அவர் கூற்றுப் படி அழகாக இருப்பவளைத்தான் காதலிப்பார்களா என்று கேட்டேன். அவரும் குழப்பமாக ஆமாம் என்பது போல ஆமோதித்தார். அப்படிப் பார்த்தால் உலகில் காதலிப்பவர்கள் எல்லோரும் அழகாகவா இருக்கிறார்கள்? இல்லையே. எல்லோரும் ஐஸ்வர்யா ராயாகவோ அல்லது
என்னைப் பொருத்த வரை அழகு என்பது 90% மனதில் தான் இருக்கிறது. ஒரு பெண் நம்மை கடந்து செல்கிறாள் என்றால் அவள் புற அழகு அவளை ஒருமுறை திரும்ப பார்க்கத் தூண்டும். திரும்பிப் பார்ப்பீர்கள். அதற்காக அவள் உங்களை கடக்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள்? ஒரு கட்டத்தில், புற அழகு உங்களுக்கு கட்டாயம் அலுப்பைத் தந்துவிடும். ஆக, புற அழகு என்பது ஒருமுறை பார்க்க வைக்கும் visiting card. அவ்வளவே. நம்ம மூக்காயி கருப்பாயி எல்லாம் காதலிக்காதவர்களா என்ன? பெங்களூருவில் இருக்கும் என் நண்பன் ஒருவன், நான் சென்னைக்கு மாற்றலாகி வந்த சில நாட்கள் கழித்து என்னைப் பார்த்து, 'அப்பாடா! என்னை விட நீ கருப்பாக ஆகிவிட்டாயே!' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான் (விளையாட்டாக தான்). நான் மனதில் சிரித்துக் கொண்டேன்.
நான் பெரும்பாலும் பார்ப்பவை எல்லாவற்றையுமே ஒரு சர்வேயாக பார்க்கும் பழக்கம் உடையவன். என் மனதில் எப்பொழுதும் ஏதாவது ஒரு சர்வே ஓடிக்கொண்டிருக்கும். என் சர்வேக்களின் முடிவு தான் இந்த பதிவும். அழகில்லாதவளையே கல்யாணம் செய்துகொண்டாலும் கூட, சில நாட்களுக்குத் தான் பிடிக்காமல் போகும். பின் அந்த பெண் / ஆணுடைய பழக்க வழக்கங்கள் உங்களுக்கு பிடித்து விட்டால் பின் அழகு என்பதையே மறந்து விடுவீர்கள். இது என் நண்பனிடத்தில் நான் கண்ட உண்மை. திருமணத்திற்கு முன் அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. இதை நேரடியாக அவனுக்கு புரியவைக்க முடியவில்லை. என் அம்மாவிடம் சொன்னேன். என் அம்மா 'கல்யாணம் ஆனால் அதெல்லாம் சரியாகிவிடும்' என்றாள். ஆனால் அவன் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை. ஜாதகம் முதலிய சில நிர்பந்தங்களால் திருமணம் நடந்தது. அடிக்கடி சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தான். பின், ஒரு நாள் அவன், காத்துகொண்டிருந்தது போல, வசமாக என்னிடம் மாட்டினான். அவனிடம் இப்பொழுது உன் மனைவியின் அழகு பிடிக்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவன், அப்படியெல்லாம் இல்லையென்றும், எல்லாவற்றையும் அனுசரித்து போவதானவும், நல்ல பெண்ணாக(!) இருப்பதாகவும் கூறினான். (பின் அவன் வீட்டில் நடந்த மாமியார் மருமகள் பிரச்சினையில் குடும்பமே மருமகளுக்கு சப்போர்ட்டாக இருந்தது).
என் மற்றொரு நண்பன் ஒருவன் சன் மியூசிக்-ல் வரும் ஒரு பெண்ணை பார்த்தால், 'என் ஆளு வந்துட்டா' என்பான். அந்தப் பெண்ணை அவன் முதலில் பார்த்த பொழுது 'சன் மியூசிக்கில் ஃபிகர் செலக்ஷனே சரியில்லை' என்று கமென்ட் அடித்திருக்கிறான். அவனுக்கு அது நியாபகமில்லை. அவனிடம் கேட்டேன், 'ஒரு வேளை இந்தப் பெண்ணை முதல் முதலாக பார்க்கும் பொழுதும் இதே தான் சொல்லியிருப்பாயா?' என்றேன். அதற்கு அவன், 'ம்ஹூம்...ஆனா, அது ஏன்டா?' என்று என்னிடமே திருப்பிக் கேட்டான். அவனுக்கு புரியவில்லை. அழகில்லாதவர்களை முதல் முதலில் பார்த்தால் பிடிக்காமல், ஏன் சிலருக்கு அருவருப்பாகக் கூட தோன்றும். ஆனால், அவர்களிடம் நாம் பழக பழக சில நாட்களில் அவர்களிடம் உள்ள குறைகள் எல்லாம் சூரியன் வந்ததும் உருகிவிடும் பனியை போல உருகிவிடும். காரணம், குறைகள் என்று நாம் நினைத்திருப்பவை நமக்கு பழக்கப்பட்டிருக்கும். அது நம் மனதில் இருந்து விலகிவிடும். அவனுக்கு இதை விளக்கினேன்.
என் நண்பன் ஒரு பெண்ணை விரும்பினான். அவள் பார்ப்பதற்கு ஒன்றும் அழகில்லை (அதாவது நம்ம கண்களின் படி). ஆனால், அவளை காதலித்தான். பேச்சு திருமணம் செய்து கொள்வது வரை சென்றது. பின் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. ஆனால், ஒருவன் கேட்கும் பொழுது பெண் எப்படி இருப்பாள் என்று கேட்க, இவன் கொஞ்சம் போல கருப்பாக, சற்றே பூசினாற் போல இருப்பாள் என்று கூறினான். அதற்கு அவன், 'அப்புறம் ஏன் அவளை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாய்?' என்று கேட்டிருக்கிறான். எங்கு போய் சொல்வது? சிரிப்பு தான் வந்தது.
ஒரு முறை எங்கள் ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் கண்டது. எங்கள் ஊர் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத சிறிய ஊர். ஊரை சுற்றிலும் சில கிராமங்கள் (10+) இருக்கிறது. அதானாலேயே என் ஊர் பெயர் 'திருப்பத்தூர்'. அங்கு ஒரு கிராமத்துக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு பெண் பேருந்து புறப்படும் பொழுது வண்டியில் இருந்து இறங்கி வந்து, கசங்கிய தாள்களாக 20 ரூபாய் கொடுத்து 5 ஃபேர் & லவ்லி வாங்கி போனாள். எங்கோ விழாவுக்கு போகிறாள் போல. அந்தப் பெண் ஒன்றும் வசதியான பெண் அல்ல. நம் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தான் உலகத்தை அவளுக்கு காட்டும் கண்ணாடிகள். இந்த ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவளை எந்த அளவுக்கு அவள் நிறத்தின் மேல் ஒரு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள். பரிதாபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தது தவிற ஒன்றும் செய்ய முடியவில்லை என்னால். முதலில் இப்படிப்பட்ட விளாம்பரங்களை தடை செய்ய வேண்டும். இன்னும் கூட நம் திரைப்படங்களில் கதாநாயகியாக வெள்ளை தோலுடைய பெண்ணை தானே பார்க்கிறோம். கருப்பாக இருந்தால் அவள் கதாநாயகனின் தங்கை ஆகி விடுகிறாள். இந்த விஷயத்தில் சரிதாவிற்கும், அர்ச்சனாவிற்கும் ஒரு Hats-off.
'காதலுக்கு கண்ணில்லை' என்பது அடுத்தவர் கண்களுக்கு. காதலிப்பவர்களுக்கு அல்ல. நம் மக்களின் கூற்றுப்படி அழகு என்பது வெறும் நிறத்தில் அல்லவா இருக்கிறது? 'நம்ம ஊர் கலரே கருப்புதான். அதை பிடிக்கவில்லையா' என்று விவேக் சொல்வது தான் நியாபகத்திற்கு வருகிறது. எல்லா அம்மாக்களும் பெண் பார்க்கும் பொழுது, பெண் இன்னும் கலராக இருந்தால் தேவலை என்று தானே சொல்கிறார்கள்.
இப்பொழுது இயந்திர கதியில் தான் காதல் வருகிறது. அதுவும் முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையில். இந்தத் துறை வந்த பிறகு காதல் கல்யாணங்களின் எண்ணிக்கை என்னவோ உயர்ந்துவிட்டது தான். ஒரே ஆறுதல், கலப்பு திருமணங்களும் இதில் அடக்கம் என்பது. ஆனால் இந்தத் திருமணங்கள் காதல் திருமணங்களா என்று என்னை கேட்டால் சிரிப்பை தான் உதிர்ப்பேன். இவை பெரும்பாலும் 'மேட் (made) ஃபார் ஈச் அதர்' இல்லை, 'மேட் (mad) ஃபார் ஈச் அதர்' தான். மாற்றி மாற்றி ஏமாற்றி கொள்கிறார்கள். கவிதா சொன்னது போல, இது வெறும் MATCHING. அவ்வளவே. 'ரெண்டு பேரும் ஐ.டி.யா? ஓ.கே. இரண்டு சம்பளமா? ஓ.கே. ஒரே கம்பேனியா? ஓ.கே. ஒத்து வருவாளா? ஓ.கே. அப்ப காதலிக்கலாமா? ஓ.கே'. இது தான் நடக்கிறது. அதுவும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கூத்து இருக்கிறதே? ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் ஒரு இலட்சம் முதல் பணம் வேறு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் (இன்ஃபோசிஸ்ல்). உண்மையா தெரியவில்லை. காரணம், ஒரே கம்பெனி என்றால் அதிக காலம் அதே கம்பெனியில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை. அதனால் தான் இன்ஃபோசிஸ்ல் ஒரு மேட்ரிமோனியல் வலை கூட இருக்கிறது. இவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு சர்வே படி குறைந்தது 18 மாதங்கள் காதலித்திருந்தால் தான் அவர்களின் திருமணம் வெற்றி பெறுகிறது என்று கணித்திருக்கிறார்கள், இங்கல்ல இங்கிலாந்தில். இல்லாவிட்டால் காலையில் திருமணம், மாலையில் விவாகரத்து நோட்டீஸ் என்று ஏன் நடக்க போகிறது? (இந்த விஷயத்தில், நம் ஊரிலாவது பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் தலையெழுத்தே என்று வாழ்ந்து தான் தீரவேண்டும் என்ற Security இருக்கிறதே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்).
சமீபத்தில் ரசித்தது, ஸ்பைடர்மேன் II திரைப்படம். அதில் வரும் கதாநாயகி ஒரு வேளை கருப்பு தோலுடன் இருந்திருந்தால் அவள் நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்துப் பெண் போல தான் இருந்திருப்பாள். காசினோ ராயல் கதாநாயகி கூட பிரமாதமான அழகு கிடையாது. GODS must be crazy-ல் ஒரு ஆப்ரிக்க பழங்குடியினர் தான் கதாநாயகன். பார்க்க நோஞ்சானாக இருப்பார். என் வீட்டில் அந்த படத்தின் டி.வி.டி-யை காண்பித்த பொழுது அந்த படத்தை யாரும் பார்க்க இசையவில்லை. பின் அந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தவுடன் அவர்களுக்கு அந்த படத்தை மிகவும் பிடித்து விட்டது. எங்கோ கேள்விப்பட்டது, எந்த ஹாலிவுட் கதாநாயகிகளும் படம் முடியும் பொழுது அழகாகவே தெரிவார்கள். காரணம் அவர்களின் கதாபாத்திரம் தான்.
The Brief History of Time என்னும் பெஸ்ட் செல்லர் புத்தகத்தை எழுதிய கோட்பாட்டு இயற்பியலாளர் Stephen Hawking மோட்டோர் நியூரோன் என்னும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர். கழுத்துக்கு கீழ் எந்த உறுப்பும் வேலை செய்யாமல் ஒரு இயந்திர சக்கர நாற்காலியை மட்டுமே துணையாக வைத்து சாதனை படைத்தவர். அவரையும்(!) காதலித்து திருமணம் செய்து கொண்டாள் ஒரு பெண்.
(சில நேரங்களில் 'சார்! என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை' என்று நாமே கடிதம் போடுவோமே. அப்படித்தான் சில விஷயங்களும். கண்டுக்காதீங்க...ஆங்...)