சமீபத்தில் நான் கேட்ட ஒரு மரணச் செய்தி சற்றே மிகுந்த மனவேதனையை அளித்தது. சில மாதங்களுக்கு முன் நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே ஸ்ரீராமபுரத்தில் ஒரு mansion-ல் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அங்கே நாங்கள் இருந்தது மூன்றாவது மாடியில். இரண்டாவது மாடியில் எங்கள் அறைக்கு எதிர் கீழே இருந்த அறையில் சீனிவாசன் என்று ஒரு பிராமனர் தனியாக வசித்து வந்தார் (என் பெயரே தான்...!!!). அவர் பிராயம் சுமார் 35-ல் இருந்து 40 இருக்கும். பிரம்மச்சாரி, வங்கி ஊழியர். அறையில் தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அவர் அறையில் எப்பொழுது இருந்தாலும் அந்த தொலைக்காட்சி தன் பணியை செய்துகொண்டே இருக்கும். சமையலும் அவரே தான் (எங்களுக்கு ஒரு நாள் சமைத்துப் போடுவதாக கூறினார்). நாங்கள் ஒரே கட்டிடம் என்றாலும் அவர் அறைக்கு அவ்வளவாக போனது கிடையாது. அதுவும், அவர் என் Room Mate-ன் நன்பர், நான் அவ்வளவாக பேசியது கூட கிடையாது.
பின், நான் சென்னையில் வேலை கிடைத்து மாற்றலாகி வந்துவிட்டேன். ஒரு நாள் பெங்களூர்வாசிகளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, "உனக்குத் தெரியுமா? சீனிவாசன் இறந்து விட்டார்..." என்று கூறினர். எனக்கு நம்ப முடியாத வேதனையைத் தந்தது. பின் நடந்தது என்ன என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னது:
தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கும் அவர், அறையில் தொலைக்காட்சியை அலற விட்டு தன் வேலையை ஆரம்பிப்பார். அவர் ஒரு நாள் (அது தான் அவர் கடைசி நாள்) காலையில் எழுந்து தொலைக்காட்சியை அலற விட்டு, தன் அறைக் கதவை பாதி திறந்த நிலையில் விட்டிருக்கிறார். குளியலறையில் வாளியில் தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது குளியலறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது கால் வழுக்கி அவர் நெற்றி அந்த அறையில் இருந்த இரும்புக் கட்டிலின் மூலையில் அடிப்பட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் வலிப்பும் வந்திருக்கிறது. (முன்பே அவருக்கு வலிப்பு நோய் இருக்கிறதா என்று தெரியவில்லை). தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தினால் இவையாவும் வெளியில் கேட்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் உயிர் பிரிந்திருக்கிறது.
இவையாவும் அந்த கட்டிடத்தில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் அலுவலகத்திற்கு எப்பொழுதும் விடுப்பு எடுப்பதில்லை. அப்படியே அதிசயமாக எடுத்தாலும், அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவார். ஆனால், அன்று அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லையாதலால் வங்கியில் இருந்து ஒருவர் வந்து பார்த்துச் செல்ல வந்திருந்தார். அவர் தாம் சீனிவாசன் இறந்திருப்பதை கண்டறிந்தார். காலையின் இருந்து 2 - 3 முறை தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் நீர் இரைத்திருக்கிறார்கள். அதன் காரணம் அப்பொழுதுதான் அவர்களுக்கு விளங்கிற்று.
அவருக்கு ஒரே ஒரு சகோதரர் என்றும் அவர் திருச்சியில் இருப்பதாகவும் தெரியவந்தது. (அவர் இந்த செய்தியை எந்த அதிர்ச்சியும் காட்டாமல் இருந்தது ஆச்சரியம்). அவர் வந்து கையெழுத்து போட்டால் தான் பிணத்தை (காலை வரை சீனிவாசனாக இருந்தவர்) கொடுப்பதாக கூறினார்கள். பின்னர் அவர் வந்து சீனிவாசனை பெற்றுக் கொண்டு சென்றார். இறக்கும் பொழுது தன் உயிர் காப்பதற்கு என்ன என்ன முயற்சி செய்தாரோ...???
ஒரே கட்டிடத்தில் இருந்தவர், இறந்தது கூடத் தெரியாமல் மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்தால் சற்றே கலக்கமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது சென்னையில் நான் இருக்கும் அடுக்ககத்தில் கூட இப்படித்தான் இருக்கிறது. எப்பொழுதும் எல்லா வீட்டுக் கதவுகளும் சாத்தியே இருக்கும். அடுத்த வீட்டில் (flat-ல்) என்ன நடக்கிறது என்று கூடத்தெரியாமல் இருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிறு வயதில், தொலைக்காட்சி பெட்டி அவ்வளவு பரவலாக இல்லாத பொழுது எங்களுக்கு தெருவில் மற்ற சிறுவர்களுடன் மாலையில் விளையாடுவதும், எங்கள் தெருவில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் வெளியில் அமர்ந்து பேசுவதும் தான் நியாபகத்துக்கு வருகிறது. மீண்டும் அந்த நாள் வந்தால் தேவலை...