Friday, September 29, 2006

கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)

இரண்டு வாரங்களுக்கு முன் நண்பனின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றிருந்தேன். முதல் நாள் வரவேற்பு முடிந்து அடுத்த நாள், வழக்கம் போல், முகூர்த்தம் முடிந்து கல்யாண மண்டபம் சென்றோம் (முதல் நாள் இரவு தண்ணியெல்லாம் இல்லை). கையில் காமெரா இருந்தது. சில பல படங்களை எடுத்துவிட்டு பின் மணமக்களுடன் புகைப்படம் எடுக்கலாமென்று நின்றிருந்தோம். எங்களுக்கு முன் இருந்தவர்கள், அனேகமாக, மணப்பெண்ணின் தோழிகளாக இருக்க வேண்டும், நான்கு பேர். சரி! அடுத்து நாம் தான் என்று நினைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பவரிடம் சென்று அங்கே ஃபோகஸ் லைட் பிடிப்பவரிடம், "போட்டோ எடுத்து தரீங்களா?" என்று மொட்டையாகக் கேட்டேன். காரணம், எங்களில் யாராவது ஒருவர் எடுத்தால் அவர் அந்தப் புகைப்படத்தில் இருக்கமாட்டார் ஆல்லவா? அவர் முதலில் எடுப்பதில்லை என்று சொன்னார். என்னடா இது! ஒரு போட்டோ எடுக்க இவ்வளவு பிகு பன்னுறாரே என்று நினைத்தேன். அவருடன் இருந்த ஃபோட்டோ எடுப்பவர், "பரவாயில்லை எடுத்துக் குடு" என்று எனக்காக ரெக்கமன்ட் செய்தார். சரி என்று அவரும் என் காமெராவை வாங்கிக் கொண்டார்.

வாங்கியதும் அப்பொழுது அங்கே மணமக்களுடன் நின்றிருந்த அந்த தோழிகளை உடனே என் காமெராவினால் ஃபோட்டோ எடுத்து விட்டார். அப்பொழுது தான் புரிந்தது, அடடா! அவரிடம் நான் ஃபோட்டோ எடுக்கச் சொன்னது அந்தப் பெண்களை என்று நினைத்து விட்டார் என்று. ஒரு கணம் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. அடுத்து நாங்களும் நின்று பின் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

பின் கணினியில் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். "இருக்கட்டும் பாவம்! இது கூட நல்லா தான் இருக்கு" என்று வைத்துக் கொண்டேன்.

பி.கு: தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினையின் காரணமாக "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் இந்த இடுகை தெரிவதில்லை. சிரமம் பார்க்காமல் வந்து தங்கள் பின்னூட்டங்களை பார்த்துக் கொள்ளுங்களேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Tuesday, September 19, 2006

அணுப்பிளவு (Nuclear Fission)

இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது. 'மிகப் பெரியது' என்றால்? சொல்லத் தெரியவில்லை. ஆனால் 'மிகப் பெரியது'. இந்த பிரபஞ்சம் எதனால் உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? இதன் ஆதி என்ன? அந்தம் என்ன? (இத்தன கேள்வி கேட்டா எந்த கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுறது?)
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளை உடைத்துக் கொண்டேபோனாலும் கடைசியில் மிஞ்சிருப்பது அணுக்கள். நம்ம கதை இங்கே அணுக்கள் பற்றி இல்லை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவையே. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. இந்த உலகம் எப்பொழுது உருவானது? அப்படி ஒரு காலத்தில் உருவானது என்றால், உருவாவதற்கு முன் என்ன இருந்தது? வெற்றிடம்? அப்படியானால் அந்த வெற்றிடம் உருவாவதற்கு முன் என்ன இருந்தது?!!!
அணுக்கள் தாம் இந்த உலகின் மிகச் சிறிய பொருள். அப்போ அணுக்கள் உள்ளே இருப்பவை? கண்ணால் பார்க்க இயலாது. ஒரு குண்டூசி தலையில் 100 பில்லியன் பில்லியன் அணுக்களை உட்கார்த்தி வைக்க முடியும். ஒவ்வொரு அணுவும் மூன்று அடிப்படை பொருட்களால் உருவாக்கப்பட்டன.
1) இலத்திரன்கள் (எலெக்ட்ரான்கள்) - இவை -ve சார்ஜ் உள்ளவை.
2) புரோத்தன்கள் (ப்ரோட்டான்ஸ்) - இவை +ve சார்ஜ் உள்ளவை. இவை எலெக்ட்ரான்களை விட 1836 மடங்கு எடை கொண்டது.
3) நியூட்ரான்ஸ் - இவை எந்த சார்ஜும் இல்லாத, நடுநிலை மின்னேற்றம்.இவை எலெக்ட்ரான்களை விட 1839 மடங்கு எடை கொண்டது.
ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து நியூக்லியான்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது உட்கரு. ஒவ்வொரு அணுவின் உட்கருவை ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து உருவாக்குகின்றன. அதாவது, உட்கரு என்பது ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள். இவ்விரண்டையும் சுற்றி, ஒரு சிமென்ட் கலவை அல்லது கோ(யி)ந்து போல, ஒரு கலவை (binding force) இருப்பதால் அவை உட்கருவை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. ஒரு அணுவை சுற்றிக் இருக்கும் எலெக்ட்ரான்களும் (-ve), உட்கருவில் இருக்கும் ப்ரோட்டான்களும் (+ve) ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்கிறது.
ஒரு அணு
சில்வர்-ன் அணு எண்
உட்கருவின் ஒரு பகுதியாக இருக்கும் நியூட்ரான்ஸ் சும்மா 'தேமே' என்று தான் இருக்கும். ஆனால், அது தான் இங்கே மேட்டரே. ஆக, இது ஒரு அணுவின் கட்டமைப்பு. இதைப் போல 92+ விதமான அணுக்கள் இருப்பதாக கண்டுபிடித்து பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அவை அடிப்படைத் தனிமங்கள். அவற்றை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு எண் வைத்து குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் உட்கருவில் உள்ள ப்ரோட்டான்களின் (+ve) எண்ணிக்கை தான் அது. இதை தான் 'அணு எண்' - Atomic Number - என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் ஒரு உட்கருவில் உள்ள இலத்திரன்களின் எண்ணிக்கை இந்த அணு எண்ணுடன் ஒத்துப் போகும். உதா, ஹைட்ரஜன் - 1, லித்தியம் - 2, ஆக்ஸிஜன் - 8, தங்கம் - 79, யுரேணியம் - 92. இவற்றை இங்கு காணலாம். மற்றபடி இவற்றை பற்றி விலாவரியாக பேச இங்கு தேவை இல்லை (அதாவது, எனக்கும் அவ்வளவு தான் தெரியும்னு அர்த்தம், புரிஞ்சுக்கோங்க).
உதா,
லித்தியம் - மாதிரி
அடுத்து, ஒவ்வொரு அணு குடும்பத்திலும் இன்னபிற உருப்பினர்களும் உண்டு. அவற்றை isotopes என்று அழைப்பர். இந்த குடும்ப அங்கத்தினர்கள் யாவரும் ஒரே எண்ணிக்கை புரோத்தன்களை வைத்திருப்பர். ஆனால், அவர்களுக்குள் உள்ள வித்தியாசம் அதன் நியூட்ரான்களின் எண்ணிக்கையே.
உதா, யுரேணியம்-ன் புரோத்தன்களின் எண்ணிக்கை என்னவோ 92 தான். ஆனால், அவற்றின் நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபடும். 142, 143, 146 என. புரோத்தன்கள் + நியூட்ரான்கள் = அணு எடை (Atomic Mass). அதனால், நம்மிடம் உள்ள யுரேணியத்தின் வகைகள் U234, U235, U238. இங்கு 234 என்பது 92 + 142.
இவற்றில் பல தனிமங்கள் தங்கள் நிலையிலேயே நிலையாக இருக்கும். ஆனால் 'சில' தனிமங்கள் எப்பொழுதும் ஏதாவது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அவைகள் கதிரியக்கம் (radioactive) என்பர். உதாரணமாக, ரேடியம் (Ra88) தன்னில் இருந்து, தன் நியூட்ரான்கள் மற்றும் புரோத்தன்கள் உடன், சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இரவில் கூட ஒளிருமே, கடைகளில் ஸ்டிக்கர்க்ளாக விற்ப்பார்கள். இது எந்த அளவு active-ஆக இருக்கும் என்றால், தன் சொந்த உட்கருவின் கட்டமைப்பையே மாற்றும் வரை active ஆக இருக்கும் ("சொந்த செலவுல சூன்யம் வைத்துக் கொள்வது"?). இப்படி தன் கட்டமைப்பே மாறும் பொழுது அது தன் குடும்பத்தையே மாற்றுகிறது. உதா, ரேடியம் (Ra88) தன்னுள் இருந்த சக்தியை எல்லாம் வெளியேற்றி வெளியேற்றி ரேடான் (Rn86) ஆக மாறி பின் காரீயம், Lead,(Pb82) ஆக மாறுகிறது. அது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும் வரை இப்படி நிலை மாறிக் கொண்டிருக்கும். இதற்குப் பெயர் இயற்கை உருமாற்றம் (Natural Transmutation), இது இயற்கையாக நடக்கும் பட்சத்தில். இப்படி ஒரு அணு தன் நிலையை தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் பொழுது, ஏன் மனிதன் தன்னால் ஒரு அணுவின் நிலையை மாற்ற முடியாது என்று சிந்தித்ததன் விளைவு தான் செயற்கையாக உருமாற்றம் செய்வது.
இதன் படி, ஒரு கதிரியக்க உட்கருவை, (உதா, யுரேனியும், ரேடியம்), மிண்காந்த சக்தியைக் கொண்டு வெளிப்படுத்தப்படும் ஆல்ஃபா கதிர்களில் உள்ள உட்கருவில் 2 புரோத்தன்கள் மற்றும் 2 நியூட்ரான்கள் இருக்கும். 2 புரோத்தன்கள் + 2 நியூட்ரான்கள் = ஹீலியம் (He2). இந்த முறைக்கு Alpha decay என்று பெயர். இதுவும் ஒரு தனிமம் தான். இது வேகமாக நகரக் கூடியது, 1 வினாடியில் 2 கோடி மீட்டர்கள். இவை காற்றில் சில தூரங்கள் (இன்ச்-ல்) மட்டுமே பயணப்படும். அவற்றை சாதாரண காகிதங்களாலேயே தடுக்க முடியும். இந்த முறையில் 2 அணுக்கள் இழந்து அது வேறு ஒரு பொருளாக மாற்றம் பெருகிறது. உதா, யுரேணியம் (U92) 2 அணுக்களை இழந்து தோரியமாக (Th92) மாறுகிறது. சுருக்கமாக சொன்னால், நீங்கள் கடையில் வாங்கும் ரேடியமானது வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டே இருக்கும். அந்த வெளிச்சம் தான் ஹீலியம் (He2). ஹீலியம் காலியாகிக்கொண்டே இருப்பதால் காலப்போக்கில், அந்த ரேடியம் (Ra88) ரேடான்-ஆக (Rn86) மாறுகிறது. ஆல்ஃபா கதிர்கள் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Nuclear Radiation.
இப்படி ஆல்ஃபா கதிர்களை ஒரு, உதா, நைட்ரஜன் மீது பாய்ச்சும் பொழுது, ஆல்ஃபா கதிர்களில் உள்ள ஒரு புரோத்தன், நைட்ரஜன் உட்கருவால் ஈர்க்கப்பட்டு அது ஆக்சிஜனாக மாறியது. இதற்குப் பெயர் செயற்கை உருமாற்றம் (Artificial Transmutation). மனிதன் ஒரு அணுவையே மாற்றுகிறான். இந்த ஆராய்ச்சிகள் அதன் பின் வந்த விஞ்ஞானிகளால் வலுப்பெற்றது.
ஆல்ஃபா கதிர்கள்

ஆல்ஃபா ஊடுருவல்
பின் 1939-ல் சில விஞ்ஞானிகளின் யுரேணியம் உருமாற்ற சோதனையின் பொழுது ஒரு நியூட்ரானை யுரேணியத்தின் உட்கருவின் மீது பாய்ச்சினார்கள். கவனிக்க, யுரேணியம் அதிக எடை கொண்டது. அப்பொழுது கிடைத்த விளைவு? அணுப்பிளவு (Nuclear Fission). ஒரு சிறு மாற்றத்திற்கு பதில், அணுக்களே இரண்டாக உடைந்தது. இது உலகை மற்றத்தக்க (அல்லது உலகின் வரைபடத்தை மாற்றத்தக்க) கண்டுபிடிப்பு. என்ன நடந்தது? அங்கே நடந்தது விஞ்ஞானத்தின் இரட்டிப்பு அதிசயம். விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்காத அதிசயம்.
ஒன்று யுரேணியத்தின் உட்கருவை (கவனிக்க ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள் கொண்டது) சேர்க்க வைத்திருக்கும் கோந்து (binding force) என்னும் கலவை பற்றியது. யுரேணியம் யுரேணியமாக இருந்த பொழுது இருந்த கலவையின் எடை, அவை இரண்டாக பிரிந்த அணுக்களில் இருந்த கலவையின் மொத்த எடையை விட அதிகமாக இருந்தது (அல்லது அதுவே தேவையானதாக இருந்தது). பிரிந்த பின் அந்த கலவையில் ஒரு பகுதி மட்டும் தனியே வந்து...வெடித்தது. ஏன் bold-ல் வெடித்தது? அது பெரும் சக்தியாக வெடித்தது. வெடித்து ஐண்ஸ்டீனின் E = MC2 என்னும் ஃபார்முலா படி எடையும் சக்தியும் ஒன்று என்று நிரூபித்தது. கீழே உள்ள படத்தினைப் பார்க்கவும்.
பிளக்கப்பட்ட அணு

நெட்டில் சுட்டது:
அணுப்பிளவைப் (Nuclear Fission) பற்றி பலருக்கும் தெரியும். ஹிரோஷிமா, நகசாகி நகரங்களின் பேரழிவிற்கும் அணுமின் நிலையங்களில் ஆக்கபூர்வ சக்தி உற்பத்திக்கும் அணுப்பிளவுதான் அடிப்படை. மாபெரும் அணுவின் பொருண்மைக்கும் (m0) அதைப் பிளக்கும்பொழுது உருவாகும் சிறு அணுக்களின் கூடுதல் பொருண்மைக்கும் (m1 + m2) இடையே உள்ள சக்தியின் வேறுபாட்டுக்கு நேர்விகிததில் சக்தி தோன்றுகிறது. இதையே ஐன்ஸ்டைனின் E = mc2 என்ற சமன்பாடு கணக்கிடுகிறது. அணுப்பிளவில் சக்தியுடன் கூட பக்கவிளைவாகக் கதிரியக்கம், வெப்பக்கதிர்வீச்சு போன்றவையும் நிகழ்கின்றன. இவற்றினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவு அதிகம்.

இரண்டாவது? யுரேணியம் உட்கரு பிரியும் பொழுது சக்தியானது வெப்பமாகவும், வெடியாகவும் வெளிப்பட்டது. அப்பொழுது சக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்படுகின்றன. அவை எக்ஸ்-ரேக்களை ஒத்திருந்தன. அப்பொழுது அதி வேகத்தில் சில நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன. அங்கே இன்னும் சில பல U235 இருப்பதால், அந்த நியூட்ரான்கள் மற்ற U235 அணுக்களை முன்பு சொன்ன அதே ஒன்றாவது அதிசயப்படி யுரேணியத்தைப் பிரித்து பிரித்து பிரித்து பிரித்து பிரித்து அவற்றை வெடிக்க வைக்கிறது.
விளைவு அல்ல!!! ஒரு தொடர் விளைவு (Chain Reaction), நம்ம பாலபாரதி அடுத்தடுத்து 'தம்' போடுவது போல, இரண்டே இரண்டு வினாடிகளில் மில்லியன் பில்லியன் பில்லியன் அணுக்கள் வெடிக்கின்றன. அதன் சக்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு பெரிய மைதானம் நிறைய டைனமைட்டை வெடிக்க வைத்தால் கிடைக்கக் கூடிய சக்தி, இந்த ஒரு சிறிய பந்து அளவிலான யுரேணியத்தை பிளப்பதால் உண்டாகும். எந்த ஒரு அதிசய கண்டுபிடிப்பும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுவதை விட, தற்காப்புக்கு பயன்படுத்தப் போய், பின் சமயம் கிடைக்கும் பொழுது அந்த நாட்டை அழிக்க பயன்படுத்திவிட்டு, அதன் பின் பிராயசித்தத்துக்காக அழிக்கப்பட்ட தேசத்தின் ராணுவ தேவைகளை கவனித்துக் கொள்வது. பாதிக்கப்பட்ட நாடும் சமாதானம் பேசிக் கொண்டு உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை தயார் செய்வது (கேட்டால் அது business).
சரி! அணு ஆயுதம் செய்ய ஒரு பந்து அளவிலான யுரேணியத்திற்கு என்ன செய்வது? மண்ணில் அதிகமாக கிடைக்கக் கூடிய யுரேணியத்தின் isotopes-களில் ஒன்றான U238-ஐ மலையளவு பிளவித்து செய்து U235-ஆக மாற்றி முதல் அணுகுண்டை செய்தார்கள். இதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவைப்பட்டது (அடுத்தவனை அழிக்கத்தான் ஓவர் டைமில் ஒர்க் பன்னுவோமே!!!). இங்கே கவனிக்க வேண்டியது, U235 மட்டுமே சங்கிலித் தொடரை அனுமதிக்கும், U238 அல்ல. ஆனால், புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும்.
ஆக, அணுகுண்டு எப்படி வெடிக்கிறது என்று (மேலோட்டமாக) பார்த்தோம்.
(சுற்றிலும் சீல் செய்யப்பட்ட) ரியாக்ட்டர்களின் உதவியுடன், செயற்கையான(க) புளூட்டோனியம் தயாரிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. ரியாக்ட்டர்களில் இயற்கையான யுரேணியங்கள் (U235 மற்றும் U238) கம்பி வடிவில் வைக்கப்படுகின்றது. அந்த ரியாக்ட்டர்களில் உள்ள கிராஃப்பைட், U235 பிளக்கப்படும் பொழுது அதி வேகத்தில் வெளியாகும் சில நியூட்ரான்களின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. அவற்றில் சில (கட்டுப்படுத்தப்படாத) நியூட்ரான்கள் மற்ற U235-க்களை பிளக்கும். அதனால், இது அந்த சங்கிலித் தொடரை கட்டுக்குள் வைத்திருந்து தொடர முடிகிறது. கட்டுப்படுத்தப்பட்ட நியூட்ரான்கள் U238-ஐ பிளக்க ஆரம்பிக்கிறது. U238 சங்கிலித் தொடரை அனுமதிப்பதில்லை. ஆனால் U235-ல் இருந்து வரும் ஒரு நியூட்ராணை எடுத்துக் கொண்டு U238-ஆனது முதலின் நெப்ட்யூனியம்-ஆக (Np93) மாறி, பின் அது புளூட்டோனியமாக (Pu94) மாறுகிறது. புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும். அதனால், புளூட்டோனியம் உபயோகித்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. இங்கே, ரியாக்ட்டரே ஒரு அணுவிசை மையமாக இருக்க முடிகிறது. புளூட்டோனியம் கிடைப்பதுடன், அதன் விளைவாக மிக பயங்கரமான அளவில் வெப்பமும் வெளிப்படுவது நியூட்டனின் மூன்றாவது விதி. அந்த வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அதை உபயோகிக்க முடிவதால் பல வழிகளில் உபயோகமாகிறது. அதன் ஒரு முக்கியமான உபயோகம் மின்சாரம்.
அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்
கால இயந்திரம்
E = MC2
கருந்துளைகள்
1-D, 2-D, 3-D, 4-D...
விண்கற்கள்
The Expanding Universe
அறிவியல் - வரமா / சாபமா?

Monday, September 11, 2006

வீடு

இன்று அதிகலை (செப் 07, 2006, சுமார் 2:30 மணியளவில்) House drop-ல் வீட்டிற்கு வரும் வழியில், என் காருக்கு முன் ஒரு 'சின்ன யானை' (அதாங்க, ஆட்டோவிற்கும் டெம்போவிற்குமான hybrid), சில பல சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பின்னால் ஒரு மிதி வண்டி கட்டப்பட்டிருந்தது. அந்த வண்டிக்குள் வீட்டு உபயோக பொருட்கள் அடுக்கி, துருத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சின்ன யானையின் பதிவு எண் பாண்டியில். யாரோ பாண்டிசேரியில் வீட்டை காலி செய்து, 'சிங்கார' சென்னைக்கு குடி வந்துகொண்டிருந்தார்கள். வீட்டை காலி செய்து வருவது என்பது சில வேளைகளில் மகிழ்ச்சியையும், சில வேளைகளில் துக்கத்தையும் கொண்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவர்கள் மகிழ்ச்சியான மனநிலையிலேயே செல்லட்டும்.

பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினைக் கொண்டுள்ள நம் நாட்டில், சொந்த வீடு என்பது பலரின் கனவாகும். எப்படியாவது சம்பாதித்து பணம் சேர்த்து செந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று உழைத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பர் பலர். வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. மற்ற நாடுகளைப் போல அல்லாமல், வீடு என்பதும் நம் வீட்டு அங்கத்தினர்களில் ஒன்று. காரணம், நாம் sentiment வாசிகள். நம் மகிழ்ச்சியை, துக்கங்களை எல்லாம் நாம் அந்த வீட்டின் சுவற்றினூடே பகிர்ந்து கொண்டிருப்போம். நம்மைப் பொருத்த வரை நம் மகிழ்ச்சியையும் துக்கங்களையும் உயிருடன் பதிவு செய்யும் ஒரு உயிருள்ள சீவனே வீடு. வீடு என்பது செங்கற்களால் சுற்றி எழுப்பப்பட்ட சுவர் மட்டுமே அல்ல. அது கட்டுபவரின் உழைப்பும், வியர்வையும், ரத்தமும் சம்பந்தப்பட்டது.

வாழ்ந்த வீட்டை பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிந்தவர்களும், அல்லது வேறு வழியில்லாமல் பெரும் துக்கத்துடன் வீட்டை விட்டு உயிரற்ற நடை பிணமாக வந்தவர்களும் கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள். துரதிர்ஷ்டமாக என் வீட்டில் இரண்டையும் பார்த்திருக்கிறேன்.

கோடை விடுமுறை முடிந்து சேலத்தில் இருக்கும் பாட்டி வீட்டை விட்டு, வாழும் திருப்பத்தூருக்கு திரும்பும் நாள். அப்பொழுது பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு. அதிகாலையில் நான்கு மணி சுமாருக்கு, என் பாட்டி வீட்டில் என் அம்மாவும், அக்காவும் திடீரென்று காட்டு கத்தல் கத்தினார்கள். பயந்து கொண்டு அலறி அடைத்துக் கொண்டு எழுந்திருந்தேன். என் பாட்டி மேலே மாடியில் தனக்குத் தானே தீ வைத்து எரிந்துக் கொண்டிருந்தாள். கீழே இருந்து தீ வைத்துக் கொண்டால் எங்கே நாங்களும் பாதிக்கப்படுவோம் என்று மாடிக்கு சென்றிருக்க வேண்டும். என் தாத்தாவின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு(!) கழுத்து சங்கிலியையும், காது கம்மலையும் கழற்றி சமையலறையில் வைத்திருந்தாள். இவர் என் அம்மாவை வளர்த்தவர். சில வருடங்களுக்கு முன் தான், என் அம்மாவைப் பெற்ற பாட்டியும் இதே போல தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டாள். என் தாத்தா தண்ணீர் கொண்டு சென்று தீயை அனைத்தார். எனக்கோ கை கால் எல்லாம் வெடவெடத்துப் போய்விட்டது. நானும் என் அம்மாவும் எங்கள் பெரியம்மா வீட்டிற்கு போனோம். பின் என் பாட்டி ஓரிரு நிமிடத்தில் இறந்து போனாள், தன் கணவரிடமும், என் மாமி ஒருவரிடமும் தன் வாக்குமூலத்தை கூறியவாறு. என் பாட்டியை வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லும் வரை நான் அந்த வீட்டிற்கே செல்லவில்லை. இத்தனைக்கும் நான் தான் என் பாட்டிக்கு கொள்ளி வைக்க வேண்டும். பின் காரியம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கினேன். பின் நான் ஊருக்கு வந்துவிட்டேன்.

பின் நடந்தது, என் தாத்தாவும் அந்த வீட்டையும் விற்று தன் மகள் வீட்டிற்கே (திருப்பத்தூருக்கு) வர முடிவெடுத்தார். கடன் பிரச்சினையால் முன்பே ஓரிரு முறை வீட்டை விலை பேசியிருந்தார் என் தாத்தா. ஆனால், வீட்டை விட்டு வர முடியாது என்று என் பாட்டியும் ஓரிரு முறை தற்கொலைக்கு முயன்று, பின் அது முடியாமல் போனது. கடைசி தடவை மட்டும் அவள் வென்றாள்(!). ஆனால், மனதில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதவர். எவ்வளவு கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நான் கேட்ட பாட்மின்ட்டன் மட்டையை, எனக்கு பணம் கடன் வாங்கி வாங்கித் தந்தவர் (எனக்குத் தெரியாமல்). அந்த வயதில் எனக்கு இதெல்லாம் தெரியாது.

வீட்டை காலி செய்யும் நாளில் நடந்ததை பின் ஒரு நாள் என் அம்மா எனக்கு கூறினாள். என் பாட்டி வீடு இருந்த சந்தில் மூன்றாவது வீடு எங்களுடையது. முதல் இரண்டு வீடு என் தாத்தாவின் சகோதரர்களின் வீடு. அதாவது என் மாமா வீடு. அன்று, லாரியில் வீட்டு சாமான்கள் ஏற்றி புறப்படும் முன் எல்லோரும் என் மாமா வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என் தாத்தாவை காணவில்லை. என் பாட்டி வீடானது நீளமாக இருக்கும். வாசல் படியில் இருந்து கடைசிவரை ஒரே நேர்கோட்டில் இருக்கும். கடைசியில் ஒரு நிலக்கண்ணாடி இருக்கும். வெளியில் இருந்து என் அம்மா பார்த்தால், அங்கே கடைசியில் இருக்கும் நிலக்கண்ணாடி அருகே நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தார் அந்த எழுபது வயது பெரியவர். வீட்டை விட்டு வர மனமில்லை அவருக்கு.

ஒரு நாளில் (ஆ.வி.யில்) படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

வாழ்ந்து கெட்டவரின்
வீட்டை
விலை பேசி
முடிக்கும் பொழுது
கேட்கலாம்
கொல்லை புரத்தில்
ஒரு
விசும்பலை...

எவ்வளவு நிதர்சனமான உண்மை இது? அன்று என் தாத்தாவின் மனநிலையும் அதுதான்.

பின் நான் அங்கிருக்கும் என் மாமா வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் என் வீட்டையும் (ஓரக்கண்ணால்) எட்டிப் பார்ப்பேன். ஒரு முறை அந்த வீட்டிலிருப்போர் எங்களை அடையாளம் கண்டு கொண்டு வீட்டின் உள்ளே வந்து பார்க்குமாறு அழைத்தார். ஏனோ, ஒரு வித பயத்தில், நான் உள்ளே போகவில்லை. என் அம்மாவும் அக்காவும் போய் பார்த்தார்கள். இப்பொழுது கூட அந்த வீட்டில் நாங்கள் இருந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருப்பேன். பாட்டி வீடு என்பதால் பெரும்பாலும் நாங்கள் கோடை விடுமுறையில் தான் செல்வோம். என் தாய் கூடப் பிறந்தவர்கள் எட்டு பேர். அவர்களின் பிள்ளைகளும் வருவார்கள். திருவிழா கூட்டம் போல ஒரே ஆனந்தமாக இருக்கும் (பின்னே 20+ பேரப் பிள்ளைகள் ஆயிற்றே). எங்க தலைமுறை விளையாடிக்கொண்டிருக்கும். என் முந்தைய தலைமுறையும் (என் அம்மாவும் அவர்கள் அக்கா தங்கைகளும், மற்றும் அவர்கள் வயதுக்கும் சற்றே குறைவான என் பெரியம்மாவின் மகள்களும்) கூட்டமாக சுற்றி உட்க்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்கள் அந்த கோடை விடுமுறையில் எழுதும் ஸ்கோர்கள் மட்டும் ஒரு 192 பக்க புத்தகத்தையே காலி செய்துவிடும். மாலை வேளையில் எங்கள் வீட்டு வாசற்படியில், ஒவ்வொரு படியிலும் மூன்று பேர் வீதம் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். ஆக, நான் மகிழ்ச்சியை மட்டுமே பார்த்த வீடு அது. அடிக்கடி (மிக சமீபத்தில் கூட) கனவில் அந்த வீடும், அந்த வாழ்க்கையும் வந்து வந்து போகும். அன்றெல்லாம் மனம் ஒருவாறு கனத்துப் போகும்.

அதே போல, என் தகப்பானாரின் தாயும், வீட்டை விட்டு வர மனமில்லாமல், அவள் வாழ்ந்த இடிந்த விட்டிலேயே கடைசி வரை வாழ்ந்து மடிந்தாள். அங்கள் ஊரில் குளிர் காலம் பயங்கரமாக இருக்கும். வரட்டுப் பனியாக இருக்கும். அந்தக் குளிரிலும் அந்த வீட்டிலேயே இருப்பாள்.

நானும் கூட நினைத்திருக்கிறேன், அப்படி என்ன ஒரு வீட்டை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பது என்று. நிழலின் அருமை வெய்யிலில் வந்தால் தான் தெரியும். இங்கே பிழைப்பிற்காக நான் சென்னை வந்தாலும், மாதம் ஒருமுறை ஊர் சென்றால் என் வீட்டின் இருக்கும் ஒரு அறையில் படுத்தால், நிச்சயம் சுகமான தூக்கம் வரும். அந்த அறை நான் சிறிய வயதிலிருந்து புழங்கிய அறை. அந்த அறையின் கட்டிலும், அந்தக் கட்டில் சுவறும், அங்கே படுத்தால் 'மட்டுமே' எனக்கு விவரிக்க முடியாத ஒரு கனவு வரும். ஒரு சிறு தெர்மாக்கோலின் ஒரு சிறு கண்ணின் மணியின் அளவு உருளை மட்டும் வளர்ந்து மிக பிரம்மாண்டமான உருவமாக உருவெடுத்து அலையும். அந்தக் கனவை நானும் அந்த சுவரும் மட்டுமே அறிவோம். இப்பொழுதும் நான் அந்த அறையில் படுத்தாலும் அந்தக் கனவு மட்டும் ஏனோ வருவதில்லை.

காலம் முன்னோக்கி மட்டுமே செல்வதல், ஒரு கால இயந்திரம் வேண்டும், அந்த நாட்களுக்கு மீண்டும் செல்ல. சரி! வேலைப் பார்த்த அயர்ச்சி மற்றும் விடியற்காலை 4 மணி என்னை தூங்கச் சொல்கிறது. நான் தூங்கப் போறேன்.