Sunday, June 21, 2009

ஒரு நிமிடக் கதை



அங்கீகரித்தமைக்கு நன்றி:-

இது "'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது."

அடுத்த அடியெடுத்து வைத்தேன். 'க்ரீச்' மற்றும் 'டமார்'. என் வலதுபக்க பக்கவாட்டில் இருந்து ஏதோ ஒரு பெரிய உருவம், மஞ்சள் நிறத்தில், என்னை நோக்கி மிக அறுகாமையில் வந்து மோதியது. மிக அருகில் வந்த போது தான் உணர்ந்தேன், அது ஒரு லாரி என்று. ரொம்ப தாமதம். இடது கையில் நுழைக்கப்பட்டிருந்த கெல்மெட்டை தாங்கியபடி, வண்டியை அப்போது தான் சாலை ஓரத்தில் பார்க் செய்துவிட்டு, வண்டியில் வைக்க முடியாததால், கையில் கொண்டுவந்திருந்தேன் அதை. மற்றும் என்னுடைய இடது கையில் கூலிங்க்ளாஸை மடக்கி பிடித்திருந்தேன். வலது கையில் இருந்த அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் சாலையை கடந்திருந்தேன். என்னை சுற்றி ஏகப்பட்ட சத்தம். எல்லோரும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பது போல கத்தினார்கள். என்ன ஏது என்று சத்தம் வந்த திசைகளை நோக்கி திரும்பி பார்க்க நினைக்கையில், என் வலதுபக்க பக்கவாட்டில் இருந்து ஏதோ ஒரு பெரிய உருவம், மஞ்சள் நிறத்தில், என்னை நோக்கி மிக அறுகாமையில் வந்து மோதியது. மின்னல் வேகம் என்கிறார்களே. அது இது தான் போலும். அந்த சூழ்நிலையில் முன் வைத்த அடியை பின் வைக்க கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டது எல்லாம்.

சுத்தி இருந்தவர்கள் கத்தியது அதற்காகத்தான் என்று இப்பொழுது தான் விளங்கியது. வந்த வேகம் 60-70 இருக்கும். லாரி என் வலது பக்கம் இருந்து வந்தது. அது பழைய காலத்து லாரி. முன் பக்கம் இஞ்சின் பகுதி மட்டும் தனியாக தெரியுமே, அந்த மாடல் லாரி. வந்த வேகத்தில் கட்டுப்படில்லாமல் என் மேல் மோதியது. எங்கே மோதியது? என்னை அசால்ட்டாக தூக்கி வீசியது. லாரியின் முன்பக்கம் என்னை இடித்ததாலும், லாரி டிரைவர் இதை முடிந்தவரை தடுக்க முயன்றதாலும் சடாரென்று பிரேக் அடித்தார். ஆனாலும் என் மேல் மோதுவதை தவிற அவருக்கும், அவர் லாரிக்கும் வேறு வழி தெரியவில்லை. இஞ்சினின் உயரம் தாண்டி தலை இருந்ததால் தலையை தொடவில்லை லாரி. ஆனால், இடித்த வேகத்தில் தோளில் இருந்து தலை வலப்பக்கம் சாய்ந்து கழுத்தில் பயங்கரமாக நரம்பை வெட்டி பிடுங்கி வெளியே இழுத்தது போல் இழுத்தது. தலை முதல் கால் வரை என் உடம்பு ஒரு பெரிய "U" போல பக்கவாட்டில் வளைந்தது.

மோதிய வேகத்தில் என் உடம்பு பறக்க ஆரம்பித்தது. இடது கையில் இருந்த கெல்மெட்டும், கையில் இருந்த கூலிங்க்ளாஸும் ஒரு முறை லாரியின் மீது மோதி, கெல்மெட் பறக்க ஆரம்பித்தது. கூலிங்க்ளாஸ் உடைய ஆரம்பித்தது. சட்டைப்பையில் இருந்த சில வஸ்துக்கள் சிதற ஆரம்பித்தது. கண்ணில் அனிந்திருந்த கண்ணாடியும் என் முகத்தை விட்டு விலகியது. என் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் ஆளுக்கொரு பக்கம் சிதறினோம்.மற்றொரு கையில் இருந்த அலைபேசி கையை விட்டு விலக ஆரம்பித்தது. புதிய அலைபேசி. கிஃப்ட் வந்தது. 5 மெகா பிக்செல் காமெரா உள்ளது. அதற்காகவே பிடிக்கும். சில பிரச்சினை இருந்ததால் அதனை சர்வீஸ் செய்ய நந்தனம் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு வந்திருந்தேன். அலைபேசியை திரும்பி வாங்கி அதனை அவளுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன்.

என் கண்படும் தூரம் தாண்டி விழுந்தது அலைபேசி. கண்டிப்பாக இந்த சத்தங்கள் அவளுக்கு கேட்டிருக்கும். பதட்டப்பட்டுக்கொண்டிருப்பாள். வாயில் இருந்தும் தோள்பட்டையில் இருந்தும் வலி உணர ஆரம்பித்தது. அலைபேசி கீழே விழுந்த சத்தம் மெல்லிதாக கேட்டது. ஏற்கனவே மோதியதால் வலது பக்க தோள்பட்டையில் சொல்ல முடியாத அளவுக்கு வலி, இப்பொழுது என் உடம்பு கீழே விழ இடம் பார்த்துக் கொண்டிருந்தது. ஐயோ! கடவுளே!! இந்த நேரம் நான் மீண்டும் இன்னொரு வாகனம் மீது விழாமல் இருக்கவேண்டுமே! நல்ல வேளையாக விழப்போகும் இடம் சாலை. ஆனால், இன்னொரு வாகனம் என் மேல் ஏறாமல் இருக்கவேண்டும். மீண்டும் இடது தோள்பட்டை தரையில் படாமல் இருக்க வேண்டும். என் அதிர்ஷ்டம் எந்த வாகனமும் என் மேல் ஏறவில்லை. ஆனால், என் துரதிர்ஷ்டம் என் வலது பக்க தோள்பட்டையே மீண்டும் தரைவில் பட்டது. ம்கூம்...நொறுங்கியது. அம்மா...!!!

விழுந்ததும் அப்படியே விழவில்லை. தரையில் விழுந்ததும், விழுந்த வேகத்தில் உருள ஆரம்பித்தேன். முதல் முறை உருளும் போது தரையில் இருந்து மீண்டும் ஒரு அடி உயரே சென்று சுற்றிக் கொண்டிருந்தேன். பின் மீண்டும் விழுந்து, இரண்டாவது முறை, இம்முறை சற்றே தரையுடன் சேர்த்தே உருண்டேன். பின் தேர் நிலைக்கு திரும்பியது போல தரையில், வானத்தை பார்த்தபடி மல்லாக்க விழுந்து கிடந்தேன். முதம் முறை விழுந்து உருண்டதும், பின் மண்டை தரையில் ஓங்கி அடித்தது. அந்த அடி மூளை வரை எதிரொலித்தது. வெளியேறுவது ரத்தம் போல் இருந்தது. இடம் வலமாக ஒரு முறை தலையை ஆட்டி, உடம்பும் அசைவற்று கிடந்தது. எண்ணங்கள் மட்டும் இன்னும் செயல் இழக்கவில்லை போலும்.

தூரத்தில் அலைபேசி இன்னும் உயிரோடிருந்தது. கண்டிப்பாக எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கத்திக்கொண்டிருப்பாள் அவள். என் உடம்பில் பல இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியேரும் பொழுது வலி தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால், எழும்புகள் நொறுங்கியதால் வலிகளை பயங்கரமாக உணரமுடிந்தது. வலியில் கத்தலாம் என்று பார்த்தால், முடியவில்லை. வெறும் காத்து தான் வந்தது. எழ முயற்சித்தேன். முடியவில்லை. ஏதோ பாதி எழுந்து பின் விழுந்தது போல இருந்தது. ஆனால், என்னால் ஒரு அங்குலம் கூட நகர / அசைக்க முடியவில்லை என்பது மட்டும் நிஜம். கை கால்கள் இருகிப் போய் வெறும் பார்சல் போல கிடந்தேன். யாராவாது அப்புறப்படுத்தினால் மட்டுமே உண்டு.

அவசர மருத்துவ செலவுக்கு கம்பெனி பணம் கொடுக்கும். விபத்து இன்சூரன்ஸ் எடுத்தாயிற்று. 4 லட்சம் வரை பார்த்து கொள்ளலாம். ஆனால், அவளை தனியாக விட்டு விடுவேனோ என்ற பயம் தொற்றிகொண்டது. மகளை ஸ்கூலிலிருந்து கூட்டி வர வேண்டும். அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது. யார் போய் அழைத்து வருவார்கள்? அம்மா மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தாள். அவளுக்காக வாங்கி வைத்த கடிகாரம் பேன்ட் பாக்கெட்டில் இருந்தது.

சுற்றி நடப்பவை பார்க்க முடியவில்லை. ரத்தம் நிறைய வெளியேறிவிட்டதால் மயக்கம் வருவது போல இருந்தது. பார்வை மங்குகிறது. ஏதோ நிழல்கள் எதிரில் ஆடுவது போல இருந்தது. சுற்றி கேட்ட சத்தங்களில் ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் மட்டும் லேசாக கேட்டது. அந்த சத்தமும் கரைந்தது. கேட்கும் திறன் குறைகிறதா, மயக்கத்தினால் கேட்கவில்லையா அல்லது அம்மா அந்த குழந்தையை தூரத்தில் கொண்டு செல்கிறாளா? தெரியவில்லை.

சிலர் என்னை தூக்க முயன்றார்கள். யாரோ என்னை நெருங்கி வந்து வாயில் தண்ணீர் ஊற்றினார்கள். அதனை விழுங்க முயற்சித்தேன் முடியவில்லை. மற்றொருவர் என் சட்டை பையில் துழாவினார். இன்னொருவர் நொருங்கி கிடந்த என் செல்போன எடுத்து யாருக்கோ நம்பரை தேடிக் கொண்டிருந்தார். அவளுடைய நம்பரை அவருக்கு கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது. 'யாராவது ஏதாவது செய்யுங்கள். அல்லது சீக்கிரம் சாகவிடுங்கள்' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. வலி அப்படி.

ஆம்புலன்ஸுக்கு போன் போயிருக்கும். எனக்கு நம்பிக்கை இல்லை. ஆம்புலன்ஸ் வர எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். நானாக எழுந்து மருத்துவமணை சென்றால் தான் உண்டு. கொஞ்ச நேரம் பார்த்து, கொஞ்ச நேரம் என்றால் 4-6 வினாடி, எனக்கு உடல் முழுவதும் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. வெட்டி வெட்டி இழுக்குமோ என்று தெரிந்தது. இன்னும் எத்தனை நேரம் இந்த அவஸ்தைகளை அனுபவிக்கவேண்டுமோ தெரியவில்லை.

மனதின் ஓரம் பிழைத்துவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அது ஏனோ, ஒரு அசையாத நம்பிக்கை. ஒரு வேளை காயங்கள் மரண காயங்களாக இல்லாமல் இருப்பது போன்ற உணர்வுகள் காரணமா? தெரியவில்லை. ஆனால், பிழைத்து விடுவேன். சில விஷயங்களில் எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. அது போல தான் இதுவும். சாக மாட்டேன். சில கடமைகள் வேறு பாக்கி இருக்கிறதே. ஒரு வேளை, விபத்தென்றால் என்ன என்று நான் அறிய கடவுள் இந்த சூழ்நிலையை கொடுத்தானா? அதுவும் தெரியவில்லை. ஆனால், நம்பிக்கை. பிழைத்து விடுவேன் என்று தோன்றியது.

ஒரு வேளை, பிழைக்காமல் போனால்...? அது மட்டும் பயம் கொடுத்தது.

ரத்தம் வெளியேறியதால், எனக்கு மயக்கம் வந்துகொண்டே இருந்தது. இன்னும் சில மைக்ரோ வினாடிகளில் மயக்கம் போட்டுவிடுவேன். மீண்டும் கண் திறக்கும் போது கண்டிப்பாக ஆஸ்பத்திரியில் இருப்பேன். வலிகள் மறத்துப் போனது போல் இருந்தது. உடம்பு மறத்துக் கொண்டே வந்தது. கண்கள் சொருக ஆரம்பித்தது. வேகமாக மயங்க ஆரம்பிக்..கி...

பிற்சேர்க்கை

இந்த கதை Flow என்னும் மனநிலையை ஒத்து இருக்கிறது. எழுதும் பொழுதெல்லாம் அதை பற்றி தெரியவில்லை. பின் வேறொன்றை பற்றி படிக்கும் போது எதேச்சையாக தெரிந்து கொண்டது.

"...இந்த மனநிலையை மிகாலி செக்சென்மிகாலி (Mihály Csíkszentmihályi) எனும் மனவியல் ஆய்வாளர் Flow என்கிறார். Flow-இன் போது காலம் ஸ்லோமோஷனின்ல் போல் மிக தாமதாக இயங்கும். ஒரு விபத்தில் நீங்கள் தூக்கி வீசப்படும் போது அந்த சில நொடிகளை காற்றில் பறப்பது அரைமணி போல் துல்லியமாக உணரக்கூடும். பொதுவாக விளையாட்டில் சாதனைகள் காலம் உறையும் மனநிலையில் தான் செய்யப்படுகின்றன."