Monday, August 30, 2004

LLR விண்ணப்பிக்க முயன்ற கதை(யல்ல நிஜம்...)



தேதி : 27/08/2004
நேரம் : காலை 11:15

இந்த கதையின் கதாநாயகன், அதாவது நானேதான்...வேலூரில் நண்பனின் திருமணத்தை நடத்தி (கொடுத்து!!!) விட்டு முன்னிரவு தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலை உணவின்றி பேருந்தில் தொடர் பயனம் செய்து வாணியம்பாடியில் உள்ள RDO அலுவலகத்தை ஒரு வழியாக அடைகிறேன்.

நான் : (அங்குள்ள ஒருவரிடம்) சார், LLR apply பண்ணனும்.
நபர் 1 : வெளியே form வாங்கி fill-up பண்ணி வந்து கொடுங்க...

நான் வெளியே சென்று ஒரு கடையில் கேட்க, அவர் மற்றொரு கடையை காட்ட, நான் அங்கு செல்ல அங்கிருந்து இன்னொரு கடைக்கு வழி காண்பிக்கப்பட்டேன். அங்கு சென்று தேவையான பாரத்தை ஐந்து ரூபாய்க்கு வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து மீண்டும் உள்ளே வந்து கொடுக்கிறேன்.

நபர் 1 : இங்க கொடுக்காதே. அவரிடம் கொடு...

நான் அங்கிருந்து சென்று அவர் கண்பித்த நபரிடம் கொடுத்தேன். அவர் கேட்ட படி ரூபாய் முப்பது கொடுத்தேன். அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டேன்.

நான் : சார்! நான் என்ன செய்ய வேண்டும்.
நபர் 2 : அந்த பக்கம் போய் நில்லு. அவங்க கூப்பிடுவாங்க.

நான் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர என் அருகில் ஒரு கல்லூரி மாணவன் அமர்ந்தான். (அவன் வாணியம்பாடியில் இருந்து RDO அலுவலகம் வருவதற்கு வழி காட்டுமாறு நான் கேட்க அவன் தானும் RDO அலுவலகம் செல்வதாகவும் கூறினான். பின் இருவரும் அதே பேருந்தில் RDO அலுவலகம் வந்தோம்). அவன் இந்த முறை விரக்தியோடு என் அருகில் வந்து அமர்ந்தான்.

நான் : என்னங்க! என்னாச்சு?
அவன் : என்னுடைய Driving License-ஐ institute காரங்க தொலைச்சிட்டாங்க. அத வாங்க வந்தேன். அலைய விடுரானுங்க...

அப்பொழுது ஒருவன் (35 வயதுள்ள Office Boy) அவன் பேரை சொல்லி அழைக்க, முதல் அழைப்பிலேயே அவன் எழுந்து செல்கிறான். அவன் அழைத்தவனின் அருகில் செல்ல அவன் இரண்டாவதாக அவனை அழைக்கிறான். அவன் அங்கு சென்றதும்...

Office Boy : என்ன கூப்பிடுவது காதுல விழலையா? எத்தனை தரம் கத்தறது. License வேணுமா இல்லையா...? வந்து நில்லுடா...

அவன் அமைதியாக நிற்கிறான். அப்பொழுது என்னிடம் பணம் வாங்கியவன் மேலும் அங்கு நிற்ப்பவர்களிடம் வசூலிக்கிறார். அவர் ஒவ்வொருவரிடமும் எதாவது ஒன்று சொல்லி திட்டிக்கொண்டே அலுப்புடன் வாங்குகிறார். உதாரணமாக,

"நீ என்ன பண்ணாலும் தப்பிக்கவே முடியாது! 300 ரூபா கொடி (கையூட்டு அல்லது லஞ்சம்) கட்டாம எப்படி license வாங்குறேன்னு பாக்குறேன்."
"எங்களுக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நெனைச்சியா. இரு Inspector-ரிடம் சொல்றேன்"
ஒரு பெட்ரொல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞரிடம் "எதுக்கு இப்படி சில்லறையா கொண்டு வந்து என் உயிர வாங்குற?"

இப்படியாக இது ஒருபுரம் நடந்து கொண்டிருக்க, அந்த இண்ஸ்பெக்டர் சிலரை 8 போடச் சொல்லவும், 11 போட சொல்லவும் வெளியே செல்கிறார் (அட! 4 Wheeler-ங்க), மற்றும் சிலர் 7 1/2 போட வேண்டும். ஒரு மணிநேரம் செல்கிறது. நான் வந்த வேலை ஞாபகம் வர, என்ன இன்னும் நான் அழைக்கப்படவில்லையே என்று சந்தேகம் வர, மீண்டும் (வேறு வழி இன்றி) அந்த நபர் 2 (அதான் Mr.திட்டு) விடம் சென்று...

நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். உங்களிடம் 30 ரூபாய் கட்டிட்டேன். நான் என்ன செய்ய...
Mr.திட்டு : (என் கையில் உள்ள பாரத்தை பார்த்து) இந்த form-ஐ அங்க கொடுக்காம நீயே வெச்சுக்கிட்டிருந்தா அவங்க எப்படி கூப்பிடுவாங்க. 11 மணியோட form வாங்குற time முடிஞ்சுடுச்சு. (அவர்தான் 11:15-க்கு நான் பணம் கொடுத்தப்ப வாங்கி ரசீது கொடுத்தார் என்பதை நினைவில் கொள்க...)
நான் : சார்! நீங்க எதுவுமே சொல்லல. நீங்க தான் என்ன wait பன்ன சொன்னீங்க...
Mr.திட்டு : (கோபம் வந்தவராய்) நீ பணம் கொடுத்த, நான் வாங்கிகிட்டு bill கொடுத்தேன். அவ்வளவு தான் என் வேலை. போய் நில்லு.
நான் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருக்க, அங்கிருந்த இன்னொருவரிடம் சென்று எதற்கும் இன்னொரு முறை கேட்கலாம் என்று அவரிடம் சென்று...
நான் : சார்! (என்று ஆரம்பித்து நான் LLR விண்ணப்பிக்க வந்த கதையை சொல்லி முடிக்கிறேன்...)
அவர் : (என்னிடம் உள்ள luggage-களை பார்த்து) என்கிருந்து வரீங்க...
நான் : (கொஞ்சம் அனுதாப அலை இருக்கட்டும் என்று) பெங்களூரில் இருந்து வற்றேன் சார்.
அவர் : இல்ல. உங்க native எது?
நான் : திருப்பத்தூர்.
அவர் : திருப்பத்தூரில் எங்கே?
நான் : (நான், யார் என்னுடைய தெரு பேர் கேட்டாலும் "செங்குந்தர் தெரு" என்று சாதிப் பேர் சொல்லாமல் "பெரியவர் சன்முகனார் தெரு" என்று மற்றொரு பேர் சொல்லுவேன். இங்கு எனக்கு வேலை ஆகவேண்டும் என்பதால் எல்லோருக்கும் பரிச்சயமான) செங்குந்தர் தெரு.
அவர் : செங்குந்தர் தெருவில் எங்கே?
நான் : (என் வீட்டின் landmark சொல்ல)
அவர் : அதானெ! பார்த்த மாதிரி இருகேன்னு நெனச்சேன். இந்த form-ஐ fill-up பண்ணினதும் (ஒரு நபரை காட்டி) அவரிடம் கொடுக்க வேண்டும்.
நான் : சார்! நான் (Mr.திட்டு-வை குறிப்பால் உணர்த்தி) அவரிடம் போனபோது அவர் தான் என்னை இங்கே wait பண்ண சொன்னார். வேறு எதுவும் சொல்லலை...
அவர் : (தன் தலையில் மெல்ல அடித்து கொண்டு என்னிடம் மெதுவாக) அந்தாளிக்கு அறிவே இல்லை. இப்போ ஒன்னும் பண்ண முடியாதுப்பா.
நான் : ஐயையோ! சார் நான் பெங்களூர்ல work பன்றேன். இன்னைக்கு இதுக்காகவே leave apply பண்ணிட்டு வந்திருக்கேன் சார்.
அவர் : நீ ஒன்னு பண்ணு, Inspector வந்தா, 'சார் நான் 11 மணிக்கு முன்பே வந்து பணம் கட்டிட்டேன். உங்களிடம் கொடுக்கனும்கிறது தெரியாம நான் இவ்வளவு நேரம் வெளியே நின்னுகிட்டிருந்தேன். இதுக்காகவே leave apply பண்ணிட்டு பெங்களூர்ல இருந்து வந்திருக்கேன் '-னு சொல்லு. என்ன சொல்லுறார்னு பாப்போம்.
நான் அடுத்து அரை மணிநேரம் காத்திருக்கையில், அந்த கல்லூரி மாணவன் வந்தான்.
நான் : உன்னுடையது என்னச்சுங்க?
அவன் : ம்ம்! license கிடைச்சிடும். இன்னொரு நாள் வர சொல்லியிருக்கானுங்க. அப்பா எத்தனை நாள் அலைஞ்சிருக்கேன்.
அடுத்த அரைமணிநேரம் கழித்து inspector வருகிறார். நேரம் 1:30 மணி
நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். பணம் கட்டிட்டேன். ஆனா உங்ககிட்ட கொடுக்கனும்னு தெரியலை. நான்பாட்டிக்கு வெளிய wait பண்ணிட்டுருந்கேன் சார்.
Inspector : (சற்று சத்தமாக) பரவாயில்லை. போய் திங்கட்கிழமை வா.
நான் : சார்! நான் பெங்களூர்ல இருந்து வற்றேன். Office-க்கு leave apply பண்ணிட்டு வந்திருக்கேன்.
Inspector : (இன்னும் சற்று சத்தமாக) அப்ப monday-யும் leave apply பண்ணிட்டு வா.
நான் அவரை பின் தொடர்ந்து சென்று அவர் அறை வாசலில் நிற்கிறேன், வந்த வேலை எப்படியாவது நடக்க வேண்டும் என்று...Inspector தன் அறையில் சென்று அவர் இருக்கையில் அமர்ந்து நான் இன்னும் நின்றுக்கொண்டிருப்பதை பார்தது பயங்கர கோபத்துடன்...
"Don't waste (இப்பொழுது நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்) my time and your time..."
அவர் குரல் எனக்கு மெல்ல கறைகிரது...

சரி! இப்படி LLR விண்ணப்பிபதற்கு முடியாமல் போனதற்கு காரணங்கள் என்ன:

1. முதல் முக்கியமான காரணம், இந்த கதையின் நாயகன், அதாவது நான், பொருப்பின்றி தாமதமாக சென்றது. இதனால் என்னால் உரிமையோடு அவர்களிடம் கேட்க முடியவில்லை. நாம் நம் பாக்கம் தவறில்லை என்றால் மட்டுமே நம் உரிமையை உரிமையோடு கேட்கலாம். நான் தாமதமாக சென்றதால் அவர்கள் சொல்லுவதர்க்கெல்லம் தலை ஆட்டிக்கொண்டு இருப்பதாக ஆயிற்று.

2. முதலில் அங்கு செல்பவற்க்கு என்ன என்ன process உள்ளது என்று தெரியாது. ஆனால் அதற்கான வழிமுறைகள் எதுவும் அங்கே இல்லை. அதனால் ஒவ்வொன்றிக்கும் யாரையாவது எதிர்பார்க்க வேண்டும். அதற்காக பெரும்பாலும் எனக்கு சொல்லப்படும் அறிவுரை, "கொஞ்சம் செலவு ஆனாலும், Driving Institute மூலம் செல்!" என்பது. அவர்களுக்கு எல்லா வழிகளும் தெரியும் என்பதாலும் எங்கெங்கு கையூட்டு தர வேண்டும் என்று தெரிவதாலும், அவர்கள் மூலம் செல்வது உத்தமமாக "ஆக்கப்பட்டது". இது நம்மை மறைமுகமாக கையூட்டு கொடுக்க வைக்கிறது. இது எப்படி உண்மை என்றால் பெரும்பாலும் Driving Institute மூலம் செல்லாதவற்கள் இப்படி போன்ற திட்டுக்கள் வாங்குகிறார்கள்.

3. இது போன்ற அரசு அலுவலகங்களில் மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்கிறவர்கள் (உதா., Mr.திட்டு) தான் அந்த அலுவலகங்களுடைய முகங்கள். அகத்தின் அழகு எனக்கு அவருடைய முகத்தில் தெரிந்துவிட்டது. இந்த மனிதர் ஒருவரை எல்லோர் எதிரிலும் "நீ கட்டாயம் லஞ்சம் கொடுக்க வேண்டும்" என்று மிரட்டுகிறார், எவர்க்கும் பயப்படாமல், திமிருடன், யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று. இந்த ஆனவம் வந்ததற்கு காரணங்கள் என்று பார்த்தால் அ) அங்குள்ளவர்கள் அனைவரும் இந்த லஞ்சம் வாங்கும் network-ல் இருப்பதால், ஆ) அங்குள்ள உயர்ந்த பொருப்பில் உள்ளவரிடம் எல்லா அதிகாரம் உள்ளதால். (அந்த Inspector நினைதால் ஒருவருடைய உரிமத்தை ரத்து செய்ய முடியும்) இ) இப்படி லஞ்சம் வாங்குபவரை வேறு வழி இல்லை என்று நினைத்துக் கொண்டு சகித்துக்கொண்டிருக்கும் பொதுமக்கள் (என்னையும் சேர்த்து). மற்றும் மிக முக்கியமாக ஈ) அந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி நிரந்தரம் என்னும் மந்திரகோல். இது ஒன்றுதான் எல்லவற்றையும் செய்கிறது.

அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும், குமாஸ்தா முதல், உயர் பொருப்பில் இருப்பவர் வரை அங்கு வருபவர் அனைவரையும் வாய்க்கு வந்தபடி கத்துகிறார்கள் (ஒரு கிராமத்தான் என்றால் இந்த "மரியாதை" கூட கிடைக்காது. எல்லாம் வாயா போயா தான்) . அங்கு வருபவர்கள் அனைவரும் இதை சகித்துகொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. மக்கள். மக்கள் தாங்கள் வாங்கும் ஒரு தீக்குச்சிக்கு கூட வரி கட்டுகிறார்கள். அவர்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் இந்த வேலைக்காரர்கள் அவர்கள் கடமையை செய்ய முதலாளிகள் என்ன என்ன பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது. சரி! இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு யார் வேண்டுமானாலும் நீதிமன்றங்களுக்கு செல்ல வழி உண்டுதான். ஆனால் கோமா நிலையில் உள்ள, செல்லரித்த நீதிமன்றங்களால் என்ன செய்ய முடியும். 1985-ல் நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்திற்க்கே இப்பொழுது தான் தீர்ப்பு வந்திருக்கிறது. அதனால் நீதிமன்றங்களை நம்பி பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நான் என்ன செய்ய?

1) நான் பூர்த்தி செய்த பாரத்தை என்னுடைய நண்பன் மூலம் இன்னொரு இடைத்தரகரிடம் கொடுத்துள்ளேன். அவர் எனக்கு கொஞ்சம் செலவு ஆனாலும் (லஞ்சம் தான்), LLR எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். (கவனிக்க, LLR விண்ணப்பிற்க சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக செல்ல வேண்டும் என்பது விதி).

2) ஒரு வேலை அவரால் எனக்கு LLR விண்ணப்பிற்க முடியாமல் போனால், நான் பெங்களூரில் விண்ணப்பித்துவிடுவேன் (பிரச்சினையே பெருநகரங்களில் ஓட்டுனர் உரிமம் பெருவது மிகவும் கடிணம்). அது 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பதால், இங்கு விண்ணப்பித்து விட்டு அடுத்த 6 மாதங்களில் என்னால் முடியும் பொழுது வாணியம்பாடிக்கு சென்று மீண்டும் விண்ணப்பித்து விடுகிறேன்.

Friday, August 06, 2004

சிவாஜி கணேசன் - ஒரு சரித்திரம்

Source : தமிழோவியம்

கவியோவியம்
சிவாஜி கணேசன் - ஒரு சரித்திரம்
-----------------------------------------------

திரையில் நீ சிரிக்கிறாய்,
நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.

கை அசைத்து பிரிந்திருந்தால்
பரவாயில்லை....
இதயம் அசைத்து அல்லவா
இளைப்பாற சென்று விட்டாய் ?

உனக்கு கிடைத்த
கைத்தட்டல்கள் எல்லாம்
உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட...
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
நீ வாழ்ந்திருப்பாயே?

'வானம் பொழிகிறது'
வசனத்தை பேசிப்பார்க்காமல்
ஒரு தமிழ்மகனாவது
இருந்திருந்தால்...
பாவம், அவனது புலன்களில்
ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!

உன்னை மாதிரி
நடிக்க பழகியே...
இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !

குணத்தளவில் நீ
குழந்தையாக இருந்ததால் தான்
அரசியல்நாகம்
உனனைத் தீண்டிய போது
எஙகளுக்கு விஷம் ஏறியது!

நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
அரசியல் தலைவனாய் அல்ல-
குடும்பத்தலைவனாய்!

எங்கள் கலைத்தாயின்
தலைமகனை
கரை வேட்டிகளுக்கும்,
கதர் சட்டைகளுக்கும்
தத்து கொடுப்பதற்கு
நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!

'ப்ரிஸ்டிஜ் பத்னாபன்',
'பாரிஸ்டர் ரஜினிகாந்த்',
'சிக்கல் ஷண்முகசுந்தரம்'
என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
மனப்பாடமாகி
மனசுக்குள் சப்பண்மிட்டு
அமர்ந்து விட்டதே?!

நிஜத்தில் திடீரென
நிகழ்ந்து விட்டால்
தாங்கமுடியாதென்பதால் தான்,
திரைப்படங்களில் இறந்து காட்டி
ஒத்திகை குடுத்தாயோ...?

எது எப்படியோ...
விண்ணுலகில்
அப்பரில் ஆரம்பித்து
கட்டபொம்மன் வரை
உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
வரிசை அங்கும்
பெரிசாய்தான் இருக்கிறது....
உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!

- அரூண்