Friday, August 26, 2011

The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!

வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜி. 'யார்?' படத்தை (டிவியில்) பார்த்தே பாதியிலேயே ஓடி வந்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் 'காஞ்சனா' வேற பாக்கி இருக்கு.


வீட்டில் யாரும் இல்லாத பொழுது சற்றே தைரியம் வரவழைத்துக் கொண்டு பார்த்த படம். படத்தின் முதல் frame லோ வோல்டேஜில் எறியும் குண்டு பல்பில் இருந்து தொடங்குகிறது.

கதை:
"எனக்கு பாராட்டு கிடைச்சிருக்கு"
மால்கம் க்ரோவ் (ப்ரூஸ் வில்லீஸ்) ஒரு குழைந்தைகளுக்கான மனநல நிபுணர். அவர் மனைவி அன்னா க்ரோவ்-விடம் தனக்கு கிடைத்த பாராட்டு பத்திரத்தை கொண்டு வந்து காண்பித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் தங்கள் படுக்கையரையில் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணருகின்றனர்.
யாரோ இருக்காங்க...
அங்கே ஏற்கனவே குளியலறையில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவன் தன்னுடைய பழைய நோயாளி வின்சென்ட் என்று மால்கமிற்கு தெரிகிறது. வின்சென்ட் மால்கம்மிடம் சிறுவயது முதல் hallucinations (சந்திரமுகி மாதிரி) என்னும் நோய்க்காக சிகிச்சை மேற்கொள்கிறான். "இனிமேலும் நான் பயப்பட விரும்பவில்லை" என்றும் மால்கமால் தான் தான் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாகவும் கூறி மால்கமை வயிற்றில் சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். குண்டு மால்கம்மின் வாயிற்றை துளைத்து முதுகு பக்கம் வெளியேறிவிடுகிறது. மால்கம் அடி வயிற்றை பிடித்த படி படுக்கையில் சரிகிறார்.

சில மாதங்கள் கழித்து, மால்கம் தன்னுடைய அடுத்த க்ளையின்டான கோல் சீர் (Cole Sear) என்னும் சிறுவனுடன் நேரத்தை கழிக்கிறார். கோலிற்கும் வின்சென்ட்டை போன்றே பிரச்சினை. கோல் முதலில் மால்கம்மை ஏற்க மறுக்கிறான். காரணம் மால்கம்மால் தன்னை காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறான். வின்சென்ட்டை காப்பற்ற முடியாமல் போனதால் சற்றே நம்பிக்கை இழந்திருந்தாலும் அந்த சிறுவனை காப்பாற்ற முயல்கிறார் மால்கம்.

ஒருமுறை சமையலறையில் கோலின் அம்மா அவனுக்கு வேறு ஒரு 'டை'யை கொடுக்க அடுத்த அறைக்கு சென்று சில வினாடிகளில் திரும்ப வந்து பார்த்தால் ஒரு கணம் உறைந்து போகிறாள். அந்த சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு Kitchen Cabinet கதவுகளும் திறந்திருக்கிறது. அவனுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் கதவுகளும்.
பள்ளியில் பெண்சிலை உருட்டி விளையாடும் Cole
வகுப்பில் ஆசிரியர் அந்த பள்ளி 100 வருடங்களுக்கு முன் என்னவாக இருந்தது என்று கேட்க "மனிதர்களை கொல்லும் கொலைக்களன்" என்கிறான் கோல். ஆசிரியரோ இந்த இடம் நீதியை நிலைநாட்டும் கட்டிடம் என்கிறார். கோல், "அவர்கள் தானே மனிதர்களை கொல்கிறார்கள்" என்கிறான். மேலும், அந்த ஆசிரியர் (மட்டுமல்ல, யார்) முறைத்து பார்க்கும் விதமும் கோலிற்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் சண்டை வருகிறது. எல்லோரும் அவனை freak என்று சொல்வதும் பிடிக்கவில்லை. கோல் அந்த ஆசிரியரை "Stuttering Stephen" (திக்குவாய் ஸ்டீபன்) என்று திரும்ப திரும்ப சொல்ல, கோபத்தில் பல ஆண்டுகளாக மறந்து போயிருந்த அந்த திக்குவாய் பிரச்சினை மறுபடியும் அவருக்கு வந்துவிடுகிறது.
பலூனை எடுக்க மாடிக்கு செல்லும் Cole

ஒரு முறை நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல அங்கே மாடியில் ஒரு டஞ்சன் (dungeon) அறையை பார்க்கிறான் கோல். அதன் அருகில் செல்லும் போது உள்ளிருந்து ஒரு மனிதன் முதலில் மெதுவாக கேட்கும் பின் கத்தும் குரல் கேட்கிறது. அந்த குரல் உள்ளே மூச்சு முட்டுவதாகவும், தன்னை வெளியே வர உதவுமாறும், தான் தன் எஜமானனின் குதிரையை திருடவில்லை என்று சொல்வதாகவும் கேட்கிறது. அவன் பயந்து நிற்க அவனுடைய நண்பர்கள் இருவர் இவனை அதன் உள்ளே அடைத்து வைக்கின்றனர். பயந்து போய் கத்தி கத்தி மூர்ச்சையாகிறான் கோல். அவன் அம்மா வந்து அவனை வெளியே எடுக்கிறாள்.

இதை போன்ற சம்பவங்களால் கோல் ஏதோ அமானுஷ்ய விஷயத்திற்கு உள்ளாகிறான் என்பது நமக்கு தெரியவருகிறது. மால்கம் கோலிடம் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிவிட்டதாகவும் அவள் இப்பொழுதெல்லாம் தன்னிடம் பேசுவதே இல்லை என்கிறான். அதே சமயம் அடிக்கடி வீட்டில் அவன் திருமணம் நடந்த வீடியோ கேசட் அடிக்கடி பார்க்கிறாள் அன்னா. அதனால் கோலை இன்னொருத்தரிடம் விட்டுவிட்டு தான் விலகிவிடுவதாகவும் கூற, கோல் அழுகிறான். "உன்னால் மட்டும் தான் என்னை காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்கிறான். அப்புறம் சமாதானம் ஆகி அவனை காப்பாற்றும் வழியை கண்டுபிடிக்கும் மால்கம் அவனிடம் திரும்ப வர, கோல் மால்கம்மிடம் கோபமாக+நக்கலாக பேசும் இடம் அருமை.
 "I see dead people..."
"...And then one day this person Malcolm meets a wonderful boy who reminds him of that one.  Reminds him a lot of that one.  Malcolm  decides to try to help this new boy. He thinks maybe if he can help this boy, it would be like helping that one too..." - Malcolm to Cole.


(இந்த பகுதி தான் படத்தின் முக்கியமான கட்டம்). இப்போது மால்கம் மேல் இவனுக்கு கொஞ்சம் போல நம்பிக்கை வருகிறது. அதனால் அவனிடம் மட்டும் சத்தியம் வாங்கி கொண்டு உண்மையை சொல்கிறான். அவன் சொல்வது "I see dead people...Some of them scare me". "கனவிலா?" என்று கேட்க. இல்லை, நிஜத்தில் என்கிறான் கோல். "நிஜத்தில் என்றால் சவபெட்டி/சுடுகாட்டிலா?" என்கிறான். இல்லை, "எப்பொழுதும்/எங்கேயும்" என்கிறான், கண்களில் வழியும் கண்ணீருடன். கோலிற்கு வந்திருப்பது வின்சென்ட்டிற்கு வந்த அதே hallucinations பிரச்சினை தான் என்று நினைக்கிறார் மால்கம். அதாவது மாயை என்று.
"நான் தூங்கும் வரை இங்கேயே இருக்க முடியுமா?"
பின் தான் உணருகிறார் வின்சென்ட்டிற்கு வந்த hallucinations பிரச்சினை இல்லை. இவனுக்கு வந்திருப்பது தான் வின்சென்ட்டிற்கு வந்தது. அதாவது கோல் உண்மையிளேயே ஆவிகளை/பேய்களை பார்க்கிறான். மாயை இல்லை என்று உணருகிறார்.

அவன் பார்ப்பது சில பேய்களை. ஒன்று, கணவனால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு கைகளில் வெட்டுக்காயங்களுடன் கத்தும் ஒரு பெண் பேய். இரண்டு, தன்னை விட சற்றே வயது அதிகம் உள்ள ஒரு சிறுவன் "வா. என் தந்தை எங்கே துப்பாக்கியை வைத்திருக்கிறார் என்று காட்டுகிறேன், வா" என்று சொல்லி திரும்ப, அவன் பின்னந்தலை துப்பாக்கி குண்டால் பிளக்கப்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. அவன் மெல்ல கோலின் அறைக்கு சென்று மறைகிறான். மூன்றாவது, மேலே சொல்லப்பட்ட டஞ்சனில் அடைக்கப்பட்ட மனிதனின் குரல். நான்காவது, கைரா (Kyra) என்னும் அவன் வயதை ஒத்த பெண். அவனுடைய டென்ட்டிற்குள் வந்து தன் மேலேயே வாந்தி எடுத்துக்கொண்டு "I'm feeling much better now" என்று சொல்லும் பேய். (பேய்களை பார்க்கும் போதெல்லாம் வீட்டில் அவனே செய்துகொண்ட ஒரு டென்ட்டில் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வான். அதற்குள் கடவுள் சிலைகள் சில இருக்கும். உள்ளே உட்கார்ந்து கொண்டு சாமி கும்பிடுவான்). அடுத்து, அவன் படிக்கும் பள்ளியில் தூக்கில் தொங்கவிடப்படும் கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகன்.
கைரா (Kyra) - கோல்-ன் டென்ட்டினுள்

அவன் சொல்வதில் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார் மால்கம். அவன் பார்ப்பது இறந்து போனவர்களை. அந்த பேய்களில் சிலவற்றிற்க்கு தாங்கள் இறந்து போனது தெரிவதில்லை. தங்களுக்கு என்ன பார்க்கவேண்டும் என்று நினைக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறது. ஒவ்வொரு பேயும் தனித்தனியாக தான் அவனை பார்க்க வருகிறது. அவை எல்லாவற்றிற்கும் பொதுவான விஷயம் - எல்லாமே இவனிடம் ஏதோ கேட்கின்றன. ஒரு வேளை அவை அனைத்தும் கோலிடம் உதவி கேட்கின்றன என்று உணர்கிறார் மால்கம். அதனால் அவனை தைரியம் வரவழைத்துக் கொண்டு அவைகள் பேசுவதற்கு காது கொடுத்து கேட்க சொல்கிறார் மால்கம். இது ஒரு விதத்தில் இறந்து போனவர்களுக்கு உதவ அவனுக்கு கிடைத்திருக்கும் கிப்ஃட் என்கிறார் மால்கம்.

முதலில் பயந்தாலும் அவன் அந்த கைராவிடம் பேசுகிறான். அவள் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தவள். அவளிடம் கோல் பேச கைராவில் வீட்டிற்கு அவளுடைய funeral reception-க்கு மால்கம்முடன் செல்கிறான் கோல். அங்கே கைரா கோலிடம் ஒரு பெட்டியை கொடுக்கிறாள். அந்த பெட்டியில் இருப்பது விடியோ கேஸட். அதை கோல் கைராவின் தந்தையிடம் கொடுக்க அவர் போட்டு பார்க்கிறார். அந்த கேஸட்டில் கைராவின் அம்மா தினமும் அவளுக்கு உணவுடன் சேர்த்து தரையை துடைக்கும் திரவத்தை கொடுப்பதை பார்க்கிறார்கள் (Slow poisoning). அதனால் அடுத்து பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் கைராவின் தங்கை காப்பாற்றப்படுகிறாள். மால்கம், தன் மனைவிக்கும் தனக்கும் இடைவெளி அதிகமாகிவிட்டதாக சொல்ல, கோல் மால்கம்மிடம், (இப்போது) தன் அனுபவத்தால், இரவில் அவள் தூங்கும் போது அவன் மனைவியுடன் பேசுமாறு சொல்கிறான்.

இப்பொழுது பயம் சற்று விலகிய கோல் தன் அம்மாவிடம் இதை பற்றி சொல்ல முடிவெடுக்கிறான், தான் இறந்துபோனவர்களை பார்ப்பதாகவும் சொல்கிறான். அப்பொது தான் அங்கே ஒரு விபத்து நிகழ, பத்து கார்களுக்கு பின்னால் இருக்கும் காரில் இருக்கும் கோலும் அவன் அம்மாவும் இருக்கிறார்கள். யாருக்கும் அடிபட்டிருக்காது என்று அவன் அம்மா சொல்ல, "ஒரு பெண் இறந்துவிட்டாள்" என்று கோல் சொல்கிறான். எப்படி தெரியும் என்று அவள் கேட்க அந்த இறந்து போன பெண் தன் கார் கதவின் அருகில் இருப்பதாக சொல்கிறான். அவன் அம்மாவின் கண்களுக்கு தெரிவதில்லை. அவனுக்கு தெரிகிறது. அந்த இறந்து போன பெண் அங்கிருந்து நகர்கிறாள், தலையின் இரத்தம் வழிந்துகொண்டு.
சற்று முன் இறந்த பெண்
கோல் அவளை நம்பவைக்க அவன் அம்மாவின் சிறுவயதில் நடந்த சம்பவத்தை சொல்கிறான். தன் நடன அரங்கேற்றத்திற்கு சிறு சண்டை காரணமாக வராதது பற்றி அவன் அம்மாவிற்கு அவள் அம்மாவின் (பாட்டியின்) மேல் கோபம். ஆனால், அந்த நடன நிகழ்ச்சிக்கு பாட்டி வந்திருந்ததாகவும் அவள் பார்க்காதவாறு மறைந்து அமர்ந்திருந்ததாகவும் சொல்கிறாள். மேலும் அவள் பாட்டியை புதைக்கும் போது ஒரு கேள்வி கேட்டதாகவும் அந்த கேள்விக்கு பதில் "தினமும்" ("Everyday") என்று பாட்டி சொன்னதாக சொல்கிறான். அந்த கேள்வி என்ன என்று கோல் கேட்க அவன் அம்மா "நான் அவளை பெருமைப்படுத்தினேனா?" ("Do I make her proud?") என்கிறாள். சமையலறையில் அந்த கதவுகளை திறந்ததும் அந்த பாட்டி தான் என்று சொல்கிறான்.

படத்தில் இருக்கும் ஒரு சுவாரஸ்ய ட்விஸ்ட் அப்படியே தொடர கீழ்கண்ட பத்தியை தயவு செய்து படிக்க வேண்டாம். படம் பார்த்து தெரிந்து கொள்க (கண்டிப்பாக படிக்க வேண்டுமென்றால் உங்கள் கீ-போர்ட்டில் Ctrl+A அல்லது மௌஸில் select/block செய்து படிக்கவும்)...

வீட்டிற்கு வரும் மால்கம் வீட்டில் தன் திருமண வீடியோ கேசட் ஓடிக்கொண்டிருக்க மனைவி தூங்குவதை பார்க்கிறான். தூங்கும் போது அவள் கையில் இருக்கும் திருமண மோதிரம் கீழே விழுகிறது. அப்போது தான் கவணிக்கிறான் தன் கையிலும் மோதிரம் இல்லாதிருப்பதை. மெல்ல மெல்ல நினைத்து பார்க்கிறான். சட்டென்று தன் முதுகை தடவி பார்க்க அவன் முதுகில் இரத்த கறை. ஆம். மால்கம் வின்சென்ட்டால் சுடப்பட்டபோதே இறந்து விடுகிறான். தான் இப்பொழுது வெறும் ஆவி மட்டுமே என்று உணருகிறான்.

இப்பொழுது மேலே முதலில் இருந்து
சிகப்பு வண்ணத்தில் இருக்கும் வரிகளை மறுபடியும் ஒரு சேர படித்து பாருங்கள், புரியும். எங்கேயும் மால்கம் கோலை தவிற வேறு யாரிடமும் பேசுவதில்லை. யாரும் மால்கம்மை கவனிப்பதும் இல்லை.


புரிகிறதா? கோலிற்கு மால்கம் ஒரு ஆவி என்பது ஏற்கனவே தெரிகிறது. மற்ற பேய்களை போல மால்கம் கோரமாக இல்லாததால் கோலிற்கு அவ்வளவாக மால்கம் மேல் பயம் இல்லை (என்று நான் நினைக்கிறேன்). பின் பக்கம் மட்டுமே அவனுக்கு இரத்த கறை. அதை படம் நெடுக காட்டப்படுவதும் இல்லை. மேலும் கோலின் வீட்டில் அவன் அம்மாவிற்கு எதிரில் மால்கம் அமர்ந்திருப்பது, கைராவின் வீட்டிற்கு அவனுடன் மால்கம் செல்வது, அன்னா தனியாக தன் திருமண நாளை ரெஸ்டாரன்ட்டில் கொண்டாடுவது (அங்கே மால்கம் வந்து பேசினாலும் அவள் பதில் பேசமாட்டாள். நமக்கு ஏதோ மனக்கசப்பு என்றே தோன்றும். ஒரு கணம் அவள் அவனை பார்ப்பதாய் நமக்கு தோன்றும். ஆனால் பின்னனியில் ஒரு சிறுவன் கத்துவது போல இருக்க அதை பார்ப்பாள் அன்னா), "I see dead people" என்று சொல்லும்போதும் "எங்கேயும்/எப்போதும்" என்னும்போது அங்கே மால்கம் பேயாக இருப்பது என்று மீண்டும் ஒரு முறை கவனித்து பாருங்கள். இதை போன்று எங்கும் இருவர் மட்டும் தனியாகவே இருப்பர். 


"I see dead people" என்னும் போது காமரா மெள்ள கோல் முகத்தை நோக்கி நகரும். இந்த ஒரு காட்சி படத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் க்ளூ. ஆனால் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லையாம்...

அவன் பேயாக இருப்பதால் தான் அவனால் தன் வீட்டில் வைன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்ல முடியவில்லை. இப்பொழுது அவனுக்கு புரிந்துவிடுகிறது. தானும் இறந்துவிட்ட ஒரு பேய் என்று. ஆனால், எதற்காக மால்கம் கோலிடம் செல்ல வேண்டும்? காரணம், அவனுக்கு வின்சென்ட்டிற்கு உதவி செய்யமுடியாததற்கும் அவனை புரிந்து கொள்ள முடியாதற்கும் பதில் தேடி. அதாவது இவனுக்கும் மற்ற பேய்களை போல கோலிடம் உதவி தேவை. எல்லா பேய்களும் அவனிடம் உதவிக்கு தானே வருகிறது. இப்பொழுது அவனுக்கு விடை கிடைத்து விட்டது. கோல் பரிந்துரைத்தபடி தூக்கத்தில் அவன் மனைவியிடம் பேச அவள் பதில் அளிக்கிறான். பின் இனிமேல் அவளை தொந்தரவு செய்ய போவதில்லை, அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும் (அன்னாவிற்கு இப்போது புது தோழமை இருக்கிறது) என்று அவளை விட்டு விலகுகிறான்.

படத்தினை பற்றி...

படம் செம ஹிட். இயக்கம் மனோஜ் நைட் ஷயாமளன், புதுச்சேரிக்காரர். அவர் இயக்கிய படங்களில் வெற்றி பெற்ற மற்ற படங்கள். Signs, The Village இவற்றை தவிற மற்றவை ஓடவில்லை. ஆனால், டெக்னிகல் விஷயங்களுக்காக பரவலான பாராட்டுக்களை பெற்றிருக்கிறது அவர் படங்கள். இந்த படம் 6 ஆஸ்கர் அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படத்தில் டாக்டர் ஹில் என்னும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளிய படம்.
Cole Sear (Haley Joel Osment)
படத்தில் கோல் சீர்-ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன்...அபாரம். பெயர் Haley Joel Osment. இந்த படம் பார்த்து தான் ஸ்பீல்பெர்க் தன் படமான A.I. Artificial Intelligence படத்தில் நடிக்க வைத்தார். The Sixth Sense-க்கு முன் நான் பார்த்தது A.I. Artificial Intelligence படத்தை தான். அதிலேயே அந்த பையனை மிகவும் பிடித்து போனது. (இந்த படத்தையும் கண்டிப்பா மிஸ் பன்னாதீங்க. இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று அதிர வைத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்). அட்டகாசமான நடிப்பு. பட இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவான். அதுவும் சில இடங்களில் அவன் படும் பாதிப்பை நமக்கும் உணர செய்துவிடுவான். நமக்கே அந்த பையனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றும். படம் பாருங்கள். உங்களுக்கு இந்த பையனை மிகவும் பிடித்து போய்விடும். இந்த பையன் தான் Forrest Gump படத்தில் ஜூனியர் Forrest Gump-ஆக நடித்தவன்.

இந்த பையனை மனோஜ் தேர்ந்தெடுத்ததே சுவாரஸ்யமானது. Audition நடந்த போது இவன் மட்டுமே கழுத்தில் 'டை' கட்டிக்கொண்டு வந்தான். அவனுடைய பகுதியை படித்துவிட்டானா என்று கேட்க அவன் சொன்ன பதில் "நேற்று இரவு மூன்று முறை படித்தேன்". மீண்டும் "மூன்று முறை உன் பகுதியை படித்தாயா?" என்று கேட்க அவன் அதற்கு சொன்ன பதில் "இல்லை. நான் மூன்று முறை (என் பகுதியை அல்ல) திரைக்கதையை படித்தேன்" என்று. இந்த காரணங்களுக்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

படம் பேய்களை பற்றின படம் என்றாலும் அவ்வளவாக கோரமாக இல்லாமல் இருப்பது (என்னை போன்றவர்களுக்கு) ஆறுதல். வரும் 5-6 பேய்களும் படத்தில் சில நிமிடங்களே வந்து போகின்றன. ஆனால் படம் நெடுக அந்த பயத்தினை காட்சியமைப்பின் மூலமும் இசையின் மூலமும் உணர வைக்கிறார் இயக்குநர்.

ப்ரூஸ் வில்லீஸ் இடது கை பழக்கம் உள்ளவர். ஆனால், இடது கையால் எழுதுவது போல் படம் எடுத்தால் பார்ப்பவர்களுக்கு கையில் மோதிரம் இல்லாதது தெரிந்து விடும் என்பதால் வலது கையால் எழுத பழகிக்கொண்டார். மேலும் படத்தின் ஒரு காட்சியில் புத்தகத்தில் ஒரு பகுதியை பேனாவால் வட்டமிடும் இடத்தை வலதுகையால் கடிகாரச்சுற்றில் வரைவார். வழக்கமாக வலது கை பழக்கம் உள்ளவர்கள் anti-clockwise-ல் தான் வட்டமிடுவர்.

இந்த படத்தினை 2000 ஆண்டு சுமார் 8 கோடி பேர் வாடகை எடுத்துள்ளனர். இது ஒரு சாதனை.

படத்தில் சிகப்பு நிறம் வெகு வெகு சொற்பமாக அளவிலேயே இடம் பெற்றிருக்கிறது. சர்ச் கதவின் நிறம், பலூனின் நிறம், கார்பெட்டின் நிறம், ஒளிந்து கொள்ளும் டென்ட்டின் நிறம், வைன் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கதவின் தாழ்பாளின் நிறம் என்று பல இடங்களில் சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவையாவும் மெய்யுலகமும் 'பேய் உலகமும்' ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளும் இடங்கள். எப்பொழுதெல்லாம் பேய்கள்/ஆவிகள் கோலை பார்க்கின்றனவோ அங்கெல்லாம் சிகப்பு நிறம் இருக்கும் (சிகப்பு கலர் ஸ்வெட்டர்/சிகப்பு நிற டென்ட்).
கதவின் தாழ்ப்பாள்...
"You sleep now, Anna.  Everything will be different in the morning."
ஒரு நல்ல 'அழகான' திரில்லர்/ஹாரர் படம் பார்ப்பவர்கள் மிஸ் பன்னக்கூடாத படம் இது. டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷல் 'Like'.