வேலைகளில் வகைகள் உண்டு. Blue Collar Job, White Collar Job இப்படி. தகவல் தொழில் நுட்பத்துறை அல்லது மற்ற White Collar job செய்யும் வேலை இடங்களில், வேலை செய்பவர்களை நாம் பெரும்பாலும் formals உடையில் பார்க்கலாம். Formals உடை என்றால் கால்சட்டை (trousers), முழுக்கை சட்டை அல்லது அரைக்கை சட்டை, ஷூ, மற்றும் டை ஆகியவை அணிந்து கொண்டு வரவேண்டும். இதில் டை அணிவது பெரும்பாலும் தேவையில்லை. சில நிறுவனங்களில் இது கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தினமும் இத்தகைய உடையில் தான் வரவேண்டும். இத்தகைய நிறுவனங்களில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இதற்கு விதிவிலக்கு, சில நிறுவனங்களில் இந்த விதிவிலக்குக்கும் விதிவிலக்கு. அதாவது, எல்லா நாட்களிலும் formals உடையில் வரவேண்டும்.
இந்தியா போன்ற பூமத்திய ரேகை செல்லும் நாட்டில் (அதுதாங்க உஷ்ணம் அதிகம் உள்ள) இது தேவையா என்பது என் கேள்வி? மதம் எவ்வாறு மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்து உருவானதோ, அதேபோல உடை கலாச்சாரமும் மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்தே வளர்ந்தது. உதாரணமாக, நம் நாட்டில் நாம் வேட்டிக் கட்டுகிறோம் என்றால் அதற்கு காரணம் உண்டு. வேட்டி பெரும்பாலும் பருத்தியிலிருந்து நெய்யப்படுகிறது. இது நம் நாட்டின் வெப்பத்திற்கு ஏற்றது. அதே சமயம், இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால், அங்கு குளிர் அதிகம் அதனால் அவர்கள் அணியும் உடையே வேறுபாடானது. இதை விளக்கமாக பார்ப்போம்.
பூமத்திய ரேகை செல்லும் நாடுகளைத் தவிற மற்ற நாடுகள் பெரும்பாலும் குளிர் பிரதேசம். அவைகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா (இங்கு குளிரும், வெய்யிலும் மாறி மாறி இருக்கும்), பிரான்சு, ஜெர்மனி, நியூசிலாந்து, கனடா (இங்கு -25 டிகிரி செல்சியஸ் கூட இருக்குமாம்) போன்றவைகளை எடுத்துக் கொள்வோம். இவை பெரும்பாலும் அதிக குளிர் உள்ள பிரதேசங்கள். இந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் வெளியே செல்லும் பொழுது தங்கள் உடம்பில் குளிர் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். முழுக்கைச்சட்டை அணியும் பொழுது கையில் cuff இருக்கும். அது குளிர் காற்று கைகளின் உள்ளே புகாமல் இருப்பதற்கு. கழுத்தில் டை அணிந்திருப்பது உடம்பில் குளிர் காற்று புகாமல் இருப்பதற்கு. காலில் ஷூ அணிந்திருப்பது பாதங்களின் நுனிகளில் எழும்புகள் இல்லாததால் அவைகள் கடும் குளிரில் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதற்காக. உடம்பில் over coat அணிவதும் குளிருக்காகத்தான். குளிருக்காக பணியில் (வேலையில்) இருக்கும் போது sweater அணிய முடியாது. அதனால் coat அணிகின்றனர்.
ஆனால், நாம் என்ன செய்கிறோம்! அவர்கள் அணியும் உடை தான் decency எனக் கருதி அதை அப்படியே நகல் எடுக்கிறோம் (அதாங்க, காப்பி). நம் ஊரில் சாக்ஸ் துர்நாற்றத்தை, செத்துப் போன எலிக்கு உவமையாகக் கூறுவது நன்றாக அறிந்திருப்பீர்கள். சென்னை போன்ற சூடான நகரங்களை நினைத்துப் பாருங்கள். மேற்கத்திய நாடுகளைப் போல உடை அணிந்து இருப்பது எவ்வளவு கடினம் (டை, coat ஆகியவை இல்லாதிருப்பினும்). அதற்காக வேட்டி சட்டை அணிய வேண்டும் எனக் கூறவில்லை. அது ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்று தான் கேட்கிறேன். அலுவலகத்திற்கு பேருந்து ஏரும் வரையில் தான் நாம் ராஜா. பேருந்திலிருந்து இறங்கி அலுவலகத்திற்குள் நாம் நுழையும் பொழுது இந்த உடையும், வெய்யில் கொடுமையும் சேர்ந்து நம்மை என்ன பாடு படுத்திவிடுகிறது?
நம்ம ஊரில் அயல் நாட்டு மோகம் நம்மை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது? நான் முக்கியமாக சொல்வது உடையை விட இந்த ஷூக்கள் அணிவது தான். அதுவும் அஹிம்சையை போதிக்கும் நாடு என்ற போர்வையில் எத்தனை மிருகங்களை இந்த ஷூக்களுக்காக கொல்கிறோம்!!! இந்த வெய்யிலில் நாம் ஷூக்களை அணிவதால் ஏற்படும் கொடுமை இருக்கிறதே...என்ன பாதங்கள் மிருதுவாக இருக்கும். அதற்காக துர்நாற்றத்துடன் அலைய முடியுமா என்ன? சிந்திப்போம்...
sariyaathan sonneenga! veti madichukattu :)
ReplyDelete