Wednesday, August 09, 2006

கால இயந்திரம் - உங்க ஆசையை சொல்லுங்க

சிறிய வயதில், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சேலத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு செல்வோம். என் உடன்பிறப்புக்கள் (cousions) மொத்தம், இந்தியாவின் சனத் தொகையில் கணிசமாக, சுமார் இருபது+. அதனால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. கேபிள் ஒளிப்பரப்பில் கோடை மாதங்களில் மட்டும், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், நூரு ரூபாய் (இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால்). அதில் ஒரு நாளைக்கு நான்கு திரைப்படங்கள். மற்றும் இரண்டு மாதத்திற்கு என்னென்ன திரைப்படங்கள் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டுவிடும். அங்கே பார்த்த ஒரு தெலுங்கு டப்பிங் படம், பெயர் 'அபூர்வ சக்தி 369' என்று நினைக்கிறேன். பாலகிருஷ்னா நடித்தது. கதை கால இயந்திரம் பற்றியது. அதில் நம்ம ஹீரோ இறந்த காலம், எதிர்காலம் எல்லாம் போய் சிலுக்குடன் டான்ஸ் எல்லாம் ஆடிவிட்டு வருவார்.

நான் பலதடவை சிந்தித்ததுண்டு. இப்படிப்பட்ட இயந்திரம் உருவாக்கப்பட சாத்தியமுண்டா? நம்மால் இறந்த காலத்தினை பற்றிய நினைவுகள் உண்டு. ஆனால், எதிர்காலம் பற்றிய நினைவுகள் (அ) கணிப்புகள் ஏன் இல்லை. நேரம் ஏன் எப்போதும் முன்னோக்கியே செல்கிறது? அபத்தமாக தோன்றினாலும், இப்படி நினைப்பதை நிறுத்த முடிவதில்லை.

காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, முன்பிருந்த நிலையில் (past) பூமிக்கு திரும்ப முடியுமா? இப்படி பல கேள்விகள் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது. ஒருவனால் சுலபமாக காலத்தை நோக்கி பயனிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? General Theory of Relativity-ன் படி, உலகில் ஒளியை விட வேகமாக பயனிக்கும் பொருள் கிடையாது. ஆனால், அந்த வேகமே பத்தாமல் போனால்? ஒரு உதாரணம், ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். ஒரு பொருளை நாம் பார்ப்பது, அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஒரு பொருள் சிகப்பாகத் தோன்றுகிறது என்றால், அந்தப் பொருள் அனைத்து வண்ணங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு, வெறும் சிகப்பு வண்ணத்தை மட்டுமே வெளியிடுகிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள். அது அங்கிருப்பது, அந்த நட்சத்திரம் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஆனால் அந்த ஒளி உங்களை வந்து சேர பல ஒளி ஆண்டுகள் ஆகும். அதனால், நீங்கள் பார்ப்பது எதுவும் அங்கு இல்லாமல் கூட இருக்கலாம். அந்த நட்சத்திரம் நகர்ந்து போய் இருக்கலாம். காரணம், இந்த உலகம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதனால், நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலங்கள் தாம் (எல்லாம் மாயா). இது மட்டும் அல்ல, நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும். இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், கீழே உள்ள உதாரணம் அறிந்துகொள்ள:

இரண்டு கடிகாரங்களை எடுத்துக் கொண்டு ஒன்றை உயரமான இடத்திலும், மற்றொன்றை பூமிக்கு அருகிலும் வைத்தால், இரண்டாவது கொஞ்சம் மெதுவாகத் தான் ஓடும். அதே போல, இரட்டையராய் பிறந்தவர்களில், ஒருவர் மலை உச்சியிலும், ஒருவர் கடல் மட்டத்திலும் வளர்ந்தால், முதலாமவர் இரண்டாமவரை விட வயதில் பெரியவராக இருப்பார். ஆனால், வித்தியாசம் மிக மிக சொற்ப அளவிலேயே இருக்கும். இதற்குப் பெயர் 'Twin Paradox'. இப்பொழுது ஒரு விண்கலத்தை, நமக்கு (அருகில்) நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் Alpha Centauri என்னும் நட்சத்திரத்திற்கு அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் அங்கு சென்று திரும்பி வர எட்டு ஒளி ஆண்டுகள் ஆகும். ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதுவே ஒரு ஒளி ஆண்டு (Light Year) எனப்படும். அதனால், நேரத்தை அளக்க பொதுவான காரணி இல்லை எனலாம். அதனால், வின்வெளியில் பயனிப்பவர், பூமியில் இருப்பவரை விட, குறைவான நேரத்தையே எடுத்துக் கொள்வர். அதனால், ஒருவர் ஒளியை விட வேகமாக பயனிப்பவராக இருப்பாராயின்(??), General Theory of Relativity-ன் படி அவரால், காலத்தில் பின்னோக்கியும் பயனிக்க முடியும்.

There was a young lady of Wight
Who traveled much faster than light.
She departed one day,
In a relative way,
And arrived on the previous night


சரி! விஞ்ஞானத்தை விட்டு வெளியே வருவோம். 2002-ல் வந்த ஒரு ஆங்கில படம் The Time Machine. எச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells)-ன் புதினத்தை மையமாகக் கொண்ட திரைப்படம். 1960-ல் ஒரு படம் வெளிவந்திருக்கிறது. இது இரண்டாவது. கதை 1903-ல் நடப்பதாக. படத்தில் நாயகன், Guy Pearce, காலத்தை நோக்கி பயனிக்கும் ஒரு கலனை கண்டுபிடிப்பார். அதில் 50 வருடம் முன்னோக்கி பயனிப்பார். அங்கே போர் சூழலில் அடிபட்டு மயங்கி விட, மயக்கம் தெளிந்து எழும் பொழுதும், அந்த கலன் அவனை சுமார் 8 இலட்சம் வருடங்கள் பயனித்திருக்கிறது. அங்கே மனித இனம் இருபிரிவாக பிரிந்திருக்கிறது, வேட்டையாடுபவர்கள் மற்றும் வேட்டையாடப்படுபவர்கள். அங்கிருக்கும் வேட்டையாடப்படுபவர்களை காப்பாற்றும் பொருட்டு அதன் தலைவனை, கால இயந்திரத்தில் அனுப்பிவிட்டு கதாநாயகன் அங்கேயே தங்குவதாக கதை. இதில் எனக்கு முதல் பாதி படம் மட்டும் தான் பிடித்தது. பிற்பாதி கதை ச்சும்மா உடான்ஸ்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1) கதாநாயகன், ஒரு காட்சியில், கால இயந்திரத்தின் ஃபார்முலாவை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி க்லோஸ் அப்-ல் காட்டப்படும். மெள்ள காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், திரையில் ஒரு ஏனி தெரியும். அதாவது, கதாநாயகன் ஒரு ஏனியின் மேல் நின்று ஃபார்முலாவை எழுதிக் கொண்டிருப்பான். காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், அந்த அறை முழுக்க கரும்பலகையாக இருக்க, ஒரு ஏனியில் நின்றுக்கொண்டு அந்த ஃபார்முலாவின் continuation-ஐ எழுதிக்கொண்டிருப்பான்.
2) கால இயந்திரத்தில் அமர்ந்து அதை இயக்க ஆரம்பிக்க, அந்த அறையில் இருக்கும் (பல) கடிகாரங்கள் ஒரு கணம் நின்று, பின் பின்னோக்கி ஓட ஆரம்பிக்கும். அந்தக் காட்சி பார்க்கும் பொழுது ச்சும்மா 'நச்'னு இருக்கும்.
3) அந்தப் படத்தின் கடைசி காட்சியில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று நிகழ்காலம், மற்றொன்று எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு. இரண்டும் ஒரே நேரத்தில் synchronised-ஆக வரும். இரண்டும் ஒரே இடத்தைக் காட்டுகிறது. முதல் பாதியில், கதாநயகனின் பாட்டி காவலரிடம், தன் பேரன் அந்த அறையில் தான் கடைசியாக இருந்ததாகவும், பின் காணாமல் போய்விட்டதாகவும் கூறுவாள். மற்றொரு பாதியில் (அதே இடத்தில், எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு) கதாநாயகன், அதுதான் தன் அறை என்றும், அதன் தொடர்பான காட்சியை விளக்கிக்கொண்டிருப்பான்.
4) தற்காலத்தில் இருந்து 50 வருடம் கழித்து பயனிக்கும் இடத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஒரு கண்ணாடியும் அதில் ஒரு உருவமும் தெரியும். அது ஒரு Virtual reality உருவம்.

நான் பல தடவை யோசிப்பேன், நமக்கு ஒரு கால இயந்திரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு பயனிக்கலாம் என்று. இரண்டு காலங்கள் நினைவுக்கு வரும்.

1) பள்ளியில் படிக்கும் பொழுது ஏமாங்கத நாடு என்னும் கற்பனை நாட்டினைப் பற்றிய ஒரு சூழல் சொல்லப்பட்டிருக்கும். அந்த நாட்டில் தென்னை மரத்தில் இருந்து ஒரு முற்றிய தேங்காய் விழும் பொழுது அது வரும் வழியில் பாக்கு பரம் போன்றவற்றின் மேல் பட்டு அந்தப் பழங்களை சிதைத்து பின் கீழே விழும். அந்த பரங்களின் நெருக்கத்தினை அப்படி விவரித்திருப்பார்கள். மேலும், அரிசி கொத்த வரும் கோழிகளை துரத்த, அங்கிருக்கும் கிழவி தன் காதில் இருக்கும் தங்கத்தோட்டினை கழற்றி வீச, அது அங்கே நடைவண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிம் நடை வண்டியின் சக்கரத்தில் மாட்டிக் கொள்வதாக அந்த நாட்டின் வளங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும். இந்தக் காலங்கள் ஒன்று.

2) 'பொன்னியின் செல்வன்' படிக்கும் பொழுது நாம் என்னவோ அந்த காலத்திலேயே பயனிப்பது போல தோன்றும். அதுவும் அருள்மொழிவர்மனையும், வந்தியத்தேவனையும், குந்தவையும், நந்தினையையும், வானதியையும், பழுவேட்டரையரையும், அந்தக் கால காவிரியையும், மக்களையும், அந்தச் சூழலையும் வர்னித்திருப்பதைப் படிக்க படிக்க கால இயந்திரம் மட்டும் கிடைத்தால் அந்த காலகட்டதிற்கு செல்லவேண்டும் என்று தோன்றும்.


கடைசியாக, ஒருவேளை, உங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எங்கே, எந்த காலகட்டத்தில் பயனிக்க விரும்புவீர்கள்? காரணம் என்ன? ஏன்? நேரம் இருந்தால் தட்டுங்கள், ச்சும்மா...


அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்

E = MC2
கருந்துளைகள்
1-D, 2-D, 3-D, 4-D...
விண்கற்கள்
The Expanding Universe
அறிவியல் - வரமா / சாபமா?

12 comments:

  1. லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா? அதில் ஆர்ச்சி என்ற இரும்புமனிதனின் கதைகள் கால இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டவையே.... சில கதைகள் 10 நூற்றாண்டுகள் பின்னே இருக்கும்.... சில கதைகள் 3 நூற்றாண்டுகள் முன்னே இருக்கும்...

    ReplyDelete
  2. நீண்ட காலமாக என்னுல் கேட்டு கொண்டே இருந்த பல கேள்விகளுக்கு சில பதில் இங்கு கிடைத்தது நன்றி நன்றி

    ReplyDelete
  3. எனக்கு ரொம்பப் பின்னாலே போகவேணாம். ஒரு 45 வருசம் போனாப் போதும்.
    அம்மாகிட்டே இன்னும் கொஞ்சம் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருந்துட்டு, இன்னும்
    சில முடிக்காத வேலைகள் இருந்ததே அதையும் முடிச்சுக்குவேன்.

    ReplyDelete
  4. நன்றி luckylook,மின்னுது மின்னல்,துளசி கோபால்.

    //லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா? அதில் ஆர்ச்சி என்ற இரும்புமனிதனின் கதைகள் //
    லயன் காமிக்ஸ் படித்தது இல்லை.

    //நீண்ட காலமாக என்னுல் கேட்டு கொண்டே இருந்த பல கேள்விகளுக்கு சில பதில் இங்கு கிடைத்தது நன்றி நன்றி //
    அது என்ன கேள்விகள் 'மின்னல்'?

    ReplyDelete
  5. //நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும். இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன்//

    நான் சிறு வயதாய் இருக்கும் போது இதை பற்றி என் அப்பா எனக்கு விளக்கியது ஞாபகம் வருகிறது. நாம் நிற்பது க்கூட நேர் கிடையாது என சொல்லுவார், முன் புறமாக சாய்ந்து நின்று நாம் இப்போது எப்படி நிற்கிறோம் என்று செய்து காட்டுவார். ஆனால் நமக்கு நாம் நேராக இருப்பதாக தோன்றுகிறது..என்பார்.. சரியோ?!!

    ReplyDelete
  6. அது என்ன கேள்விகள் 'மின்னல்'?
    /./

    (E = MC2)
    Theory of Relativity
    கருந்துளைகள்

    இதை பற்றி கேள்விபட்டு மண்டை குடைசல் இருந்தது முன்பு இப்போ லேசா புரிஞ்ச மாதிரி இருக்கு..

    ReplyDelete
  7. மின்னுது மின்னல்,

    இங்கேயும் பாருங்க. இவர் சூப்பரா போட்டிருக்கார்.

    http://ariviyalaanmeekam.blogspot.com/2006/09/3.html
    http://ariviyalaanmeekam.blogspot.com

    ReplyDelete
  8. டைம் டிராவல் சாத்தியம் என்று பல இடங்களில் படித்ததுண்டு. Black Holesக்குள் ஒருவர் சென்று திரும்ப வெளியே வந்தார்கள் என்றால் அவர்கள் வரும் சமயம் வேறு காலமாக இருக்கும் என்று கூறுவார்கள். Black holeல் விழுந்த எதுவுமே வெளியே வர இயலாது என்பது வேறு விஷயம். வெளிச்சம் கூட வெளியே வர இயலாத அளவுக்கு புவியீர்ப்பு விசை அதிகமாக உள்ள இடம் black hole.

    இதற்கு எதிராக ஸ்டீபன் ஹாகிங்ஸ் ஒரு வாதம் வைத்தார். Time travel என்பது சாத்தியம் என்றால் ஏன் வருங்காலத்தில் இருக்கும் மனிதர் யாரும் நம்மை வந்து பார்க்கவில்லை என்று.

    ஆனால் பிறகு ஸ்டீபன் ஹாகிங்ஸ் அவர்களே paralell universe என்பது சாத்தியம் என்பதைக் கண்டறிந்த பின் நாம் இருக்கும் இந்த universeல் டைம் டிராவல் மனிதர்கள் வந்து எதையாவது மாற்றினால் அது ஒரு paralell universe ஆகி விடும் என்று சொல்லி time travel என்பது சாத்தியமே என்று கூறி இருக்கிறார்.

    ReplyDelete
  9. googleலில் time travel and black hole என்று அடியுங்கள் Intresting matter எல்லாம் கிடைக்கும்.

    ReplyDelete
  10. நண்பரே,
    எனக்கு ஒரு சந்தேகம் space-க்கு காலம் இல்லை என நான் நினைக்கிரேன் .
    என்னை பொறுத்த வரை பொருள்களின் இயக்கம் மட்டும் காலம் ஆகும். அந்த இயக்கத்தை காலம் என சொல்வதை விட கணக்கீடு என்று சரியாக சொல்லலாம். இயக்கத்தின் அளவீடை தவிர காலம் என்ற ஓன்று இல்லை .பிறகு எப்படி கால பயணம் சாத்தியம் ஆகும். மேலும் பொருள்களின் இயக்கத்தை அளவீடு செய்யலாம் . space-இணை எவ்வாறு அளவீடு செய்ய முடியும்? அளவீடு செய்ய முடியாது என் என்றால் அதட்க்கு இயக்கம் இல்லை. ஏன்? அணுவில் கூட space இருக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது .எனவே காலம் இருந்தால் அதை தெளிவாக விவரிக்கவும் .
    நான் கூறியது முட்டாள் தனமாக இருந்தால் மன்னிக்கவும்.
    பதில் கிடைக்குமா? நண்பரே

    February 15, 2011 5:20 AM

    ReplyDelete
  11. நான் விஞ்ஞானி அல்ல.நான் ஒரு அக்கவுண்டன்ட்...

    According to me, time travel is not possible whether it is past or future...

    I can explain it to the scientist if they allowed me...

    ReplyDelete