Tuesday, January 28, 2014

How to Steal a Million (1966)


இன்ட்ரோ:

ஆங்கிலப் படங்களை பார்க்கும் போது, எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று தான் கேட்கத்தோணும். இந்த படமும், சிம்பிளான ஒரு வரிக் கதை. அந்த கதைக்கேற்ற தலைப்பு, அந்த தலைப்புக்கேற்ற திரைக்கதை. அதற்கேற்ற நடிகர்கள். அதனால் தான் காலங்கள் கடந்தும் அந்த படைப்புகள் போற்றப்படுகின்றன.

தலைப்பே கதையை சொல்லிடுதே. ஒரு மில்லியன் டாலர் பணத்தை எப்படி திருடுவது என்பது கதை. ஆனால், அந்த பணம், தேவைக்காக திருடப்பட்டுவது இல்லை. சூழ்நிலை. கனக்கச்சிதமான சூழ்நிலை.

1966-ல் வந்த காமெடி படம். 'தானைத்தலைவி' ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) நடித்தது. ஆட்ரேவோட இன்னொரு படம் 'ரோமன் ஹாலிடே' (1953). இயக்கம் இதே டைரக்டர்.



அப்புறம் கூட ஹீரோவா பீட்டர் (Peter O'Toole), Hugh Griffith, Eli Wallach நடிச்சிருக்காங்க. பீட்டர் கூட பெரிய தல தான். Lawrance of Arabia ஹீரோ.

கதை:

நிக்கோல் போனே(ட்) (ஆட்ரே)-வின் தந்தை சார்லஸ் போனே(ட்) ஒரு மேட்டுக்குடி (Aristocrat), கலை பொக்கிஷங்களை சேகர்ரிப்பவர். தன் கலை பொக்கிஷங்களை அடிக்கடி ஏலம் விடுகிறார். (அந்த காலத்திலேயே) மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போகிறது, அவரின் சேகரிப்புகள். ஆனால், அவை அனைத்தும் ஒரிஜினல் இல்லை. ஒரிஜினலை காப்பி அடித்து தன் வீட்டில் மாட்டிவைத்து, அதற்கு மார்க்கெட் ஏற்றி, ஏலம் விடுகிறார். (ஒரு பெரிய திருப்பம் தரக்கூடிய விஷயத்தை, முதல் சீனிலேயே உடைத்தாகி விட்டது). அவர் பெண் இதைப்போன்று செய்வது தவறேன்று எச்சரிக்கிறார். அவருக்கு விருப்பமும் இல்லை. ஆனால், சார்லஸோ அதை பணத்துக்காக மட்டும் அல்லாது, தன் (காப்பியடிக்கும்) திறமைக்காக தொடர்கிறார். தன் வேலை மீதே அவருக்கு ஒரு பெருமிதம். உண்மையை போன்றே கச்சிதமாக செய்வதால், யாரும் சோதனை கூட செய்வது இல்லை.



அடுத்து, வீட்டில் ஒரு பளிங்கு சிலை இருக்கிறது. அது அவரோட தாத்தா அவரோட மனைவியை மாடலாக்கி செதுக்கியது. வைத்த பெயர் Cellini's Venus. Cellini என்பவர் இத்தாலியை சேர்ந்த சிலை வடிப்பவர். அவர் வடித்த சிலை என்பதாக ஒரு பொய்யான சிலையை செய்து, அதை அவர் தாத்தா வீட்டில் மாட்டி வைக்க, அது அந்த காலத்திலேயே ப்ரான்ஸ் முழுக்க பிரபலமானது. அதை ப்ரான்ஸ் அரசாங்கம் வரப்போகும் கண்காட்சிக்காக அதை காட்சிப்படுத்த வாங்கிக் கொண்டு போகிறார்கள், பயங்கர பாதுகாப்போடு. அதுவும் அந்த ம்யூஸியம் ஆள் காரில் உக்காந்து பத்திரமா இருக்கானு திரும்பி திரும்பி பார்த்துபோவார் :)

அதே இரவு அவள் வீட்டில் திருட வரும் திருடனை நிக்கோல் பிடிக்கிறார். கையில் தவறுதலாக சுட்டும் விடுகிறார். அவரே மருந்தும் வைத்து, அந்த திருடனின் வீடு வரை சென்று விட்டு விட்டு வருகிறார். அந்த திருட'ர்' தான் நம்ம ஹீரோ சைமன் (Peter O'Toole). பின் (ஹாலிவுட் வழக்கப்படியும்!!!) காதல் வருகிறது.

வந்தவன் திருட வரவில்லை. மாறாக, வீட்டில் இருக்கும் இன்னொரு ஓவியத்தில் இருந்து சில மாதிரிகளை சுரண்டி எடுத்து வருகிறார், சோதனை செய்ய. நிக்கோலுக்கு இது தெரிவதில்லை.

இதற்கிடையில், இன்னொரு aristocrat டேவிஸ் லீலான்ட் (Eli Wallach) நிக்கோலுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்கிறார், மேலே சொன்ன அந்த ஓவியத்தை மற்றும் சிலையை எப்பாடுபட்டாவது வாங்குவதற்கு நிக்கோல் ரெக்கமென்ட் செய்யவேண்டும் என்பதற்காக. இவர் ஒரு பயங்கர கலா ரசிகர். கலக்கியிருக்கிறார். காதல் கொள்கிறார், அந்த ஓவியத்தின் மீதும், நம்ம ஓவியத்தின் மீதும்.



அடுத்த நாள் ம்யூஸியம் ஆள் ஒருத்தர் வந்து அந்த சிலையை இன்ஸ்யூர் செய்ய வேண்டும் என்றும், சார்லஸ் செலவழிக்கவேண்டியதில்லை என்றும் கூறி சார்லஸிடம் கையெழுத்து வாங்குகிறார். அவரும் அவசரத்தில் கையெழுத்து போட்டுவிட, அப்புறம் தான் தெரிகிறது, 2 நாள் கழித்து அந்த சிலையை (பார்மாலிட்டிக்காக) சோதனை செய்ய ஆள் வருகிறார் என்று. சார்லஸுக்கு வேர்க்கிறது.

அவர் மாதிரிக்காக வைப்பதை சோதனை செய்யமாட்டார்கள் என்ற குருட்டு தைரியத்தில் சிலையை அவ்வப்போது கொடுக்கிறார். இப்பொழுது, இதை சோதனை செய்தால், இதுவரை அவர் ஏலம் விட்ட அனைத்து கலை பொக்கிஷங்களையும்(!) சோதனை செய்ய வேண்டிவரும். மாட்டிக் கொள்வார்.

நிக்கோல் சார்லஸுக்கு தெரியாமல், சைமனை அனுகி அந்த சிலையை திருட வேண்டும் என்கிறார். எதற்காக சிலையின் ஓனரே அதை திருடவேண்டும் என சைமன் கேட்க, நிக்கோல் அதை சொல்ல மறுக்கிறாள்.

இப்ப தெரிஞ்சிருக்குமே படத் தலைப்பின் ரகசியம்.

படம் பாதி முடிந்தது. மீதி பாதி அந்த சிலையை திருடுவதும், அதை டேவிஸுக்கே விற்பதும், சார்லஸ் திருந்தினாரா என்பதும் செம இன்ட்ரெஸ்டிங் திரைக்கதை. அவற்றை வெண்/மடிக்கணினி திரையில் காண்க...

பிறகு...

படம் செம ஹிட்டான படம். ஆட்ரே கலக்கியிருக்கும் இன்னொரு படம். அவரோட பெஸ்ட் லிஸ்ட்டில் கண்டிப்பாக வரும்.

படத்தில் மேட்டுக்குடி மக்கள் எப்படியெல்லாம் அல்பங்களாக இருக்கிறார்கள், தங்கள் pleasure-க்காக எந்த அளவுக்கெல்லாம் கீழிறங்குவார்கள் என்பதை காமெடியாக கலாய்த்திருக்கிறார் இயக்குநர் வில்லியம் வைலர் (William Wyler). இவர் இயக்கிய மற்ற படங்கள் Ben-Hur, Roman Holiday, The Best Years of Our Lives இன்னும் பலப்பல.

அந்த சிலை திருடப்பட்டதும் டேவிஸ் அந்த சிலையை போலீஸுக்கு முன்பாகவே கண்டுபிடித்து வாங்கிவிடவேண்டும் என்று அலைவார். கடைசியாக வாங்கியும் விடுவார். விலை? 0.00$

படம் முழுக்க ப்ரான்ஸில் நடக்கிறது. ஆனால், அனைவரும் இங்கிலீஸ் மட்டுமே பேசுகிறார்கள்.

டேவிஸாக நடித்திருப்பவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தேடி பார்த்தால், அவர் தான்  The Good, the Bad and the Ugly (1966) -ல் Tuco-வாக கலக்கியிருப்பவர். இதில் கூட ஒரு நல்ல அற்புதமான நடிப்பு. அதுவும் சிரிச்சுக்கிட்டே வழியும் காட்சி.



கடைசியாக...

இந்த சிலை 'திருடும்' சீன்களை இன்னொரு ஹிந்தி படங்களிலும் 'திருடி'யிருக்கிறார்கள். படம் பெயர் Loafer. செம மேட்சிங்கா இல்ல...?

பிற்சேர்க்கை @ 8-Oct-15

இப்ப ரஜினி-யின் லிங்கா-வில் அந்த ம்யூஸியத்தில் திருடும் காட்சியை திருடியிருக்கிறார்கள். Ethically wrong, but தலைவர் படம்ங்கிறதனால ரசிச்சேன்...