Thursday, April 29, 2010

சச்சினுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

கொஞ்சம் லேட்டான பதிவு...


சென்னை ஒரு வழியாக ஐ.பி.எல். கோப்பையை வென்றாகி விட்டது. முதல் முறை இறுதி போட்டிக்கு வந்த மும்பை, பரிதாபமாக தோற்றது. ஆனால், பரிசளிக்கும் போது சச்சின் கூறியவை தான் நெருடுகிறது. சென்னைக்கு வாழ்த்து சொல்லியவர், சைக்கிள் கேப்பில் சொன்னது, "நீங்கள் இந்த 'ஒரு' மேட்சில் எங்களை விட நன்றாக ஆடிவிட்டீர்கள்" என்று. இதில் சச்சினின் வருத்தம் கலந்த கோபம் வெளிப்படுவதாக உணருகிறேன். "கஷ்டப்பட்டு எல்லா மேட்சிலும் வென்று நாங்க பைனல் வருவோம், நீங்க நோகாம அந்த ஒரு மேட்சை ஜெயிச்சுட்டு கப் அடிச்சிடுவீங்க" என்ற தொனி. இது சச்சினிடமிருந்து வெளிப்படுவது தான் கவலை தருகிறது.

இந்த தொடரில் இந்த இரு அணிகளையும் எடை போட்டு பார்த்தால், மும்பை பல விஷயங்களில் சென்னையை ஜஸ்ட் லைக்-தட் ஓவர்டேக் செய்கிறது. காரணம், அந்த அணியின் பின்புலம் அப்படி. அணியின் ஓனர் அம்பானி. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இறைக்க முடியும். திருப்பதி பாலாஜிக்கே 2 கோடி லஞ்சம் கொடுக்க கூடிய அளவு பரந்த மனது. இவர்களுடைய ஆசியால், ஒரே ஒரு மேட்சில் குறைந்த பந்தில் 50 ரண்களை எடுத்த பொல்லார்டை அதிக விலை கொடுத்து (6 கோடிகள்?) எடுத்துள்ளனர். இவர் கடைசி சில ஆட்டங்களில் சோபித்தாலும், இவரை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் கலக்கினார்கள். பொல்லார்டுக்கு சச்சின் ரெக்கமன்டேஷன் வேறு.

மேலும் இந்த அணியில் உள்ள உலகின் ஆட்டக்காரர்கள் சில: பொல்லார்ட், ஜெயசூரியா, ப்ரேவோ, மலிங்கா, ஜான்டி ரோட்ஸ் (பீல்டிங் கோச்), பொல்லாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முக்கிமாக சச்சின். மும்பை அணியில் சேர்க்கபட்டவர்கள் மொத்தம் 7 கீப்பர்கள். இப்படிப்பட்ட அணியை வைத்துக் கொண்டு இவர்கள் சாதித்தது, 2008-ல் 5-வது இடமும், 2009-ல் 7-வது இடமும்.

ஆனால், சென்னை அணியை எடுத்து கொண்டால், இந்த அணியில் இருப்பது தோனி, ஹைடன், முரளி மட்டுமே. சென்னையிலோ தோனி மற்றும் பார்த்தீவ் பட்டேல் மட்டுமே கீப்பர்கள். ரெய்னா, பொல்லிங்கர், அஸ்வின் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்ட பொழுது அவர்கள் எல்லாம் சாதாரண வீரர்கள் மட்டுமே. பிலின்டாப் விளையாடவே இல்லை.

இதில் சென்னை 2008-ல் இறுதி ஆட்டம் வரையிலும் (கடைசி பந்தில் தோற்றது), 2009-ல் அரை இறுதி வரையிலும், 2010-ல் கோப்பை. எப்படி சாத்தியம் ஆனது?

பெரிய பெரிய வீரர்களை சேர்த்தால் மட்டுமே ஒரு அணி வென்றுவிட முடியாது என்பது சச்சினுக்கு தெரியும் தான். முக்கியமாக அந்த வீரர்கள் பாஃம்மில் இருக்க வேண்டும். அதனால் தான் கடந்த 2 ஆண்டுகளும் இந்த அணி சோபிக்க வில்லை. 2008-லும், 2009-லும் கோப்பையை வென்றது யாரும் எதிர்பார்க்காத சிறிய அணிகளான ராஜஸ்தானும், ஹைதராபாத்தும். டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ, பெங்களூருவோ, சென்னையோ இல்லை. இந்த முறை மும்பையின் அனைத்து வீரர்களும் நல்ல பாஃம்மில் இருந்ததாலும், சில முக்கிய முடிவுகள் எடுத்ததாலும் (ஜெயசூர்யாவை சேர்க்காமல் இருந்தது) இந்த முறை வெற்றியின் விளிம்பு வரை வர முடிந்தது.

ஆனால், கடைசியில் சென்னை வென்றதற்கான காரணங்கள்:

1) 2 அரை இறுதி ஆட்டங்களும், 3-வது இடத்திற்கான ஒரு ஆட்டமும் நடந்த ஆட்டங்களின் ஸ்கோரை பார்த்தாலே தெரியும், அந்த மும்பை பிட்சின் நிலையை. 140+ எடுப்பதே கடினமாக இருந்தது. அதுவும், சென்னை 142 ரன்களை மட்டுமே எடுத்து, பின் டெக்கானை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சாதித்தவர்கள் ஸ்பின்னர்களும், ஸ்லோ பௌலர்களும். சச்சின் இதை கணிக்க தவறியது. அணியில் மாற்றம் இல்லை. வேக பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியது. அதனால் தான் கடைசி பத்து ஓவரில் 106 ரன்கள்.

2) பொல்லார்டை 3 ஓவர்கள் மட்டுமே இருக்கும் போது களமிறக்கியது. இன்னும் முன்னதாக களாமிறக்கியிருந்தால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். சச்சின் செய்த 2வது தவறு இது.

3) 18வது ஓவரில் 22 ரன்களை குவித்தார் பொல்லார்ட். அடுத்த ஓவரும் இதே போல் இருந்திருந்தால் சென்னை காலி. 19வது ஓவரை வீசியது ஆல்பி மார்கல். இவர் பொதுவாக ரன்களை வாரி வழங்குபவர் தான். ஆனால், இங்கே தோனியின் அறிவுரை உதவியது. பொல்லார்ட் அடித்த ரன்கள் பெரும்பாலும் மிட்-ஆன், மிட்-ஆஃப் மற்றும் மிட் விக்கெட் திசைகளில் மட்டுமே. அடிக்காத திசைகள் என்று பார்த்தால் கவர், பாயின்ட் மற்றும் பைன் லெக். பொல்லார்ட் (அஃப்ரிடி போல) 'கண்டபடி' அடித்து ஆடாதவர். அதனால் தான் தோனி, மார்கலிடம் சென்று பந்தை ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே போடுமாறு கூறினார். அதனால் தான் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் பந்தில் ரன் இல்லை.

இரண்டாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தில் லாங்-ஆஃப் திசையில் ஒரு ரன்.

மூன்றாவது பந்தில் பொல்லார்ட் 4.

நான்காவது பந்தில் பொல்லார்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரன் இல்லை.

ஐந்தாவது பந்து 1 ரன் மற்றும் ரன் அவுட்.

ஆறாவது பந்தில் பொல்லார்ட் மிட்-ஆஃபில் அவுட்.

ஆக, 0 - 1 - 4 - 0 - W1 - W

4) இது முக்கியமானது. பொல்லார்டை வெளியேற்றிய விதம். தோனி அமைத்த பீல்டிங் வியூகம் இது வரை யாரும் முயற்சி செய்யாதது. ஹைடனை மிட்-ஆஃபிலும், ரெய்னாவை லாங் ஆஃபிலும் நிற்க வைத்தது. இருவரும் சிறந்த பீல்டர்கள். இந்த இரு இடத்தினால், பைன் லெக்கில் யாரும் இல்லை. இது கொஞ்சம் டேஞ்சரான பீல்ட் செட்டிங். (கவனிக்க. பீல்டிங்கில் ஒருவரை 30 Yard வட்டத்தில் நிற்க வைத்தால், அவர்களுக்கு பின்னால் (Deep-ல்) மற்றொரு பீல்டரை நிறுத்த மாட்டார்கள். நிறுத்துவதும் வேஸ்ட்). எதிர்பார்த்தது போலவே பொல்லார்ட் ஹைடனிடம் அவுட்டானார்.

இந்த விஷயம் தான் தோனிக்கும் சச்சினுக்குமான வித்தியாசம். இந்த வித்தியாசம் தான் சென்னை கோப்பை வெல்ல உதவியது. இது சச்சினிடம் மிஸ்ஸிங். தோனியே இதை ஒரு வித்தியாசமான முயற்சி, இந்த முயற்சி பெயிலாகியிருந்தால் அதற்கான பலனும் தான் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்றார்.

ஆக, சச்சினுக்கும் தோனிக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு, இந்த சின்ன விஷயம் தான். இது சச்சினுக்கு வராது. அதனால் தான், சென்னை அணியின் ஓனர்கள் முதலில் தோனிக்கு குறி வைத்தது.

சச்சின் ஒவ்வொரு உலக கோப்பையிலும் வெளுத்து வாங்குவார். ஆனால், மற்ற இந்திய வீரர்களின் ஆட்டத்தால் வெற்றி பெறமுடியாமல் போய்விடும். இதே பிரச்சினை தான் மும்பைக்கும். அதன் வெளிப்பாடு தான் சச்சினின் அந்த வாசகம்.

இதில் இன்னும் இரண்டு விஷயம்.

1) கவாஸ்கர் மும்பைகர். சச்சினின் பாதங்களுக்கு முத்தமிட விரும்பியவர். கட்டாயம் சச்சினுக்கு தான் சப்போர்ட் செய்வார். சந்தேகமில்லை. டாஸ் போடும் முன், சச்சினை ரவி சாஸ்திரி பேட்டி எடுக்க, தோனியை கவாஸ்கர் 'பார்த்து' கொண்டார். அவர் தோனியை கேட்ட கேள்வி, அவரை மனதளவில் பலவீனப்படுத்த கேட்கப் பட்ட கேள்வி. "பெரிய பைனல் இது. (இதயத்தை காட்டி) இங்கே படபடப்பும், (வயிற்றை காட்டி) இங்கே கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லையா?". இதை ஏன் கேட்டார் என்று புரியவில்லை. (பின் சச்சினிடமும் கேட்டிருக்கிறார் கவாஸ்கர். "முதல் இரண்டு செமியிலும் முதலில் பேட் செய்தவர்களே வென்றிருக்கிறார்கள்? Are you not worried?". சுட்டிக் காட்டிய ராஜாவிற்கு நன்றி).

2) வட இந்திய ஊடகங்களின் செயல்பாடு. மும்பை வென்றிருந்தால் அன்று இரவு முழுவதும் அதையே காண்பித்திருப்பார்கள். ஆனால், சென்னை வென்றதை வெறும் விளையாட்டு செய்திகளில் மட்டுமே காட்டினார்கள். அவர்களுக்கு அப்போதைய ப்ரேக்கிங் நியூஸ் 'லலித் மோடி' பற்றியது. சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான்.

அவர்களுக்கு + சச்சினுக்கு தோனி வைத்தது தான் ஐ.பி.எல். 2010-ன் மிகப்பெரிய ஆப்பு.

சென்னையின் ஆட்டமும், ஆட்டம் கண்ட மும்பையும்...

Wednesday, April 21, 2010

என்ன ஆச்சு சென்னை போலீஸுக்கு?

சென்னை போலீஸை பற்றி முன்பொருமுறை எழுதிய பதிவு...

போன மாதம் பாஸ்போர்ட் ரினீவலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. மேலும், அலுவலுக்கு அதற்காக அரை நாள் விடுமுறை போடவேண்டியிருந்ததால், ஒரு ஏஜென்டை பிடித்தேன். அவர் கேட்டது 2000 ரூபாய். 1700 ரூபாய் ரினீவலுக்கும், இதர செலவுகளுடன் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டார். பிறகு அப்ளிகேஷன் பூர்த்தி செய்து கொண்டு, ஒரு சனிக்கிழமை காலை நேரில் சென்று அரை நாள் க்யூவில் நின்று ஒரு வழியாக பாஸ்போர்ட் வந்துவிட்டது. ஆனால், நான் கொடுத்தது வெறும் 1000 ரூபாய்க்கான டி.டி. அப்ப, மீதி? அது ஏஜென்ட்டுக்கு. அடங்கொய்யால...இதுக்கு நானே அந்த ஃபார்மை பூர்த்தி செஞ்சிருப்பேனே...


சரி விடுங்க. பாஸ்போர்ட் வந்த 15 நாள் கழிச்சு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஒரு (போன்) கால் வந்தது. பேசியவர் பள்ளிக்கரனை காவல்நிலையத்தில் இருந்து. வெரிப்பிகேஷனுக்காக என்று சொன்னவர், உடனே வரலாமானு கேட்டார். எனக்கோ சந்தேகம். அதான் பாஸ்போர்ட் வந்துடுச்சே, அப்புறம் ஏன் இவர் வர்றார்னு. பாஸ்போர்ட் வந்ததுக்கப்புறம் வெரிபிகேஷனானு ஒரே குழப்பம். ஒருவேளை எவனாச்சும் 'சீரியஸா' விளையாடுறானா?

"சார். எனக்கு ரினீவல் ஆன பாஸ்போர்ட் ஏற்கனவே வந்துடுச்சு. வெரிப்பிகேஷன் தேவையா?"

"சரி அப்ப. திருப்பி அனுப்பிடட்டுமா?"

"எனக்கு ப்ராஸஸ் என்னன்னு தெரியல"

"இல்லைங்க. திருப்பி அனுப்பிட்டா, உங்க பாஸ்போர்ட் கேன்சல் ஆயிடும்"ன்னார்.

அட பாவிங்களா. அப்ப வர வேண்டியது தான?

"சரி. வாங்க சார்"னு சொன்னேன். வீட்டு லேன்ட்மார்க்கெல்லாம் கேட்டுட்டு இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவேன் என்றார்.

இப்ப தான் யோசிச்சேன். கையில் இருந்த காசை, காலையில் தான் கேபிள்காரர் வாங்கிட்டு போனார். சரி! ராத்திரி சாப்பிட வெளிய போகும் போது ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கலாம்னு பர்ஸை காலியா வெச்சிருந்தேன். இப்ப, வெரிபிகேஷனுக்காக வற்றேனுட்டார். கட்டாயம் 50 இல்ல 100 எதிர்பார்ப்பார். என்ன செய்யலாம்னு யோசிச்சு, ட்ரஸ் மாத்திகிட்டு ஏ.டி.எம் சென்று பணம் எடுக்க போய் ஒரு அரை மணி நேரத்துல் திரும்பி வந்தேன்.

நான் வீட்டுக்கு வரவும், அவரும் வரவே சரியா இருந்துச்சு. மேலே வீட்டுக்கு கூட்டிட்டி போலாமானு ஒரு சந்தேகம். கரெக்டா கீழ் போர்ஷன்ல இருந்தவர் அவரை பார்த்து, "போன வாரம் நீங்க தானே, என் பேத்தியோட பாஸ்போர்ட் வெரிப்பிகேஷனுக்கு வந்தது?"னு கேட்டார். எனக்கு டவுட் க்ளியராகிடுச்சு.

சரின்னு மேலே வீட்டுக்கு கூட்டிட்டு போய், ஒரு சேர் போட்டு உக்கார வெச்சேன்.

2 பார்ம் கொடுத்து ஃபில்-அப் செய்ய சொன்னார். எனக்கு தெரிஞ்ச வரை ஃபில்-அப் செஞ்சுட்டு அவர்கிட்ட கொடுத்தேன். பின் அவர், "நீங்க பாஸ்போர்ட் அப்ளை பன்னும் போது ரெண்டு ரெஃபரன்ஸ் கொடுத்தீங்களே, அவர்களோட அட்ரஸையும் எழுதுங்க" என்றார்.

எனக்கு அதெல்லாம் நியாபகம் இல்லை. அவரே அந்த இரண்டு பேர் பெயரையும் சொல்ல, அவர்களில் ஒருவர் கீழ் போர்ஷனில் இருந்தவர். அவர் பெயரையும், மற்றொரொ போர்ஷனில் இருந்தவர் அட்ரஸையும் எழுதினேன்.

"அவங்க ரெண்டு பேர் கையெழுத்தையும் வாங்கனுமா? அவர்களில் ஒருவர் ஊரில் இல்லை".

"பரவாயில்லை. நீங்களே போட்டுடுங்க"

(ஆகா, க்ரைம் ரேட் கூடுதே...) "!!!"

எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சு, ஒரு அட்ரஸ் ஃப்ரூப்பையும் கொடுத்து, கையெழுத்து + கைரேகை வெச்சு, ஃப்ராஸசை முடிச்சேன்.

அடுத்த ஸீன் என்னனு தான் எனக்கு தெரியுமே!

என்னை பார்த்து "வர்றேன் சார்" என்பார்.

"சரி" என்பேன்.

தலையை சொறிவார். சரின்னு 50 ரூபா கொடுப்பேன்.

"மத்த எடத்துல எல்லாம் 100 ரூபா தான் வாங்குவேன்" என்பார்.

சரின்னு, இன்னொரு 50 ரூபா கொடுப்பேன்.

இந்த காட்சியை தான் எதிர்பார்த்தேன்.

ஆனால், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி அவர் எடுத்து வந்திருந்த பையில் போட்டார். போட்டுவிட்டு, என்னை பார்க்கவில்லை. (என்னை எதற்கு பார்க்கவில்லை. ஒருவேளை என்னை பார்த்தால், கண்டிப்பாக ரியாக்ஷன் கொடுப்பேன். சிரிப்பேன். 50 ரூபாய் கொடுப்பேன். அதனால், அவர் என் முகத்தை கூட பார்க்கவில்லை?).

"வரேன் சார்"னு சொல்லி கதவை நோக்கி திரும்பி அப்படியே எழுந்து வெளியே சென்றுவிட்டார். என்னப்பா ஆச்சு சென்னை போலீஸுக்கு?

நான் அப்டியே ஷாக்காயிட்டேன்...

அணிச்சை செயலாக(!), ஒரு வேளை, நாமளே தாமாக கொடுத்தால், வாங்கியிருப்பாரா தெரியாது. ஆனால், நாமே கொடுத்தால் அதுவும் தவறு தான். அதனால் நானும் கொடுக்கவில்லை.

இது ஒரு உதாரணம் என்றால், வீட்டுக்கு ஃபோன் கனெக்ஷன் கொடுக்க வந்தவர்களும் இப்படி தான். ரெண்டு பேர் வந்தார்கள். கனெக்ஷன் கொடுத்துவிட்டு எதுவும் கேட்காமலும், எதுவும் எதிர்பார்க்காமலும் சென்றனர். அன்று என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், வந்தவர்களுக்கு கொஞ்சம் கேக் கொடுத்தோம். அவர்களும் வாங்கிக் கொண்டு வாழ்த்தினார்கள். அதிலும் ஒருவர், கொடுக்கும் கேக்கை ஒரு பேபரில் சுத்தி கொடுக்க சொன்னார். ஆபீஸுக்கு கொண்டு சென்று அங்குள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள...

ஆனால், திருந்தாதவர்கள் கேஸ் கனெக்ஷன் கொடுக்க வந்தவர்கள். ஒரு கனெக்ஷனுக்கு 100 ரூபாய் என்று வாங்கி கொண்டு தான் விட்டார்கள்.