Wednesday, May 31, 2006

இது உங்கள் சொத்து - மறுக்கா மறுக்கா படி

சில நாட்களுக்கு முன் தற்செயலாய், வேகமாய் சேனல் மாற்றும் பொழுது, ஒரு கணம் பொதிகையை கடந்தேன். அட தெரிந்த முகம் என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தேன். நம்ம நித்யஸ்ரீ மகாதேவன். தன் பாட்டி பட்டம்மாவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பாட்டியின் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சில பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். வாழ மீனை கேட்கும் இடையில், இதையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது. சில நிமிடங்கள் அந்தப் பேட்டியையும், பேத்தியையும், அவர்கள் பாடிய பாடல்களையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

விளம்பரங்களுக்கு நடுவே ஓடும் கள்ள உறவு + அழுகை மெகா தொடர்கள், "வண்கம்" தங்கிலீஷ் காம்பியர்கள், "நகைச்சுவை" செய்திகள்(?), சினேகாவுடன் உங்கள் சாய்ஸ், "வக்கிரமான jokes"-வுடன் லொள்ளு சபா, "சும்மா இருக்காத, அம்மா தான் எல்லாம்" என்ற டயலாக்கைக் கூட mute செய்த சன் டி.வி. கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின் இறைச்சலில் நாம் ரொம்ப miss பண்ணின வகையராக்களில் இருந்தது அந்த நிகழ்ச்சி. பேட்டி கொடுத்த அந்த பாட்டியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, பெருமிதம். ஒரு குழந்தையாய் மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ நம் சொந்த பாட்டியைடம் பேசிக் கொண்டிருந்ததை போன்ற ஒரு உணர்வு. ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மற்ற சேனல்களில் பார்க்க முடிவதில்லை. காரணம், எந்த நிகழ்ச்சியும் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. பொதிகை சேனல் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது (ஏன் ஓடாது?). அவர்களுக்கென்ன, அரசாங்கம் பார்த்துக் கொள்கிறது. பொதிகை லாபம் ஈட்டினால் என்ன? நட்டம் ஈட்டினால் என்ன? மாதச் சம்பளம் வந்துவிடுகிறது.

+2 தேர்வு முடிவுகள் வந்தது. பொதிகையில் இன்றும் தற்செயலாய் கண்டது. +2 தவறியவர்கள் தற்கொலை கூடாது என்று கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வழங்கியவர் கிரீஷ் கர்னாட். இதனை மற்ற எந்த சேனலும் செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியது TRP ratings, அவ்வளவே. கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் பொதிகையை tune செய்கிறோம். மற்ற நேரத்தில்?

இது பொதிகை-யோடு நின்றுவிடுவதில்லை. அரசாங்கத்தின் எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான். எத்தனை தனியார் பேருந்துகள் கிராமத்திற்கு போகின்றன? பேருந்தே நுழைய முடியாத கிராமத்தில் கூட அரசாங்க பேருந்துகள் நட்டத்திற்கு போய் வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் நிலைமை என்ன? லாபம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து திருச்சி - தஞ்சாவூர் வழித்தடத்தின் permit விலை மட்டுமே கோடியை தாண்டும். எங்கள் ஊரிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகளில், தனியார் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், கொண்டு சேர்க்கும் வேகம். ஆனால், உண்மை அதுவல்ல. திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா பின் வேலூர் செல்லவேண்டும். திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வரை மிக வேகமாம சென்று, சில நிமிடங்களுக்கு வாணியம்பாடியில் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். அதேபோல, வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு வேகமாக சென்று, பின் ஆம்பூரில் 15-25 நிமிடம் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். ஆனால், மக்கள் அந்த பேருந்துகள் தான் வேகமாக சேர்க்கிறான் என்று கூட்டம் கூடும். இங்கே பொதுமக்கள் உயிர் தான் பணயம் வைக்கப்படுகிறது. (ஒரு முறை சென்று பார்த்தால் இதை உணரலாம்).

நான் ஒரு BSNL எண் வைத்துள்ளேன். பெங்களூரில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டு நகரமெங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. Caller tunes-க்காக சும்மா சும்மா குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்யும் தனியார் செல் நிறுவனங்கள் அன்று எங்கே போயிருந்தன? அலுவலகத்தில் எனக்கொரு கைபேசி கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த BSNL எண்ணை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செலவானாலும் அந்த எண்-ஐ அப்படியே வைத்து, இரண்டு கைபேசியையும் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நாமெல்லாம் என்ன செய்கிறோம். தனியார் பேருந்துகள் சினிமா போடுகிறான் என்று அந்த வண்டியில் தானே ஏறுகிறோம்? அரசாங்க சேவை என்றாலே அது கிராமத்து மக்களுக்கு என்றல்லவா நினைக்கிறோம். தனியார் நிறுவனங்களின் சேவை என்றால் ஓடிப்போய் வாங்குகிறோம். நமக்காக இருக்கும் அரசாங்க பொருட்களையும் உபயோகிப்போமே? எத்தனை பேர் காதி வஸ்திராலயத்தில் வாங்குகிறோம்? அல்லது, Cooptex-ல் துணி எடுக்கிறோம். மற்ற கடைகளில் 10 துணிகள் வாங்கினால், Cooptex-ல் ஒன்றாவது வாங்குவோமே. அந்த கைத்தரியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கும்.

நம் அரசாங்கம் அளிக்கும் சேவைகளில் பல குறைகள் இருக்கின்றன. சேவைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை தான். ஒத்துக் கொள்கிறேன். அதை படிப்படியாக மாற்றவேண்டுமே தவிற தவிர்க்க கூடாது. ஒரு பேச்சுக்கு, சென்னையின் தெருக்களில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் என்ன நடக்கும் நினைத்துப் பாருங்கள். திருச்சியில் தனியார் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. அங்கே இருக்கும் போட்டியில், மக்களில் உயிர் பணயம் வைக்கப்படுகின்றது. வாகனங்கள் தறிகெட்டுப் ஓடுகின்றன. இந்த நிலை தான் சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் நிகழும். வெறும் வியாபார நோக்கம் மட்டுமே அங்கு முன்னிறுத்தப்படும். மக்கள் சேவை பின்னிறுத்தப்படும்.

ஒரு நாள் மட்டும் எல்லா சேனல்களையும் நிறுத்தி அனைவரும் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கொண்டு வந்தால் தெரியும் நம் அரசாங்கத்தைப் பற்றி.

11 comments:

  1. உண்மையான ஆதங்கத்தின் வெளிபாடு.

    சமுதாய பங்களிப்பு தனியார் அமைப்புகளிடம் இல்லாததற்க்கு வெட்க பட வேண்டும். லாபம் இல்லாமல் வியாபாரம் செய்ய சொல்ல வில்லை ஆனால் எடுக்கும் வளம் பெருகவும் / இருக்கும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் / நுகர்வோருக்கும் சிறு பங்காற்ற வேண்டும்.

    பல நாடுகளில் இப்போது இந்த சமுதாய பங்களிப்பு கட்டாயம் என நம்புகிறேன். இப்போது விட்டுவிட்டு இன்னும் 20 வருடம் கழித்து இது குறித்து அரசு ஆணை வெளிவரும் அது வரை இந்த ஆதங்க பதிவுகள் தான் ஒரு வடிகால்.:-(

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு..

    நம்மில் பெரும்பாலோர்க்கு பொதிகை, சென்னைத் தொலைக்காட்சியின் நாஸ்ட்டால்ஜிக் நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.

    இந்த இணைப்பில் அதைக் கொட்டித் தீர்த்தவர்களைப்பாருங்கள்.

    http://sukas.blogspot.com/2006/03/blog-post_28.html

    என்ன செய்ய.. காலச்சக்கரத்தில் சில நல்ல விஷயங்கள் நசுங்கத்தான் செய்கின்றன :(

    ReplyDelete
  3. எல்லா தனியார்களும் லாப நோக்கத்தில் தான் செயல் படுறாங்க, அவங்க போட்ட காசு திரும்பி வரும்னு அவங்க நினைச்சா எந்த மாதிரி நிகழ்ச்சியும் குடுப்பாங்க. நிறைய நிகழ்ச்சிகள் பொதிகைல தரமா இருக்கும். அதுலயும் குறிப்பா துள்ளாத மனமும் துள்ளும் அப்படின்னு பழைய பாட்டெல்லாம் பாடுவாங்க. அருமையா இருக்கும். நான் எப்பவும் அரசு பஸ்ல தான் போறது. தேவை இல்லாம நிப்பாட்டாம சரியா டயத்துக்கு கொண்டு போய் விடுவாங்க, எங்க ஊர்ல..
    பிரசன்னா

    ReplyDelete
  4. நன்றி நன்மனம், suka, பிரசன்ன.

    //நான் எப்பவும் அரசு பஸ்ல தான் போறது. //
    நானும் முடிந்தவரை அரசு பேருந்துகளிலேயே போவேன். அப்படி இல்லாத பட்சத்தில், மற்ற பேருந்துகளில் பயணிப்பேன்.

    ReplyDelete
  5. மெகா தொடரைப் பற்றிச் சரியாகச் சொன்னீர்கள். ஒன்றுமே பார்க்கக் கூடிய அளவில் இல்லை.
    ஒரு நேர்மை இல்லை, நன் நடத்தை இல்லை. குறுக்குப் புத்தியும் கோணல் புத்தியும், கள்ளத் தொடர்புகள், பிள்ளைகளுக்கு அட்டித்தல் இப்படியே பல. குழந்தைகளுடன் பார்ப்போம், நம் கலாச்சாரத்தை ஊட்டுவோம் என்று எண்ணி, "செல்வி" தொடரைப் பார்க்கத் தொடங்கினோம். கொஞ்ச நாளில், தாங்க முடியவில்லை இந்த அநியாய கலாச்சாரம். இதைக் கொஞ்சம் கலைஞர் அரசு கண்காணிக்குமா?

    ReplyDelete
  6. நல்லா சொன்னீங்க சீனு. அதென்னவோ இந்த வயசான லேடீஸ் அழுகுணி சீரியல் பார்க்கலைன்னா ரொம்ப அவஸ்தைப்படறாங்க. மத்தவங்க படற கஷ்டங்களை பார்த்துக்கிட்டே இருக்கனும்னு தோணவைக்கிறது எது - அந்தகால படங்களின் தாக்கமா, மத்தவங்க வாழ்க்கையைப்பத்தி தெரிஞ்சுக்கனும்கற ஆர்வமா? சிரிச்சுக்கிட்டிருக்கற சீரியல் அவங்களுக்கு பிடிக்கறதில்ல!!

    //அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. //

    அது உண்மைதானே, IIScல ஒரு புரோபசர் சுடப்பட்டாரில்ல..

    ReplyDelete
  7. நன்றி ஜெயபால், Venkataramani.

    //அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. //
    //
    அது உண்மைதானே, IIScல ஒரு புரோபசர் சுடப்பட்டாரில்ல..
    //
    ஆம், அது உண்மை தான். எனக்கு அந்த குறுந்தகவல் வந்தது. அதை பத்திரப்படுத்தியும் வைத்திருந்தேன் (மற்றவர்க்கு காண்பிக்க). ஆனால், எங்கோ தொலைத்துவிட்டேன்.

    ReplyDelete
  8. சீனு,

    ரொம்ப அருமையா கொடுத்திருக்கீங்க நன்றி!

    நானும் அப்படியே அரசு போருந்துகளே அதிகம் விரும்பி பயணிப்பவன்... கிடைக்காத பட்சத்தில் மற்றவைகள்.

    இப்பொழுது ட்டி.வி சீரியல்களை பற்றி நாம் பேசிக்கொண்டுள்ளொம். நேற்று இரவு நானும் எனது ஒரு நண்பரும் அப்படிப் பேசிக் கொண்டுள்ளபோது, எதார்த்தமாக எனக்கு ஒரு கேள்வி தோன்றியது, சரி, இந்த சீரியல்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டால், சினிமா சம்பந்தப்பட்டவைகளையும் சேர்த்து. பிறகு எது போன்ற நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வழங்கும்?

    அடுத்த பரிணாம வளர்ச்சியாக இவ் தொலைக்காட்சிகள் எவைகளை ஒலி ஒளிப் படுத்தும். சும்மா ஒரு சிந்தனைக்காக, நீங்களும் யோசித்து எனக்குக் கூறுங்கள். கண்டிப்பாக 24/7 மக்கள் பிரட்சினையும், கலாச்சார விழிப்புணர்வேற்று நிகழ்சிகளும் அதிகம் வரவேண்டும் என்றாலும், அப்படி நடத்துவார்களா?

    ReplyDelete
  9. நன்றி Thekkikattan,

    //இந்த சீரியல்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டால், சினிமா சம்பந்தப்பட்டவைகளையும் சேர்த்து. பிறகு எது போன்ற நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வழங்கும்?//

    ஐயோ, ஜீவ நாடியையே பிடுங்கரீங்களே? சும்மா ஒரு சிந்தனைக்காக அரசியல் அரங்கங்கள், விவாதங்கள், விளையாட்டு, cartoons போன்றவை இடம் பெறவேண்டும். ஆனால், அது முடியுமா?

    ReplyDelete
  10. சார் உங்க கருத்துக்கு நான் பாதி மட்டும் ஒத்து கொள்கிறேன்
    பிரைவேட் பஸ்ல போனா, கண்டக்டர் டிசெண்டா சொல்றார். சார் பஸ் ஸ்டாப் வருது இறங்குங்க.. அப்படின்னு.. ஆனா இங்க ?

    மனச தொட்டு சொல்லுங்க, நீங்க பைக்ல போகும் போது சிக்னல்ல நிப்பிங்களா? ஆனா சென்னை பஸ் நிக்காது, சிக்னல்ல நிப்பாட்ட மாட்டேங்கறாங்க..

    எனக்கு தெரியும் எத்தன நாள் நான் நின்னதுக்கு திட்டு வாங்கி இருப்பேன்!!

    திருவள்ளுவர் பாணி தான் கரெக்ட்.

    ஒழுக்கம் உடைமை படிங்க.. தெரியும்

    ReplyDelete
  11. //
    சார் உங்க கருத்துக்கு நான் பாதி மட்டும் ஒத்து கொள்கிறேன்
    பிரைவேட் பஸ்ல போனா, கண்டக்டர் டிசெண்டா சொல்றார். சார் பஸ் ஸ்டாப் வருது இறங்குங்க.. அப்படின்னு.. ஆனா இங்க ?

    மனச தொட்டு சொல்லுங்க, நீங்க பைக்ல போகும் போது சிக்னல்ல நிப்பிங்களா? ஆனா சென்னை பஸ் நிக்காது, சிக்னல்ல நிப்பாட்ட மாட்டேங்கறாங்க..
    //

    நீங்க சொல்றதும் பாதி தாங்க உண்மை கண்ணன்;) அரசாங்க பேருந்து நடத்துனர்கள் மரியாதை குறைவாக பேசுகின்றார்கள் தான். அவர்களை நாம் தான் திருத்த வேண்டும். திருந்துவார்கள். இன்னும் professional ஆக வேண்டியிருக்கிறது.

    ReplyDelete