Monday, September 11, 2006

வீடு

இன்று அதிகலை (செப் 07, 2006, சுமார் 2:30 மணியளவில்) House drop-ல் வீட்டிற்கு வரும் வழியில், என் காருக்கு முன் ஒரு 'சின்ன யானை' (அதாங்க, ஆட்டோவிற்கும் டெம்போவிற்குமான hybrid), சில பல சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பின்னால் ஒரு மிதி வண்டி கட்டப்பட்டிருந்தது. அந்த வண்டிக்குள் வீட்டு உபயோக பொருட்கள் அடுக்கி, துருத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சின்ன யானையின் பதிவு எண் பாண்டியில். யாரோ பாண்டிசேரியில் வீட்டை காலி செய்து, 'சிங்கார' சென்னைக்கு குடி வந்துகொண்டிருந்தார்கள். வீட்டை காலி செய்து வருவது என்பது சில வேளைகளில் மகிழ்ச்சியையும், சில வேளைகளில் துக்கத்தையும் கொண்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவர்கள் மகிழ்ச்சியான மனநிலையிலேயே செல்லட்டும்.

பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினைக் கொண்டுள்ள நம் நாட்டில், சொந்த வீடு என்பது பலரின் கனவாகும். எப்படியாவது சம்பாதித்து பணம் சேர்த்து செந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று உழைத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பர் பலர். வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. மற்ற நாடுகளைப் போல அல்லாமல், வீடு என்பதும் நம் வீட்டு அங்கத்தினர்களில் ஒன்று. காரணம், நாம் sentiment வாசிகள். நம் மகிழ்ச்சியை, துக்கங்களை எல்லாம் நாம் அந்த வீட்டின் சுவற்றினூடே பகிர்ந்து கொண்டிருப்போம். நம்மைப் பொருத்த வரை நம் மகிழ்ச்சியையும் துக்கங்களையும் உயிருடன் பதிவு செய்யும் ஒரு உயிருள்ள சீவனே வீடு. வீடு என்பது செங்கற்களால் சுற்றி எழுப்பப்பட்ட சுவர் மட்டுமே அல்ல. அது கட்டுபவரின் உழைப்பும், வியர்வையும், ரத்தமும் சம்பந்தப்பட்டது.

வாழ்ந்த வீட்டை பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிந்தவர்களும், அல்லது வேறு வழியில்லாமல் பெரும் துக்கத்துடன் வீட்டை விட்டு உயிரற்ற நடை பிணமாக வந்தவர்களும் கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள். துரதிர்ஷ்டமாக என் வீட்டில் இரண்டையும் பார்த்திருக்கிறேன்.

கோடை விடுமுறை முடிந்து சேலத்தில் இருக்கும் பாட்டி வீட்டை விட்டு, வாழும் திருப்பத்தூருக்கு திரும்பும் நாள். அப்பொழுது பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு. அதிகாலையில் நான்கு மணி சுமாருக்கு, என் பாட்டி வீட்டில் என் அம்மாவும், அக்காவும் திடீரென்று காட்டு கத்தல் கத்தினார்கள். பயந்து கொண்டு அலறி அடைத்துக் கொண்டு எழுந்திருந்தேன். என் பாட்டி மேலே மாடியில் தனக்குத் தானே தீ வைத்து எரிந்துக் கொண்டிருந்தாள். கீழே இருந்து தீ வைத்துக் கொண்டால் எங்கே நாங்களும் பாதிக்கப்படுவோம் என்று மாடிக்கு சென்றிருக்க வேண்டும். என் தாத்தாவின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு(!) கழுத்து சங்கிலியையும், காது கம்மலையும் கழற்றி சமையலறையில் வைத்திருந்தாள். இவர் என் அம்மாவை வளர்த்தவர். சில வருடங்களுக்கு முன் தான், என் அம்மாவைப் பெற்ற பாட்டியும் இதே போல தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டாள். என் தாத்தா தண்ணீர் கொண்டு சென்று தீயை அனைத்தார். எனக்கோ கை கால் எல்லாம் வெடவெடத்துப் போய்விட்டது. நானும் என் அம்மாவும் எங்கள் பெரியம்மா வீட்டிற்கு போனோம். பின் என் பாட்டி ஓரிரு நிமிடத்தில் இறந்து போனாள், தன் கணவரிடமும், என் மாமி ஒருவரிடமும் தன் வாக்குமூலத்தை கூறியவாறு. என் பாட்டியை வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லும் வரை நான் அந்த வீட்டிற்கே செல்லவில்லை. இத்தனைக்கும் நான் தான் என் பாட்டிக்கு கொள்ளி வைக்க வேண்டும். பின் காரியம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கினேன். பின் நான் ஊருக்கு வந்துவிட்டேன்.

பின் நடந்தது, என் தாத்தாவும் அந்த வீட்டையும் விற்று தன் மகள் வீட்டிற்கே (திருப்பத்தூருக்கு) வர முடிவெடுத்தார். கடன் பிரச்சினையால் முன்பே ஓரிரு முறை வீட்டை விலை பேசியிருந்தார் என் தாத்தா. ஆனால், வீட்டை விட்டு வர முடியாது என்று என் பாட்டியும் ஓரிரு முறை தற்கொலைக்கு முயன்று, பின் அது முடியாமல் போனது. கடைசி தடவை மட்டும் அவள் வென்றாள்(!). ஆனால், மனதில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதவர். எவ்வளவு கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நான் கேட்ட பாட்மின்ட்டன் மட்டையை, எனக்கு பணம் கடன் வாங்கி வாங்கித் தந்தவர் (எனக்குத் தெரியாமல்). அந்த வயதில் எனக்கு இதெல்லாம் தெரியாது.

வீட்டை காலி செய்யும் நாளில் நடந்ததை பின் ஒரு நாள் என் அம்மா எனக்கு கூறினாள். என் பாட்டி வீடு இருந்த சந்தில் மூன்றாவது வீடு எங்களுடையது. முதல் இரண்டு வீடு என் தாத்தாவின் சகோதரர்களின் வீடு. அதாவது என் மாமா வீடு. அன்று, லாரியில் வீட்டு சாமான்கள் ஏற்றி புறப்படும் முன் எல்லோரும் என் மாமா வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என் தாத்தாவை காணவில்லை. என் பாட்டி வீடானது நீளமாக இருக்கும். வாசல் படியில் இருந்து கடைசிவரை ஒரே நேர்கோட்டில் இருக்கும். கடைசியில் ஒரு நிலக்கண்ணாடி இருக்கும். வெளியில் இருந்து என் அம்மா பார்த்தால், அங்கே கடைசியில் இருக்கும் நிலக்கண்ணாடி அருகே நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தார் அந்த எழுபது வயது பெரியவர். வீட்டை விட்டு வர மனமில்லை அவருக்கு.

ஒரு நாளில் (ஆ.வி.யில்) படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

வாழ்ந்து கெட்டவரின்
வீட்டை
விலை பேசி
முடிக்கும் பொழுது
கேட்கலாம்
கொல்லை புரத்தில்
ஒரு
விசும்பலை...

எவ்வளவு நிதர்சனமான உண்மை இது? அன்று என் தாத்தாவின் மனநிலையும் அதுதான்.

பின் நான் அங்கிருக்கும் என் மாமா வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் என் வீட்டையும் (ஓரக்கண்ணால்) எட்டிப் பார்ப்பேன். ஒரு முறை அந்த வீட்டிலிருப்போர் எங்களை அடையாளம் கண்டு கொண்டு வீட்டின் உள்ளே வந்து பார்க்குமாறு அழைத்தார். ஏனோ, ஒரு வித பயத்தில், நான் உள்ளே போகவில்லை. என் அம்மாவும் அக்காவும் போய் பார்த்தார்கள். இப்பொழுது கூட அந்த வீட்டில் நாங்கள் இருந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருப்பேன். பாட்டி வீடு என்பதால் பெரும்பாலும் நாங்கள் கோடை விடுமுறையில் தான் செல்வோம். என் தாய் கூடப் பிறந்தவர்கள் எட்டு பேர். அவர்களின் பிள்ளைகளும் வருவார்கள். திருவிழா கூட்டம் போல ஒரே ஆனந்தமாக இருக்கும் (பின்னே 20+ பேரப் பிள்ளைகள் ஆயிற்றே). எங்க தலைமுறை விளையாடிக்கொண்டிருக்கும். என் முந்தைய தலைமுறையும் (என் அம்மாவும் அவர்கள் அக்கா தங்கைகளும், மற்றும் அவர்கள் வயதுக்கும் சற்றே குறைவான என் பெரியம்மாவின் மகள்களும்) கூட்டமாக சுற்றி உட்க்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்கள் அந்த கோடை விடுமுறையில் எழுதும் ஸ்கோர்கள் மட்டும் ஒரு 192 பக்க புத்தகத்தையே காலி செய்துவிடும். மாலை வேளையில் எங்கள் வீட்டு வாசற்படியில், ஒவ்வொரு படியிலும் மூன்று பேர் வீதம் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். ஆக, நான் மகிழ்ச்சியை மட்டுமே பார்த்த வீடு அது. அடிக்கடி (மிக சமீபத்தில் கூட) கனவில் அந்த வீடும், அந்த வாழ்க்கையும் வந்து வந்து போகும். அன்றெல்லாம் மனம் ஒருவாறு கனத்துப் போகும்.

அதே போல, என் தகப்பானாரின் தாயும், வீட்டை விட்டு வர மனமில்லாமல், அவள் வாழ்ந்த இடிந்த விட்டிலேயே கடைசி வரை வாழ்ந்து மடிந்தாள். அங்கள் ஊரில் குளிர் காலம் பயங்கரமாக இருக்கும். வரட்டுப் பனியாக இருக்கும். அந்தக் குளிரிலும் அந்த வீட்டிலேயே இருப்பாள்.

நானும் கூட நினைத்திருக்கிறேன், அப்படி என்ன ஒரு வீட்டை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பது என்று. நிழலின் அருமை வெய்யிலில் வந்தால் தான் தெரியும். இங்கே பிழைப்பிற்காக நான் சென்னை வந்தாலும், மாதம் ஒருமுறை ஊர் சென்றால் என் வீட்டின் இருக்கும் ஒரு அறையில் படுத்தால், நிச்சயம் சுகமான தூக்கம் வரும். அந்த அறை நான் சிறிய வயதிலிருந்து புழங்கிய அறை. அந்த அறையின் கட்டிலும், அந்தக் கட்டில் சுவறும், அங்கே படுத்தால் 'மட்டுமே' எனக்கு விவரிக்க முடியாத ஒரு கனவு வரும். ஒரு சிறு தெர்மாக்கோலின் ஒரு சிறு கண்ணின் மணியின் அளவு உருளை மட்டும் வளர்ந்து மிக பிரம்மாண்டமான உருவமாக உருவெடுத்து அலையும். அந்தக் கனவை நானும் அந்த சுவரும் மட்டுமே அறிவோம். இப்பொழுதும் நான் அந்த அறையில் படுத்தாலும் அந்தக் கனவு மட்டும் ஏனோ வருவதில்லை.

காலம் முன்னோக்கி மட்டுமே செல்வதல், ஒரு கால இயந்திரம் வேண்டும், அந்த நாட்களுக்கு மீண்டும் செல்ல. சரி! வேலைப் பார்த்த அயர்ச்சி மற்றும் விடியற்காலை 4 மணி என்னை தூங்கச் சொல்கிறது. நான் தூங்கப் போறேன்.

2 comments:

 1. 'சின்ன யானை'ன்னு இருந்துச்சேன்னு வந்து பார்த்தேன்.

  பாட்டி............?
  மனசுக்குச் சங்கடமாயிருச்சு.

  ReplyDelete
 2. வாங்க துளசி கோபால்.
  //மனசுக்குச் சங்கடமாயிருச்சு.//
  ப்ச்...என்ன செய்ய? It happens.

  ReplyDelete