Wednesday, April 21, 2010

என்ன ஆச்சு சென்னை போலீஸுக்கு?

சென்னை போலீஸை பற்றி முன்பொருமுறை எழுதிய பதிவு...

போன மாதம் பாஸ்போர்ட் ரினீவலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. மேலும், அலுவலுக்கு அதற்காக அரை நாள் விடுமுறை போடவேண்டியிருந்ததால், ஒரு ஏஜென்டை பிடித்தேன். அவர் கேட்டது 2000 ரூபாய். 1700 ரூபாய் ரினீவலுக்கும், இதர செலவுகளுடன் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டார். பிறகு அப்ளிகேஷன் பூர்த்தி செய்து கொண்டு, ஒரு சனிக்கிழமை காலை நேரில் சென்று அரை நாள் க்யூவில் நின்று ஒரு வழியாக பாஸ்போர்ட் வந்துவிட்டது. ஆனால், நான் கொடுத்தது வெறும் 1000 ரூபாய்க்கான டி.டி. அப்ப, மீதி? அது ஏஜென்ட்டுக்கு. அடங்கொய்யால...இதுக்கு நானே அந்த ஃபார்மை பூர்த்தி செஞ்சிருப்பேனே...


சரி விடுங்க. பாஸ்போர்ட் வந்த 15 நாள் கழிச்சு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஒரு (போன்) கால் வந்தது. பேசியவர் பள்ளிக்கரனை காவல்நிலையத்தில் இருந்து. வெரிப்பிகேஷனுக்காக என்று சொன்னவர், உடனே வரலாமானு கேட்டார். எனக்கோ சந்தேகம். அதான் பாஸ்போர்ட் வந்துடுச்சே, அப்புறம் ஏன் இவர் வர்றார்னு. பாஸ்போர்ட் வந்ததுக்கப்புறம் வெரிபிகேஷனானு ஒரே குழப்பம். ஒருவேளை எவனாச்சும் 'சீரியஸா' விளையாடுறானா?

"சார். எனக்கு ரினீவல் ஆன பாஸ்போர்ட் ஏற்கனவே வந்துடுச்சு. வெரிப்பிகேஷன் தேவையா?"

"சரி அப்ப. திருப்பி அனுப்பிடட்டுமா?"

"எனக்கு ப்ராஸஸ் என்னன்னு தெரியல"

"இல்லைங்க. திருப்பி அனுப்பிட்டா, உங்க பாஸ்போர்ட் கேன்சல் ஆயிடும்"ன்னார்.

அட பாவிங்களா. அப்ப வர வேண்டியது தான?

"சரி. வாங்க சார்"னு சொன்னேன். வீட்டு லேன்ட்மார்க்கெல்லாம் கேட்டுட்டு இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவேன் என்றார்.

இப்ப தான் யோசிச்சேன். கையில் இருந்த காசை, காலையில் தான் கேபிள்காரர் வாங்கிட்டு போனார். சரி! ராத்திரி சாப்பிட வெளிய போகும் போது ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கலாம்னு பர்ஸை காலியா வெச்சிருந்தேன். இப்ப, வெரிபிகேஷனுக்காக வற்றேனுட்டார். கட்டாயம் 50 இல்ல 100 எதிர்பார்ப்பார். என்ன செய்யலாம்னு யோசிச்சு, ட்ரஸ் மாத்திகிட்டு ஏ.டி.எம் சென்று பணம் எடுக்க போய் ஒரு அரை மணி நேரத்துல் திரும்பி வந்தேன்.

நான் வீட்டுக்கு வரவும், அவரும் வரவே சரியா இருந்துச்சு. மேலே வீட்டுக்கு கூட்டிட்டி போலாமானு ஒரு சந்தேகம். கரெக்டா கீழ் போர்ஷன்ல இருந்தவர் அவரை பார்த்து, "போன வாரம் நீங்க தானே, என் பேத்தியோட பாஸ்போர்ட் வெரிப்பிகேஷனுக்கு வந்தது?"னு கேட்டார். எனக்கு டவுட் க்ளியராகிடுச்சு.

சரின்னு மேலே வீட்டுக்கு கூட்டிட்டு போய், ஒரு சேர் போட்டு உக்கார வெச்சேன்.

2 பார்ம் கொடுத்து ஃபில்-அப் செய்ய சொன்னார். எனக்கு தெரிஞ்ச வரை ஃபில்-அப் செஞ்சுட்டு அவர்கிட்ட கொடுத்தேன். பின் அவர், "நீங்க பாஸ்போர்ட் அப்ளை பன்னும் போது ரெண்டு ரெஃபரன்ஸ் கொடுத்தீங்களே, அவர்களோட அட்ரஸையும் எழுதுங்க" என்றார்.

எனக்கு அதெல்லாம் நியாபகம் இல்லை. அவரே அந்த இரண்டு பேர் பெயரையும் சொல்ல, அவர்களில் ஒருவர் கீழ் போர்ஷனில் இருந்தவர். அவர் பெயரையும், மற்றொரொ போர்ஷனில் இருந்தவர் அட்ரஸையும் எழுதினேன்.

"அவங்க ரெண்டு பேர் கையெழுத்தையும் வாங்கனுமா? அவர்களில் ஒருவர் ஊரில் இல்லை".

"பரவாயில்லை. நீங்களே போட்டுடுங்க"

(ஆகா, க்ரைம் ரேட் கூடுதே...) "!!!"

எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சு, ஒரு அட்ரஸ் ஃப்ரூப்பையும் கொடுத்து, கையெழுத்து + கைரேகை வெச்சு, ஃப்ராஸசை முடிச்சேன்.

அடுத்த ஸீன் என்னனு தான் எனக்கு தெரியுமே!

என்னை பார்த்து "வர்றேன் சார்" என்பார்.

"சரி" என்பேன்.

தலையை சொறிவார். சரின்னு 50 ரூபா கொடுப்பேன்.

"மத்த எடத்துல எல்லாம் 100 ரூபா தான் வாங்குவேன்" என்பார்.

சரின்னு, இன்னொரு 50 ரூபா கொடுப்பேன்.

இந்த காட்சியை தான் எதிர்பார்த்தேன்.

ஆனால், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி அவர் எடுத்து வந்திருந்த பையில் போட்டார். போட்டுவிட்டு, என்னை பார்க்கவில்லை. (என்னை எதற்கு பார்க்கவில்லை. ஒருவேளை என்னை பார்த்தால், கண்டிப்பாக ரியாக்ஷன் கொடுப்பேன். சிரிப்பேன். 50 ரூபாய் கொடுப்பேன். அதனால், அவர் என் முகத்தை கூட பார்க்கவில்லை?).

"வரேன் சார்"னு சொல்லி கதவை நோக்கி திரும்பி அப்படியே எழுந்து வெளியே சென்றுவிட்டார். என்னப்பா ஆச்சு சென்னை போலீஸுக்கு?

நான் அப்டியே ஷாக்காயிட்டேன்...

அணிச்சை செயலாக(!), ஒரு வேளை, நாமளே தாமாக கொடுத்தால், வாங்கியிருப்பாரா தெரியாது. ஆனால், நாமே கொடுத்தால் அதுவும் தவறு தான். அதனால் நானும் கொடுக்கவில்லை.

இது ஒரு உதாரணம் என்றால், வீட்டுக்கு ஃபோன் கனெக்ஷன் கொடுக்க வந்தவர்களும் இப்படி தான். ரெண்டு பேர் வந்தார்கள். கனெக்ஷன் கொடுத்துவிட்டு எதுவும் கேட்காமலும், எதுவும் எதிர்பார்க்காமலும் சென்றனர். அன்று என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், வந்தவர்களுக்கு கொஞ்சம் கேக் கொடுத்தோம். அவர்களும் வாங்கிக் கொண்டு வாழ்த்தினார்கள். அதிலும் ஒருவர், கொடுக்கும் கேக்கை ஒரு பேபரில் சுத்தி கொடுக்க சொன்னார். ஆபீஸுக்கு கொண்டு சென்று அங்குள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள...

ஆனால், திருந்தாதவர்கள் கேஸ் கனெக்ஷன் கொடுக்க வந்தவர்கள். ஒரு கனெக்ஷனுக்கு 100 ரூபாய் என்று வாங்கி கொண்டு தான் விட்டார்கள்.

8 comments:

  1. //"வரேன் சார்"னு சொல்லி கதவை நோக்கி திரும்பி அப்படியே எழுந்து வெளியே சென்றுவிட்டார். என்னப்பா ஆச்சு சென்னை போலீஸுக்கு?//

    இப்படியும் இருக்கிறார்கள்.ஆனால் சமூகம் அடையாளம் காட்ட மறந்து விடுகிறது.நீங்கள் அடையாளம் காட்டியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

    ReplyDelete
  3. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சர்யம். இப்படிப் பட்ட மனிதர்களை பதிவு செய்வது என்பது மிகவும் நல்ல காரியம்!!

    ReplyDelete
  4. நன்றி ராஜ நடராஜன், ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி.

    ReplyDelete
  5. அதிகாரிகள் அன்பளிப்புகள் வாங்காதது நமக்கு இத்தனை ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நாம் வாழும் சூழல் இருக்கிறது. மிக நல்ல நடையில் அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. இது வேற தலைமுறை நண்பா. நம்பிக்கையோடு இருப்போம். காலம் ஒரு நாள் மாறும். நம்ம நாட்டுக்கும் நல்ல காலம் பிறக்கும். நம்பிக்கையூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றி செ.சரவணக்குமார், M.S.E.R.K.

    ReplyDelete
  8. தல... நீங்கள் குறிப்பிடும்.. நபர் சென்னை புறநகர் காவல் எல்கைக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்தவர். :)

    பி.எஸ்.என்.எலில் வெறும் மோர் குடித்து விட்டு, வேலையை ஒழுங்க செய்தவர்கள்.. எங்க மடிபக்கத்தில் உண்டு! :))

    இப்போ பலருக்கு லஞ்சம் பற்றிய குற்றவுணர்வும், பயமும் வந்திருப்பது நிஜம்.

    ReplyDelete