDelete
  12. //there is a reason for birds attack i see in some tamil blog//

    I don think so. The reason is deliberatly not questioned. If possible, please share the link.

    //Nice blog keep it up//

    Thank you.

    ReplyDelete
  13. "psycho"வை உட்டுட்டியே தலைவா
    :senthil kumar

    ReplyDelete
  14. senthil kumar,

    நன்றி.

    இன்னும் அந்த படத்தை பார்க்கலை. ஹிட்ச்காக்கின் பெஸ்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  15. இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது..நீங்கதானா அது ? அட கடவுளே..
    ஹாலிவுட் திரைப்படங்களை பற்றிய தேடலில் இருந்தபோது சரியா ஒரு வருடம் இருக்குமுனு நினைக்கிறேன்.அப்ப ஹிட்ச்காக் படங்களை பற்றி நிறைய தெரிஞ்சிக்கிட்டதே உங்ககிட்ட இருந்துதான்..அப்ப இன்னும் வலைப்பூ ஆரம்பிக்கல..
    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்..புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    விமர்சனம் - சொல்ல தேவை இல்லை..நீங்களும் One Of The Inspiration..

    ReplyDelete
  16. @Senthil Kumar,

    //"psycho"வை உட்டுட்டியே தலைவா//

    போட்டாச்சு போட்டாச்சு... :)

    ReplyDelete