சமீபத்தில் தான் "பொன்னியின் செல்வன்" படித்தேன். இவ்வளவு வருடம் படிக்காமல் வீணாக்கிவிட்டது வருத்தம் தான். Better Late than Ever. இதைப் படித்த பின் ponniyinselvan@yahoogroups.com -மிலும் உருப்படியாக உறுப்பினர் ஆகிவிட்டேன். இந்த பக்கம் புதினத்தை பாராட்ட அல்ல. பாராட்டு வார்த்தைகளுக்கு நான் எங்கே போவது? பொன்னியின் செல்வன் தந்த 'கிக்' "சிவகாமியின் சபதம்" மற்றும் "பார்த்திபன் கனவு" ஆகிய புதினங்களைப் படிக்க வைத்தது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகுமாம். இதை பொய்யாக்குவதற்கே கல்கி அவர்கள் "பொன்னியின் செல்வன்"-ஐ எழுதியிருப்பார் என நினைக்கிறேன். இந்த புதினத்தை திரைப்படமாக எடுக்க முயற்சிப்பதாக பலர் கூறியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு வெற்றி பெரும்? வெற்றி என்றால், வணிக ரீதியாகவும் சேர்த்து. காரணம்,
1) திரைப்படமாக எடுத்தால் வியாபார நோக்கோடு எடுக்ககூடாது. (அப்படியானால், இதை திரைப்படமாக எடுக்கவே முடியாது என்கிறீர்களா?)
2) ஐந்து பாகத்தையும் இரண்டரை - மூன்றரை மணி நேரத்தில் எடுத்தால் சில (பல) சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கும். அது நிச்சயம் கதையை பாதிக்கும். (கதை என்றால் என்ன என்று அறியாத இயக்குனர்களுக்கு நிச்சயம் இது பேரிடி தான்)
3) நம் தமிழ் திரைப்பட செலவு (budget) இந்த தயாரிப்பைத் தாங்குமா? சில பெரிய தயாரிப்பாளர்கள் சேர்ந்து வேண்டுமானால், தங்கள் கருப்பு பணத்தை இதில் முதலீடு செய்யலாம் (விரப்பனுக்கே பொது மன்னிப்பு அளிக்க விழைந்தவர்கள்தானே, இவர்களுக்கு பொது மன்னிப்பும் அளிக்கலாம்).
4) முக்கியமாக, நடிக நடிகையர் தேர்வு. பாத்திரத்திற்கு தேவையான நடிக நடிகையர் தேவை. "ராஜ ராஜ சோழன்" போல சிவாஜி கணேசன் எல்லாம் (இப்போதைக்கு) தேவையில்லை. சும்மா build up கொடுக்கிறவர்கள் தேவை இல்லை. அப்புறம், நந்தினிக்கு மழையில் நனைந்து பாடலெல்லாம் இல்லை.
5) திரைப்படம் rich-ஆ எல்லோரையும் reach ஆகனும்.
6) படம் சாமனியர்களை சென்று சேருவது முக்கியம். உதாரணம், பாரதி.
7) படம் "பொன்னியின் செல்வன்"-ஆக எடுக்கப்படவேண்டும். "ராஜ ராஜ சோழன்" போல அல்ல.
மேற்கூறிய எல்லா மற்றும் பல மறைமுக சிக்கல்களையும் தாண்டி படமாக்கப்பட்டால், நிச்சயம் நாமெல்லாம் தமிழ் திரைப்பட உலகத்தை நினைத்து "தத்தம்" காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். ஆனால், எனக்கு என்னவோ இந்த முயற்சி சரியானதாக தோன்றவில்லை. அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது எண்:2-ஐ தான். "பொன்னியின் செல்வன்"-ஐ திரைப்படமாக எடுப்பது சில Giga Bytes அளவை ஒரு Floppy-யில் அடைப்பது போல. நேரம் கருதி எந்த காட்சியை வெட்டுவது என்று போரே நடக்கும். இயக்குனர் மனிரத்னம் கூட இதற்கு திரைக்கதை எழுதியிருந்ததாக சுஜாதா கூறினார். அப்படியே எடுத்தாலும் எல்லோரும் "இது அந்த நாவலைப் போல இல்லை" என்று தான் கூறப்போகிறார்கள். சரி! இதற்கு என்ன தான் வழி. ஆங்! அது தான்!! அதே தான்!!! "பொன்னியின் செல்வனை" அழகாக ஒரு "அழுகை இல்லாத" தொலைக்காட்சி தொடராக, Mega Serial-ஆக எடுத்திறலாம். தற்போது தொலைக்காட்சி தொடராக எடுக்கப் படுவதாக அறிந்தேன். அதுவும் வந்தியத்தேவனாக ஒரு நடிகரை பார்த்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு நல்ல புதினத்தை சாதாரன தொடராக எடுப்பதை நினைத்து வேதனை அடைந்தேன். யாராவது, ஏதாவது சீக்கிரமா செய்யுங்களேன்... தொலைக்காட்சி தொடராக எடுப்பதனால், மேலே சொல்லப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், சில பயன்கள் ஏற்படவும் கூடும்.
1) இவைகளில் முதன்மையானது, எடுக்கப்படும் அத்தியாயங்களளின் எண்ணிக்கை. கதைக்கு தகுந்தார்போல், வாரங்களை கூட்டலாம் குறைக்கலாம். இது கதையின் ஓட்டத்திற்கு நல்லது. (ஆனால், வாராவாரம் suspense வைக்க சில காட்சிகளை நீட்டவோ, குறைக்கவோ கூடாது)
2) கதையும், காட்சியும் தான் முக்கியம். பிதாமகன் போல சிம்ரன் டான்ஸ் compromise தேவையில்லையே.
3) ஒவ்வொரு பாகத்திற்கும் தயாரிப்பாளர்கள் மாறிக்கொள்ளலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம்.
4) சரியான திட்டமிடல், தயாரிப்பு செலவைக் கட்டுப்படுத்தக் குடும். (இதற்கு மனிரத்னம் சரியான உதாரணம்)
5) நல்ல நடிக நடிகையரை தேர்வு செய்யலாம். நடுவில் "உருவங்கள் மாறலாம், ஆனால்..." போன்றவை தவிர்க்கப்படவேண்டும்.
6) செலவைப் பற்றி கவலை வேண்டாம். Good start is half done.
ம்ம்...இப்பொதைக்கு ஏக்கப் பெருமுச்சு தான் விட முடியும் போலிருக்கிறது.
பொன்னியின் செல்வரும்
பூங்குழலி அம்மையும்
வந்திய தேவனும்
வானதியும், குந்தவையும்
பழுவூர் நந்தினியும்
பழுவேட்டரையரும்
பாடாய் படுத்துகின்றனர்...
நாங்கள்
பாகாய் உருகுகிறோம்.