Thursday, May 11, 2006

சென்னையும், நானும்

சென்னை. தென்னிந்தியாவின் தலைநகரம். ஒரு தலைநகரத்திற்கே உரிய எல்லா வித அம்சங்களும், நல்லதும் கெட்டதும், உள்ளடக்கிய ஒரு நகரம். சென்னையைப் பற்றிய என்னுடைய பார்வையை பதிவு செய்யவேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு.

சென்னையைப் பற்றி இங்கே நான் பதிவு செய்ய பல விசயங்கள் இருக்கிறது. இதற்கு முன் சுமார் 14 மாதங்கள் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பின், சென்னையில் வேலை கிடைத்தவுடன், நான் மாற்றலாகி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது "சென்னை" என்ற மூன்றெழுத்து. பெங்களூரில் வாழ்க்கை நல்ல விதமாக போய்க்கொண்டிருந்தாலும், சென்னையை நோக்கிய எனது பயணம் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் இருந்தது. (அந்த எதிர்பார்ப்பெல்லாம் பொய்த்துப் போனது வேறு விசயம்). சாதாரண பயணம் அல்ல. சென்னையை ஆழிப்பேரலை தாக்கிய மூன்றாவது (29-12-2004) நாள் சென்னையில் கால் பதித்தேன் (மனதில் ஒரு வித நடுக்கலுடன்). அதுவும் பெங்களூரில் இரவு அலுவல் முடிந்து நேரே 10:30-க்கு பேருந்து. கடன் வாங்கி பேருந்து சீட்டு எடுத்து, சென்னையின் எல்லையான திருபெரும்புதூர் அருகே வரும்போது, பேருந்து break down ஆகி, மேலும் ஒரு மணிநேர தாமதம். தியாகராய நகரில் இறங்கி, திருவல்லிக்கேணிக்கு ஆட்டோ பிடிப்பதற்குள் நாக்கு தள்ளியது. ஒருவழியாக காலை 7:30-க்கு திருவல்லிக்கேணி அடைந்தேன். ஒரே புழுக்கம். அட, ஏண்டா பெங்களூரை விட்டு வந்தோம்ன்னு அப்பொழுது யோசித்தேன். முதல் நாள் வேலைக்குப் போய் வீட்டிற்கு திரும்பியவுடன் கடற்கரைக்கு சென்றேன். அந்த பரந்த மெரீனா கடற்கரையில் தண்ணீருக்கும், சாலைக்கும் நடுவில் சில நிமிடங்கள் நின்றேன், தன்னந்தனியாக. அன்று தான் அந்த கடற்கரையில் ஆளாரவமற்று இருப்பதை பார்த்தேன். என்னைச் சுற்றி கடற்கரையில் என்னைத் தவிற ஒரு உயிர் கூட இல்லை. மேலும், தண்ணீரில் நனைந்த மணலும், ஒரு வித துற்நாற்றத்தை பரப்பி உடலில் ஒரு வித நடுக்கத்தைக் கொடுத்தது. அலையை நோக்கி நடக்க மனது முயன்றாலும், கால் சாலையை நோக்கி நடந்தது. அங்கே 100 மீட்டர் கூட 100 கிலோமீட்டராக தெரிந்தது. ஒருவித கனத்த + பயந்த இதயத்துடன் சாலைக்கு வந்தேன். மனதில் சோகம் உள்ள போது, அந்த கடற்கரையில் அமர்ந்து அலைகளை ரசிப்பதும் ஒரு வித தியானமே. மனது லேசாகும்.

பின், ஓரிரு நாள் வாழ்க்கை சென்னையை வெறுக்க வைத்தது. அலுவல் வேலை முறையில், டிசம்பரிலும் அடிக்கும் வெய்யில், அசுத்தமான ஊர் இப்படி. நாகேஷ் ஒரு படத்தில் இப்படி சொல்வார்.

"முதல் 6 மாசத்துக்கு கஷ்டம் தான்"
"அப்புறம்"
"அப்புறமென்ன அதுவே பழகிடும்"

அதே போல் தான் எனக்கும். பிறகு சென்னையில் இருக்கும் பல நல்ல விசயங்கள். முக்கியமாக, ஒரு bachelor-ஆக, எனக்கு சொர்க்கமாக தெரிந்தது, திருவல்லிக்கேணி. பெங்களூரில் இல்லாத ஒன்று சென்னையில் கிடைக்கிறது என்றால், அது ருசியான உணவு. பெங்களூரில் எங்கும் நல்ல தண்ணீர் கிடைக்கும், ஆனால் ருசியான உணவு கிடைக்காது. சென்னையில் எங்கும், எப்போதும் ருசியான உணவு கிடைக்கும், அது இரவு மணி இரண்டு ஆனாலும். இங்கே "ருசியான" என்றால் நம்ம ஊர் சாப்பாடு என்று பொருள். தேவி முதல் சத்யம் வரை திரையரங்குகள் மிக அருகில். அறையைச் சுற்றிலும் அருமையான மெஸ். பக்கத்திலேயே கடற்கரை. ஊருக்கு செல்லவேண்டுமானால், 10 நிமிடத்தில் மத்திய இரயில் நிலையம். சுமார் ஒரு மணி நேரப் பயனத்தில் மகாபல்லிபுரம், அல்லது சென்னையிலேயே பல பொழுதுபோக்கு இடங்கள். இவையாவும் பெங்களூரில் எனக்கு கிடைக்காதது, climate தவிற.

சென்னையின் +, - கலவை:

* சென்னையில் ஐந்து ரூபாய் இருப்பவரும் வயிறார சாப்பிடலாம், ஐம்பது ரூபாய் இருப்பவரும் வயிறார சாப்பிடலாம்.
* மக்கள் தொகை அதிகம். அதிலும் வறுமை கோட்டை தாண்டமுடியாமல் தடுக்கி விழும் மக்கள் அதிகம் உள்ள ஒரு நகரம். முதலில் உணவுக்கே திண்டாடும் நகரம். அதனால், சுத்தமும் சுகாதாரமும் அடுத்த பிரச்சினை. இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவிக்காக 42 பேர் மாண்ட கோரமும் உண்டு. பேய் மழையில் மிதந்து வந்த குழந்தையை பயங்கர ரிஸ்க் எடுத்து காப்பாற்றிய நீர நெஞ்சங்களும் உண்டு.
* பழமையை மிகவும் போற்றிப் பாதுகாக்கும் நகரம். இப்பொழுதும் காலையில் இட்லி, தோசை முடித்த பிறகு டபரா செட் காப்பியை ரசித்து பருகும் நகரம். உதாரணமாக, ரத்னா கபே அல்லது சரவணபவனுக்கு சென்று பாருங்கள்.
* பேருந்து பயணம் மிக கொடுமையான ஒன்று. எங்கும் (ரிப்பேராகி) நில்லும் பழைய பராமரிக்கப்படாத பேருந்துகள். பயணச்சீட்டின் விலை மற்ற நகரங்களை விட சற்று குறைவு.
* மாநகர இரயில் பயணம் ஒரு சுகமான அனுபவம். இரயிலில் பாடும் பிச்சைக்காரர்களுக்கு ரசிகர் மன்றமே வைக்கலாம். (இவர்களை பிச்சைகாரர்கள் என்று சொல்வதே தவறு. இவர்களும் உழைப்பாளர்கள் தாம்).
* அலுவல் நேரங்களில் மேற்கூறிய இரண்டு வழியில் பயணம் செய்தாலும், கசங்கி பிழியப்படும் சாத்தியமே உண்டு.
* பெங்களூருக்கும், சென்னைக்கும் work atmosphere-ல் உள்ள மலைக்க வைக்கும் மாற்றம்.
* சென்ற முறை அடித்த பேய் மழையில் சுத்தமான கூவம், பின் இரண்டே வாரத்தில் பழைய நிலைக்குத் திரும்பியது, பயங்கர துற்நாற்றத்துடன்.
* Cost of living குறைவானது மற்ற பெரு நகரங்களை பார்க்கும் பொழுது.
* தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் (இதைப் பற்றி தனியாக பதிவு போடுகிறேன்). அழகியும் உதிரிப்பூக்களும் ஓடும். கில்லியும் ஓடும். C U @ 9-ம் 175 நாள் ஓடும்.
* பொதுவாகவே சற்றே அமைதியான நகரம் (நிச்சயமா இங்கே தாதாயிசம் சுத்தமாக இப்போது குறைந்துள்ளது).
* காவல்துறையின் செயல்பாடுகள், திருப்தியாக உள்ளது. (அட! லஞ்சம், ஜெயலட்சுமி போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளை விடுத்து).
* எங்கே பிரச்சினையானாலும் நமக்கேன் வம்பு என்று கண்டுக்காமல் போகும் சுரனையற்ற மக்கள், என்னையும் சேர்த்து. என் வாழ்வு, என் குடும்பம் என்று சிறிய வட்டத்திற்குள் வழும் அதே மக்கள். பொதுமக்களுக்காக சண்டை போட்ட பேருந்து நடத்துனருக்கு, சப்போர்ட் செய்யாத மக்களை பார்த்திருக்கிறேன்.
* 350 வருட பாரம்பரியம் மிக்க பெரு நகரம். உதாரணமாக, இராயபுரம் இரயில் நிலையம் தான் தென்னிந்தியாவின் முதல் இரயில் நிலையம். தற்போது தான் இதை உணர்ந்து ஒரு கோடி ரூபாயில் அதை புதுப்பித்திருக்கிறார்கள். வருடந்தோரும் டிசம்பரில் நடக்கும் சங்கீத சபாக்களும், அதற்கு கூடும் கூட்டமே சாட்சி. தன் ஊரின் பெருமையை அறியாமலேயே உள்ள மக்கள்.
* மிகப் பரந்து விரிந்த நகரம். சைதாப்பேட்டையில் இருந்து பக்கத்தில் உள்ள தியாகராய நகரில் shopping செல்ல மிகுந்த பிரயாசை செய்யவேண்டும். கிட்டத்தட்ட அரை நாளைத் தின்றுவிடும்.
* இன்னமும், குப்பை லாரிகளும், தண்ணீர் லாரிகளும் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருக்கும் நகரம்.
* இந்தியாவின் மருத்துவ உலகின் தலை நகரம். அதாவது, வெளிநாட்டு நோயாளிகளுக்கு ராச உபசாரம்.
* தெற்கே சற்றேனும் செழிப்பாகவும், வடக்கே வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் உள்ள நகரம்.
* "அன்னாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகிலே ஓலை குடிசைக் கட்டி" இருக்கும் ஊர்.
* நிலநடுக்க வாய்ப்புள்ள நில அமைப்பில் மூன்றாவது zone-ல் உள்ள நகரம். (பெங்களூர் முதல் zone-ல் பாதுகாப்பாக உள்ளது).
* யாரும் உதவாமலேயே நிமிர்ந்து நின்று வியக்க வைக்கும் நகரம்.
* தலைவர்களின் சமாதியை இன்றும் பெருமையுடன் காட்சிப் பொருளாக(!) வைத்திருக்கும் நகரம்.
* இன்றைய வாழ்விலும் ரேடியோவை நேசிக்கும் மக்கள்.
* கண்ணகி சிலையையே எடுத்தாலும், "கண்ணகி சிலை ஒன்னு"-னு டிக்கெட் கேட்கும் குசும்பு மற்றும் தமிழனுக்கே உரித்தான எகத்தாளம். (இந்த எகத்தாளத்தை நானே சில முறை அனுபவித்திருக்கிறேன்).
* வழி கேட்டால் நின்று விலாவரியாக வழி சொல்பவரும் உண்டு, தெரியாவிட்டாலும் ஏனோதானோ என்று வழி சொல்லி அலைய வைப்பவரும் உண்டு.
* கதை, திரைக்கதை, வசனம் ஒருத்தர் எழுத, பாடல் ஒருத்தர் எழுத, இசை ஒருவர் அமைக்க, அந்த பாடலுக்கு வாய் மட்டுமே அசைக்கும் கதாநாயகனை, நாளைய முதல்வராக கட் அவுட்டிற்கு பீராபிஷேகம் செய்து பார்க்கும் "பரந்த மனப்பாண்மை" உடைய இளைஞர்கள். இளைஞர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று திரிசாவிற்கு banner வைத்து பாலாபிஷேகம் செய்யும் இளைஞிகள்.
* இரண்டு வாரங்களுக்கு முன் அடித்த வெய்யில், அப்பப்பா என் வாழ்நாளில் அனுபவித்திறாத கொடுமை. அதுவும், என் வீடு மேல் மாடி. சொல்ல வேண்டுமா? சென்னை வெய்யிலின் ஒரே ஆறுதல், கடல் இருப்பதால் காற்றின் ஈரப்பதம்.
* "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்று வெளி உலகில் பொருளீட்ட போகும் தமிழன். இதற்கு contradiction-ஆக "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்".

இப்போ சொல்லுங்க சென்னையும், நானும் எப்படின்னு?

12 comments:

  1. ம்ம்.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். nostalgiaவில் மூழ்க விட்டுவிட்ட பதிவு.

    ReplyDelete
  2. அட... அருமையா எழுதிட்டீங்க. நானும் அப்பப்ப 'ச்சென்னையை ரொம்ப மிஸ் ' செய்யறேங்க.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு.
    எனக்கென்னவோ கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் temperature அதிகமாகிவிட்டதாக தெரிகிறது.வாசம் இப்போது சிங்கப்பூர் என்பதால் அது தெரியவில்லை.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. //எனக்கென்னவோ கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் temperature அதிகமாகிவிட்டதாக தெரிகிறது.//
    ஆஹா, சிங்கப்பூர்-ல இருந்து எப்படி கண்டுபிடிச்சீங்க? Global-ஆகவே வெப்பநிலை சுமார் 1 முதன் 1.5 டிகிரி அதிகரித்திருக்கிறது என நினைக்கிறேன். இது நகரமயமாக்கலுக்கு நாம் கொடுக்கும் விலை.

    ReplyDelete
  6. பழைய நினைவுகளை கிளறிவிட்டது தங்கள் பதிவு.ம்ம்ம்!என்ன செய்ய!!!!திகட்டத்திகட்ட அனுபவித்த என்னை சென்னை 'போடா வெண்ணை'என்று
    விட்டதே!!!!!!!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  7. நன்றி!

    என்னுடைய சென்னையை எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள்....

    அயல்நாடுகளிலும், வேற்று மாநிலங்களிலும் கூட எனக்கு வேலை வாய்ப்பு கிடைத்தபோது என்னுடைய சென்னையை பிரிய வேண்டுமே என்று நான் போகவில்லை....

    என்னைப் போலத்தான் நிறைய சென்னை இளைஞர்கள்.... சென்னை அவர்களுக்கு உயிர்....

    தண்ணீரில் இருந்து மீனை வெளியே எடுத்துப் போட்டால் இறந்து விடுமே அந்த நிலை தான் என்னைப் போன்ற சென்னை வாசிகளுக்கு....

    ReplyDelete
  8. //அயல்நாடுகளிலும், வேற்று மாநிலங்களிலும் கூட எனக்கு வேலை வாய்ப்பு கிடைத்தபோது என்னுடைய சென்னையை பிரிய வேண்டுமே என்று நான் போகவில்லை....//
    நான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகும் பொழுது "சென்னைக்கா?" என்று முகம் சுளித்தார்கள். எனக்கோ சென்னை வந்தது ஆனந்தமாய் இருந்தது.

    ReplyDelete
  9. நல்ல பதிவு சீனு. அருமையான ஆய்வு.

    ReplyDelete
  10. கைப்புள்ள,
    சென்னைல நாங்க அடி வாங்காத ஏரியாவே இல்ல. அப்படியே அடி வாங்கினாலும் கத்தினதும் இல்ல, எங்கேயும் ஓடினது இல்ல. அப்படியே அதே எடத்துல நிப்போம்.

    ReplyDelete