தற்போதைய ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம் தான் வசேப்பூர். இந்த படத்தில் உள்ள அட்டகாசமான ஆபாசப் பாடல்(!) ஒன்றை அறிமுகம் செய்து வைத்தான் ஒரு வட இந்திய நண்பன் ஒருவன். அது படத்தின் பெயரை அறிமுகம் செய்தது. பின் அந்த பாடலின் விஷுவல் பார்க்கும் போது, அதில் ரீமா சென் நடித்திருப்பது தெரிந்தது. வாசேப்பூர் பற்றி படிக்கும் போது, அது தன்பாத் மாவட்டம் என்பது தெரிந்தது. எங்களுக்கு தன்பாத் என்ற வார்த்தை பரிச்சயமானது. காரணம், சென்னையில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் என்ற இரயில் எங்கள் ஊரில் நிற்கும். சில முறை அதில் பயணம் செய்திருக்கிறோம். அப்புறம், இந்த படத்துக்கு பின்னனி இசை (மட்டும்) ஜி.வி.பிரகாஷ். இவை தான் இந்த படத்தை பார்க்க தூண்டுகோலாக அமைந்தவை :)
மற்றொரு காரணம், இந்த படத்தில் போஸ்டர் 'ஆரண்ய காண்டம்' படத்தின் போஸ்டர் போல ஒரு வித கார்டூன்டாக இருக்கும். 'ஆரண்ய காண்டம்' பார்க்க முடியாத ஏக்கத்தில், இதை பாக்க தூண்டுதலாக அமைந்தது.
படத்துக்கு வருவோம். இது அனுராக் காஷ்யப் இயக்கிய படம். இவர் இயக்கிய மற்ற படங்களை பார்த்ததில்லை. இது தான் அவரோட சொல்லிக்கொள்ளும் ஹிட்.
படம் 3 தலைமுறையை சொல்லிம் நீளமான படம். மொத்தம் ஐந்தரை மணி நேரம். அதனாலேயே, படத்தை 2 பாகங்களாக வெளியிட்டிருக்கார். ஏன் இவ்வளவு நீளம்? காரணம், 3 தலைமுறைகள், ஏகப்பட்ட கொலைகள், பழிவாங்கல்கள், அரசியல் சூழ்ச்சிகள், மற்றும் முக்கியமாக இந்த கேங் நிஜத்தில் இருந்தவை. ஆம், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்தவை.
இதை போல பரிதாலா ரவி என்ற நபரை பற்றின கதை தான் RGV இயக்கிய 'ரத்த சரித்திரம்' என்னும் ப்ளாப். படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், மொக்கை என்று படித்திருக்கிறேன்.
பொதுவாக உண்மையில் நடந்த கேங்க்ஸ்டர் கதைகளை சொல்லும் போது, வழக்கமான படங்களை போல் இருக்காது. Bonnie and Clyde, Butch Cassidy and the Sundance Kid, Catch Me If You Can, Goodfellas போன்ற படங்கள் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள். இந்த படங்களில் பொதுவாக சில குறைகள் இருக்கும். படம் பெரிதாக ஈர்க்காது. ஒரு மாதிரி dry-யாக இருக்கும். காரணம், இயக்குநர் என்று நினைக்கிறேன். Catch Me If You Can படத்தின் இயக்குநர் ஸ்பீல்பெர்க். அதனால், பார்க்கும் போதே இயக்குநரின் டச் பல இடங்களில் தெரிந்தது (அல்லது, அப்படி தெரிந்தது போல் இருந்தது). மேல் சொன்ன படங்கள் முதல் தடவை பார்க்கும் போது எனக்கும் இப்படித்தான் இருந்தது. ஆனால், மறுபடியும் பார்க்கும் போது ஏனோ நன்றாகவே இருந்தது. Catch Me If You Can எப்பொழுது பார்த்தாலும் எனக்கு நன்றாகவே இருக்கும்.
Bonnie and Clyde படத்தின் ஹீரோயின் (இந்த படத்தில் மட்டும்) கொள்ளை அழகு. நடிப்பும் நன்றாகவே இருந்தது. இந்த படம் ஒரு மாதிரி, குறைந்த கேரக்டர்கள், ஆங்காங்கே துப்பாக்கி சண்டைகள், முக்கியமாக ஹீரோயின் Bonnie, ஹீரோ Clyde-உடன் சேர்வது கொள்ளையில் உள்ள pleasure-க்காக. இதுவும் நன்றாக இருந்தது. இந்த படம் ஹாலிவுட்டின் பல சென்ட்டிமென்ட்களை உடைத்த படம். மற்றும், இந்த படம் "one of the bloodiest death scenes in cinematic history".
ரொம்ப வெளியில போயிட்டேனோ?
இந்த படத்தில் அப்படிப்பட்ட குறைகள் உண்டு. ஆனால், அதை சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார் இயக்குநர். சுஜாதா(?) சொன்னது போல், படத்தில் குறைகள் இருக்கலாம். ஆனால், பார்வையாளன் அந்த குறையை பற்றி பேச நேரம் கொடுக்காமல், அவனை சீட்டில் கட்டி போடும் வித்தை தெரிந்திருக்க வேண்டும் என்பார். அதைத்தான் செய்துள்ளார் இயக்குநர். அந்த வித்தைகள் விஷுவல், இசை, பாடல், சண்டை என்று விதவிதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில், 2 பாகமும் சேர்த்து, மொத்தம் 22 பாடல்கள். பெரும்பாலும் Bit songs. சில பாடல்கள் அட்டகாசம். முக்கியமாக Kaala rey. பார்த்தால், பாடல்களுக்கான இசையமைப்பாளர் சினேகா கன்வால்கர் என்ற பெண் (போன வார விகடன் படித்து தான் தெரிந்தது).
சினேகாவுக்கு இணையாக கலக்கியிருப்பவர் நம்ம ஊரு ஜி.வி.பிரகாஷ். பொதுவாகவே இவரோட பின்னனி இசை எனக்கு பிடிக்கும். இந்த படத்தில் பின்னியிருக்கார். குறைவான இசை, தேவையான இடத்தில். குறிப்பிடவேண்டிய இடம், முதல் பாகத்தில் முடிவு. இயக்கமும் இசையும் சேர்ந்து அதகளம் செய்திருக்கும் இடம்.
முதல் பாகம்:
படத்தின் கதைசொல்லி முதல் தலைமுறையை சேர்ந்த நசீர். 1940-களில் ஆரம்பிக்கிறது கதை. இந்தியா சுதந்திரம் அடைந்து தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் நிலக்கரியை சுற்றி நடக்கும் கொள்ளைகள், அதை கையகப்படுத்த நடக்கும் சூழ்ச்சிகள்.
ஒரு (சுல்தான் குரேஷி) கும்பல் ஒரு வீட்டுக்குளேயே வைத்து (ஃபைசல் கான்) குடும்பத்தை கொல்ல முற்படுகிறார்கள். அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக நினைத்து செல்ல, கொன்றவர்களை போலீஸில் போட்டுக்கொடுக்கிறான் மற்றொருவன் (ரமதீர்).
பின்னோக்கி நகர்கிறது கதை.
வாசேப்பூரில் இருப்பவர்கள் முஸ்லீம்கள். இரண்டு பிரிவினர். குரேஷிகள் மற்றும் கான்-கள். ஒரு காலத்தில் குரேஷிகள் ஆண்ட பிரதேசம். 1940-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் விளை நிலங்களை கையகப்படுத்தி அங்கு நிலக்கரி சுரங்கம் வெட்டி நிலக்கரி பிஸினஸ் சூடு பிடிக்கிறது. லோக்கல் தாதா சுல்தானா குரேஷி, அங்கு வரும் இரயில்களை நிறுத்தி கொள்ளை அடிக்கிறான். சாஹித் கான் என்பவன் அவ்வப்போது சுல்தானா பெயரை பயன்படுத்தி அதே கொள்ளையை அடிக்கிறான். பழி சுல்தானா மேல். இதை கண்டுபிடிக்கும் சுல்தானா, பிரச்சினை வேண்டாமென்று சாஹித்தையும் அவன் குடும்பத்தையும் ஊரை விட்டு போக சொல்கிறான். அப்படி செல்லும் சாஹித் தன்பாத் சென்று, திருந்தி, அங்கிருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்கிறான். பிரசவத்தில் அவன் மனைவி இறக்க, கடைசி நேரத்தில் அவளை பார்க்க விடாமல் செய்த சுரங்க காவலாளியை கொலை செய்கிறான். அது 1947. சுதந்திரம் கிடைக்க, சுரங்கங்களை இந்திய தொழிலதிபர்களிடம் விற்கின்றனர் பிரிட்டிஷார். அப்போது சில சுரங்கங்களை வாங்கும் ரமதீர் சிங், சாஹித் செய்யும் கொலையை பார்த்து அவனை அதே காவலாளி வேலைக்கு அமர்த்துகிறான்.
ஒரு நாள், சாஹித், தான் ஒரு நாள் ரமதீரை கொலை செய்து அவன் சுரங்கங்களை தனதாக்கிக் கொள்வதாக சொல்வதை தற்செயலாக கேட்கும் ரமதீர், முந்திக் கொண்டு அவனை ஆள் விட்டு கொல்கிறான். இதை அறிந்த சாஹித்தின் உறவினர் நசீர், சாஹித்தின் மகன் சர்தார் கானை காப்பாற்றி தப்பிக்கிறான். சர்தார் கான் தான் முதல் பாகத்தின் ஹீரோ. படத்தின் கதையை விவரிப்பது இந்த நசீர். இது தான் மூன்று குழுக்களுக்கிடையான போரின் ஆரம்பம். மூன்று குழுக்கள்: குரேஷிகள், கான்-கள் மற்றும் ரமதீர் சிங். ரமதீர் சிங், கான்களை எதிர்க்க குரேஷிகளுக்கு உதவுகிறார்.
இடையிடையில் அந்த நகரம் அடையும் மாற்றங்களை நசீர் விவரிக்கிறான். வாசேப்பூர் முதலில் பீகாரில் இருந்து, பின் மேற்கு வங்கத்துடன் இணைந்து, தற்போது ஜார்கன்ட்டில் இருக்கிறது.
ரமதீர் படிப்படியாக 'முன்னேறி' யூனியனை தன் கையில் போட்டுக்கொண்டு, தொழிலாளர்களிடம் முறைகேடாக வசூல் செய்கிறான். எல்லா வகையாக தில்லு முல்லுகளையும் செய்கிறான்.
1970-களில் நிலக்கரி சுரங்கங்கள் தேசியமயமாக்கப்படுகின்றன. வளர்ந்த சர்தார் கான், தன் தந்தையை கொன்ற ரமதீரை பழிவாங்குவதாக சபதம் எடுத்து மொட்டை அடித்துக்கொள்கிறான்.
சர்தார் நக்மா என்னும் பெண்ணை மணந்து கொள்கிறான். சரியான பெண் பித்தன். அடிக்கடி மனைவியை கர்ப்பம் ஆக்க, அவளோ அவனை பேசாமல் வெளியே தேடிக்கொள்ள சொல்கிறாள் ஒரு கண்டிஷனுடன். யாரையும் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வரக்கூடாது.
ரமதீரின் மகன் ஜேபி சிங்கிடம் வேலைக்கு சேர்கிறார் சர்தார். ரமதீரின் லாரிகளையே கடத்துகிறான். கொஞ்சம் கொஞ்சமாக தாதாவாக வளர்கிறான் சர்தார். ரமதீர் முதலில் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின், அவன் தான் சாஹித்தின் மகன் என்று அறிந்து கொள்கிறான். ஜேபி சிங்கை அடித்த குற்றத்துக்காக (தற்போது ஜேபி சிங் எம்.எல்.ஏ) சர்தாரும் அவன் உறவுக்காரன் அஸ்கரையும் உள்ளே தள்ளுகின்றனர்.
சர்தார் ஜெயிலில் இருந்து தப்பித்து வசேப்பூரில் ஒளிந்து கொள்கையில், பெங்காளி இந்து பெண்ணான துர்காவை (ரீமா சென்) மணந்து கொள்கிறான். இதை கேள்விப்பட்ட நக்மா உடைந்து போகிறாள்.
இப்போது வசேப்பூர் தன்பாத்துடன் இணைகிறது. குரேஷிக்கள் மற்ற முஸ்லீம்களை பயமுறுத்த, கேள்விப்பட்ட சர்தார் முஹர்ரம் அன்று குண்டுகளை வீசி தாக்குகிறான். இப்போது சர்தார் மேல் அந்த ஊர் ஜனங்களுக்கு பயம் வருகிறது.
வீட்டிற்கு திரும்பும் சர்தார், கர்ப்பமான மனைவியுடன் உறவுக்கு அழைக்க அவள் திட்டி விடுகிறாள். கோபித்துக் கொண்டு அவளை விட்டுவிட்டு துர்காவின் வீட்டிற்கு போகிறான். அங்கே துர்காவுக்கு மகன் பிறக்கிறான். பெயர் Definite(!).
நக்மாவுக்கு பிறக்கும் பையன் பெயர் டானிஷ் (Danish). ரமதீர் டானிஷுக்கு உதவுவது போல நடித்து பணம் கொடுக்கிறான். நக்மா டானிஷை அடிக்கிறாள். ஒரு நாள், தூக்கத்தில் எழும் ஃபைசல் (இன்னொரு மகன், இவன் இரண்டாம் பாகத்தின் ஹீரோ), நக்மாவும் நசீரும் உறவுகொள்ள முற்படும் போது பார்த்துவிட்டு, வீட்டை விட்டு போகிறான்.
இப்பொழுது குரேஷிக்களும் ரமதீரும் நட்பாகின்றனர். பொது எதிரி சர்தார்.
சர்தார் இப்பொழுது இரும்பு வர்த்தகத்தில் இறங்குகிறான். பணம் கொழிக்கும் தொழில் அது. டானிஷும் தந்தையுடன் வேலை செய்கிறான். ஒரு முறை, டானிஷ் குரேஷிக்களின் ஒரு கொலை முயற்சியில் தப்பிக்கிறான். சர்தார் ரமதீரை எச்சரிக்கிறான்.
ஃபைசல் வளர்ந்ததும் அவன் ஒரு முறை துப்பாக்கி வாங்கும் போது மாட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போகிறான். ரிலீஸாகி, துப்பாக்கி வித்தவனை போட்டுத்தள்ளுகிறான். அவன் தான் போலீஸிடம் காட்டிக் கொடுத்தது.
இப்போது டானிஷ் சுல்தான் குரேஷியின் தங்கையை விரும்ப, இரு குடும்பங்களும் சண்டையை விட்ட்டு சமாதானம் அடையலாம் என்று கருதி திருமணம் நடக்கிறது. சுல்தானுக்கு இதில் விருப்பம் இல்லை.
ஒரு நாள், சர்தாருடன் செல்ல வேண்டிய ஃபைசல் கஞ்சா அடித்து தூங்கிவிட, யாரும் இல்லாமல் தனியாக செல்கிறன் சர்தார். இதை ஒருவன் குரேஷிகளிடம் போட்டு தந்து விட, சர்தாரை கொல்ல ஒரு கும்பல் தயாராகிறது. நக்மாவின் வீட்டை விட்டு துர்காவின் வீட்டை அடையும் சர்தார், அவளிடம் செலவுக்கு பணம் தர, அவன் சென்றதும், சர்தார் அங்கிருந்து சென்றுவிட்டதாக யாருக்கோ தகவல் அளிக்கிறாள் துர்கா.
ஒரு பெட்ரோல் பங்க்கில் வைத்து சர்தாரை சரமாரியாக சுட்டு விடுகின்றனர் குரேஷிக்கள். தள்ளாடி வெளியே வரும் சர்தார் அப்படியே ஒரு மீன்பாடி வண்டியின் மேல் சரிகிறான். ஒரு குண்டு அவன் தலையில் பாய்ந்துள்ளது. இறக்கிறான். முதல் பாகம் சுபம்.
இரண்டாம் பாகம்:
முதல் பாகத்தின் தொடர்ச்சி இது. சர்தார் சுட்டுக் கொல்லப்படும் போது, அந்த கும்பலில் ஒருவன் மாட்டுகிறான். போலீஸ் வேனில் இருக்கும் அவனை டானிஷ் கொல்கிறான். துர்கா இப்பொழுது ரமதீரின் பாதுகாப்பில் அவன் வீட்டில் வேலையில் இருக்கிறாள். சர்தார் தனியாக செல்வான் என்று போட்டுக் கொடுத்தது ஃபைசலின் நண்பன் ஃபஸ்லூ தான் என்று ஃபைசலிடம் சொல்கிறான். இதனிடையே சுல்தான் டேனிஷை கோர்ட்டில் வைத்தே போட்டு தள்ளுகிறான். நக்மா அவனால் பழிவாங்க முடியாது என்று பைசலை திட்டுகிறாள். ஃபைசல் சரியான கஞ்சா பைத்தியம்.
வாசேப்பூர் லோக்கல் எலக்ஷனில் ஃபஸ்லூ வெற்றி பெருகிறான். அவனை வாழ்த்த போகும் ஃபைசல், அவன் தலையை தணியாக வெட்டி எடுத்து அவன் வீட்டில் மாட்டுகிறான் ஃபைசல். இப்பொழுது ஃபைசல் தாதாவாக உருவாகிறான். ஷம்ஷத் ஆலம் என்னும் ஒருவன் மூலம் ஃபைசல் தன் வர்த்தகத்தை விரிவு படுத்துகிறான்.
இப்பொழுது ஃபைசலும் ரமதீரும் சந்தித்து ஒரு உடன்படிக்கைக்கு வருகின்றனர். அதன்படி கான் குரேஷிக்கள் சண்டையில் தான் தலையிடுவதில்லை என்கிறார். இது சுல்தானுக்கு தெரியாது.
ஃபைசல் மோஸினாவை (கொள்ளை அழகு) திருமணம் செய்து கொள்கிறான். தன் தந்தை சாவுக்கு காரணமான சுல்தானின் ஆட்களை போட்டுத்தள்ளுகிறான்.
இப்பொழுது அடுத்த தலைமுறை. பைசலின் 14 வயது தம்பி பாபுவா (aka Perpendicular) அண்ணனின் பெயரை வைத்து ஒரு கடையில் கொள்ளை அடிக்கிறான். Definite-ற்கும் தாதா ஆக ஆசை. Perpendicular தொல்லை தாங்க முடியாமல், சர்தாரிடம் சொல்ல, சுல்தான் Perpendicular-ஐ போட்டுத்தள்ளுகிறான்.
முன்பு பார்த்த ஷம்ஷத் ஆலம், போலீஸிடம் ஃபைசலின் பிஸினஸை பற்றி போலீஸிடம் போட்டுக் கொடுக்கிறான். ஃபைசலை கைது செய்கின்றனர் போலீஸ். ஃபைசலிடம் நல்ல பேரெடுக்க, Definite ஷம்ஷத்தை கொல்ல முயற்சித்து பயங்கரமாக தாக்கி படுகாயம் அடைய வைக்கிறான். ஃபைசல் அரசியலில் ஈடுபட்டு ரமதீரை எதிர்க்க முடிவெடுக்கிறான்.
ஃபைசல் விடுதலை ஆகிறான். சுல்தால் கடைசி முயற்சியாக ஃபைசலை குடும்பத்துடன் கொல்ல முயற்சிக்கிறான் (முதல் பாகத்தின் முதல் காட்சி). அனைவரும் தப்பிக்கிறார்கள். இருந்தாலும் முஹர்ரம் அன்று சுல்தானின் ஆட்கள் மூலம் நக்மாவும் அஸ்கரும் படுகொலை செய்யப்படுகின்றனர். கடும் ஆத்திரமுற்ற ஃபைசல் சுல்தானை கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறான்.
இதனிடையில் ரமதீரின் ஆள் இக்லாக் ஃபைசலிடம் வேலைக்கு சேருகிறான். இது ஃபைசலுக்கு தெரிகிறது. தேர்தல் அன்று இக்லாக் ஃபைசலை கொல்ல முயற்சிக்க, Definite உதவியுடன் இக்லாக் கொல்லப்படுகிறான்.
ரமதீர் ஷம்ஷத்தை பார்க்க மருத்துவமனையில் இருக்கிறான் என்று ஃபைசலுக்கு தெரியவர, அவனை கொல்ல ஃபைசல் புறப்படுகிறான். மோஸினா தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறாள். அதை பெரிதாக கண்டுகொள்ளாத ஃபைசல் ரமதீரை கொல்ல கிளம்புகிறான்.
மருத்துவமனைக்கு ஆயுதங்களுடன் செல்லும் ஃபைசல், ரமதீரின் ஆட்கள் அனைவரையும் கொல்கிறான். Definite வெளியே போலீஸை பார்த்துக் கொள்ள, ரமதீரை கண்டுபிடித்து கண்டபடி கொல்கிறான் ஃபைசல். உயிருடன் இருப்பது இரண்டே பேர். ஃபைசல் மற்றும் Definite. போலீஸில் சரணடைகிறார்கள்.
ஓரிடத்தில் போலீஸ் ஜீப்பை நிறுத்த, Definite சாவகாசமாக இறங்கி, கைத்துப்பாக்கியால் ஃபைசலை சுட்டுக்கொல்கிறான். அதிர்ச்சியுடன் இறக்கிறான் ஃபைசல்.
அங்கே மறைவிடத்திலிருந்து வருகிறார்கள் துர்காவும், ஜேபி சிங்கும். இருவருக்கும் திருப்தி(?). தன் அரசியல் ஆசைக்கு குறுக்கே இருக்கும் ரமதீர் இறந்தது அவன் மகன் ஜேபி சிங்கிற்கு திருப்தி. ஃபைசல் இறந்தது துர்காவுக்கு திருப்தி. இனி Definite தான் definite-ஆ தாதா (பெயர்க் காரணம்?). Definite-ஆக நடித்திருக்கும் பையன்(!) தான் இந்த படத்தின் கதாசிரியர்.
பின் மோஸினா ஃபைசலின் குழந்தையுடன் மும்பைக்கு பிழைப்பை தேடி செல்வதாக படம் முடிகிறது.
படத்தின் முக்கிய பலம், அதன் கதாபாத்திரங்கள். பெரும்பாலும் சிறு நடிகர்கள், சர்தார் கானாக நடித்த மனோஜ் பாஜ்பய் தவிற. நிறைய கதாபாத்திரங்கள். படத்தினை பார்ப்பவர்களை பொருத்து, அந்த கேரக்டர்கள் பிடிக்கவும் பிடிக்காமலும் போகும். படத்தில் ஆங்காங்கே வரும் சிற்சில கதாபாத்திரங்கள் நச். குறிப்பாக மேடை பாடகர் ஒருவர். அந்த குடும்பத்தில் வரும் கல்யாணம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சாவிற்கும் கூட அவர் பாடுவார். அந்தந்த காலகட்ட படங்களின் காட்சிகள், வசனங்கள் முதலியவை சரியாக உபயோகப்படுத்தியிருப்பார்.
பீகாரை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க இயக்குநர் அனுராக் காஷ்யப் நினைத்த போது, Zeishan Quadri சொன்ன கதைகள் தான் இந்த படம். ஒரு கேங்வார் படமாக இல்லாமல், அந்த கேங் எப்படி உருவாகிறது என்றும் அவர்கள் பார்வையில் படம் எடுக்க ஒரு வாய்ப்பு வந்ததாகவும் கூருகிறார் இயக்குநர்.
* முகத்தில் அறைவது போல காட்சிகள் வைத்திருப்பது செம. உதா, ஃபைசலை தேடி வரும் சுல்தான், அங்கே அவன் தங்கை சாமா பர்வீனை பார்க்கிறான் (அவன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டவள்). அவள், அண்ணா என்று பாசத்தோட வர, ஒரு கனத்தில் அவளின் நெற்றியில் சுட்டுக் கொல்கிறான் சுல்தான். பின்னனியில் நசீரின் குரல், 'பழக்க வழக்கப்படி ஷாமா முதலில் டானிஷின் விதவை மனைவி. அப்புறம் தான் அவனுடைய தங்கை'.
* ஆரம்பத்தில் இரு கேங்குகள் சண்டை என்றாலும், அவரவர் வீட்டு பெண்களை யாரும் தொடுவதில்லை. ஆனால், சுல்தான் தான் முதலில் (தன் த்அங்கையை கொன்று) அதை ஆரம்பித்து வைக்கிறான்.
படத்தில் பல விஷயங்கள் மிக நுனுக்கமாக கவனிக்க வேண்டும். 5.5 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 60 வருட கதையை சொல்ல வேண்டியிருப்பதால், இயக்குநர் அந்த இடைவேளைகளை நசீர் என்னும் கதைசொல்லி மூலம் அடைக்கிறார். அதே போல ஒவ்வொரு கேரக்டரும், அவர்களின் உடை, மேக்கப் போன்றவைகளை கவனித்தால் காலம் உருண்டோடுகிறது என்பது தெரியும்.
முதல் பாகத்தில் வாலிபனாக வரும் ஃபைசல், இரண்டாம் பாகத்தில் இறக்கும் போது நடுத்தற வயதுடையவர். அந்த வித்தியாசங்களும், சில இடங்களில் பல்லிளித்தாலும், நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் ப்ரொமோஷனுக்காக 'வாசேப்பூர் பத்திரிக்கை' என்னும் கற்பனை பத்திரிக்கை வெளியிட்டது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
இந்திய படங்களில் ஒரு நல்ல கேங்க்ஸ்டர் படம் பார்க்க விரும்புகிறவர்கள் கட்டாயம் பார்க்கலாம். பரவசம் இலவசம்.

